Monday 25 May 2015

முன்னேற்பாடுகள்..




திரைப்படத் தோழமை தயாரிப்பு திட்டத்தின் கீழ் இரண்டுவிதமான படங்களை எடுக்க முடிவுசெய்துள்ளேன். எந்த அளவுக்கு இந்த திட்டம் மற்றவர்களிடம் போய் சேர்கிறதோ, எந்த அளவுக்கு பொருளாதார ஒத்துழைப்பு- கண்டிப்பாக அன்பளிப்பு அல்ல, முறையான முதலீடு- கிடைக்கிறதோ அந்த அளவுக்கான பட்ஜெட்டில் முதல் படம் தயாராகும்.
அடுத்ததாக முற்றிலும் புதுமுக இயக்குனர்களுக்கும் கலைஞர்களுக்கும் வாய்ப்பு தருவது போல வித்தியாசமான படங்கள் எடுக்கப்படும்.
முதலில் பேரும் பணமும் 'க்யாரண்டியாக' வந்து  இந்த திட்டத்தை வேரூன்ற வைக்க ஒரு படம் எடுக்க வேண்டும். அது காலத்தின் கட்டாயம். அதற்கான ஒரு கதையை தேர்வுசெய்து அதை முன்று விதமான பட்ஜெட்களிலும் மாற்றாக முன்று வித பட்ஜெட்களுக்கு தகுந்தாற்போல முன்று வித்தியாசமான கதைகளையும் தயாராக தேர்ந்து வைத்துள்ளேன். எது முதலில் எடுக்க முடியும் என்ற நிலை வருகிறதோ- கிடைக்கும் நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், மற்ற கலைஞர்கள் மற்றும் வியாபாரத்திற்கு தகுந்த களம் இவற்றை கருத்தில் கொண்டு- அந்த கதையை, அதற்கு தகுந்த ஒரு பட்ஜெட்டிற்காக மெருகேற்றி தயாரிக்க தயாராக உள்ளேன்.
இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்குத்தான் இவ்வளவு மாதங்கள் தேவைப்பட்டது. இது பற்றிய சந்தேகங்கள் பல எழுந்து, அதற்கான விடைகளை கண்டுபிடித்து, இதை ஒரு முழுமையான திட்டமாக வெளியே சொல்ல இத்தனை நாட்கள் ஆகிவிட்டது. காரணம் இதனால் யாருக்கும் எந்த ஒரு நஷ்டமும் வரக்குடாது என்ற முனைப்புதான்.
தற்பொழுது ஆரம்பித்து விட்டதால் இனி ஒவ்வொருநாளும் இதை வெற்றிபெறச் செய்வதற்கான பணிகள் மட்டுமே செய்து வருகிறேன்.
நண்பர்கள், சினிமாவை நேசிக்கும் அன்பர்கள் அனைவரும் இந்த செய்தியை திரைப்படத்தில் ஆர்வம் இருக்கும் எல்லோரிடமும் கொண்டுசேர்ப்பதற்கு உதவிசெய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
இந்த திட்டத்தில் எல்லோரும் இணையவேண்டும் என்பது அல்ல என்னுடைய இலக்கு. முதலில் நான் இப்படி ஒரு திட்டத்தை பின்பற்றி செயல்படுகிறேன் என்பது திரைத்துறை மற்றும் அதைச் சார்ந்த மற்ற துறையினர் அனைவருக்கும் தெரியவேண்டும். அவ்வளவுதான்.
எல்லோரிடமும் நான் இதைப்பற்றி ஒரு முறை நேரடியாக, பொதுவான விஷயங்களை, சுருக்கமாக, பேச வாய்ப்பு கிடைத்தால் போதும். அப்படி பேசியவர்களில் இந்த திட்டத்தின் மீது மேலும் ஆர்வம் கொண்டவர்கள் கேட்டால் மடடுமே அடுத்தகட்டமாக மற்ற விஷயங்களை  விரிவாக சொல்கிறேன். அதற்கு முன் யாருடையா நேரத்தையோ பணத்தையோ நான் வீணடிக்க மாட்டேன்.
அதனால் நண்பர்களே இந்த திட்டம் பற்றி அனைவரிடமும் பேச, திரைத்துறையில் ஆர்வம் இருக்கும் உங்கள் நண்பர்களிடம் என்னைப்பற்றி சொல்லுங்கள். சிறிது நேரம் பேச வாய்ப்பை தாருங்கள்.

Saturday 23 May 2015

ஆரம்பம்..




