Sunday 28 April 2013

சினிமாவல் வெற்றிபெற ஒரு வழி -1


முன்னுரை 

நான் நடத்திவரும் திரைப்பட இலக்கியச் சங்கமம் பற்றி அறிமுகம் செய்து எல்லோரையும் அதன்பால் ஈர்க்கவேண்டும் என்றுதான் சினிமாவில் வெற்றிபெற ஒரு வழி என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தேன். அந்த எண்ணத்தில்தான் சங்கமத்தின் அறிமுகத்தை இங்கே பதிவு செய்தேன்.
ஆனால் இந்த தலைப்பு என்னைத்தான் வெகுவாக ஈர்த்திருக்கிறது என்று நினைக்கிறேன். இது என்னை மீண்டும் எழுத தூண்டுகிறது. திரை உலகில் எனக்குள்ள அனுபவம் குறைவுதான். இருந்தாலும் அதை அடிப்படையாகக்கொணடு இந்த தலைப்பின்கீழ் சில குறிப்புகளை தந்தால் அவை சினிமாவில் வெற்றிபெறத் துடிக்கும் கலைஞர்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
சினமாவில் வெற்றிபெற முதலில் சினிமாவை அறிந்துகொள்ளவேண்டும். சினிமாவின் அடிப்படை விஷயங்களைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். சினிமா அதிக எண்ணிக்கையிலான மக்களை ஈர்ப்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அவற்றைப்பற்றி ஓரளவு புரிந்துகொள்ளவேண்டும்.
சினிமா என்பது ஒரு கலை அல்ல. அது பல கலைகளின் ஒரு கலவை. கண்ணால் பார்க்கப்படும் கலைகள், காதால் கேட்கப்படும் கலைகள், மனதால் உணரப்படும் கலைகள் எல்லாவற்றையும் உள்ளடக்கியது.
ஒரு சித்திரத்தை ரசிக்க அதை வரைந்த ஓவியனைப்பற்றி தெரிந்திருக்கவேணடும் என்ற அவசியம் இல்லை. தெரிந்திருந்தால் அந்த சித்திரத்தின்மீது ஒரு ஈடுபாடு உண்டாகும். வண்ணங்களின் கலவைகள்பற்றி தெரியவேணடிய அவசியம் இல்லை. வடிவங்களைப்பற்றி அறிந்தாலே போதும். கண்களை குளிரவைக்கும். சித்திரம் வரையும் நுட்பங்கள் தெரியவேண்டும் என்பது இல்லை. தெரிந்தால் ஆழமாக உணர்ந்து ரசிக்க முடியும்.
அதுபோலதான் சினிமாவும். வெறுமெனவே ரசிக்க அந்த சினிமா எடுத்தவனை தெரிந்திருக்கவேண்டியதில்லை. தெரிந்தால் படத்தைப் பார்க்கும்பொழுது ஒரு ஈடுபாடு உணடாகும். சினிமாவை ரசிப்பது எப்படி என்று தெரிந்தால் மனம் குளிரும். தொழில்நுட்பங்கள் தெரிந்திருந்தால் மேலும் ஆழமாக ரசிக்க முடியும்.
சினிமாவில் வெற்றிபெற இந்த அனைத்து விஷயங்களிலும் முதலில் ஒரு புரிதல் வேண்டும். நன்றாக அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்தான். ஆனால் அது அடுத்தகட்டம். அதை பிறகு பார்க்கலாம். தற்பொழுது முதல்கட்டமாக அவற்றை புரிந்துகொள்ள முயறசிப்போம்.     

