Wednesday 14 May 2014

திரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்



சில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க முடியாது என்பதுதான் அவர்களது வாதம்.
வேறு சிலர் திரைப்படம் என்பதே ஒரு இலக்கியம் தான் என்று சொல்கின்றனர். இரண்டையும் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை என்பது அவர்களது வாதம். 
இன்னும் சிலர் திரைப்படமும் இலக்கியமும் முற்றிலும் வேறுபட்ட இரண்டு துறைகள் என்கிறார்கள். இரண்டையும் இணைத்து பேசவோ ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டு பேசவோ இயலாது என்கின்றனர்.
திரைப்படம் என்பது அசைவுகளின் படப்பதிவாக மட்டுமே ஆரம்பித்தது. தாமஸ் ஆல்வா எடிசன் சினிமா என்ற தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார். அதன்பிறகு லூமியர் சகோதரர்கள் ஒரு தொழிற்சாலையிலிருந்து வெளியே வரும் தொழிலாளர்களை முதன் முதலில் படமாக எடுத்துக் காட்டினார்கள். அதைத் தொடர்ந்து சினிமா படிப்படியாக வளர்ந்து வந்தது. 
செய்திப்படங்களும் குறும்படங்களும் இருந்தாலும் கதைப்படங்களைத்தான் நாம் இங்கே திரைப்படமாக பார்க்கிறோம் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டோம். அந்த வகையில் ஆரம்ப நாட்களில் படங்கள் புராணங்களையும் இதிகாசங்களையும் அடிப்படையாக்கி மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தது. பிறகு சமூக கதைகளை படமாக்க ஆரம்பித்தார்கள். இலக்கியங்கள் வளர வளர அவற்றிலிருந்து கதைகளை தேர்ந்தெடுத்து படமாக்கினார்கள். பிறகு திரைப்படம் எடுப்பதற்காகவே பிரத்யேகமாக எழுதப்பட்ட திரைக்கதைகளை அடிப்படையாக்கி படங்களை எடுத்து வந்தனர். அவை எல்லாம் சரித்திரத்தின் ஒரு பகுதிதான்.
திரைப்படங்கள் வர்த்தகரீதியில் வெற்றி பெற ஆரம்பித்ததும், அதிக எண்ணிக்கையில் வெகு ஜனங்களை ஈர்க்க வேண்டும் என்பது திரைப்படத் தொழில் வளர்ச்சிக்கு அத்தியாவசிய தேவையாக மாறியது.
இதற்காக கதையின் நடையில் மாற்றங்கள் கொண்டு வர ஆரம்பித்தனர். தொடர்ந்து திரைக்கதை என்ற இலக்கிய வடிவம் வளர திரைப்பட இலக்கியம் என்ற ஒரு துறை தனியாக உருவானது.
திரைப்படம் என்பது முற்றிலும் காட்சி வடிவம்தான் என்றாலும் ஒளியுடன் ஒலியும் தொழில் நுட்பத்துடன் இணைந்து வருவதால் திரைப்படத்தின் வெற்றிக்கு கதை, வசனம் மட்டுமல்ல பின்னணி இசையும் மற்ற ஒலிச்சேர்க்கைகளும் முக்கிய பங்காற்ற ஆரம்பித்தன.
திரைப்படத்திற்கென்று ஒரு மொழி உருவாகி வளர்ந்தது. அத்துடன் திரைப்பட இசை போன்ற கலைகளும் இணைந்தே வளர்ந்தது.
திரைப்படம் என்பது காட்சிகளையே முதன்மையாக கொண்டது. இருப்பினும் சொல்ல வந்த கருத்துக்களை முழுவதுமாக சொல்ல இலக்கியம் அதாவது வசனங்கள் இன்றி அமையாது என்ற நிலை ஏற்பட்டது. மௌனப்படங்களிலிருந்து பேசும் படங்கள் உருவானதும் இந்த நிலை மேலும் வலுப்பெற்றது.
ஒலியின் பங்கு திரைப்படத்தின் தரத்திற்கும் வெற்றிக்கும் பெரிய பக்கபலமாக அமைந்தது. அது திரைப்படங்களில் பின்னணி இசைக்கு மட்டுமன்றி பாடல்களுக்கும் ஒரு இடத்தை கொடுத்தது.
குறிப்பாக நமது இந்திய நாட்டில் திரைப்படப் பாடல்கள் என்பது மிகப்பெரும் சக்தியாகவே வளர்ந்தது. நம் நாட்டில் பல மொழிகளில் படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி பேசினாலும், பல இடங்களில் பல கலாச்சாரங்கள் பின்பற்றினாலும் நமது நாடு மொத்தமும் ஒரு ஒற்றுமையை காண முடியும். அதுதான் பாடல்கள்!
உலக சினிமாவில் பல மொழிகளில் தயாரிக்கப்படும் படங்களிலும் பாடல்கள் இடம் பெற்று வருவதுண்டு. அந்தந்த நாட்டு கலாச்சாரங்களுக்கு ஏற்ப பாடல்கள் உருவாக்கப் படுகின்றன.
இருந்தாலும் கதையுடன் இணைந்து பாடல்கள் ஒரு படத்தின் முக்கிய நாடியாக திகழ்வது நமது நாட்டில் மட்டும் தான்.
நடிப்பு, ஒளிப்பதிவு, இசை போன்ற கலைகளும் வசனம், பாடல்கள் போன்ற இலக்கியமும் மட்டுமன்றி படத்தொகுப்பு, ஒளிப்பதிவு போன்ற தொழில் நுட்பங்களும் ஒன்றாக கலந்ததுதான் திரைப்படம்
இவற்றை இணைப்பது திரைக்கதை எழுத்தாளரும் வெற்றிபெறச் செய்வது இயக்குநரும்தான்

இந்த எழுத்தாரையும் இயக்குநரையும் சரியாக தேர்ந்தெடுத்து, இந்த கலை-இலக்கிய வடிவத்தை வர்த்தக வடிவமாக உருவாக்கி மக்களிடம் கொண்டு செல்லுபவர்தான் படத்தின் தயாரிப்பாளர்.

No comments:

Post a Comment

Let others know your opinions about this post