கடந்த
ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில்
பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயிருந்தேன்.
இதற்குமுன்பு இந்த நூலின் வெளியீட்டு விழாவிலும்
கலந்துகொண்டிருந்தேன். என்னுடைய வாழ்வியல் சூழ்நிலைகள் காரணமாகவும்,
சோம்பேறித்தனம் என்ற நோயால் நான் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தினாலும் கடந்த சில
வருடங்களாக புத்தகங்கள் படிக்கிற பழக்கம் எனக்குள் சற்று குறைவாகவே இருந்து
வருகிறது. இருந்தாலும் அவ்வப்போது சில புத்தகங்களை படிக்கத்தான் செய்கிறேன். அதில்
சில ஈழத்து எழுத்துக்களும் ஈழத்தைப்பற்றய எழுத்துக்களும் அடக்கம்.
அப்படி படித்த எழுத்துக்களை இரண்டு விதமாகத்தான் என்னால்
பிரித்துப்பார்க்க முடிகிறது. ஒன்று ஈழத்து மக்களின் வாழ்க்கையை தூரத்திலிருந்து
பார்த்து, விருந்தினராக மட்டும் சென்று பார்த்து, படித்தும் கேட்டும் அறிந்தவற்றை
தொகுத்து எழதியவை. இன்னொன்று ஈழத்திலேயே வாழ்ந்து, அனுபவித்து, உணர்ந்த்தனால்
எழுதப்பட்டவை.
திரு அகரமுதல்வனின் இந்த நூல் இவற்றில் இரண்டாவது
ரகத்தைச் சேர்ந்த்து. இதை இந்நூலின் ஒவ்வொரு கவிதையும் எடுத்துச்சொல்கிறது.
இந்நூலின் நிறைகுறைகளை விமர்சிக்கவோ கண்ணை மூடிக்கொண்டு
பாராட்டவோ நான் இங்கே முயற்சி செய்யவில்லை. இந்த நூலில் சொல்லப்பட்டவை இன்றைய
காலகட்டத்திற்கு புதியதல்ல. புதுமையானதும் அல்ல. ஆனால் மிகவும் முக்கியமானது.
மரியாதை நிமித்தமாக ஐந்து நிமிடங்கள் பேசி பாராட்டிவிட்டு
வரலாம் என்றுதான் இந்த நிகழ்விற்கு சென்றேன். ஆனால் அங்கே வந்திருந்த சிறப்பு
விருந்தினர்களின் நேரத்தை அபகரிக்க ஏனோ மனம் வரவில்லை. நான் சொல்லநினைத்ததை இங்கே
பதிவு செய்து விடலாம் என்று முடிவு செய்தேன்.
இந்த நூலைப்பற்றி கவிஞர் ஐயப்ப மாதவன் அவர்கள்
பேசும்போது, பாதி நூலை படித்த்தற்கே பாதி கொந்தளிப்பை தன்னுடைய வார்த்தைகளில்
காட்டிவிட்டார்.
ஓவியர் புகழேந்தி அவர்கள் இந்நூல் வெளியாவதற்கு ஆரம்பம்
முதலே உறுதுணையாக இருந்த்தனால் இந்த நூலின் சிறப்பு, தேவை, இலக்கு மற்றும் ஈழத்தின் நிலைமைகள் பற்றி
விரிவாகவே எடுத்துரைத்தார்.
கவிதாயினி குட்டி ரேவதி அவர்கள் இந்த நூலை சாக்காக
வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த கவிஞர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும்படியாகவே
பொரிந்து தள்ளினார். இனிமேல் ஈழம் சம்பந்தமாக யாராவது எழுதுவதாக இருந்தால்
உருப்படியாக எழுது இல்லையேல் எழுதாமல் ஒதுங்கிவிடு என்று ஆதங்கப்பட்டார். பாவம்
ஆவேசத்திலும் ஆர்வத்திலும் ஒரு விஷயத்தை மறந்தே போய்விட்டார் போலிருக்கு.
இங்கே கவிதையாக கவிதை எழுதுபவர்கள் ஒருசிலர் மட்டும்தான்.
மற்றவர்களில் பாதிபேர் சினிமாவில் பாட்டெழுதும் வாய்ப்பிற்க்காக கவிதை
எழுதுகிறார்கள் என்றால் மீதிபேர் சினிமாவில் பாட்டெழுத வாய்ப்பு கிடைக்காது என்று
தெரிந்த்தாலேயே கவிதை எழுதி வருகிறார்கள். இவர்கள் யாருமே குட்டி ரேவதியின்
ஆதங்கத்தை பொருட்படுத்தப் போவதில்லை. (நானும் சினிமாவில் வாய்ப்பு தேடுபவன்
தான்.) இந்த நிலைமையில் நான் என்னத்தை
சொல்ற்து.
இருந்தாலும் ஒரு தோழன் என்ற முறையில் அகரமுதல்வனின் இந்த
நூலைப்பற்றி சில விஷயங்களை சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதைத்தான் நான் இங்கே
குறிப்பிட ஆசைப்படுகிறேன்.
அகரமுதல்வன் தன் கவிதைகளை ஆயுதமாக்க முயற்சி
செய்துள்ளார். அந்த முயற்சியில் முதல்கட்ட பயிற்சி வெற்றியும் பெற்றிருக்கிறார்
என்றே சொல்லவேண்டும். ஈழத்து மக்கள், குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் அனுபவித்த
துயரங்களை மற்ற கவிஞர்களைப்போலவே அழகாக பதிவு செய்திருக்கிறார். நேரில் பார்த்தவன்
என்ற முறையில் அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார்.
