Sunday 12 July 2015

செவ்வி 6 ல்



நேற்று நடந்த செவ்வியின் ஆறாவது நிகழ்வில் பிரான்சிஸ் இட்டிக்கோர மற்றும் லைம்லைட் ஆகிய இரண்டு மலையாள நாவல்களின் மொழிபெயர்ப்பு பற்றி பேசினார்கள். மிகவும் சந்தோஷம்.
அதைப்பற்றி அந்த மேடையிலேயே என்னுடைய சிறு கருத்து ஒன்றை சொல்ல விரும்பினேன். ஆனால், வழக்கம் போல தயக்கம் என்ற நோய் என்னை பேசவிடாமல் தடுத்தது. இருந்தாலும் அதை செல்லாமல் விடவும் மனம் வரவில்லை. அதனால் என் மனதில் தோன்றியதை இங்கே எழுதிட முடிவு செய்தேன்.
லைம்லைட் நாவலைப்பற்றி யுவகிருஷ்ணா பேசும்போது மலையாள சினிமா உலகத்தின் தற்பொழுதைய நிலைமை, தமிழ் அல்லது மற்ற திரை உலகங்களைப்போலத்தான் இருக்கிறது, சொல்லும்படியான மாறுபாடுகள் ஒன்றும் இருப்பதாக தோன்றவில்லை என்று கூறினார்.
இட்டிக்கோரா நாவரைப்பற்றி அபிலாஷ் பேசும்போது மலையாள இலக்கிய உலகத்தில் பின்நவீனத்துவம் கால்பதிக்கவில்லை என்றும், அதனால் சாருவின் தாக்கத்தால் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்றும், இது ஆரம்பம் என்பதால்தான் அங்கு இந்த நாவல் பெருவெற்றி பெற்றிருக்கிறது என்றும் சொன்னார்.
வினாயக முருகனும் அதை வழிமொழிவது போலவே பேசினார்.
சந்திரா மட்டும் அதற்கு சற்று மாறாக பேசினார். அவர் இந்த நவீனம், பின் நவீனம் போன்றவற்றை விட்டுவிட்டு நாவலின் உள்ளடக்கத்தை (இதுதான் விரிவாகன உரையா அல்லது சுருக்கமானதா என்று எனக்கு புரியவில்லை) பேசினார். பாலியல் வன்மம் என்பது ஆண்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு கலையல்ல என்பதையும் எடுத்துரைத்தார்!
கேரளத்தில் பிறந்து வளர்ந்து, இங்கு வந்து வாழும் எனக்கு இவற்றையெல்லாம் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி. காரணம், மலையாளத்தில் கூட இந்த நாவல்களைப்பற்றி இந்த அளவுக்கு விவாதித்து நிகழ்வுகள் நடந்ததாக தெரியவில்லை. அதற்காக விஜய் மகேந்திரனுக்கும், வினாயக முருகனுக்கும் பாராட்டுக்கள்.
நான் சொல்ல வரும் விஷயம் இந்த இரண்டு நாவல்களுக்கும் பொதுவான ஒரு கருத்தை மட்டும்தான்.
மிகவும் கல்வியறிவு பெற்ற மாநிலம், பொருளாதாரத்திலும், இலக்கியத்திலும், அதுபோல எல்லா விஷயங்களிலும் மிகவும் வளர்ந்த மாநிலம், இப்படி கேரளத்தை பல அடிப்படைகளிலும் புகழலாம். அதில் உண்மையும் இருக்கிறது. (அதே நேரத்தில் கேரளம் பைத்தயக்காரர்களின் கூடாரம் என்று விவேகானந்தர் சொன்னதையும் மறக்கக்கூடாது!)
சமூகம் என்பது தனிமனிதர்களின் கூட்டம் தானே. அதனால் தனிமனிதர்களைப்போலவே சமூகத்தின் பொதுபுத்தியிலும் சில குணாதிசயங்கள் இருக்கத்தானே செய்யும். பொதுவாகவே எந்த ஒரு மனிதனும் முற்றிலும் நல்லவனும் அல்ல, முற்றிலும் கெட்டவனும் அல்ல. எல்லோருடைய புத்தியிலும் அன்பு, அறிவு, விவேகம், கட்டுப்பாடு போன்ற நல்ல குணங்களுடன் வக்கிரம், காமம் போன்ற கெட்டகுணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றின் விகிதாச்சாரம்தான் வேறுபடும். ஒவ்வொருவரும் மற்றவற்றை கட்டுப்படுத்தி ஒரு சில குணங்களை மட்டும் வெளிக்காட்டுவதனால் தான்  அவன் நல்லவன், வல்லவன் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றனர்.
