Showing posts with label பொன்னியின் செல்வன் பாகம் 2. Show all posts
Showing posts with label பொன்னியின் செல்வன் பாகம் 2. Show all posts

Friday, 16 October 2020

பொன்னியின் செல்வன் பாகம் 2 - 5

 



ஐந்தாம் அத்தியாயம்

நடுக்கடலில்

 

 

வந்தியத்தேவன் திரும்பிப் பார்த்தான். அவனுடைய வயிற்றிலிருந்து குடல்கள் மேலெழும்பி அவன் மார்பை அடைத்தன. பிறகு இன்னும் மேலே கிளம்பி அவன் தொண்டையையும் அடைத்துக் கொண்டன.

அவனுடைய தேகத்தில் ஆயிரம் மின்னல்கள் பாய்ந்தன. பழுக்கக் காய்ந்த ஒரு லட்சம் ஊசி முனைகள் அவன் தேகமெல்லாம் துளைத்தன - அத்தகைய பயங்கரக் காட்சி அவன் கண்முன்னே காணப்பட்டது.

முடிவில்லாது பரந்திருந்த இருளில் அங்கங்கே பத்து, இருபது, நூறு அக்கினி குண்டங்கள் தோன்றின. அவற்றிலிருந்து புகை இல்லை; வெளிச்சமும் இல்லை; கீழே விறகு போட்டு எரித்து உண்டாகும் தீப்பிழம்புகளும் அல்ல.

வெறும் நெருப்புப் பிண்டங்கள். பூமியிலிருந்து எப்படியோ எழுந்து அவை நின்றன. திடீரென்று அவற்றில் சில பிண்டங்கள் மறைந்தன. வேறு சில தீப்பிண்டங்கள் புதிதாக எழுந்து நின்றன.

ஒரு பிரம்மாண்டமான கரிய இருள் நிறங் கொண்ட ராட்சதன், தனியாக தலை ஒன்று இல்லாமல் வயிற்றிலேயே வாய்கொண்ட கபந்தனைப் போன்ற ராட்சதன். ஆனால் அவன் வயிற்றில் ஒரு வாய் அல்ல; அநேக வாய்கள்.

அந்த வாய்களை அவன் அடிக்கடி திறந்து மூடினான்.திறக்கும்போது வயிற்றிலிருந்து தீயின் ஜ்வாலை வாய்களின் வழியாக வெளியே வந்தது. மூடும் போது மறைந்தது.

இந்தக் காட்சியைக் கண்ட வந்தியத்தேவனுடைய ஒவ்வொரு ரோமக்கால் வழியாகவும் அவனுடைய உடம்பின் ரத்தம் கசிவது போலிருந்தது. அப்படிப்பட்ட பீதி அவனை என்றைக்கும் ஆட்கொண்டதில்லை. பெரிய பழுவேட்டரையரின் பாதாள நிலவறையிலேகூட இல்லை. அவன் பின்னால் "ஹா ஹா ஹா!" என்ற ஒரு சிரிப்புக் கேட்டது. திரும்பிப் பார்த்தான்.

பூங்குழலிதான்! வேறு ஒரு சந்தர்ப்பத்திலேயென்றால், அவளுடைய அந்த சிரிப்பே அவனுக்கு அளவிலாத பயங்கரத்தை உண்டாக்கியிருக்கும். இப்போது அதே சிரிப்பு தைரியத்தை அளித்தது. இரத்தமும், சதையும், உடலும், உயிரும், உள்ள பெண் ஒருத்தி அவன் பக்கத்தில் நிற்கிறாள் என்பது பெரும் அபாயத்தில் ஒரு பற்றுக்கோல் போல உதவியது.

"பார்த்தாயா என் காதலர்களை?" என்று பூங்குழலி கேட்டாள். "இந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுகள்தான் என் காதலர்கள். இவர்களைப் பார்த்து சல்லாபம் செய்வதற்குத்தான் நள்ளிரவில் இந்த இடத்துக்கு நான் வருகிறேன்," என்றாள்.

இந்தப் பெண்ணுக்கு நன்றாகப் பித்துப் பிடித்திருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இவளுடைய உதவியைக் கொண்டு இலங்கைக்குப் போகிறது நடக்கிற காரியமா? - இவ்வாறு வந்தியத்தேவன் எண்ணினான்.

அவனுடைய உள் மனத்திலிருந்து வேறு ஏதோ ஒரு எண்ணம் வெளிவரப்போராடிக் கொண்டிருந்தது. அது என்ன? இந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுகளைப் பற்றிய ஏதோ ஒரு ஒரு விஷயந்தான்.