Saturday 27 April 2013

திரைப்பட இலக்கியச் சங்கமம் – ஒரு அறிமுகம்


திரைப்பட இலக்கியச் சங்கமம் ஒரு அறிமுகம்

திரையுலகிலும் அதைச்சார்ந்த தொழில்களிலும் லட்சக்கணக்கானவர்கள் வாழ்ந்து வருகின்றனர். திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று ஆரம்பித்து சினிமா தியேட்டர் ஆப்ரேட்டர்கள், தியேட்டரில் டிக்கட் கிழிப்பவர்கள் வரையிலும் இதில் அடங்குவர்.
       இவர்கள் எல்லோரும் நன்றாக வாழ வேண்டும் என்றால் திரையுலகம் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். திரையுலகம் ஆரோக்கியமாக இருக்க, நிறைய திரைப்;படங்கள் வெளி வரவும்வேண்டும், அவை வெற்றி பெறவும் வேண்டும்.
 'இதுபோன்ற' திரைப்படங்கள்தான் வெற்றிபெறும் என்று யாராலும் சொல்ல முடிவதில்லை. அப்படி சொல்ல முடிந்திருந்தால் எல்லோரும் அதே போன்ற திரைப்படங்களை மட்டும் எடுத்து வெற்றி பெற்றிருப்பார்கள். படைப்பாளிகளின் கற்பனைக்கும் திறமைக்கும் சவால்விடுவதும், இத்துறையில் புது ரத்தத்தை ஓடவைப்பதும் யாருக்கும் தொpயாத 'அந்த' ரகசியம்தான்.
ஆனால் ஒரு உண்மை எல்லோருக்கும் தெரியும். அது 'நல்ல திரைப்படங்கள் என்றுமே தோல்வியடைந்ததில்லை' என்பதுதான்! விருதுகள் வாங்குவதற்காகவே தயாரிக்கப்பட்ட 'கலைப்படம்' என்று போற்றப்படும் படங்கள் மட்டுமல்ல, வெகு ஜனங்களை மகிழ்விக்கும் தரமான ஜனரஞ்சகப்படங்களையும் சேர்த்துதான் நல்ல திரைப்படங்கள் என்று இங்கு குறிப்பிடுறேன்.
அந்த வகையில் நிறைய நல்ல திரைப்படங்கள் உருவாக அடிப்படைத் தேவை நல்ல கதைகள்தான்! இதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். புதுமையான கதை, பழையதை புதுவிதமாக சொன்ன கதை, பிறமொழி படங்களிலிருந்து தழுவப்பட்ட அல்லது தூண்டப்பட்ட கதைகள் என்று பல வகையிலும் நல்ல கதைகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. புதுமையாக, சுயமாக சிந்தித்து உருவாக்கிய கதை என்று பகிரங்கமாக விளம்பரம் செய்து கொண்டே பிறமொழிகளிலிருந்து 'நகல்' எடுத்த கதைகளும் வெற்றி பெறுவது உண்டு.
ஆனால் நல்ல திரைக்கதைகளும், அதுவழி நல்ல படங்களும் உருவாக சிறந்த வழி இலக்கியங்களின் துணைகொண்டு திரைக்கதைகளை அமைப்பது தான். இதன் பொருள் இலக்கியங்களை, குறிப்பாக நாவல்களை மட்டுமே திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது அல்ல. நல்ல இலக்கியங்களைப் படித்தால், தொடர்ந்து இலக்கியங்களுடன் தொடர்பு வைத்தால் அதன் தாக்கம் முழு திரைக்கதை அமைக்கும் போது மட்டுமல்ல, நல்ல கதாபாத்திரங்கள்,  தேர்ந்தெடுத்த காட்சிகள், குறிப்பிட்ட வசனங்கள் படைப்பதற்கு கூட உதவியாக இருக்கும். அனுபவம் வாய்ந்த பல பிரபல படைப்பாளிகளும் இதை உணர்ந்து செயலாற்றியிருக்கின்றனர். இன்றும் செயலாற்றி வருகின்றனர்!
இலக்கியங்களுடன் உள்ள தொடர்பை பலப்படுத்த இலக்கியவாதிகளுடன் தொடர்பு கொள்ளுவது மிகவும் நல்லது. திரைப்படங்களை குற்றம் சொல்லும் சில இலக்கியவாதிகள் குறை சொல்வதை விட்டுவிட்டு திரைப்பட படைப்பாளிகளுடன் இணைந்து தங்கள் கருத்துக்களை பரிமாற ஆரம்பித்தால் இலக்கியவாதிகளுக்கும் திரைப்பட கலைஞர்களுக்கும் இடையில் நிலவும் இடைவெளி இல்லாமல் போகும். நல்ல கதைகள் உருவாக உதவியாக இருக்கும்.