இது சமூகத்திற்கும் பொருந்தும். ஒரு தனி மனிதன், தனியாக இருக்கும் போது, யாரும் அவனை கண்டுகொள்ளாமல் இருக்கும் போது, அப்படி யாரும் தன்னை பார்க்கும் வாய்ப்பே இல்லை என்று அவனுக்கு நன்றாக தெரியும் நேரங்களில் அவனிடம் ஒரு கம்ப்யூட்டர் (இணையதள இணைப்புடன்) இருந்தால் அவன் இணையத்தில் எதை தேடிப்பார்ப்பான் என்று யோசித்துப்பாருங்கள்!   
காமம், வக்கிரம் போன்றவையெல்லாம் தானாக வெளிப்படும். சிலவருடங்களுக்கு முன்னால்வரை பரங்கிமலை தியேட்டரில் ஷக்கீலா, ரேஷ்மா படங்களுக்கு கூட்டம் அலைமோதுவதற்கும், அதற்கு முந்தைய காலங்களில்  ஜெயபாரதி, சீமா படங்களுக்கு கூட்டம் அலைமோதியதற்கும், அதற்கு இணையாகவே அன்று முதல் இன்று வரை ஆங்கில மொழி தெரியாத கிராமங்களில் கூட ஆங்கிலப்படங்கள் (பயர் போன்ற இந்தியப் படங்களும்தான்) திரையிட்டு வெற்றிபெற்றதற்கும் காரணம் இதுதான்.
கேரளத்திலும் இதற்கு மாற்றம் ஒன்றும் இல்லை. அவர்களும் இந்தியர்கள் தானே!
இந்தியத் திரை உலகிலும் உலகத் திரையரங்கிலும் மலையாள சினிமா கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்த காலகட்டத்தில், செம்மீன், சுயம்வரம், கொடியேற்றம் போன்ற படங்கள் வெளிவந்த காலத்தில்தான் இதா இவிடே வரே, ரதிநிர்வேதம், அவளுடெ ராவுகள் போன்ற படங்களும் அதற்கு இணையாகவே சத்திரத்தில் ஒரு ராத்திரி போன்ற படங்களும் வெளிவந்து வெற்றிபெற்றன.
அதே போல மம்முட்டி, மோகன்லால், சத்யன் அந்திக்காடு, சித்திக் லால் போன்றவர்கள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில்தான் ஷக்கீலா, ரேஷமா ஆகியோரது படங்களும் அவர்களுக்கு சவாலாக இருந்து வந்தன.
இது காலம் காலமாக தொடர்ந்து வருவதுதான். ஆனால் அதை அடிப்படையாக எடுத்துக்கொண்டு மலையாள சினிமா ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக ஜெயபாரதி ரசிகர்களாக இருந்தார்கள் என்றோ, ஷக்கீலா ரசிகர்களாக இருக்கிறார்கள் என்றோ சொல்வது சரியல்ல.
அதே நிலைதான் இலக்கியத்திலும். மலையாளத்தில் சாருவின் கதைகள் போன்ற பல கதைகள் வருடங்களுக்கு முன்பே வெளிவந்திருக்கின்றன. (நானும் கூட சிறுவயதிலேயே படித்திருக்கிறேன்). அந்த வயதின் ஆர்வத்தில் படித்திருந்தாலும், அதை படிப்பதை யாராவது பார்த்தால் நம்மை தரக்குறைவாக பார்ப்பார்களோ என்ற எண்ணத்தில் காலப்போக்கில் எல்லோரும் அவற்றை படிப்பதை விட்டுவிட்டனர். வயது முதிர்ச்சியும், அறிவு முதிர்ச்சியும் கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
அதனால்தான் அதுபோன்ற புத்தகங்கள் பிரபலமடையாமல் போயின. (அபிலாஷ் சொன்னது போல மலையாளிகள் பாரம்பரியத்தை மிகவும் விரும்புகின்றனர் என்பதும் இதற்கான ஒரு முக்கிய காரணம்தான்.)
இருந்தாலும் அவ்வப்போது, இதுபோன்ற படங்களும் புத்தகங்களும் ஒரளவு கட்டமைப்புடனும், தரத்துடனும் வெளிவருவதும் வெற்றி பெறுவதும் இயற்கைதான். அப்படி வெற்றி பெற்ற புத்தகங்கள்தான் இந்த இரண்டு புத்தகங்களும்.
அதனால் இந்த இரண்டு புத்தகங்களை வைத்துக்கொண்டு தற்போதைய மலையாள சினிமா மற்றும் இலக்கியச் சூழலை மதிப்பிடுவது சரியாகாது என்பதுதான் என்னுடைய எண்ணம்.

பி.கு. – உலகில் வெற்றி பெற்றவர்களை விட வெற்றிபெறாதவர்கள்தான் “வெற்றிபெறுவது எப்படி“ என்று புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். அதுபோல சினிமாவைப்பற்றியும் உண்மையில் கடை நிலையிலிருந்து வளர்ந்து வந்த யாரும் எழுதியதாக தெரியவில்லை.
சோகன்லாலும் திரைத்துறைக்கு மேல் மாடிவழியாக நுழைந்து தன்னால் இயன்ற வெற்றியை பார்த்தவர் தான். அவர் இயக்குநர் என்பதனாலேயே சினிமாவைப்பற்றி முழுமையாக சொன்னார் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது.