"உன்னுடைய சிநேகிதன் சேந்தன்அமுதனால் இத்தகைய காதலர்களோடு போட்டியிட முடியுமா?" என்று பூங்குழலி கூறியது கிணற்றுக்குள்ளேயிருந்து வரும் குரலைப் போல் கேட்டது. ஏனெனில் அவனுடைய உள்ளம் அப்போது எதையோ ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றுகொண்டிருந்தது. ஆ! கடைசியில் ஒரு பெரிய போராட்டம்; மனதிற்குள்ளேதான் இதோ ஞாபகம் வந்துவிட்டது...

கந்தகம் கலந்த பூமிப் பிரதேசங்களில் தண்ணீர் வெகுகாலம் தேங்கி நின்று சதுப்பு நிலமானால், அத்தகைய இடங்களில் இரவில் இம்மாதிரி தோற்றங்கள் ஏற்படும். பூமிக்குள்ளேயிருந்து கந்தகம் கலந்த வாயு வெளியில் வரும் போது நெருப்புப் பிழம்பு வருவது போலிருக்கும்.

சில சமயம் நீடித்து நிற்கும். சில சமயம் குப்குப் என்று தோன்றி மறையும். இந்த இயற்கைத் தோற்றத்தைக் கண்டு, அறியாத மக்கள் பயப்படுவார்கள். கொள்ளிவாய்ப் பிசாசு என்று பயங்கரப் பெயர் கொடுத்துப் பீதி அடைவார்கள்...

இப்படிப் பெரியோர் சொல்லி அவன் கேள்விப்பட்டிருந்தது, ஞாபகத்துக்கு வந்தது. பிறகு அவனுடைய அறிவுக்கும் பயத்துக்கும் போர் நடந்தது. அறிவு வெற்றி பெற்றது. ஆனால் அதையெல்லாம் இச்சமயம் இந்தப் பிரமை பிடித்த பெண்ணிடம் சொல்லிப் பயனில்லை. எப்படியாவது அவளுக்கு நல்ல வார்த்தை சொல்லி அழைத்துக்கொண்டு போய்விடவேண்டியதுதான்.

"பெண்ணே! உன் காதலர்கள் எங்கும் போய்விடமாட்டார்கள். இங்கேதான் இருப்பார்கள். நாளைக்கும் அவர்களை வந்து பார்க்கலாம் அல்லவா? வீட்டுக்குப் போகலாம், வா!" என்றான். அதற்குப் பூங்குழலி மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை; விம்மி அழத் தொடங்கினாள்.

'இது என்ன தொல்லை?' என்று வந்தியத்தேவன் எண்ணினான். பின்னர் சற்று நேரம் சும்மா இருந்தான். "பெண்ணே! நாம் போகலாமா?" என்று மீண்டும் கேட்டான். விம்மல் நிற்கவில்லை. வந்தியத்தேவனுக்கு அலுத்துப் போய்விட்டது.

"சரி; உன் இஷ்டம் போல் செய்! எனக்குத் தூக்கம் வர கிறது. நான் போகிறேன்" என்று சொல்லிவிட்டு இறங்கத் தொடங்கினான். பூங்குழலி உடனே விம்மலை நிறுத்தினாள். மேட்டிலிருந்து இறங்கத் தொடங்கினாள். நாலே பாய்ச்சலில் வந்தியத்தேவனுக்கு முன்னால் கீழே போய் நின்றாள்.

வந்தியத்தேவன் ஓடிப்போய் அவளைப் பிடித்தான்.

இருவரும் கலங்கரை விளக்கை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். 'இந்தப் பித்துப் பிடித்த பெண்ணை நம்பிப் படகில் ஏறுவதாவது? கடலைக் கடப்பதாவது?- ஆயினும் வேறு வழி இல்லையென்று தெரிகிறதே? ஏதாவது நல்ல வார்த்தை சொல்லிச் சிநேகம் செய்துகொள்ளப் பார்க்கலாமா?"

"வானத்தில் வால் நட்சத்திரம் தோன்றுகிறதே! அதைப் பற்றி உன் கருத்து என்ன?" என்று பூங்குழலி கேட்டாள்..

"என் கருத்து ஒன்றுமில்லை. வால் நட்சத்திரம் தோன்றுகிறது; அவ்வளவுதான்!" என்றான் வந்தியத்தேவன்.

"வால் நட்சத்திரம் வானில் தோன்றினால் பூமியில் பெரிய கேடுகள் விளையும்என்று சொல்கிறார்களே!"

"அப்படித்தான் சிலர் சொல்கிறார்கள்."

"நீ என்ன சொல்லுகிறாய்?"

" நான் ஜோதிட சாஸ்திரம் படித்ததில்லை. ஜனங்கள் அப்படிச் சொல்லிக் கொள்வதுதான் எனக்குத் தெரியும்."