இவருடைய எழுத்தில் ஒரு தனித்துவம் தெரிகிறது. அதைத்தான்
என்போன்ற நண்பர்கள் அவரை பாராட்டவும் ஊக்கப்படுத்தவும் வேண்டுமென்று நான்
நினைக்கிறேன்.
அகரமுதல்வன் எழுதிய இந்த
நூலை படிக்கும்பொழுது ஒரு விஷயம் நன்றாக புரிகிறது. இவர் தன்னுடைய கவிதைகள்
அனைத்திலும் ஒரே விஷயத்தைத்தான் வலியுறுத்துகிறார். அது, ஈழத்தில் நடந்த அவலங்களை பார்த்த்தனால்
அவருக்குள் எழுந்த கோபமும் ஆதங்கமும்தான். அதுதான் அவருக்குள் இருக்கும் கவிஞனை
எழுதத் தூண்டியிருக்கிறது.
என் கோபம் எல்லாம்
உன்னை தீ தீன்றுவிடக்
தொடுத்தவர் மீதுதான்
உன்னை விதைத்து
இருக்கவேண்டும்
என்ற வரிகளே போதும் அதற்கு அத்தாட்சி.
ஆனால் என்னை மிகவும்
கவர்ந்த்து அவருடைய எழத்துக்களில் ஆங்காங்கே தலைகாட்டும் நம்பிக்கைதான்.
விழித்தெழ மறப்பவர்
வீழ்வார் என்பதே
விரிந்துகிடக்கும்
வரலாறு.
என்று ஒரு இடத்திலும்
சாவுகளுக்கு அஞ்சுவோர்
சாதித்துவிட முடியாது.
என்று இன்னொரு இடத்திலும்
என் எழுதுகோல்
கவிதை எழுதுகிறது
இப்போது இலையுதிர் காலம்தான்
வசந்தகாலத்திற்காய்
என்று முடிவாகவும் இடம்பெற்ற வரிகள் இதற்கு உதாரணங்கள்தான் என்றால்
நினைத்துப்பாருங்கள்
இருட்டிற்கு விளக்கேற்றினாலே
மிரட்டும் வாழ்விருக்க
நாட்டிற்கு விளக்கேற்றும் நாள் வருதல்
என்ற வரிகள் நம்பிக்கையின் உச்சத்தை தொடுகிறது.
சமூகத்தின் மீது
அகரமுதல்வன் கொண்ட ஆதங்கம் இன்னொரு தளத்தில்
கையில் நோக்கியா
பள்ளிக்கூடத்தில் சிகரெட்
கோவிலில் விபசாரம்
பேருந்தில் சில்மிஷம்
வீட்டுக்குள் கொள்ளை
தெருவில் வன்புணர்வு
போன்ற வரிகளாக சாதாரண வாசகர்களையும் சிந்திக்க வைக்கும்.
நான்கு வரிகளில் நச்சென்று சொல்லவந்த்தை சொல்ல அகரமுதல்வனாலும்
முடியும் என்பதற்கு
ஈழத்தில்
தாலாட்டு பாடியும்
தூங்காது குழந்தை
ஒப்பாரி அடமழையில்
என்ற வரிகள் சாட்சி. இவை படிப்பவர்களின் மனசாட்சியை தொட்டு எழுப்பும்
என்பதில் எந்த ஐயமும் இல்லை.
நிறைய எழுதவேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால்
இப்பொழுதுதான் தட்டச்சை பயின்று வருகிறேன் என்பதால் தற்போதக்கு இது போதும் என்று
முடிக்கிறேன். நிறைவாக ஒன்று...
ஒரு மழையின் பின்னரான ஈரத்தில்
மண்கொள்ளும் மகிழ்ச்சியாய்
என் மரணத்தில் நீ மகிழ்வதாயின்
இப்போதே மரணிக்கத் தயார்
இப்படியே
கவிதை எழதி
உன்னை ஏமாற்றுகிறேன்
கவிஞன் நான்
என்று அகரமுதல்வன் ஒரு கவிதையை முடித்திருக்கிறார். இந்த வரிகளில்,
செயல்பட தெரியாமல் வார்த்தைகளால் மட்டுமே வாய்ஜாலம் காட்டும், கவிஞர்களுக்கு
மட்டுமே உரித்தான இயலாமையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதனாலேயே நானும் அகரமுதல்வனை
மனதார வாழ்த்துகிறேன்...
நீ கவிதை எழுதுவதில்
பயிற்சி பெற்றுவிட்டாய்.
இனி உன்
வார்த்தைகளை விரையமாக்காதே,
வரிகளை கூர்மையாக்கு,
அவை
உனக்கும் ஆயுதமாகும்
ஊருக்கும் ஆயுதமாகும்.
நல்ல் பதிவு.....
ReplyDeleteஆனால் முக்கியமான உரையாடலின் ஒரு விசத்தைத் தொட்டிருக்கலாம் உங்கள் பதிவில், ஏனெனில் இது குறித்து தான் நான் உங்களிடம் கேள்வி எழுப்பினேன்..
ஆனால் அது பதிவை நெடும் பதிவாக ஆக்கிவிடும் என்பதால் நீங்கள் தவிர்த்ததாக நான் நம்புகிறேன்... உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது