Monday 30 May 2016

‘சமஸ்’சிற்கு ஒரு கண்டனம்




நேற்று (29-5-16) தஞ்சாவூர் கவிராயர் எழுதிய தெருவென்று எதைச் சொல்வீர்’ கட்டுரைத் தொகுப்பின் வெளியீட்டுவிழாவிற்கு சென்றிருந்தேன். திருவாளர்கள் மாலன், சமஸ், கவிராயர் போன்ற எல்லோரும் சிறப்பாக பேசினார்கள். அதில் சமஸ் பேசும்போது ஒரு விஷயத்தை குறிப்பிட்டார் அதை மட்டும் ஏற்றுக்கொள்ள எங்களால் முடியவில்லை. அதனால் அவருக்கு எங்கள் பெருங்குடும்பத்தின் சார்பாக நான் இந்த கண்டனத்தை தெரிவித்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
திரு சமஸ் அவர்களே...
எங்கள் இனம், எங்கள் குலம், எங்கள் குடும்பம் பற்றி என்ன நினைத்து இப்படி பேசுகிறீர்கள்? நாங்கள் தமிழ் மக்கள் மட்டுமல்ல. இந்திய மக்கள் என்ற பெருங்குடும்பத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் வாழ்க்கையை தொலைத்துவிட்டு பிழைப்பு தேடுபவர்கள் என்று நீங்கள் எப்படி சொல்லலாம்.
நாங்கள் நகரங்களில் குடிவந்தவர்கள், அப்படி குடிவந்தபின் திரும்பி கிராமங்களுக்கு செல்வதில்லை, கிராமங்களைப்பற்றி பேசக்கொண்டுதான் இருப்போம் போன்ற செய்திகளை சொன்னீர்கள். அதற்கு உதாரணமாக ஊரப்பாக்கத்துக்கு குடிபெயர்ந்த தஞ்சாவூர் கவியராயர் பெயரை எடுத்துச் சொன்னீர்கள்.
இது எங்கள் பிழைப்பு அல்ல. இதுதான் எங்கள் வாழ்க்கை. அதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். காலகாலமாக நாங்கள் பின்பற்றி வரும் பண்பாடு இதுதான். நீங்கள் எப்படி அதை குறைகூறலாம்!
நாங்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வாழ்பவர்கள். உலகத்தில் பலநாடுகள் வேட்டையிலிருந்து வெளியே வரமுடியாமல் இருந்தபோதே விவசாயத்திற்கு வந்து வாழ்வாங்கு வாழத் துவங்கியவர்கள் நாங்கள்.
முதலில் காட்டு மரத்திற்கு கீழும் குகைகளிலும் வாழ்ந்த எங்கள் பூட்டனார்கள் வயல்வரப்புகளில் கூரை கட்டினார்கள். அங்கிருந்து நாங்கள் கிராமத்திற்கு வந்தோம். பிறகு கிராமத்திலேயே தெருக்களை உருவாக்கி அதன் அருகில் கூரை கட்ட போட்டியிட்டோம். ஜெயித்தவர்கள் தெருவின் ஓரங்களிலும் தோற்றவர்கள் சந்துகளிலும் வாழ ஆரம்பித்தோம்.
எங்களுக்குள் அதில் எந்த வருத்தமும் இருந்ததில்லை. காரணம் போட்டியில்லாமல் வளர்ச்சி வராது இல்லையா? போட்டியில் ஜெயிக்க எங்களில் திறமை வாய்ந்தவர்கள் வளைந்த பாதைகளில் பயணிக்க ஆரம்பித்தனர். லட்சியம் பாதையை நியாயப்படுத்தும் என்று தானே பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார்’. அதை நாங்கள் மறப்பதில்லை. நீங்களும் மறந்து விடாதீர்கள். எந்த அளவுக்கு வளைந்து செல்லலாம் என்பதில்தான் இப்பொழுது எங்களுக்குள் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த விதமாக எங்கள் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக, நாங்கள் பட்டணங்களுக்கு வந்தோம். தினமும் பட்டணங்களுக்கு சென்று வர வசதியிருந்தவர்கள் கிராமங்களிலேயே இருந்தோம். இல்லாதவர்கள் பட்டணத்தில் குடியேறினோம். அதே பாணியில்தான் நாங்கள் நகரங்களுக்கும் வந்து சேர்ந்தோம்.
நகரங்களுக்கு தினமும் போய்வர முடியாததால் இங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டோம். எங்களுக்கு துணையாக எங்கள் சொந்த பந்தங்களையும் அழைத்து வந்தோம். இது எங்கள் உரிமை. கடமை!
அதுபோலத்தான் தஞ்சாவூர் கவிராயரையும் நாங்கள் அழைத்து வந்தோம். அவர் எங்களோட தாத்தாவோட சகலையோட ஒண்ணுவிட்ட பையன்தான். அவரை ஊரப்பாக்கத்துக்கு அழைத்து வந்தது ஒரு தவறா?