சற்று நேரம் மௌனமாக நடந்தார்கள்.

பிறகு பூங்குழலி, "சக்கரவர்த்திக்கு உடம்பு சுகமில்லை என்று சொல்கிறார்களே, அது உண்மைதானே?" என்றாள்.

'இவள் அவ்வளவு பித்துக்குளிப் பெண் அல்ல' என்று வந்தியத்தேவன் எண்ணிக்கொண்டான். கொஞ்சம் அவனுக்கு நம்பிக்கை பிறந்தது.

"நானே என் கண்ணால் பார்த்தேன். சக்கரவர்த்தி படுத்த படுக்கையாய் கிடக்கிறார். இரண்டு கால்களிலும் உணர்ச்சியே கிடையாது. ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாது. அவரைக் குணப்படுத்த மூலிகை கொண்டு வரத்தானே நான் வந்திருக்கிறேன். பெண்ணே! எனக்கு நீ ஓர் உதவி செய்வாயா?" என்று கேட்டான்.

அதற்கு மறுமொழி சொல்லாமல், "சக்கரவர்த்தி அதிக நாள் உயிரோடிருக்க மாட்டார், சீக்கிரத்தில் இறந்துபோய் விடுவார் என்று சொல்கிறார்களே, அது உண்மையா?" என்று கேட்டாள் பூங்குழலி.

"நீ இச்சமயம் உதவி செய்யாவிட்டால் அப்படி நடந்தாலும் நடந்துவிடும். இலங்கையில் ஓர் அபூர்வ சஞ்சீவி மூலிகை இருக்கிறதாம். அதைக் கொண்டு வந்தால் சக்கரவர்த்தி பிழைத்துக் கொள்வாராம். நீ படகு தள்ளிக்கொண்டு இலங்கைக்கு வருவாயா?"

"சக்கரவர்த்தி ஒருவேளை இறந்து போனால் அடுத்தபடி யார் பட்டத்துக்கு வருவார்கள்?" என்று பூங்குழலி கேட்டது வந்தியத்தேவனை தூக்கி வாரிப் போட்டது.

"பெண்ணே! எனக்கும், உனக்கும் அதைப்பற்றி என்ன? யார் பட்டத்துக்கு வந்தால் நமக்கு என்ன கவலை?"

"ஏன் கவலை இல்லை? நீயும் நானும் இந்த ராஜ்யத்தின் பிரஜைகள் அல்லவா?"

'இந்தப் பெண் பித்துப் பிடித்தவளே அல்ல. இவளிடம் ஜாக்கிரதையாகவே நடந்துகொள்ள வேண்டும். இவளுடைய விசித்திரமான செயல்களுக்கு வேறு காரணம் இருக்க வேண்டும்.'

"ஏன் பேசாமலிருக்கிறாய்?அடுத்த பட்டத்துக்கு யார் வருவார்கள்?" என்று பூங்குழலி மீண்டும் கேட்டாள்.

"ஆதித்த கரிகாலருக்குத்தான் யுவராஜா பட்டம் கட்டியிருக்கிறது. அவர்தான் நியாயமாக அடுத்த பட்டத்துக்கு வர வேண்டும்."

"மதுராந்தகர், - அவருக்கு உரிமை ஒன்றுமில்லையா?"

"அவர்தான் இராஜ்யம் வேண்டாம் என்று சொல்லி விட்டாரே?"

"முன்னே அப்படிச் சொன்னார்: இப்போது ராஜ்யம் வேண்டும் என்று சொல்கிறாராமே?"

"அவர் சொன்னால் போதுமா? பிரஜைகள் எல்லாரும் ஒப்புக்கொள்ள வேண்டாமா?"

"பெரிய மனிதர்கள் பலர் அவர் கட்சியில் இருக்கிறார்களாமே?"

"அப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன். இவ்வளவும் உன் காதுவரையில் வந்து எட்டியிருப்பதை நினைத்தால் எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது."

"சுந்தரசோழர் திடீரென்று இறந்துபோனால் என்ன ஆகும்?"

"தேசமெல்லாம் பெருங்குழப்பம் ஆகிவிடும். அதைத் தடுப்பதற்குத்தான் உன் உதவி இப்போது தேவையாயிருக்கிறது..."

"நான் என்ன உதவியைச் செய்ய முடியும்?"

"முன்னமேயே சொன்னேனே.நான் அவசரமாக மூலிகை கொண்டு வர இலங்கைத் தீவுக்குப் போக வேண்டும். அதற்கு நீ படகு வலித்துக் கொண்டு வரவேண்டும்."

"என்னை எதற்காக அழைக்கிறாய்? ஒரு பெண் பிள்ளையைப் படகு தள்ளும்படி கேட்க வெட்கமாயில்லையா?"