அவர் பிரபல எழுத்தாள் மாதவிக்குட்டியின் (கமலா சுரய்யா அல்லது கமலாதாஸ்) மகன். அவர் திரைத்துறைக்கு எப்படி வந்திருப்பார், ஒரு எழுத்தாளரின் மகனுக்கு ஆரம்பத்தில், அதுவும் மலையாளத்தில்,  எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்திருக்கும் என்பதை நாம் யூகிக்க முடியும். தாயைப்போலவே அவருக்கும் எழுத்தாற்றல் இருக்கிறது. அதனால் இப்படி ஒரு புனைவை எழுதியிருக்கிறார். அவ்வளவுதான். அதில் சில சிறு உண்மைகள் இருந்தாலும், அதை புனைவாக மட்டுமே எடுத்துக்கொள்வதுதான் மிகவும் சிறந்தது.     

Tuesday 7 July 2015

பஷீர் – நினைவுகளில்



பஷீரின் படைப்புகளைப் பற்றி சொல்வதென்றால் எவ்வளவு வேண்டுமென்றாலும் சொல்லலாம். இருந்தாலும் தற்பொழுது நான் அவருடைய படைப்புகளுக்கு வெளியே இருக்கும் பஷீரைப்பற்றித் தான் சில குறிப்புகளை சொல்ல விரும்புகிறேன்.
உண்மையைச் சொன்னால் தன்னுடைய படைப்புகளில் காணும் பஷீரையும் நிஜவாழ்க்கையில் இருந்த பஷீரையும் பிரித்துப் பார்ப்பது மிகவும் கடினமான ஒன்றுதான். அவருடைய எழுத்துக்களில் உள்ள நகைச்சுவையும் மனிதாபிமானமும் மற்ற குணங்கள் அனைத்தும் அவருடைய சொந்த குணநலங்கள்தான் என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் வராது.
இப்படி தன்னுடைய வாழ்வையும், வாழ்வில் நடந்த சம்பவங்களையும், பார்த்த மனிதர்களையும், அவர்களின் எண்ணங்களையும் இந்த அளவுக்கு யதார்த்தமாக, தனக்கே உரித்தான மொழியில், கள்ளம் கபடமில்லாத, நாடகத்தனமோ இலக்கியத்தனமோ கலந்திடாத, இயல்பான மொழியில் படைத்துக் காட்டிய இன்னொரு கலைஞன் உலகில் இருந்திருக்கிறானா அல்லது இருக்கிறானா என்று எனக்குத் தெரியவில்லை!
பஷீரின் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளும், அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவருடைய படைப்புகளில் காண்பது போலவே இருப்பதுதான் மிகச்சிறப்பு. பேரிலக்கியங்கள் படைத்த எழுத்தாளர்களிடம் பேசினாலும், பிச்சைக்காரர்களிடம் பேசினாலும், குழந்தைகளிடம் பேசினாலும் அதே மொழிநடைதான்.
அதற்கான சில உதாரணங்களைப் பாருங்கள்.
‘பாத்தும்மாவின் ஆட்டி’ற்கு முன்னுரை எழுதும்போது அவர் இப்படித்தான் ஆரம்பிக்கிறார்.
பாத்தும்மாவின் ஆடு, என்ற உண்மையான கதையை எழுதிய நபர் அஞ்ஞானியான, திருமணம் ஆகாத ஒருவன் தான். (திருமணம் ஆகாதவர்களில் ஞானிகள் இல்லை.) இந்த முன்னுரை எழுதுபவர் ஞானியான ஒரு கணவன் தான். (மனைவியர் வாழ்க!). வேறு விசேஷங்கள் ஒன்றும் இல்லை…”
1959-ல் இந்த புத்தகம் வெளிவரும்போது எழுதிய முன்னுரையின் ஆரம்பம்தான் இது.
அந்த முன்னுரையில் இன்னொரு இடத்தில் வரும் சில வரிகளைப் பாருங்கள்.
ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பத்திநாலு ஏப்ரல் இருபத்தியேழாம் தேதி எழுதி முடித்தது தான் இந்த ‘பாத்தும்மாவின் ஆடு’ என்ற இந்தக் கதை. இதை ஒரு முறை நகலெடுத்து இன்னும் அழகாக, ஒரு முன்னுரையுடன் வெளியிட வேண்டும் என்று நினைத்தேன். நாளை, நாளை என்று நாட்கள் கடந்து சென்றது.
ஐந்து வருடங்கள்!