சென்னையிலும் சுற்றுவட்டாரத்திலும் உள்ள அனைத்து இடங்களிலும் நிலத்திற்கு ஒரே விலைதான் என்று உங்கள் அரசாங்கத்திடம் உத்தரவு போட சொல்லுங்கள் பார்ப்போம்! நாங்கள் கவிராயரையும் நகரத்திற்குள்ளேதான் குடிவைத்திருப்போம். அனாவசியமா அத்தனை தூரம் போக எங்களுக்கு என்ன பைத்தியமா!
இந்த நகரத்து நிலமையை கருத்தில் கொண்டுதான் நாங்கள் அனைத்து முடிவுகளையும் எடுப்போம். சமஸ் இங்கு வருவதற்கு நாலு நிமிடம் முன்பாகத்தான் நான் இங்கு வந்தேன். அதனால் போயஸ் தோட்டதுக்கு பக்கத்தில் கோபாலபுரத்துக்கு எதிரில் உள்ள தெருவில் எனக்கு இடம் கிடைத்தது.
என் தம்பி சமஸ் வந்ததற்கு நாலு நிமிடம் பின்னால் வந்தான். அதனால் அவனுக்கு தாம்பரத்திற்கு அருகில்தான் இடம் கிடைத்தது. இடைப்பட்ட காலத்தில் வந்த சமஸ், மாலன் போன்றோருக்கு நகரத்தில் ஆங்காங்கே இடம் கிடைத்தது உங்கள் நல்ல நேரம். சமஸ் இதை புரிந்துகொள்ள வேண்டும்.
அதற்காக எங்கள் பயணம் இத்தோடு முடிந்துவிட்டதாக நினைத்து விடாதீர்கள். எங்கள் பிள்ளைகளில் சிலர் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா போன்ற நாடுகளுக்கு சென்றிருக்கிறார்கள். நாங்களும் அங்கே சென்றிருப்போம். ஆனால் அங்கு இருப்பவர்கள் எங்களைப் பார்த்து பயந்து, அங்கே செல்ல அனுமதிக்காமல் தடுக்கின்றனர். இல்லாவிட்டால் இந்த நகரத்திலேயே குப்பை கொட்ட எங்களுக்கென்ன தலையெழுத்தா?!
அப்படி மட்டும் அந்த நாட்டுக்காரர்கள் கட்டுப்பாடுகள் போட்டு தடுக்காமல் இருந்தால், இந்நேரம் நாங்கள் எங்கள் சொந்தக்காரர்கள் எல்லோரையும் கூட்டிக்கொண்டு அந்த நாடுகளுக்கு சென்று, சென்னை வெள்ளம் போல் பாய்ந்து, இங்கிருந்தவர்களை செம்மஞ்சேரிக்கு அனுப்பியதுபோல, அங்கிருப்பவர்களை அலாஸ்காவுக்கு அனுப்பிவிட்டு, வாஷிங்கடன்னையும், நியூயார்க்கையும் ஆயுதங்களே இல்லாமல் கைப்பற்றியிருப்போம்!
அந்த அளவுக்கு தகுதிவாய்ந்த எங்களை நீங்கள் எப்படி வெறும் பிழைப்புக்காக வந்தவர்கள் என்று குறைத்து மதிப்பிடலாம்?
இப்படி நாங்கள் வாழ்ந்து வளர்ந்தால், பிழைப்பு தேடி வந்தவர்கள் என்று பொறாமைப்படுகிறீர்கள், வராமல் கிராமத்திலேயே இருந்து விட்டால் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று மட்டம் தட்டுகிறீர்கள். அப்புறம் நாங்கள் என்னதான் செய்வது? நீங்கள் பேச்சை மாற்றுவதற்காக நாங்கள் எங்கள் வாழ்க்கையை மாற்ற முடியாது.
வயல்வெளியிலிருந்து கிராமத்திற்கு வந்தபோது நாங்கள் வரப்பிலிருந்த கூரைகளை மறந்தோம். கிராமத்திலிருந்து பட்டணத்துக்கு வந்தபோது கிராமத்தை மறந்தோம். நகரத்துக்கு வந்தபோது கிராமத்தையும் பட்டணத்தையும் மறக்க முயற்சித்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதற்கிடையில் அவ்வப்போது மலரும் நினைவுகளில் ஏதாவது பேசுவோம். மறப்பதும் பேசுவதும் எங்கள் உரிமை! 
இதற்கிடையில் மைக் கையில் கிடைத்துவிட்டது என்ற ஒரே காரணத்தால் ஒரு பேச்சாளனாகிய நீங்கள், இனிமேலும் எங்களை இப்படி அவமதித்தால்...

எங்களுடைய சித்தப்பாவோட மாமாவோட ஒண்ணுவிட்ட அத்தை பையன் ஒருத்தன், சமஸ்ணு பேரில தமிழ் ஹிந்துவில இருக்கான், அவன்கிட்ட சொல்லி உங்களுக்கு எதிராக நடுப்பக்கத்தில ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டு ஊருக்குள் தலை காட்ட விடாமல் செய்து விடுவோம். ஜாக்கிரதை!