"வேறு யாரும் இல்லை என்று உன் தந்தை சொல்கிறார். உன் அண்ணன் கூட நேற்றுப் போய் விட்டானாமே?"

"அவன் போனால் என்ன? உனக்கு இரண்டு கைகள், உன்னோடு வந்தவனுக்கு இரண்டு கைகள் இல்லையா?"

"எங்களுக்குப் படகு வலிக்கத் தெரியாது..."

"படகு வலிப்பது என்ன மந்திர வித்தையா! துடுப்பைப் பிடித்து வலித்தால் தானே படகு போகிறது!"

"திசை தெரிய வேண்டும் அல்லவா? நடுக்கடலில் திசை தெரியாமல் போய்விட்டால்...?"

"நடுக்கடலில் திசை தெரியவிட்டால் முழுகிச் சாகுங்கள்! அதற்கு நான் என்ன செய்யட்டும்!"

கலங்கரை விளக்கின் அருகில் அவர்கள் வந்து விட்டார்கள். வந்தியத்தேவனும் அத்துடன் பேச்சை நிறுத்தி விட விரும்பினான். மேலும் பேச்சை வளர்த்துப் பூங்குழலியின் மறுப்பை உறுதிப்படுத்திவிட அவன் விரும்பவில்லை.

அவள் அவ்வளவு கண்டிப்பாக மறுமொழி சொன்ன போதிலும், அவளுடைய குரலும் பேச்சின் தோரணையும் அவனுடைய உள்ளத்தில் சிறியதொரு நம்பிக்கை சுடரை உண்டாக்கியிருந்தன.

இரண்டாம் முறை படுத்த பிறகு வெகு நேரம் வந்தியத்தேவனுக்குத் தூக்கம் வரவில்லை. ஏதேதோ எண்ணங்களினால் அவனுடைய உள்ளம் வெகுவாகக் குழம்பிக் கொண்டிருந்தது. நாலாம் ஜாமத்தின் ஆரம்பத்திலேதான் தூங்கினான்.

தூக்கத்தில் வந்தியத்தேவன் கனவு கண்டான். பாய்மரம் விரித்த சிறிய படகில் பூங்குழலியும் அவனும் எதிரெதிராக அமர்ந்திருந்தார்கள். நாலாபுறமும் கடல்; எங்கு நோக்கினாலும் ஜலம். இனிய பூங்காற்று; படகு அக்காற்றில் மிதப்பது போலப் போய்க் கொண்டிருந்தது.

பூங்குழலியின் முகம் அழகே வடிவமாகப் பொலிந்தது. சுருண்ட மயிர் நெற்றியில் ஊசலாடிக் கொண்டிருந்தது. சேலைத் தலைப்புப் பறந்தது. எங்கே போகிறோம், எதற்காகப் போகிறோம் என்பதெல்லாம் வந்தியத்தேவனுக்கு மறந்து போய்விட்டது.

பூங்குழலியுடன் படகில் போவதற்காகவே இத்தனை நாள் பிரயாணம் செய்து வந்ததாகத் தோன்றியது. ஒன்றே ஒன்று குறைவாயிருந்தது. அது என்ன? அது என்ன? ஆ! பூங்குழலியின் பாட்டு! சேந்தன்அமுதன் சொல்லியிருந்தான் அல்லவா? "பெண்ணே! உன் பவழ வாயைத் திறந்து ஒரு பாட்டுப் பாட மாட்டாயா?" என்றான் வந்தியத்தேவன்.

"என்ன சொன்னாய்?" என்று பூங்குழலி புன்னகையுடன் கேட்டாள்.

ஆகா! அந்தப் புன்னகை ஏழு உலகமும் பெறாதா?

"உன் கனிவாயைத் திறந்து ஒரு கீதம் இசைக்க மாட்டாயா என்றேன்."

"கீதம் இசைத்தால் எனக்கு என்ன தருவாய்?"

"உன் அருகில் வந்து உன் அழகிய கன்னத்தில்..."

பூங்குழலி உடனே தன்மடியிலிருந்து ஒரு கூரிய கத்தியை எடுத்துக்கொண்டாள்.கத்தி பிடித்த கையை ஓங்கினாள். "இதோ பார்! அந்தப் பாய்மரத்துக்கு அப்பால் ஒரு அணுவளவு நீ வந்தாலும் உன்னை இந்தக் கத்தியால் குத்தி விடுவேன். கடல் மீன்கள் மிகப் பசியோடிருக்கின்றன!" என்றாள்.