ஆனால் ஒரு கதையை திரைப்படமாக உருவாக்க இயக்குநரும் எழுத்தாளரும் மட்டும் உழைத்தால் முடியாது. தயாரிப்பாளர், நடிகர்கள் முதல் ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் போன்ற தொழில்நுட்பக் கலைஞர்களும், தயாரிப்பு நிர்வாகிகள், பத்திரிக்கைத் தொடர்பாளர்கள் போன்ற பலரும் இணைந்து பணியாற்றினால் தான் திரைப்படம் உருவாகும்.      
இவர்கள் அனைவருடைய வாழ்விலும் ஒவ்வொரு படத்தின் வெற்றியும் தோல்வியும் தாக்கத்தை ஏற்படுத்துவதுண்டு. அதனாலேயே படங்கள் வெற்றிபெறவேண்டும் என்று இவர்கள் அனைவரும் ஆசைப்படுவதும், அவற்றின் கதையிலும் தொழில்நுட்பத்திலும் அக்கறை கொள்வதும் நியாயம் தான். அவர்களுடைய எண்ணங்களும் அபிப்ராயங்களும் தெரிந்து கொண்டால் படங்களில் வரும் குறைகளை களையவும் நிறைகளை வளர்க்கவும் ஏராளமான வாய்ப்புகள்  கிடைக்கும்.
ஆனால் வேலை செய்யும் பொழுதும் அல்லது தொழிற்சங்க கூட்டங்களிலும் அல்லாமல் இவர்கள் ஒன்று கூடுவதற்கான வாய்ப்பு யாருக்கும் கிடைப்பதில்லை. அதனால் திரைப்படங்களைப்பற்றி திரைத்துறையில் இருப்பவர்களே என்ன நினைக்கிறார்கள் என்று படைப்பாளிகளுக்கு தெரியவும் வாய்ப்பில்லாமல் போகிறது. இந்தக்குறையை தீர்க்கவேண்டுமென்றால் திரைத்துறையினர் அவ்வப்போது ஒன்று கூடவும், மனம்விட்டு பேசவும், மற்றவர்கள் பேசுவதை கேட்கவும் வாய்ப்பு கிட்டவேண்டும். அதற்கு திரைத்துறையினருக்கு மத்தியில் ஒரு நட்பு வட்டம் வளரவேண்டும்.
முன்பு பலபடங்கள் வெற்றிபெற்று நூறாவது நாள் விழா, வௌ;ளிவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. அந்நேரங்களில் திரைத்துறையினர் இதுபோல சந்தித்து வந்தனர். ஆனால் காலப்போக்கில் பலமாற்றங்கள் வர, இப்போது நூறாவது நாள் விழா, வௌ;ளிவிழா போன்றவை மிக அரிதாகிவிட்டன.  திரைப்படங் களுக்கான புஜையும், பாடல்கள் வெளியீட்டு விழாவும் மட்டும்தான் தற்பொழுது நடந்து வருகிறது. புஜைபோடும்போது அந்த  திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் அந்த படத்தின் ஆரம்ப கட்டத்தில் பணியாற்றும் கலைஞர்களும், அவர்களுக்கு  மிகநெருக்க மானவர்களும் விருந்தினர்களும் மட்டுமே பங்கு பெறுவதுதான் வழக்கம்.
பாடல்கள் வெளியீடு இன்றைய காலகட்டத்தில் அனேகமாக திரையரங்குகளில் மட்டுமே நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சிகள் வழக்கம் போல தாமதாகவே ஆரம்பிக்கும். அதற்குள் திரையரங்கில் காலைக்காட்சி ஆரம்பிக்க நேரமாகிவிடும். அதனாலேயே அவசரமாக நிகழ்ச்சிகளை நடத்தி முடித்து விடுவார்கள். அதற்குள் திரையரங்க ஊழியர்கள் 'பணிவுடன்' அனைவரையும் அங்கிருந்து துரத்த ஆரம்பித்து விடுவார்கள். பிறகு எப்படி மற்ற படங்களைப்பற்றியும், மற்ற  விஷயங்களைப்பற்றியும் பேசுவது?
நானும் உதவி இயக்குநராக கனவுகளுடன் வந்த நாளிலிருந்து  திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆசைப்படுவதுண்டு. எல்லோரையும் போலவே நானும் இலக்கிய கூட்டங்களிலும், திரைவிழாக்களிலும் இத்துறைகளில் வெற்றிபெற்றவர்களை பார்க்கவும் அவர்கள் பேசுவதைக் கேட்கவும் ஆர்வம் கொண்டிருக்கிறேன்.
