Tuesday 10 September 2013

‘நூறாண்டு’ நன்றி


வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது. இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வருடம் ஜனவரி முதல் தேதியிலிருந்து) தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் - என்ன யோசிக்கவேண்டும் என்ன செய்யவேண்டும் என்று!
வாழ்க்கையில் இதுவரை சந்தித்த சறுக்கல்கள் என்னை இப்படி யோசிக்க வைத்தது என்றால் மிகையாகாது. திரைப்படத்துறையிலும் இலக்கியத்துறையிலும் நான் நினைத்தபடி வளரவும் முடியவில்லை ஒரு நிலையான இடத்தை எட்டவும் முடியவில்லை. திறமையிருந்தும் எதிர்பார்த்த வெற்றியும் வாய்ப்பும் கிட்டவில்லை. பல மொழிகள் தெரிந்தும் எந்த இடத்திலும் என்னை நிலை நிறுத்தவும் முடியவில்லை. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
காரணங்கள் பலவும் புலப்பட்டன. அவற்றை சரிசெய்ய சில வழிகள்கூட தெரிந்தது. ஆனால் அந்த வழிகளில் பயணிப்பது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்ததும் வழிகள்கூட மங்கலாக தெரிய ஆரம்பித்தது. யோசிக்கிறேன்.. யோசிக்கிறேன்.. யோசித்துக்கொண்டே இருக்கிறேன்!
(இந்த குழப்பத்தின் பலன்தான் இந்த வலைப்பூவில் அவ்வப்போது ஏற்பட்ட மாற்றங்களும் இடைவெளிகளும்கூட)
இந்த நிலைமையில்தான் இந்திய சினிமாவின் 100 ஆண்டு விழா சென்னையில் வரும் செப்டம்பர் மாதம் 21லிருந்து 24வரை சிறப்பாக கொண்டாட இருப்பதை அறிந்தேன்;. இந்த விழா தென்னகத்திலிருக்கும் நான்கு (தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு) மொழி திரைத்துறையினர் ஒன்றிணைந்து நான்கு மாநில முதல்வர்கள் முன்னிலையில் பாரத குடியரசுத்தலைவர் வாழ்த்துக்களுடன் நடக்க இருக்கிறது என்பது சரித்திரத்தில் முக்கிய இடம் பிடிக்கும் நிகழ்வு. இதை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை முன்னின்று நடத்துகிறது. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஒருங்கிணைக்கிறது.
இந்த ‘நான்கு மொழிகளிலும் கடந்த பதினாறு வருடங்கள் திரைப்படங்களில் உதவி எழுத்தாளராகவும் துணை இயக்குநராகவும் பணியாற்றியவன் நான். ஆனால் எனக்கு இந்த நிகழ்வில் பங்குபெற வாய்ப்பு கிடைக்குமா என்று யோசித்தேன். ஆசைப்பட்டேன். வாய்ப்பு கிடைப்பது அரிது என நினைத்து வருந்திக்கொண்டிருந்தேன்.
அந்த நேரத்தில்தான் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்திலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. எனது நண்பர் கதாக.திருமாவளவன் ஒரு இரவு நேரத்தில் என்னை அழைத்தார். மறுநாளே தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தை தொடர்பு கொள்ள சொன்னார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தனது 40வது ஆண்டு விழாவை டி40 என்ற பெயரில் நடத்தியிருந்தது. அதையொட்டி ஒரு மலரும் வெளியிடப்பட்டிருந்தனர். அந்த மலருக்காக அனைத்து டி.டி.பி வேலைகளையும் நான்தான் செய்து கொடுத்திருந்தேன். அந்த மலரை வடிவமைப்பதிலும் உதவியாக இருந்தேன். ஆனால் ஏனோ என் பெயரைக்கூட அந்த மலரில் குறிப்பிட மறந்து விட்டார்கள்.
உழைத்ததற்கு கூலி கிடைத்தது. ஆனால் தகுந்த மரியாதை கிடைக்கவில்லையே என்று அந்த நேரத்தில் இதை நினைத்து  வருத்தப்பட்டிருந்தேன். பிறகு அது மறந்து போய்விட்டது. ஆனால் அந்த உழைப்புக்கு இன்று தகுந்த மரியாதை கிடைத்தது!
டி40 மலரில் நான் செய்த பணியை நினைவு கூர்ந்து இந்த இந்திய சினிமா 100 ஆண்டு மலரிலும் பணியாற்றத்தான் என்னை அழைத்திருந்தார்கள். அதற்கு நான் முதலில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருப்பது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் இயக்குநர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களுக்குதான்.