 

 


பொன்னியின் செல்வன் பாகம் 2 - 4



 

நான்காம் அத்தியாயம்

நள்ளிரவில்

 

 

இரவு போஜனம் ஆன பிறகு வந்தியத்தேவன், கலங்கரை விளக்கின் தலைவரை தனிப்பட சந்தித்து இலங்கைக்கு தான் அவசரமாகப் போக வேண்டும் என்பதைத் தெரிவித்தான். தியாகவிடங்க கரையர் என்னும் பெயருடைய அப்பெரியவர் தமது வருத்தத்தை தெரிவித்தார்.

"இந்தக் கரையோரத்தில் எத்தனையோ பெரிய படகுகளும், சிறிய படகுகளும் ஒரு காலத்தில் இருந்தன. அவையெல்லாம் இப்போது சேதுக்கரைக்குப் போய் விட்டன. இலங்கையில் உள்ள நமது சைன்யத்தின் உதவிக்காகத்தான் போயிருக்கின்றன. எனக்கு சொந்தமாக இரண்டு படகுகள் உண்டு.

அவற்றில் ஒன்றில் நேற்று வந்த இரண்டு மனிதர்களை ஏற்றிக் கொண்டு என் மகன் போயிருக்கிறான். அவன் எப்போது திரும்பி வருவான் என்று தெரியாது. என்ன செய்யட்டும்?" என்றார்.

"அந்த மனிதர்கள் யார்? அவர்கள் ஒருமாதிரி ஆட்கள் என்று தங்கள் குமாரி கூறினாளே?"

"ஆமாம்; அவர்களைக் கண்டால் எனக்கும் பிடிக்கவில்லை தான். அவர்கள் யார் என்பதும் தெரியவில்லை; எதற்காகப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை. பழுவேட்டரையரின் பனை இலச்சினை அவர்களிடம் இருந்தது. அப்படியும் நான் என் மகனை போக சொல்லியிருக்கமாட்டேன்.

ஆனால் என் மருமகள் மிகப் பணத்தாசை பிடித்தவள். பை நிறையப் பணம் கொடுப்பதாக அவர்கள் சொன்னதை கேட்டுவிட்டு புருஷனைப் போக வேண்டும் என்று வற்புறுத்தினாள்..."

"இது என்ன ஐயா, வேடிக்கை? வீட்டில் உலக அநுபவம் இல்லாத ஒரு சிறு பெண் சொன்னால், அதைத்தான் உங்கள் மகன் கேட்க வேண்டுமா?" என்றான் வந்தியத்தேவன். பிறகு சிறிது தயக்கத்துடன், "மன்னித்துக் கொள்ளுங்கள், அது தங்கள் குடும்ப விருயம்!" என்றான்.

"அப்பனே! நீ கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை. என் குடும்பத்திற்கு சாபக்கேடு ஒன்று உண்டு. என் மகன்..." என்று தயங்கினார்.

வந்தியத்தேவன் அப்போது சேந்தன்அமுதன் இக்குடும்பத்தைப் பற்றிக் கூறியது நினைவுக்கு வந்தது.

"தங்கள் மகனால் பேச முடியாதா?" என்றான்.

"ஆம்; உனக்கு எப்படித் தெரிந்தது?" என்றார் பெரியவர்.

சேந்தன் அமுதனையும், அவன் தாயாரையும், அவர்கள் வீட்டில் தான் தங்கியிருந்ததையும் பற்றி வந்தியத்தேவன் அவரிடம் கூறினான்.

"ஆகா! அந்த ஆள் நீதானா? உன்னைப் பற்றிச் செய்தி இங்கே முன்னமே வந்துவிட்டது. உன்னை நாடெங்கும் தேடுகிறார்களாமே?"

"இருக்கலாம்; அதைப்பற்றி எனக்குத் தெரியாது".

"நீ ஏன் இலங்கைக்கு அவசரமாகப் போக விரும்புகிறாய் என்று இப்போது எனக்குத் தெரிகிறது."

"பெரியவரே! தாங்கள் நினைப்பது சரியல்ல. என் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டும் நான் இலங்கைக்குப் போகவில்லை. அங்கேயுள்ள ஒருவருக்கு மிக முக்கியமான ஓலை ஒன்று கொண்டு போகிறேன். தாங்கள் வேண்டுமானால் அதைப் பார்க்கலாம்."

"தேவையில்லை. இளைய பிராட்டி உன்னைப் பற்றி எழுதியிருப்பதே எனக்குப் போதும். ஆனால் இச்சமயம் நீ கேட்கும் உதவி என்னால் செய்ய முடியவில்லையே!"

"இன்னொரு படகு இருப்பதாகச் சொன்னீர்களே?"

"படகு இருக்கிறது. தள்ளுவதற்கு ஆள் இல்லை. நீயும் உன்னுடைய சிநேகிதனும் தள்ளிக்கொண்டு போவதாயிருந்தால் தருகிறேன்..."