இது வரையிலும் இந்தக் கதை நகலெடுக்கவில்லை. இதற்கு முன்பு வெளியிட்ட எல்லா புத்தகங்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை திருத்தவும் நகலெடுக்கவும் அழகுபடுத்தவும் செய்தவைதான்…”
இதை படிக்கும்போது அவருடைய அயராத உழைப்பையும் சிரத்தையையும் நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவருக்கு உதவியாளர் என்று யாரும் இருந்ததில்லை. எழுதுவதில் உதவி செய்ய மற்றவர்கள் தயாராக இருந்தாலும் அப்படி உதவியாளர்களைக் கொண்டு எழுத வைப்பது அவருக்கு பிடிக்கவே பிடிக்காது. அவரேதான் எழுதுவார். திருத்துவார். பலமுறை திருத்தி நகலெடுத்து, மீண்டும் திருத்தி அவர் மனதில் திருப்தி ஏற்பட்டபின்புதான் வெளியிடுவதற்காக கொடுப்பார்.
(இந்தக்கால எழுத்தாளர்கள் பற்றி தெரிந்தால்தான் அவருடைய அந்த கடின உழைப்பின் மகத்துவம் புரியும்). அப்படி ஒவ்வொரு வார்த்தையையும் சிற்பம் போல் செதுக்கியதனால் தான் அவருடைய படைப்புகள் என்றும் சாகா வரம் பெற்று நிற்கின்றன.
பஷீரின் வாழ்வில் இரு முறை பைத்தியம் பிடித்து சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த வேளையிலும் அவருடைய செயல்பாடுகளிலோ, படைப்புத்திறனிலோ எந்த ஒரு மாற்றமும் இருந்ததில்லை. அவர் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்தபோது, அந்நேரம் அந்த ஆஸ்பத்திரியில் இருந்த மற்ற நோயாளிகளிடம் மிகவும் நட்புடன்தான் பழகி வந்தார். அவர்களிடமும் அவருடைய பேச்சு ஒரேபோல் தான் இருந்தது.
அதைப்பற்றியும் அவர் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
”…. இப்படிப்பட்ட கடுமையான சிகிச்சையின் மத்தியில் தான் நான் இந்த பாத்தும்மாவின் ஆடு என்ற இந்த நகைச்சுவை கதையை எழுதுகிறேன். ஒரு மணிநேரம் எழுதி சோர்ந்து போகும்போது, நான் பைத்தியக்காரர்களின் அருகில் செல்வேன். சில இன்டர்வ்யூக்கள் எல்லாம் எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்…”
சில பைத்தியக்காரர்களைப்பற்றி அவர் குறிப்பிடுகிறார். அதில் ஒன்று..
இவர் சுத்த மௌனி. ஜாதியில் கிறுஸ்துவர். கத்தோலிக்கன் என்று நினைக்கிறேன். வெகு நாட்கள் முயற்சி செய்தபின்தான் அவர் என்னிடம் பேசினார். வழக்கமாக நாலுமணிக்கு பிறகான சிகிச்சையெல்லாம் முடிந்தபின் கிழக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு வராந்தாவிற்குச் சென்று மேற்கு நோக்கி அமர்ந்து இரண்டு சிரி சிரிப்பார்! பிறகு ஒரு பீடியை பற்றவைத்து புகை விட்டபடி இந்தப்பக்கம் வருவார். நாங்கள் நண்பர்கள் ஆனதும் அவருடைய வாழ்க்கை ரகசியத்தை அவர் என்னிடம் சொன்னார். நான் கேட்டேன், என்ன வேலையில இருந்தீங்க.
அவர் சொன்னார், ‘பட்டாளத்தான். ஐந்து வருடங்களுக்கு முன்னால் சிரியாவில் இருக்கையில் செத்து மண்ணோடு மண்ணாகிவிட்டேன்.’
நான் கேட்டேன், ‘பிறகு?’
அவர் சொன்னார், ‘இப்போ கடவுள் பூமிக்கு என்னை அனுப்பியிருக்கிறார்.’
எந்த பிரத்யேக வேலைக்காக என்று நான் கேட்கவில்லை.
இன்னொரு குண்டு பைத்தியக்காரனுக்கு வாழ்வில் ஒரே ஒரு லட்சியம் தான் இருக்கிறது, ஒரு யானையை சாப்பிட வேண்டும்!
நான் சொன்னேன், ‘எங்குப்பாப்பாவுக்கு ஒரு யானை இருந்துச்சு!’
அவன் கேட்டான், ‘அப்புறம் அதை சாப்பிட்டீங்களா?’
நான் சென்னேன், ‘சாப்பிடல, வெளியில எல்லாம் சுத்திக்கிட்டிருக்கான்.’
அவன் கேட்டான், ‘புடிக்க முடியுமா?’
நான் சொன்னேன், ‘தெரியாது.’
….
இப்படி பல நகைச்சுவைகளும் எழுதுவதற்கு இருக்கு. ‘பஷீருக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு, எங்களுக்கு ஏன் வரலை?’ என்று சில இலக்கியவாதிகள் புலம்புவதைக் கேட்டேன். வருத்தப்பட்டு ஒரு பலனுமில்லை. யோக்கியர்களுக்கு தான் அதெல்லாம் வரும்!...”