ஆனால் வருடங்கள் கடந்து செல்ல, இதுபோன்ற விழாக்கள் குறைந்து விட்டதினால் இப்படி தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்குபெறவோ, வெற்றி பெற்றவர்களின் பேச்சைக் கேட்கவோ முடியாமல் போனது. இது என் மனதில் ஒரு ஆதங்கமாகவே வளர்ந்து வந்தது. இதை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதுபற்றி நான் எனக்கு தெரிந்த பலரிடமும் கேட்டுப்பார்த்தேன். யாராவது இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தினால் அனைவருக்கும் உதவியாக இருக்கும் என்று சொல்லிப் பார்த்தேன். ஆனால் யாரும் இதை பொpதாக எடுத்துக் கொள்ளாததால், நானே ஒரு முடிவை எடுத்தேன். அதன் பலன் தான் இந்த சங்கமம்!
தற்பொழுது இந்த திரைப்பட இலக்கியச் சங்கமத்தை ஒம்பது முறை  நடத்தி விட்டேன். அதில் வெற்றியும் கண்டேன். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் இதன் முழுவெற்றி என்பது மேடையில் சிறப்பு விருந்தினர்கள் வருவது மட்டுமல்ல (அதுவும் வெற்றியின் ஒரு பகுதிதான் என்றாலும்) இந்த சங்கமத்திற்கு பார்வையாளர்களாக நிறையபேர் வந்து கூடுவதுதான்! குறிப்பாக வெற்றிபெற்றவர்கள் கூடுவதுதான் சங்கமத்தின் உண்மையான வெற்றியாகும்.
அதனால்தான் சிறப்பு விருந்தினர்களாக மட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களாகவும் அனைத்து திரைத் துறையினரும் இந்த திரைப்பட இலக்கியச் சங்கமத்திற்கு வர வேண்டும் என்று நான் பணிவுடன் அழைக்கிறேன்.
திரைப்படமும் இலக்கியமும் இணைய வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புபவர்கள் இதில் கலந்து கொண்டால், அவர்களே வருகிறார்களே, அப்படியென்றால் நாமும் வருவோம் என்று மற்றவர்களும் வர ஆரம்பிப்பார்கள். இந்த சங்கமத்தின் நோக்கமும் நிறைவேறும்.
இந்த சந்திப்பினால் எனக்கு என்ன நஷ்டம், லாபம் என்று யோசிக்காதீர்கள். உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று யோசியுங்கள். திரைப்படம் மற்றும் இலக்கிய உலக நண்பர்கள் அனைவரும் மாதம் ஒருமுறையாவது சந்தித்தால் அவர்களுக்கு மத்தியில் ஒரு புரிதல் உருவாகும், உறவு பலப்படும்.
இதுவரை நல்ல சினிமாக்கள் உருவான வழி தெரியும், இனிமேல் நல்ல சினிமாக்கள் உருவாக்க மனதில் தெளிவு பிறக்கும். உங்களுக்காக நீங்கள் வந்தால், இந்த சங்கமத்தில் இணைந்தால் அதுவே எனக்கு திருப்தி தரும். உங்கள் மூலமாக எனக்கும் புதிய தொடர்புகள் கிடைக்கும். அதுவே எனக்கு லாபம்.
உங்கள் உதவி இதைத் தொடர்ந்து நடத், இதுபோன்ற நல்ல முயற்சிகள் மேலும் தொடர தூண்டுதலாக இருக்கும். அதுதான் இதன் இலக்கு. அதனால் திரைப்படமும் இலக்கியமும் இணைய வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், நல்ல படங்கள் வரவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் - படைப்பாளிகள் மட்டுமல்ல நடிகர்கள், மற்ற கலைஞர்கள், ரசிகர்கள்- என்று அனைவரும் வர வேண்டும்.   