"எங்கள் இருவருக்கும் படகு ஓட்டத் தெரியாது. எனக்குத் தண்ணீர் என்றாலே கொஞ்சம் பயம். அதிலும் கடல் என்றால்..."

"படகு ஓட்டத் தெரிந்தாலும் அநுபவம் இல்லாதவர்கள் கடலில் படகு ஓட்ட முடியாது. கடலில் கொஞ்ச தூரம் போய்விட்டால் கரை மறைந்து விடும். அப்புறம் திசை தெரியாமல் திண்டாட வேண்டிவரும்."

"என்னுடன் வந்தவனை நான் அழைத்துப் போவதற்கும் இல்லை. அவனை மூலிகை சேகரிப்பதற்காக இங்கே விட்டுப் போகவேண்டும். ஏதாவது ஒரு வழி சொல்லி நீங்கள்தான் உதவி செய்யவேண்டும்."

"ஒரு வழி இருக்கிறது. அது எளிதில் நடக்கக் கூடியதன்று. நீயும் முயற்சி செய்து பார்! அதிர்ஷ்டம் உன் பக்கம் இருந்தால்..."

"நான் என்ன செய்ய வேண்டும்? பெரியவரே, சொன்னால் கட்டாயம் செய்கிறேன்" என்றான் வந்தியத்தேவன்.

"இந்தப் பகுதியிலேயே பூங்குழலியைப் போல் சாமர்த்தியமாகப் படகு தள்ள தெரிந்தவர்கள் வேறு யாரும் இல்லை. இலங்கைக்கு எத்தனையோ தடவை போய் வந்திருக்கிறாள். அவளிடம் நான் சொல்லுகிறேன்; நீயும் கேட்டுப்பார்!"

"இப்போதே கூப்பிடுங்களேன்; கேட்டுப் பார்க்கலாம்"

'வேண்டாம்; மிக்க பிடிவாதக்காரி. இப்போது உடனே கேட்டு 'முடியாது' என்று சொல்லிவிட்டால், அப்புறம் அவளுடைய மனத்தை மாற்ற முடியாது. நாளைக்கு நல்ல சமயம் நோக்கி அவளிடம் நான் சொல்லுகிறேன். நீயும் தனியே பார்த்துக் கேள்!" இவ்விதம் தியாகவிடங்கக் கரையர் கூறிவிட்டு கலங்கரை விளக்கை நோக்கிச் சென்றார்.

அவருடைய வீட்டுத் திண்ணையில் வந்தியத்தேவன் படுத்தான். அவனுடன் வந்த வைத்தியர் மகன் முன்னமே தூங்கிப் போய்விட்டான். வந்தியத்தேவனுக்கு நீண்ட பிரயாணம் செய்த களைப்பினால் தூக்கம் கண்ணைச் சுற்றிக் கொண்டு வந்தது; விரைவில் தூங்கிப் போனான்.

திடீரென்று தூக்கம் கலைந்தது. கதவு திறக்கும் ஓசை கேட்டது. களைத்து மூடியிருந்த கண்ணிமைகளைக் கஷ்டப்பட்டு வந்தியத்தேவன் திறந்து பார்த்தான். ஓர் உருவம் வீட்டிற்குள்ளேயிருந்து வெளியேறி சென்றது தெரிந்தது. மேலும் கவனமாகப் பார்த்தான். அது ஒரு பெண்ணின் உருவம் என்று கண்டான்.

கலங்கரை விளக்கின் வெளிச்சம் அந்த உருவத்தின் மேல் விழுந்தது. ஆ! அவள் பூங்குழலிதான்! சந்தேகமில்லை. அவள் என்னமோ நம்மிடம் சொன்னாளே? "நடுநிசியில் என்னைத் தொடர்ந்து வா! என் காதலர்களைக் காட்டுகிறேன்!" என்றாள். அது ஏதோ விளையாட்டுப் பேச்சு என்றல்லவா அப்போது நினைத்தோம்? இப்போது இவள் உண்மையிலேயே நள்ளிரவில் எழுந்து போகிறாளே?

எங்கே போகிறாள்? காதலனையோ, காதலர்களையோ பார்க்க போவதாயிருந்தால் அப்படி நம்மிடம் சொல்லுவாளா? 'பின் தொடர்நது வந்தால், காட்டுகிறேன்' என்பாளா? இதில் ஏதோ மர்மமான பொருள் இருக்க வேண்டும்! அல்லது ஒரு வேளை...