இப்படி எழுத பஷீரைத்தவிர யாரால் முடியும். இதே பாத்தும்மாவின் ஆடு’ மறு பதிப்பிற்காக 1981ல் எழுதிய முன்னுரையில் வேறொரு விஷயத்தை குறிப்பிடுகிறார்.
அந்த நேரத்தில் அவர் குடும்பத்துடன் பேப்பூரில் வசிக்க ஆரம்பித்திருந்தார். அந்த புதிய இடத்து வாழ்க்கையைப்பற்றி அவர் குறிப்பிடுகிறார்.
”… நாங்கள் இங்கே ஓரளவு நன்றாகத்தான் இருக்கிறோம். நல்லபாம்புகள், சாரைகள், கருந்தேள்கள்- இவை தினமும் வருபவர்களல்ல. நரிகள் தினமும் வருவார்கள். நண்பர்கள் தான். மாலை நேரத்தில் பத்தறுபது நரிகள் கேட்டுக்கு முன்னால் வந்து நின்று என்னை நோக்கி எனக்கு ஏதோ உதவி செய்வது போல பெரும் சத்தத்துடன் ‘கூ.. கூ..’வென கூவ ஆரம்பிப்பார்கள். நான் உறக்க திட்டுவேன்.
..ப்பசங்களா, போதும். வெட்கமில்லையா உங்களுக்கு இப்படி உரக்க கூச்சல் போடறதுக்கு.’
அப்போது நரிகள் வெட்கப்பட்டு பேசாமல் ஓடிப்போய்விடுவார்கள். நரிகள் இந்த வீட்டில் இருக்கும் கோழிகளை சில நடு இரவுகளில் கடித்து துக்கிக்கொண்டு போய் சாப்பிடும். நான் கவலைப்படமாட்டேன். கோழிகள் என்னுடைய மனைவியின் சொந்தம் தான். முட்டைகள் எனளக்கு அப்படி வழக்கமாக ஒன்றும் கிடைப்பதில்லை
இப்படி முன்னுரை எழுதும் பஷீரின் நகைச்சுவை உணர்வைப்பற்றி, அதை அனுபவித்து தெரிநதுகொண்ட பிரபல கவிஞர் ஓ.என்.வி. குறுப்பு வியந்து வியந்து சொல்கிறார்.
ஒரு முறை எர்ணாகுளத்தில் பஷீர் நடத்தி வந்த புத்தகக் கடையின் முன்பாக ஓ.என்.வி.குறுப்பும் தோழர் கே.தாமோதரனும் நடந்து வந்து கொண்டிருந்தனர். ஏதோ அத்தியாவசிய விஷயம் சொல்ல இருக்கிறது என்பது போல கடையிலிருந்த பஷீர் சாலையில் இறங்கி நின்று கைதட்டி அழைத்தார். இவர்கள் கடைக்குள் சென்றனர். அவசரத்தில் தான் கேள்வி எழுந்தது. ”பிக்காசோவின் அட்ரஸ் வேணும், உடனே வேணும்.” தோழர் தாமோதரன் தனக்குத்தானே சொல்வதுபோல மேலே பார்த்து பிக்காசோ இப்போது எங்கே இருப்பார் என்று யோசித்துக் கொண்டிருந்தார். குறுப்பு கேட்டார், ”அவ்வளவு அத்தியாவசியம் என்னவோ?”
பஷீர்- ”இங்கே நான் ஒரு புதிய ஷெல்ப் செஞ்சிருக்கேன்ஒரு பெரிய ஷெல்பை சுட்டிக்காட்டி சொன்னார், ”அதை பெயின்ட் பண்ணணும்.”
என்றுமே சிரிக்காத தாமோதரன் கூட இதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாராம். சிரிக்காமல் என்னதான் செய்வது!
பஷீரின் முகத்தில் மிகுந்த கவுரவம் தோன்ற ஆரம்பித்தால் உடனே ஒரு வெடிச்சிரிப்பு தரும் எதையோ சொல்லப்போகிறார் என்று தெரிந்து கொள்ளலாம்.
அந்த சமயத்தில் தான் ஒ.என்.வி.குறுப்பின் திருமணம் நடந்தது. புத்தகங்களை நேசிக்கும் குறிப்பிற்கு பஷீர் ஒரு புத்தகத்தைத் தான் பரிசாக வழங்கினார். அதில் அவர் எழுதி கையெழுத்திட்டது இப்படித்தான்.
குறுப்பின் மனைவிக்கு,- ஆரம்ப கட்ட சிரிப்பும் சந்தோஷமும் கொஞ்சலும் எல்லாம் முடிந்து ஓ.என்.வி. அடிக்கவும் உபத்ரவம் பண்ணவும் ஆரம்பிக்கும்போது வாசித்து சிரிக்க..”
சில நகைச்சுவை கட்டுரைகளின் தொகுப்புதான் அந்த புத்தகம். ஆனால் அந்த தொகுப்பில் இருந்த எந்த நகைச்சுவையையும் விட பெரிய நகைச்சுவைதான் இந்த குறிப்பில் இருந்தது.