இன்றைய காலகட்டத்தில் படம் தயாரிப்பதோ இயக்குவதோ பெரிய ஒரு விஷயமாக யாருக்கும் தெரிவதில்லை. அதற்கு சான்றுதான் ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஆறேழு படங்கள் வெளியாவதும், ஆயிரக்கணக்கான படங்கள் முழுமையாக வெளியிட தயாராக இருந்தும் வெளியிட முடியாமல் இருப்பதும். இதற்கு வேறு பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியாமானது, படங்களை வாங்கி முறையாக வெளியிடுவதற்கு போதுமான டிஸ்ட்ரிப்யூட்டர்கள் இல்லை என்பதுதான்.
தியேட்டர்களை எடுத்து படங்களை நல்ல முறையில் வெளியிடுவதற்கான சக்தி படைத்த வெளியீட்டாளர்கள் வெகு சிலரே. அவர்கள் இங்கு தயாராகும் எல்லா திரைப்படங்களையும் வாங்கி வெளியிடுவதற்கான வாய்ப்பும் இல்லை. அதில் அவர்களுக்கு விருப்பமும் இல்லை.
அப்படியிருக்க நாம் தயாரிக்கும் படங்களை அவர்கள் வாங்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி அவர்களுக்கு பிடித்ததுபோல பொழுதுபோக்கு அம்சங்களுடன், அல்லது நட்சத்திர அந்தஸ்துடன், அல்லது மிகக் குறைந்த முதலீட்டில் படம் எடுப்பது மட்டும் தான்.
ஒரே நபர் தயாரிப்பாளராக ஒரு படத்திற்கான முழு முதலீட்டையும் செய்வதானாலும் சரி, அல்லது ஒரு சில தயாரிப்பாளர்கள் இணைந்து அந்த பொறுப்பை பகிர்ந்து கொண்டாலும் சரி, அல்லது ஒரு கூட்டு முயற்சியாக பல முதலீட்டாளர்களை ஒருங்கிணைத்து படம் எடுத்தாலும் சரி இந்த விஷயத்தில் மாற்றம் எதுவும் இல்லை.
புதியதாக படம் எடுக்க வருபவர்கள் இதை மனதில் வைத்துக் கொண்டுதான் ஆகவேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து. முதன் முதலாக ஒரு படத்தை இயக்கும் போது, ஒரு கதையை எடுத்துக்கொண்டு தயாரிப்பாளர்கள் அல்லது நட்சத்திரங்களை பின் தொடர்ந்து வாய்ப்பை பெறுவதுதான் சாதாரணமான பாதை. அந்த வழியாகத்தான் தற்பொழுது நானும் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். இருப்பினும் அதற்கு இணையாகவே சற்று 'ரிஸ்க் எடுத்தாலும்' மாற்றுப்பாதையில் பயணிக்கவும் ஆசைப்படுகிறேன். அது எனக்கும் அதைத் தொடர்ந்து இந்த திரைத்துறைக்கும் ஒரு நல்ல வழியை காட்டும் என்று நம்புகிறேன்.
எனது குருநாதர்களில் ஒருவரான மறைந்த திரு ராமநாராயணன் அவர்கள்தான் இந்த விஷயத்தில் எனக்கு என்றுமே வழிகாட்டியாக - இன்றும்-  இருக்கிறார். திரைக்கதை எழுதும்போதே படத்தின் பட்ஜெட்டையும் வியாபாரத்தையும் கணக்கில் கொண்டு அதற்கு தகுந்தாற்போல காட்சிகளை அமைக்க கற்றுத் தந்தவர் அவர்தான்.
அவர் மறைந்த பின்னும் தற்பொழுது நான் இந்த படத்தை திரைப்படத் தோழமை தயாரிப்பாக எடுக்க நினைத்தபோது அதற்கு அவர் சொல்லித்தந்த வழிமுறைகள் தான் என்னை ஊக்கப்படுத்தி வருகிறது. உண்மையில் நான் இந்த திட்டத்தை சில வருடங்களுக்கு முன்பே செயல்படுத்த தயாராக இருந்தேன்.
கூட்டு முயற்சி, க்ரவுட் பண்டிங், என பல முறைகளைப்பற்றி யோசித்தேன். விவாதித்தேன். அதற்குள் என்னுடைய சில நண்பர்கள்  இந்த முறைகளில் படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை அறிந்தேன். அவர்களுடைய திட்டத்திற்கும் அனுபவங்களுக்கும் என்னுடைய திட்டத்திற்கும் அனுபவங்களுக்கும் முற்றிலும் வித்தியாசம் இருக்கிறது.. இருப்பினும் ஒரே நேரம் போட்டியிடுவது போன்ற நிலை வரக்ககூடாது என்று சற்று தயங்கினேன். நான் என் திட்டத்தை ஆரம்பிப்பதை சற்று தள்ளிவைத்தேன். இந்த இடைப்பட்ட காலத்தை இந்த திட்டத்திற்கு தகுந்த கதையை தேர்ந்தெடுப்பதற்கும், மற்ற நிறை குறைகளைப்பற்றி யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குமாக பயன்படுத்திக் கொண்டேன்.
திரு ராமநாராயணன் அவர்கள் தான் இந்த நேரத்தில் நான் மனமுடைந்து போகாமல் இருக்க எனக்கு அறிவுரைகள் சொல்லி ஊக்கப்படுத்தினார். இந்த விததியாசமான முயற்சி திரைத்துறைக்கு தேவை என்று அவர் நினைத்தார்.
அவருடைய வழிகாட்டுதலின் பேரில் தான் இந்த படத்தயாரிப்பிற்கான ஏற்பாடுகளை செய்யவும், முறையாக திட்டமிடவும், செயல்படுத்தவும் ஆரம்பித்தேன்.
எதிர்பாராத விதமான விதியின் விளையாட்டால் அவர் இந்த உலகவாழ்கையை விட்டு சென்றுவிட்டதால் நான் சற்று தடுமாறினேன். அவருடைய துணை இல்லாததால் மேலும் கவனமாக செயல் பட வேண்டியதாயிற்று.
இடையில் என்னுடைய நண்பரான திரு ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஒரு மெல்லிய கோடு' படத்தின் திரைக்கதை அமைப்பிலும் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள வேண்டியதாயிற்று. அந்த படத்தில் வசன கர்த்தாவாகவும் இணை இயக்குனராகவும் பணியாற்ற வேண்டியதாயிற்று. அது மேலும் சில மாதங்களை எடுத்துக்கொண்டது.
இருப்பினும் தளராமல், மிகுந்த தன்னம்பிக்கையுடன் எனது குருநாதரின் நல்லாசியுடன் தற்பொழுது நான் இதற்கான வேலைகளை முழுமூச்சுடன் ஆரம்பித்துள்ளேன்.  