எப்படியிருந்தாலும், பின் தொடர்ந்து போய் ஏன் பார்க்கக் கூடாது? நாளைக்கு இவளிடம் நயமாக பேசி இலங்கைக்குப் படகு தள்ளிக் கொண்டு வரச் சம்மதிக்கப் பண்ண வேண்டும். அதற்கு இப்போது இவளைத் தொடர்ந்து போவது உதவியாயிருக்கலாம். ஏதாவது இவளுக்கு அபாயம் வரக்கூடும்! அதிலிருந்து இவளை காப்பாற்றினால் நாளைக்கு நாம் கேட்பதற்கு இணங்கக் கூடும் அல்லவா?

வந்தியத்தேவன் சத்தம் செய்யாமல் எழுந்தான். பூங்குழலி போகும் வழியைப் பிடித்து கொண்டே போனான். சாயங்கலம் சேற்றுப் பள்ளத்தில் விழுந்த போது அடைந்த அனுபவம் அவனுக்கு நன்றாய் ஞாபகம் இருந்தது. அம்மாதிரி மறுபடியும் நேர்வதை அவன் விரும்பவில்லை. ஆகையால் பூங்குழலியை அவன் பார்வையிலிருந்து தவற விட்டுவிடக் கூடாது.

கலங்கரை விளக்கிலிருந்து கொஞ்ச தூரம்வரை வெட்ட வெளியாக இருந்தது. ஆகையால் பூங்குழலியின் உருவமும் தெரிந்துகொண்டிருந்தது. அவள் போன வழியே போவதில் கஷ்டம் ஒன்றும் இல்லை. அவள் அருகில் போய் பிடித்துவிட வேண்டும் என்று எண்ணி விரைவாக நடந்தான்.

ஆனால் அது சாத்தியப்படவில்லை. இவன் வேகமாய் நடக்க நடக்க அவளுடைய நடைவேகமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இவன் பின் தொடர்ந்து வருவதை அவள் கவனித்ததாகவே தெரியவில்லை.

திறந்த வெளியைக் கடந்ததும் காடு அடர்ந்த மேட்டுப் பாங்கான பூமி வந்தது. நேரே அதன் பேரில் ஏறாமல் பூங்குழலி அந்த மேட்டை சுற்றிக்கொண்டே போனாள். மேடும் காடும் முடிந்த முனை வந்தது.

அந்த முனையை வளைத்து கொண்டு சென்றாள். வந்தியத்தேவனும் விரைந்து சென்று அந்த முனை திரும்பியதும் சற்றுத் தூரத்தில் அவள் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தான். "நல்லவேளை!" என்று தைரியம் கொண்டான். ஆனால் அடுத்த கணத்தில் திடீரென்று அவளைக் காணவில்லை.

எப்படித் திடீரென்று மறைந்திருப்பாள்? இது என்ன மாயமா, மந்திரமா? அங்கே ஏதாவது பள்ளம் இருந்திருக்குமோ? ஓட்டமும் நடையுமாகப் போய் சுமாராகப் பூங்குழலி எங்கே நின்று மறைந்தாள் என்று தோன்றியதோ, அந்த இடத்துக்கு வந்தான் அங்கே நின்று நாலா பக்கமும் பார்த்தான். மூன்று பக்கங்களில் அவள் போயிருக்க முடியாது.

போயிருந்தால் தன் கண்ணிலிருந்து மறைந்திருக்க முடியாது. அவ்விடத்தில் காலை ஜாக்கிரதையாக ஊன்றி வைத்துப் பார்த்துச் சேறு கிடையாது என்பதையும் நிச்சயப்படுத்திக் கொண்டான். ஆகையால், மேட்டின்மேல் ஏறிக் காட்டுக்குள்தான் போயிருக்கவேண்டும்.

இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்த்ததில், குத்துச் செடிகள் அடர்ந்த அந்த மேட்டில் ஏறுவதற்கு, ஒற்றையடிப்பாதை ஒன்று இருப்பது தெரிய வந்தது. வந்தியத்தேவன் அதில் ஏறினான். ஏறும்போது திக் திக் என்று அடித்துக் கொண்டது. அங்கே கலங்கரை விளக்கின் மங்கிய வெளிச்சமும் வரவில்லை.

மாலைப் பிறை முன்னமேயே கடலில் மூழ்கி மறைந்துவிட்டது. மினு மினுத்த நட்சத்திரங்களின் வெளிச்சத்திலே வழியையும் கொஞ்ச தூரத்துக்கு அப்பால் காணவில்லை. குத்துச்செடிகளும் குட்டை மரங்களும் பயங்கர வடிவங்களைப் பெற்றன. அவற்றின் நிழல்கள் கரிய பேய்களாக மாறின. செடிகளின் இலைகள் ஆடியபோது நிழல்களும் அசைந்தன.