ஒரு முறை மதிலுகள் கதையை படமாக்குவதற்கான அனுமதியை வாங்க அடூர் கோபாலகிருஷ்ணன் தன் நண்பர் டாக்டர் பஷீருடன் நம் பஷீரை சந்திக்க சென்றிருக்கிறார்.
அவர்களிடம் பஷீர் கேட்ட முதல் கேள்வி இதுதான். ”நாரயணியின் பாத்திரத்தில் யார் நடிக்கிறார்
கேள்வி சட்டென வந்ததால் அடூர் சற்று பதட்டப்பட்டார்.
அந்த ரோளில் யாரும் நடிப்பதில்லை. கதையில் இருப்பது போலவே சப்தம் மட்டும் தான் இருக்கும்.” அடூர் விளக்கினார்.
அப்படியென்றால் படம் நன்றாக வரும்சிறு புன்னகையுடன் பஷீர் தன் கருத்தை அப்போதே சொன்னார்.
காரணம் அந்த கதையை படமாக்க பலரும் பஷீரை அனுகியிருந்தார்கள். அவர்கள் அனைவரும் நாரயணியின் பாத்திரத்தில் பல நடிகைகளையும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தனர். அதனாலேயே பஷீர் அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை.
அப்படியாக அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு மதிலுகள் படமாக்க அனுமதி கிடைத்தது. பிறகு அடூர் அந்த படத்தை எடுத்து முடித்தபின், முதல் காட்சியை பஷீர் தான் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். அதற்காகவே எம்.டி.யின் உதவியுடன் முதல் காட்சிக்கு அவரை வரவழைத்தார்கள்.
காட்சி முடிந்த பின் திரையரங்கில் விளக்குகள் எரிந்தது. எல்லோரும் எழுந்தனர். பஷீர் மட்டும் அப்படியே அமர்ந்திருந்தார். படத்தைப் பார்த்து பஷீர் என்ன சொல்வாரோ என்று அனைவரும். குறிப்பாக அடூர் பதட்டத்துடன் இருந்தார். அடூர் அவர் பக்கத்தில் சென்றார். பஷீர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார். கண்கள் நிறைந்திருந்தது. சில நிமிட மௌனத்திற்கு பிறகு மெதுவாகச் சொன்னார். ”நாட் ஏ டல் மோமன்ட்.”
அடூர் மனதில் நினைத்தார். தப்பித்தேன்.”
ஆனால் அதைப்பற்றிய பஷீரின் முழு மதிப்பீட்டையும் மனிதாபிமானத்தையும் எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வு பின்னாளில் நடந்தது.
சில தயாரிப்பாளர்கள் பஷீரின் அனைத்து படைப்புகளையும் படமாகவோ, தொலைக்காட்சி தொடராகவோ எடுப்பதற்கான அனுமதியை பெற பஷீரை அனுகியிருக்கிறார்கள். எல்லாம் பேசி முடிக்க ஆரம்பிக்கும்போது பஷீர் சொல்லியிருக்கிறார், ”கொஞ்சம் நில்லுங்க, ‘பாத்தும்மாவின் ஆடு’ விஷயத்திலயும் ‘எங்குப்பாவிற்கு ஒரு யானையிருந்துச்சு’  விஷயத்திலயும் நான் ஒருத்தர் கிட்ட கேட்க வேண்டியிருக்கு.”
அதற்கு அவர் ரைட்ஸ் கேட்டிருக்காரா?”
இல்லை, இருந்தாலும் கோபாலகிருஷ்ணன் கிட்ட கேக்கணும். என்ன சொல்றீங்க
இதுதான் பஷீர்.
அவரைப்பற்றி சொல்வதானால் அதுவே ஒரு புத்தகமாக எழுதும் அளவுக்கு இருக்கிறது. இருந்தாலும் நேரம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.
நன்றி.

வணக்கம்.       

Monday 6 July 2015

பஷீர் நினைவுநாள்



வைக்கம் முகம்மது பஷீரின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் மொழி பெயர்த்தது தான் என் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கவும், என் வாழ்க்கைப் பாதையை வேறு பாதையில் திருப்பவும் காரணமாக அமைந்தது.
திரைத்துறையில் இயக்குநராக வேண்டும் என்று பல வருடங்களாக போராடி வரும் நிலையில், அதற்காக மற்ற அனைத்து வேலைகளையும் தவிர்த்து வந்தாலும், கடந்த சில வருடங்களில் நடந்த பல நிகழ்வுகள் என்னை மீண்டும் இலக்கியப்பாதையில் இழுத்துச் சென்றது என்று சொன்னால் அது மிகையாகாது.