அவர்தான் என்னை மீண்டும் அழைத்து இந்த பணியை என்னிடம் தர உறுதியாக இருந்திருக்கிறார். என்னுடைய சொந்த வேலைகள் காரணமாக  நீண்டநாள் சங்கத்தின் பக்கம் செல்ல முடியாமல் இருந்தேன். அப்படி தொடர்பே இல்லாமல் இருக்கும் என்னிடம் இந்த பணியை ஒப்படைக்க வேண்டுமா என்று பலரும் கேள்வி எழுப்பியதை நான் அறிவேன். ஆனால் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்கள் தன் முடிவில் உறுதியாக இருந்து என்னை தேடிப்பிடித்து (என்னுடைய தொலைபேசி எண் அவரிடம் இல்லாததால்) என் நண்பர் திருமாவளவன் அவர்கள் மூலமாக அழைத்து இப்பணியை ஒப்படைத்திருக்கிறார். இதை அவர் எனக்காக செய்யவேண்டிய எந்த அவசியமும் இல்லை. இது அவர் எனக்கு செய்த உதவி அல்ல. என்னுடைய உழைப்புக்கு தந்த அங்கீகாரம்! கௌரவம்! இதற்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களை ஒருமுறை திரைப்பட இலக்கிய சங்கமத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைத்து வந்திருந்தேன். என்னை அவர் ஞாபகம் வைத்திருக்க அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் திரைப்பட இலக்கிய சங்கமம் நடத்துகிறேன் என்ற ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் குழுவில் சிலர் எனக்கு ஆதரவாக இருந்திருக்கின்றனர். நேரடியாக எனக்கு எந்த சம்பந்தமும் இல்லாமலேயே இவர்கள் இப்படி செய்திருக்கின்றனர் என்பதுதான் என்னை இவர்களின் பால் நன்றிக்கடன்படவைத்து மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்திருக்கிறது. இதுவும் எனக்காக இவர்கள் தந்த பணி அல்ல, திரைப்பட இலக்கிய சங்கமம் நடத்தும் எனக்கு இவா;கள் மனப்பூர்வமாக தந்த கௌரவம்தான்! அங்கீகாரம்தான்!
இதில் முக்கியமானவர்கள் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் திரு.விக்ரமன் மற்றும் திரு.ஈ.ராமதாஸ். திரு.டி.கே.எஸ்.போன்றோர். அத்துடன் நண்பர்களான திரு.ஏகாம்பவாணன், நம்பிராஜன் திரு.ராஜா கார்த்திக் போன்றோரும் இவர்களின் முடிவுக்கு வழி மொழிந்திருக்கிறார்கள். இவர்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த நன்றிகள்.
இவர்களுடைய இந்த செயல் இந்திய சினிமா 100ஆம் ஆண்டு விழாவில் பார்வையாளனாக பார்க்க வாய்ப்பு கிடைக்குமா என்று யோசித்த என்னை இப்பொழுது அந்த சினிமா மலரின் வடிவமைப்பாளராகவே ஆக்கியிருக்கிறது. இது திரையுலக முன்னோடிகள் சந்தித்த சவால்களை பற்றியும் அவற்றை சந்தித்து அவர்கள் படைத்த சாதனைகள் பற்றியும் படிக்கின்ற வாய்ப்பை தந்தது. அது சோர்ந்து கிடந்த என் மனதிற்கு புத்துயிரை தந்துள்ளது. அது மட்டுமல்ல என்ன செய்வதென்று மாதக்கணக்கில் குழம்பிக் கொண்டிருந்த என் மனதிலிருந்த வெறுமையை போக்கி, ஒரு தெளிவை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகில் என் பயணத்தை தொடரவும், என் முதல் படத்திற்கான வேலைகளை துரிதப்படுத்தவும் ஊக்கத்தை தந்திருக்கிறது.
தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க இது கற்று தந்தது. அது இந்த வலைப்பூவில் கூட வரும் நாட்களில் தெரியும். திரைப்படம் பற்றி மட்டுமே தொடர்ந்து எழுத என்னை தூண்டுகிறது. அதைப்பற்றி மட்டுமே எழுதவும் நிறைய இருக்கிறது என்பதையும் இந்த மலர் பணி எனக்கு எடுத்து சொல்கிறது.
திரைப்பட இலக்கிய சங்கமத்தை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்துவது எப்படி என்பதற்கும் இந்த வாய்ப்பு எனக்கு வழிகாட்டியிருக்கிறது. மலர் பணிகள் முடிந்த உடன் மீண்டும் திரைப்பட இலக்கிய சங்கமப் பணிகளையும் என்னுடைய முதல் பட வேலைகளையும் தொடருவேன் என்பது உறுதி.
என் மனதில் இத்தனை ஊக்கம்வர, உற்சாகம் தர, உறுதி ஏற்பட காரணமான மலர் பணியை, என்னிடம் ஒப்படைத்த திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களுக்கும், அவருக்கு என்னை அறிமுகம் செய்துவைத்த நண்பர் கதாக.திருமாவளவன் அவர்களுக்கும், எனக்கு ஆதரவு தந்த இயக்குநர்கள் திரு விக்ரமன், திரு ஈ.ராமதாஸ், திரு. டி.கே.சண்முகம், திரு ஏகம்பவாணன், திரு ராஜா கார்த்திக், திரு நம்பிராஜ் போன்றவர்களுக்கும், இந்த பணியில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்துவரும் இயக்குநர் ராஜா, நண்பர்கள் குணா, குரு, மாரிச்சாமி போன்றவர்களுக்கும் என்னுடைய..

நூறாண்டு நன்றிகள்…      

No comments:

Post a Comment

Let others know your opinions about this post