Sunday 12 May 2013

திருக்குறள் எளியகுறள் - முகவுரை


     நான் பிறந்தது தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி மாவட்டத்தில், ஊட்டிக்கு அருகிலுள்ள ஆரகச்சி என்ற சிற்றூரில்;. ஆனால் குடும்ப சூழ்நிலைகளால் முதல் வகுப்பிலிருந்து பட்டயப்படிப்பு வரை நான் படித்தது கேரளக்கரையில். அதுவும் மலையாள மொழியில்.
     என்னுடைய தாய்மொழி மலையாளம் என்றாலும் பாட்டிமொழி தமிழ்தான் (என் மலையாளத் தாயைப் பெற்ற தாய் தமிழ் என்பதால்). அதுவுமின்றி நான் வளா;ந்துவந்த இடம் கேரளாவில் தமிழ்நாட்டு எல்லையோரம் என்பதால்; பள்ளியில் படிக்கும் காலத்தில் மலையாளத் தாயிடம் பயின்றதை விட தமிழ்ப் பாட்டியின் மடியில் விளையாடியது தான் அதிகம். அதனால் தமிழை ஓரளவு எழு, படிக், பேச கற்றுக்கொண்டேன்.
அந்த விஷயத்தில் எனக்கு உதவியாக இருந்தது அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாகியிருந்த புத்தகங்கள், நாளிதழ்கள், வாரப் பத்திரிக்கைகள் போன்றவைகள் தான். பெயர் குறிப்பிடாத படக்கதை ஆசிரியர்களில் ஆரம்பித்து சாண்டில்யன், கல்கி, சுஜாதா, லக்ஷ்மி, ராஜேஷ்குமார், பி.டி.சாமி என்று என்னுடைய மானசீக குருநாதர்களின் பெயர்களை எழுத ஆரம்பித்தால் அதுவே ஒரு புத்தகமாய் வெளியிடலாம்.
அந்தநேரத்தில் திருக்குறளைப் படித்துப் புரிந்துகொள்ள மிகுந்த ஆர்வம் கொண்டேன். அதற்காக தமிழ்வழிக் கல்வி பயிலும் என்னுடைய நண்பர்கள் பலரிடம் திருக்குறளைப் பற்றி விசாரித்தேன், ஆச்சரியப்பட்டேன். தமிழ்ப் பள்ளியில் படிக்கும் பல மாணவர்களுக்கும் கூட நிறைய குறட்பாக்களுக்கு விளக்கம் சொல்வது கடினமாக இருப்பதைக் கண்டுகொண்டேன். 
     பள்ளிப்புத்தகங்களில் வரும் விளக்க உரைகள் அல்லது சில அறிஞர்கள் எழுதிய திருக்குறள் விளக்க உரைகள்தான் அவர்களுக்கும் குறட்பாக்களை விளக்க அவசியமாக இருந்தது. அதனால் மேலும் என் நண்பர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நானே அந்த விளக்க உரைகளைச் சிலவற்றை வாங்கியும் பலவற்றை நூலகங்களில் தேடியும் வாசிக்க ஆரம்பித்தேன்;.
ஒவ்வொரு குறளுக்கும் எனக்குப் புரியும்படியான சிறு உரைகளாக குறித்து வைக்க முற்பட்டேன். ஆனால் அவற்றை  மனப்பாடம் செய்வதற்கு அல்லது ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்குத் தேவையான ஒரு ஈர்ப்பு அந்த உரைகளில் இருக்கவில்லை. மீண்டும் படித்துப் பார்க்கும் அளவுக்கு அதில் ஒரு சுவாரசியமும் தெரியவில்லை.
     அப்பொழுதுதான் இந்த யோசனை தோன்றியது. குறட்பாக்களைப் போலவே எனது எளிய உரைகளையும் குறட்பா வடிவில் எழுதிவைத்தால் நன்றாக இருக்கும் என்று! அந்த எண்ணத்திலேயே ஒரு சுவாரசியமும், ஈர்ப்பும் இருப்பதை உணர்ந்தேன்.
     அந்த எண்ணத்தின் பலன் தான் இந்த 'எளியகுறள்'. இதை எழுதுவதற்காக பல அறிஞர்கள் எழுதிய திருக்குறள் தெளிவுரைகளைப் படித்தேன். முக்கியமாக திரு மு.வரதராசன், திரு சி.ராசியண்ணன், திரு ச.சீனிவாசன் (பாpமேலழகர் உரை பதிப்பாசிரியர்) மற்றும் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் ஆகியோரது உரைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த அறிஞர்களுக்கு நான் என் இதயம்கனிந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