சிறு வயதிலேயே நான் திருக்குறளுக்கு என்னுடைய பாணியில் ஒரு உரை எழுதி வைத்திருந்ததை பார்த்த என் நண்பர் ஒருவர் ஊக்குவிக்க, அந்த உரையை அவசர அவசரமாக புத்தகமாக்கி வெளியிட்டேன். அது தான் இலக்கியவட்டத்தில் மீண்டும் என்னை இணைப்பதற்கான முதல் காரணமாக இருந்தது.
அந்த உரையை மேலும் திருத்தி, ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து “திருக்குறள் எளியகுறள்” என்ற பெயரில் மறு பதிப்பு செய்வதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
என்னுடைய எளியகுறளை பார்த்த சில நண்பர்கள், என்னை புத்தகங்களை மொழிபெயர்க்க அறிவுறித்தனர். அதன் அடிப்படையில் தற்பொழுது நான் சில புத்தகங்களை மொழி பெயர்த்துள்ளேன். அவற்றில் இரண்டு புத்தகங்கள் கடந்த வருடம் வெளியாயின. (காரல் மார்க்சின் கவிதைகள், கலீல் ஜிப்ரானின் ஏதன் தோட்டம்).
இதற்கிடையில், திரைப்படத் துறையையும் இலக்கியத் துறையையும் இணைக்கும் ஒரு முயற்சியாக நான் “திரைப்பட இலக்கியச் சங்கமம்“ என்ற நிகழ்வை தொடர்ந்து நடத்த ஆரம்பித்தேன், அது இந்த விஷயத்தில் மேலும் எனக்கு  ஊக்குவிப்பை அளித்தது.
இந்த நேரத்தில் நண்பர் வேடியப்பன் நான் முதன் முதலில் மொழி பெயர்த்த பஷீரின் வாழ்க்கை வரலாற்றையும் மற்றும் சில புத்தகங்களை வெளியிட முன்வந்து, அதன் வேலைகளும் நடந்து வருகிறது. அந்த மொழி பெயர்ப்புதான் அவர் என்னை இந்த நிகழ்வில் பேசுவதற்கு அழைக்கவும் காரணம் ஆயிருக்கிறது.
ஒரு வேளை வருங்காலத்தில் ஒரு இலக்கிய பேச்சாளராக மாறினால், அதற்கு இதுதான் விதை. அதற்கா தைரியத்தைத் தந்த பஷீருக்கும் வாய்ப்பைத் தந்த வேடியப்பனுக்கும் நன்றி.
நேற்றைய நிகழ்வில் என்னுடைய பேச்சில் தெரிந்த சொதப்பல்கள் யு.கே.ஜி. பையனின் தடுமாற்றம் தான். எல்.கே.ஜி.யில் சக்திஜோதியின் கவிதையைப் பற்றி ஒரு முறை யாவரும் டாட்காமின் நிகழ்வில் பேச முற்பட்டிருக்கிறேன். ஆனால் வேறு சில குடும்ப பிரச்சினைகளால் முழுவதுமாக பேச முடியவில்லை. அதனால் பரீட்சை எழுதாமலே, உண்மையை சொன்னால் சும்மா தேர்வு அறைக்கு சென்று வந்தாலேயே நான் வெற்றி பெற்றதாக வேல்கண்ணன் போன்றவர்கள் அறிவித்து விட்டார்கள். கடந்த வாரம் விஜய் மகேந்திரனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது கூட அந்த “எல்.கே.ஜி. சர்ட்டிபிக்கட்“டின் நகலை கொடுத்து என்னை பாராட்டுவதை பார்த்திருக்கிறேன். (அந்த நேரத்தில் என்னுடைய 32 பற்களும் சந்தோஷத்தில் துள்ளியதை அவர்கள் பார்க்கவில்லை.)
தற்பொழுது நேற்றைய நிகழ்விற்கு வருவோம். நான் பஷீரைப்பற்றிய சில மலையாள நூல்களைத் தேர்ந்தெடுத்து, குறிப்புகளை எடுத்து, பேசிவிடலாம் என்று எதற்கும் தயாராகத்தான் வந்திருந்தேன்.
நிகழ்வில் திரையிட மதிலுகள் கிடைக்காத பதட்டத்தில் வேடியப்பன் இருக்க, உடனடியாக நண்பர்களிடம் தேடி பால்யகாலசகியை திரையிடும் அவசரத்திலும் நிகழ்வு சொன்ன நேரத்தில் நடக்கும் நேரத்தை முறையாக பின்பற்றுவேன் என்று சொல்ல, அதைக் கேட்டு நான் அநாவசியமாக பயந்து பதட்டமடைந்துவிட்டேன். (நானும் பேசவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி காரணமாக இது ஒரு இலக்கியக்கூட்டம், சொன்ன நேரத்தில் ஒருபோதும் ஆரம்பிக்காது, முடியாது என்பதை நான் மறந்து விட்டேனோ?)