ஒவ்வோர் அசைவும் வந்தியத்தேவனுடைய நெஞ்சை அசைத்தது. அந்தக் கரிய இருளிலும் நிழலிலும் எங்கே, என்ன அபாயம் காத்திருக்கிறதென்று யார் கண்டது? விஷ ஜந்துக்கள், கொடிய விலங்குகள் பதுங்கியிருந்தது பாயலாம். அபாயம் மேலிருந்து வரலாம்; பக்கங்களிலிருந்தும் வரலாம்; பின்னாலிருந்தும் வரலாம். அடடா! இது என்ன, இங்கே வந்து அகப்பட்டுக் கொண்டோம்? கையில் வேலைக்கூட எடுத்து வரவில்லையே?

அது என்ன சலசலப்புச் சத்தம்? அந்த மரத்தின்மேல் தெரியும் அந்தக் கரிய உருவம் என்ன? அந்தப் புதரின் இருளில் இரண்டு சிறிய ஒளிப் பொட்டுக்கள் மின்னுகின்றனவே, அவை என்னவாயிருக்கும்? வந்தியத்தேவனுடைய கால்கள் அவனை அறியாமல் நடுங்கின. சரி! சரி! இங்கே என்ன நமக்கு வேலை? எதற்காக இங்கு வந்தோம்? - என்ன அறிவீனம்? உடனே இறங்கிப் போய்விட வேண்டியதுதான்!

இறங்கலாம் என்று எண்ணித் திரும்ப யத்தனித்த தருணத்தில் ஒரு குரல் கேட்டது. நெஞ்சைப் பிளக்கும் குரல்; பெண்ணின் குரல். ஒரு விம்மல் சத்தம். பிறகு இந்தப் பாடல்:-

"அலை கடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்?

நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் விம்முவதேன்?..."

வந்தியத்தேவன் அம்மேட்டிலிருந்து கீழே இறங்கிச் செல்லும் யோசனையை விட்டுவிட்டான். குரல் வந்த இடம் நோக்கி மேலே ஏறினான். விரைவில் மேட்டின் உச்சி தெரிந்தது. அங்கே அவள் நின்று கொண்டிருந்தாள்.

பூங்குழலிதான் பாடியது, அவள்தான். வானத்தில் சுடர்விட்ட நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டு பாடினாள். அந்த விண்மீன்களையே அவளுடைய பாட்டைக் கேட்கும் ரசிக மகாசபையாக நினைத்துக் கொண்டு பாடினாள் போலும்!

நட்சத்திரங்களில் ஒன்று தூமகேது. அதிலிருந்து கிளம்பிய கதிரின் கத்தை நீண்டதூரம் விசிறிபோல் விரிந்து படர்ந்திருந்தது. மேட்டின் உச்சியில் அப்பெண்ணின் நிழல் வடிவமும், அவளுடைய குரலும் கீதமும், வானத்தில் தூமகேதுவும் சேர்ந்து வந்தியத்தேவனை தன்வயமிழக்க செய்தன. அவனுடைய கால்கள் அவனை உச்சிமேட்டில் கொண்டு போய்ச் சேர்த்தன.

பூங்குழலிக்கு எதிரில் நேருக்கு நேராக அவன் நின்றான். அவளுக்குப் பின்னால், வெகு தொலைவு என்று காணப்பட்ட இடத்தில், கலங்கரை விளக்கின் சிவந்த ஒளி தோன்றியது.அதையொட்டி விரிந்த கடல் பரந்து கிடந்தது. கடலுக்கு எல்லையிட்டு வரையறுத்தது போல் வெள்ளிய அலைக்கோடு நீண்டு வளைந்து சென்றது.

"வந்து விட்டாயா? திண்ணையில் கும்பகர்ணனைப்போல் தூங்கினாயே என்று பார்த்தேன்..."

"வீட்டுக்கதவு திறந்த சத்தம் கேட்டு விழித்துக் கொண்டேன். நீ விடுவிடு என்று நடந்து வந்துவிட்டாய்! திரும்பியே பார்க்கவில்லை. அம்மம்மா! உன்னைத் தொடர்ந்து ஓடி வருவது எவ்வளவு கஷ்டமாய்ப் போய் விட்டது?"

"எதற்காகத் தொடர்ந்து வந்தாய்?"

"நல்ல கேள்வி! நீதானே வரச் சொன்னாய்? மறந்து விட்டாயா?"

"எதற்காக வரச் சொன்னேன்? உனக்கு நினைவு இருக்கிறதா?"

"நினைவு இல்லாமல் என்ன? உன் காதலர்களைக் காட்டுவதாகச் சொன்னாய்! எங்கே உன் காதலர்கள்? காட்டு, பார்க்கலாம்!"

"அதோ உனக்குப் பின்னால் திரும்பிப் பார்!" என்றாள் பூங்குழலி.