     முதலில் மற்ற அறிஞர்களின் தெளிவுரைகளைப் படித்துப் பார்த்து ஒவ்வொரு குறளுக்கும் விளக்கமாக எனக்குப் புரியும்படி எளிய குறட்பாக்களை எழுதினேன். இருப்பினும் சில விளக்கங்கள் பள்ளிக்குழந்தைகளுக்குச் சற்று புரியாதது போல் தெரிந்தது. கலைஞர் எழுதிய உரையை அடிப்படையாகக் கொண்டு அந்த குறட்பாக்களை மேலும் எளிமைப்படுத்தினேன்.
முதலில் 'எளியகுறள்' என்ற பெயரில் இந்நூலை வெளியிட்டேன். நான் தமிழைப் பள்ளியில் படிக்காததால் எனக்கு புரிகின்ற  குறள் விளக்கங்கள் அனைத்தும் பள்ளியில் படித்த மற்றும் படித்துக் கொண்டிருக்கும் மற்ற அனைவருக்கும் புரிந்துவிடும் என்று நினைத்தேன். உண்மையில் நான் நினைத்தது தவறென்பதும் அது எனக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மை காரணமாகத்தான் என்பதும் அதன் முதல் பதிப்பைப் படித்த பல நண்பர்கள் சொன்னதிலிருந்து தெரிந்து கொண்டேன்.
எளிமையாக இருக்கிறது என்று நான் நினைத்த பல விளக்கங்கள் சில மாணவர்களுக்கு அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ளும்படியாக இருக்கவில்லை. திரைப்படத்துறையில் என்னுடன் பணியாற்றி வரும் சில இணை இயக்குநர்களும் ஒருசில எளிய குறட்பாக்களை மேலும் எளிமைப் படுத்துவது நல்லது என்ற அபிபிராயத்தைக் கொண்டிருந்தனர்.
அதனால் தமிழை வாசிக்கும் அனைவருக்கும் புரிpயும்படி அந்த எளியகுறள்களை மேலும் எளிமைப்படுத்தியும், முதல் பதிப்பில் இருந்த சில எழுத்து மற்றும் தொடர் பிழைகளை சரிசெய்தும் புதியதாக 'திருக்குறள் எளியகுறள்' என்ற பெயரில் வெளியிடுகிறேன். இப்பணியில் எனக்குப் பேருதவி செய்த விருகம்பாக்கம், ஜெயகோபால் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரிpயராக இருந்த திரு இராம சு.சிவகுமரன் அவர்களுக்கும், சென்னை தமிழ்ச் செம்மொழி நிறுவனத்தில் பணிபுரியும் முனைவர் அ.ஆரோக்கியதாசு அவர்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த நன்றிகளை உhpத்தாக்குகிறேன்.
     இந்த எளியகுறள் என்னைப்போன்றே தமிழ் மீது பற்றுக் கொண்டவர்களுக்கும் தமிழ்ப் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கும் திருக்குறளை எளிதாய் புரிந்துகொண்டு பொருளை மனப்பாடம் செய்ய உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
தமிழில் நான் மேற்கொண்டுள்ள முதல் முயற்சி இது. என்னுடைய இந்த சிறு முயற்சியைத் தமிழை நேசிக்கும் நீங்கள் அன்புடன் ஏற்றுக்கொண்டு என்னை மேலும்  ஊக்கப்படுத்துவீர்கள் என நம்புகிறேன்.

                                                அன்புடன்
                                                கமலாபாலா

No comments:

Post a Comment

Let others know your opinions about this post