அதனால் எனக்கு ஒதுக்கப்பட்ட பத்தே நிமிடத்தில் எப்படி குறிப்புகள் எடுத்துவைத்த அனைத்து விஷயங்களையும் பேசுவது என்று முப்பது நிமிடம் யோசித்து, ஒரு சில குறிப்புகளை மட்டும் சொல்லலாம் என்றால் இந்த கிருஷணபிரபு வேறு.. நான் எடுத்து வைத்த குறிப்புகளையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து விரிவாகவே பேச, அதன் பிறகு மணிபாரதி வந்து தன் திறமையான நடிப்பால் மனதை கனக்க வைக்க, பிறகு நான் என்னதான் செய்வது. (இப்படி, பேசுவதற்கு தடுமாறியதன் காரணத்தை கண்டுபிடித்து எனக்கு நானே சமாதானம் செய்வதைத் தவி).
நல்ல வேளை கே.பி. அடூர் கோபாலகிருஷ்ணன் பற்றிய விஷயத்தை பேசும் போது சிறு தவறை செய்ய அதை திருத்துவது போல நான் பேசி, ஏதோ பேசியதாக கணக்கும் காட்டிவிட்டேன், கே.பி.யை பழிவாங்கவும் செய்து விட்டேன். (ஹிஹி.. )அடுத்தவர்களின் குறையை எடுத்துச் சொல்லும் போது மனதிற்குள் என்ன ஒரு ஆனந்தம், திருப்தி! ஒரு சில நிகழ்வுகளில் சில புதிய பேச்சாளர்கள் சிறு தவறான செய்திகளை சொன்னதும் (அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவர் பேச்சை பாராட்டுவார்கள் என்ற நிஜத்தை மறந்து அல்லது மறுத்து) சில பெரிய புகழ்பெற்ற எழுத்தாளர்கள் அழையாமலே வந்து மேடையேறி அந்த புதுப் பேச்சாளர்களின் குற்றத்தை “நக்கீரன்“ என்ற நினைப்பில் எடுத்துச் சொல்வது ஏன் என்று இப்போதுதான் எனக்குப் புரிகிறது. அதை புரியவைத்த கே.பி.க்கு நன்றி.
அப்படியே தொடர்ந்து பேசலாம் என்று நினைத்தால் கூட வேடியப்பன் அவையில் அமர்ந்த படி என்னை பார்ப்பது பட்டிமன்றத்தில் நடுவர் மணியடிப்பது போலவே தோன்றியது. ஒரு வேளை அதற்காகவே அவர் என்னை அப்படி பார்த்தாரா என்றும் தெரியவில்லை. அதனால் அத்தோடு என் உரையை வெகு சிறிதாக முடித்துக் கொண்டேன். இருப்பினும் மனம் வருந்திக் கொண்டிருந்தது.
பிறகு லக்ஷ்மி சரவணகுமார் பேசி முடித்தார். அந்த நேரத்தில் டீ வர இன்னும் தாமதமாகும் என்று வேடியப்பன் ஒரு அறிவிப்பை வெளியிட்டு, மேலும் சில நிமிடங்கள் யார் வேண்டும் என்றாலும் கலந்துரையாடலாம் என்று அனுமதியளித்தார்.
அது நான் எடுத்து வைத்த குறிப்புகளில் ஒரு சிலவற்றை பேச மீண்டும் ஒரு வாய்ப்பைத் தந்தது. கே.பி.யும் அதற்கு உதவி செய்தார். அதனால் என் மனம் சற்று திருப்தியடைந்தது. உண்மையில் அந்த வாய்ப்பை தந்தது அந்த டீக்கடைக்காரர் தான். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.
அந்த நன்றியை நேரடியாக சொல்லலாம் என்று டீக்கடைக்கு செல்ல நினைத்தேன். பிறகு அதை வேண்டாம் என்று தவிர்த்தேன். வழக்கமாக இதே அரங்கில் பல இலக்கியக் கூட்டங்களில் சிலருடைய பேச்சை டீக்கடைக்காரராவது குறுக்கே வந்து முடிக்க மாட்டார்களா என்று பலரும் நினைப்பதுண்டு. (நானும்தான்).       
இந்த நிலையில் நான் அந்த டீக்கடைக்காரரை நேரடியாக சென்று பாராட்ட, அவர் அதையே வழக்கமாக்கி விட்டால்? அந்த பயத்தில் நிகழ்வு முடிந்து திரும்பும் பொழுது, தம்பி அகரமுதல்வனுடன் அந்த கடைப்பக்கம் திரும்பி பார்க்காமலேயே வந்து விட்டேன்.
இரவில் நடந்து வரும்போது இதை எழுதவேண்டும் என்று தோன்றியது. அதன் பலன்தான் இந்த குறிப்பு.
ஒரு வேளை நான் மொழி பெயர்ப்பை ஆரம்பிக்க, மேடையில் விரும்பி பேச, தூண்டுதலாக இருந்த பஷீர்தான் என்னை நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி எழுதவும் தூண்டுகிறாரோ! 


(பி.கு.- பஷீரைப்பற்றி பேசுவதற்காக எடுத்து வைத்த குறிப்புகளை தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். இங்கே அது நாளை..)