Tuesday 23 April 2013

அத்தருணத்தில் பகைவீழ்த்தி…



கடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயிருந்தேன். இதற்குமுன்பு இந்த நூலின் வெளியீட்டு விழாவிலும் கலந்துகொண்டிருந்தேன். என்னுடைய வாழ்வியல் சூழ்நிலைகள் காரணமாகவும், சோம்பேறித்தனம் என்ற நோயால் நான் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தினாலும் கடந்த சில வருடங்களாக புத்தகங்கள் படிக்கிற பழக்கம் எனக்குள் சற்று குறைவாகவே இருந்து வருகிறது. இருந்தாலும் அவ்வப்போது சில புத்தகங்களை படிக்கத்தான் செய்கிறேன். அதில் சில ஈழத்து எழுத்துக்களும் ஈழத்தைப்பற்றய எழுத்துக்களும் அடக்கம்.
அப்படி படித்த எழுத்துக்களை இரண்டு விதமாகத்தான் என்னால் பிரித்துப்பார்க்க முடிகிறது. ஒன்று ஈழத்து மக்களின் வாழ்க்கையை தூரத்திலிருந்து பார்த்து, விருந்தினராக மட்டும் சென்று பார்த்து, படித்தும் கேட்டும் அறிந்தவற்றை தொகுத்து எழதியவை. இன்னொன்று ஈழத்திலேயே வாழ்ந்து, அனுபவித்து, உணர்ந்த்தனால் எழுதப்பட்டவை.
திரு அகரமுதல்வனின் இந்த நூல் இவற்றில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்த்து. இதை இந்நூலின் ஒவ்வொரு கவிதையும் எடுத்துச்சொல்கிறது.
இந்நூலின் நிறைகுறைகளை விமர்சிக்கவோ கண்ணை மூடிக்கொண்டு பாராட்டவோ நான் இங்கே முயற்சி செய்யவில்லை. இந்த நூலில் சொல்லப்பட்டவை இன்றைய காலகட்டத்திற்கு புதியதல்ல. புதுமையானதும் அல்ல. ஆனால் மிகவும் முக்கியமானது.
மரியாதை நிமித்தமாக ஐந்து நிமிடங்கள் பேசி பாராட்டிவிட்டு வரலாம் என்றுதான் இந்த நிகழ்விற்கு சென்றேன். ஆனால் அங்கே வந்திருந்த சிறப்பு விருந்தினர்களின் நேரத்தை அபகரிக்க ஏனோ மனம் வரவில்லை. நான் சொல்லநினைத்ததை இங்கே பதிவு செய்து விடலாம் என்று முடிவு செய்தேன்.
இந்த நூலைப்பற்றி கவிஞர் ஐயப்ப மாதவன் அவர்கள் பேசும்போது, பாதி நூலை படித்த்தற்கே பாதி கொந்தளிப்பை தன்னுடைய வார்த்தைகளில் காட்டிவிட்டார்.
ஓவியர் புகழேந்தி அவர்கள் இந்நூல் வெளியாவதற்கு ஆரம்பம் முதலே உறுதுணையாக இருந்த்தனால் இந்த நூலின் சிறப்பு,  தேவை, இலக்கு மற்றும் ஈழத்தின் நிலைமைகள் பற்றி விரிவாகவே எடுத்துரைத்தார்.
கவிதாயினி குட்டி ரேவதி அவர்கள் இந்த நூலை சாக்காக வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த கவிஞர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும்படியாகவே பொரிந்து தள்ளினார். இனிமேல் ஈழம் சம்பந்தமாக யாராவது எழுதுவதாக இருந்தால் உருப்படியாக எழுது இல்லையேல் எழுதாமல் ஒதுங்கிவிடு என்று ஆதங்கப்பட்டார். பாவம் ஆவேசத்திலும் ஆர்வத்திலும் ஒரு விஷயத்தை மறந்தே போய்விட்டார் போலிருக்கு.
இங்கே கவிதையாக கவிதை எழுதுபவர்கள் ஒருசிலர் மட்டும்தான். மற்றவர்களில் பாதிபேர் சினிமாவில் பாட்டெழுதும் வாய்ப்பிற்க்காக கவிதை எழுதுகிறார்கள் என்றால் மீதிபேர் சினிமாவில் பாட்டெழுத வாய்ப்பு கிடைக்காது என்று தெரிந்த்தாலேயே கவிதை எழுதி வருகிறார்கள். இவர்கள் யாருமே குட்டி ரேவதியின் ஆதங்கத்தை பொருட்படுத்தப் போவதில்லை. (நானும் சினிமாவில் வாய்ப்பு தேடுபவன் தான்.) இந்த நிலைமையில் நான் என்னத்தை சொல்ற்து.
இருந்தாலும் ஒரு தோழன் என்ற முறையில் அகரமுதல்வனின் இந்த நூலைப்பற்றி சில விஷயங்களை சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதைத்தான் நான் இங்கே குறிப்பிட ஆசைப்படுகிறேன்.
அகரமுதல்வன் தன் கவிதைகளை ஆயுதமாக்க முயற்சி செய்துள்ளார். அந்த முயற்சியில் முதல்கட்ட பயிற்சி வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். ஈழத்து மக்கள், குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் அனுபவித்த துயரங்களை மற்ற கவிஞர்களைப்போலவே அழகாக பதிவு செய்திருக்கிறார். நேரில் பார்த்தவன் என்ற முறையில் அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார்.
இவருடைய எழுத்தில் ஒரு தனித்துவம் தெரிகிறது. அதைத்தான் என்போன்ற நண்பர்கள் அவரை பாராட்டவும் ஊக்கப்படுத்தவும் வேண்டுமென்று நான் நினைக்கிறேன்.

