Friends can’t read Thamizh, please see the video: https://www.youtube.com/watch?v=dIpo09dps2M
நண்பர்களே, தமிழக வாக்காளப் பெருமக்களே வணக்கம்..
இந்தியா முழுவதும் தேர்தல் நடக்கும்போது ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு வேட்பாளரும் எவ்வளவு செலவு பண்ணலாம் என்கிற ஒரு வரைமுறை இருக்கிறது. இப்போதைக்கு பாராளமன்ற தேர்தலில் எழுபது லட்சம் வரைக்கும் செலவு செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். அது முடியாது, அது பத்தாது, இன்னும் வேண்டும் என்று அரசியல் கட்சிக்காரர்கள் எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அது எங்களால் செலவு செய்ய முடியவில்லையே என்று சுயேட்சையா நிற்கிற வேட்பாளர்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனா இந்தியா முழுவதுமாக நிலைமை. அப்படி இருக்கும்போதும், தமிழகத்திற்கு மட்டும் ஒரு சிறப்பு இருக்கிறது. வாக்காளர்கள் நேரடியாகவே வேட்பாளர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்வது, அதில் தமிழகம்தான் நம்பர் ஒன் என்று சமீபத்தில் செய்திகள் வந்துகொண்டிருக்கிறது!
இந்த நிலைமை சிலகாலமாகவே தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். நிறையபேர் பணம் வாங்கியிருக்கிறார்கள். வாங்கிக்கொண்டுதான் ஓட்டும் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். “ஏன் எங்களுக்கு இனியும் கிடைக்கவில்லை” என்று வருத்தப்பட்டுக்கொண்டு காத்திருக்கும் வாக்காளர்களும் இருக்கிறார்கள்.
இது தவறா என்று கேட்டால் தவறுதான். ஆனால் அதை தடுக்கமுடியுமா என்று கேட்டால் தெரியவில்லை. காரணம் நாம் தவறு செய்வதை ஒரு திறமையாக அங்கீகரிக்க ஆரம்பித்துவிட்டோம். கொஞ்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளை பார்த்து நாம் திட்டுவோம். வாய்ப்பு கிடைத்தால் அடிப்பதற்கும், அவரை இந்த சமூகத்திலிருந்து ஒழித்துக்கட்டவும் நாம் தயாராக இருப்போம். அவ்வளவு வீரர்களாக நாம் இருப்போம். ஆனால் அளவுக்கு அதிகமாக லஞ்சம் வாங்கினால் “அவன் திறமைசாலிப்பா” அப்படி என்று அவனை பாராட்டும் நிலைமை நமக்கு இருக்கிறது. ஏன் என்றால் நம் அனைவரின் மனதிலும் ஒரு லஞ்சம் வாங்கும் ஊழல்வாதி ஒளிந்துகொண்டுதான் இருக்கிறான்!
நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்பதுதான் உண்மை. மற்றபடி லஞ்சத்தை அங்கீகரிக்க தொடங்கினோம்.
அதேபோல்தான் இங்கு நமது அடிப்படை உரிமையான தேர்தலிலும் அதே தவறை செய்கிறோம். முன்பு வேட்பாளர்கள் தயங்கி தயங்கி தந்தார்கள். சில தொகுதிகளில் மட்டுமே கிடைத்தது. அதை வாக்காளர்களும் தயங்கி தயங்கியே பெற்றுக்கொண்டார்கள். இப்போது அந்த தயக்கமெல்லாம் போய்விட்டது. நேரடியாகவே “எவ்வளவு தருவீர்கள்” என்று கேட்கிறார்கள், “நாங்கள் இவ்வளவு தருகிறோம்” என்று ஒவ்வொரு கட்சியிலும் சொல்கிறார்கள். ஒவ்வொரு வேட்பாளர்களும் சொல்கிறார்கள். அதனால் இப்போதைக்கு அதை திருத்துவதை பற்றி நான் இங்கு எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்த தவறுக்கு ஏதாவது ஒரு பரிகாரம் இருக்கிறதா என்று பார்த்தால், ஒரு பரிகாரத்தை நான் பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.
வாக்களப்பெருமக்களே.. தயவு செய்து அதையாவது கேளுங்கள். உங்களை வாங்கவேண்டாம் என்று சொல்லவில்லை. கிடைக்கும்வரை வாங்குங்கள். முடிந்தால் எல்லா கட்சிக்காரர்களிடமிருந்தும் வாங்குங்கள். ஆளுங்கட்சி, எதிர்கட்சி, சுயோட்சை என்று எல்லோரிடமும் கிடைத்தவரை வாங்குங்கள். ஆனால் ஓட்டு போடும்போது மட்டும் தெளிவாக யார் உங்களுக்கு பணம் தரவில்லையோ, அது உங்களுக்கு தெரியாத நபராக இருக்கட்டும், இல்லை தெரியாத கட்சியாக இருக்கட்டும், பிரபலமாகாத ஒரு வேட்பாளராக இருக்கட்டும், அவருக்கு உங்கள் ஓட்டை கொடுங்கள்.
பணம் தராத வேட்பாளருக்கு மட்டுமே உங்கள் ஓட்டு என்று முடிவு செய்யுங்கள்...!
ஓட்டுக்கு துட்டு தரும் இந்த அரசியல்வாதிகளை ஏமாற்றுவதில் தவறில்லை. நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள், இருந்தாலும் அந்த தவறுக்கு ஒரு பரிகாரமாக தயவு செய்து பணம் தந்தவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள். யாரெல்லாம் பணம் தந்தார்களோ அவர்களை தவிர்த்துவிட்டு மற்றவர்களுக்கு ஓட்டுபோடுங்கள். அப்படியாவது இந்த ஜனநாயகத்தை நாம் காப்பாற்றுவோம்.
இப்படி ஒன்று அல்லது இரண்டு தேர்தல்களில் நீங்கள் பணம் வாங்கிக்கொண்டு பணம் தராதவர்களுக்கு ஓட்டுப்போட்டால், பணம் தருபவர்கள் தானாகவே திருந்தி நிறுத்திவிடுவார்கள்.
அடுத்தமுறை பணம் கொடுத்தாலும் ஜெயிக்கமாட்டோம் என்கிற எண்ணத்தை அவர்களுக்கு புகட்டுங்கள்.
அதற்காகவாவது பணத்தை வாங்கிக்கொண்டு பணம் தராதவர்களுக்கு ஓட்டுப்போடுங்கள். நல்லவர்களை தேர்ந்தெடுங்கள்.
நன்றி வணக்கம்.
அன்புடன்
கமலபாலா பா.விஜயன்