     அகரமுதல்வன் எழுதிய இந்த நூலை படிக்கும்பொழுது ஒரு விஷயம் நன்றாக புரிகிறது. இவர் தன்னுடைய கவிதைகள் அனைத்திலும் ஒரே விஷயத்தைத்தான் வலியுறுத்துகிறார். அது, ஈழத்தில் நடந்த அவலங்களை பார்த்த்தனால் அவருக்குள் எழுந்த கோபமும் ஆதங்கமும்தான். அதுதான் அவருக்குள் இருக்கும் கவிஞனை எழுதத் தூண்டியிருக்கிறது.
     என் கோபம் எல்லாம்
     உன்னை தீ தீன்றுவிடக் தொடுத்தவர் மீதுதான்
     உன்னை விதைத்து இருக்கவேண்டும்
என்ற வரிகளே போதும் அதற்கு அத்தாட்சி.
     ஆனால் என்னை மிகவும் கவர்ந்த்து அவருடைய எழத்துக்களில் ஆங்காங்கே தலைகாட்டும் நம்பிக்கைதான்.   
     விழித்தெழ மறப்பவர் வீழ்வார் என்பதே
     விரிந்துகிடக்கும் வரலாறு.
என்று ஒரு இடத்திலும்
சாவுகளுக்கு அஞ்சுவோர்
சாதித்துவிட முடியாது.
என்று இன்னொரு இடத்திலும்   
என் எழுதுகோல்
கவிதை எழுதுகிறது
இப்போது இலையுதிர் காலம்தான்
வசந்தகாலத்திற்காய்
என்று முடிவாகவும் இடம்பெற்ற வரிகள் இதற்கு உதாரணங்கள்தான் என்றால்
நினைத்துப்பாருங்கள்
இருட்டிற்கு விளக்கேற்றினாலே
மிரட்டும் வாழ்விருக்க
நாட்டிற்கு விளக்கேற்றும் நாள் வருதல்
என்ற வரிகள் நம்பிக்கையின் உச்சத்தை தொடுகிறது.
     சமூகத்தின் மீது அகரமுதல்வன் கொண்ட ஆதங்கம் இன்னொரு தளத்தில்
கையில் நோக்கியா
பள்ளிக்கூடத்தில் சிகரெட்
கோவிலில் விபசாரம்
பேருந்தில் சில்மிஷம்
வீட்டுக்குள் கொள்ளை
தெருவில் வன்புணர்வு
போன்ற வரிகளாக சாதாரண வாசகர்களையும் சிந்திக்க வைக்கும்.
நான்கு வரிகளில் நச்சென்று சொல்லவந்த்தை சொல்ல அகரமுதல்வனாலும் முடியும் என்பதற்கு
ஈழத்தில்
தாலாட்டு பாடியும்
தூங்காது குழந்தை
ஒப்பாரி அடமழையில்
என்ற வரிகள் சாட்சி. இவை படிப்பவர்களின் மனசாட்சியை தொட்டு எழுப்பும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
நிறைய எழுதவேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் இப்பொழுதுதான் தட்டச்சை பயின்று வருகிறேன் என்பதால் தற்போதக்கு இது போதும் என்று முடிக்கிறேன். நிறைவாக ஒன்று...

ஒரு மழையின் பின்னரான ஈரத்தில்
மண்கொள்ளும் மகிழ்ச்சியாய்
என் மரணத்தில் நீ மகிழ்வதாயின்
இப்போதே மரணிக்கத் தயார்

இப்படியே
கவிதை எழதி
உன்னை ஏமாற்றுகிறேன்
கவிஞன் நான்
என்று அகரமுதல்வன் ஒரு கவிதையை முடித்திருக்கிறார். இந்த வரிகளில், செயல்பட தெரியாமல் வார்த்தைகளால் மட்டுமே வாய்ஜாலம் காட்டும், கவிஞர்களுக்கு மட்டுமே உரித்தான இயலாமையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதனாலேயே நானும் அகரமுதல்வனை மனதார வாழ்த்துகிறேன்...
நீ கவிதை எழுதுவதில்
பயிற்சி பெற்றுவிட்டாய்.
இனி உன்
வார்த்தைகளை விரையமாக்காதே,
வரிகளை கூர்மையாக்கு,
அவை
உனக்கும் ஆயுதமாகும்
ஊருக்கும் ஆயுதமாகும்.

Monday 22 April 2013

வணக்கம்


நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்பொழுது நான் மீண்டும் எழுத ஆரம்பித்துள்ளேன். இதற்கு மத்தியில் நான் வலைப்பதிவு, முகநூல் மற்றும் பல வலைதளங்களில் தொடர்பு வைத்திருந்தேன். ஆனால் அவை எதுவுமே என்னை ஈர்க்கவில்லை. அதனால் என்னால் அவற்றில் கூடுதலாக ஈடுபாடு காட்ட முடியவில்லை. என்னை தொடர்ந்து செயல்படவைக்க பல மாற்றுப்பாதைகளை யோசித்துப்பார்த்தேன்.
     என்னுடைய முதன்மையான பணி என்பதால் திரைக்கதைகள் எழுதவேண்டியிருந்தது. தற்பொழுது நான் என்னுடைய முதல்படத்தின் ஆரம்பகட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளேன். இந்த வேலைகளுக்கு இணையாகவே கடந்த இரண்டு வருடங்களில் பத்துமுறை திரைப்பட இலக்கியச் சங்கமத்தை நடத்திவந்துள்ளேன். இச்சங்கமத்தை மேலும் பயனுள்ளதாக வளர்க்கவும் இதை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லவும்தான் நான் இந்த வலைதளத்தை ஆரமபித்து திரும்பவும் எழுத ஆரம்பித்துள்ளேன்.
நீண்டநாள் இடைவெளி விட்டதனாலும் கடந்த சிலவருடங்களாக சோம்பேறித்தனம் என்னை ஆட்கொண்டதனாலும் என்னால் பழையதுபோல வேகமாக எழுத முடியவில்லை. அதனால் வரும் நாடகளில் படிப்படியாக நான் விரிவாக எழுதுவேன். கூடிய விரைவில் நான் என் பழையவேகத்தை எட்டிவிடுவேன் என்று நம்புகிறேன்.
உண்மையில் நான் இந்த வலைதளத்தை இந்தமாதம் முதல் வாரத்திலேயே ஆரம்பித்தேன். இதை ஆரம்பிக்க போகும்போது வழியில் அகரமுதல்வனை சந்தித்தேன். அவர் தன்னுடைய புதிய புத்தகத்தின் விமர்சனக் கூட்டத்தில் பங்குபெற அழைப்பு விடுத்தார். அதனால் அவருடைய புத்தகத்தைப்பற்றி எழுதியபடி என்னுடைய எழுத்தை மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று முடிவுசெய்தேன். ஒருசிலகாரணங்களால் அந்த நிகழ்வு ஒரு வாரகாலத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் நான் என் முடிவை மாற்றவில்லை. அந்த நிகழ்விற்காக காத்திருந்தேன்.
நேற்று அந்த நிகழ்விற்கு சென்றுவந்து தற்பொழுது இங்கே எழுத ஆரம்பித்துள்ளேன். என்னுடைய நண்பர்களான நீங்கள் அனைவரும் தொடர்ந்து நான் எழுத உற்சாகமும் ஊக்கமும் தருவீர்கள் என நம்புகிறேன்.

அன்புடன்
விஜயன்        

Halo

After a long break, now I am restarting to write. In the meantime, I came across many writing works, blogging, facebok and other networks. But nothing impressed me so much. So, I couldnt involved in those things more. I think of many other alternate options to make me engaged.
As the main profession , I had to work on film scripts and now I am in the preliminary stage of my directorial debut. Parallel to these works, I conducted Film Literature Confluence ten times in the span of the last two years. Only to develop it more effectively and to take it to the next level I started this website and writing here.
Because of the long break and because of the laziness that affected me in the last few years, I couldnt restart writing fast. So, I will write the details step by step in coming days. Hope to reach my regular writing pace very soon.
Actually I started this web on the first week of this month. When going to start the web, I met Akaramuthalvan on the way and he invited me to the function to review his new book. So, I decided to restart writing with article about his book. Unfortunately, the function was postponed for a week. But I didnt changed my decision and I wait for the function. That was conducted yesterday, and I attended the function,
Now I restarted writing and I hope you, all my friends will support and encourage me to continue writing.

with regards
Vijayan