Friday 22 May 2015

கலைப்படம்..?





நான் திரைப்பட இலக்கியச் சங்கமம் நடத்த ஆரம்பித்தபோது எனக்கு முதன் முதலில் வாழ்த்துச் சொல்லி, தானாகவே முன்வந்து சிறப்பு விருந்தினராக இந்த சங்கமத்தை துவங்கிவைத்தவர் திரு பாலுமகேந்திரா அவர்கள்.
தொடர்ந்து இந்த சங்கமத்திற்கு ஆதரவு தந்தும் எனக்கு பல அறிவுரைகள் தந்தும் என்னை வழிநடத்திய அவருக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

அவர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது இலக்கியத்தைப் பற்றியும் திரைப்படத்தைப் பற்றியும் அவை இரண்டிற்குமான தொடர்பு பற்றியும் அவர் சொன்ன கருத்துக்கள் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. கமர்சியல் சினிமா, ஆர்ட் சினிமா என்று திரைப்படத்தை இரண்டாக பிரித்து தரம் பார்க்கும் அறிவுஜீவிகளின் மத்தியில் அவற்றிற்கு அவர் தந்த விளக்கம் எனக்கு மிகவும் ஊக்கத்தை தருவதாக இருந்தது.

ஏனென்றால் நானும் இதே எண்ணம் கொண்டவன் தான். அவர் சொன்னபடி, நானும் நினைக்கிற படி திரைப்படத்தில் கலைப்படம் என்றோ வியாபாரப்படம் என்றோ வித்தியாசம் ஒன்றும் இல்லை. இரண்டும் சேர்ந்த கலவைதான் திரைப்படம். வியாபாரத்திற்காக எடுத்தாலும் திரைப்படத்தில் கலை என்பது இல்லாமல் இல்லை. முற்றிலும் கலையாகத்தான் எடு;க்கிறேன் என்று சொல்லி ஒருவர் படம் எடுத்தாலும் அதை தியேட்டரில் வெளியிட்டு மக்களிடம் அதை பார்க்க கட்டணம் வசூலிக்கும் போது அது வியாபாரம் ஆகிவிடுகிறது. வேண்டுமென்றால் ஒவ்வொரு படத்திலும் எதற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த படத்தை எடுத்தார்கள் என்பதின் அடிப்படையில் தங்கள் சௌகரியத்திற்காக அவற்றை இரண்டாக பிரித்து பார்க்கலாம். அவ்வளவுதான்.

'நான் திரைத்துறையில் எதையாவது சாதித்திருக்கிறேன், அல்லது செய்து காட்டியிருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் இலக்கியத்தில் எனக்கு இருநத ஈடுபாடுதான்” என்று அவர் பலமுறை பலமேடைகளிலேயே சொல்லக் கேட்டிருக்கிறேன். நமது சங்கமத்திலும் அவர் வரும்போதெல்லாம் இதை சொல்லியிருக்கிறார்.

அதை பின்பற்றித்தான் நான் இந்த திட்டத்தை ஆரம்பிக்க முடிவு செய்ததும் கதையை தேர்வு செய்தேன். இது என்னமோ 'தமிழ் சினிமா சரித்திரத்தையே மாற்றி எழுத வைத்துவிடும்' என்று பலரும் சொல்லக்ககூடிய ஒரு படம் ஒன்றும் இல்லை.

ஒரு சாதாரண தமிழ் வியாபார சினிமாவேதான். அதில் என்னால் முடிந்த அளவுக்கு கலைத்தரத்துடன் எடுக்க உள்ளேன். அதன் முதல் இலக்கு எளிமையாக வியாபாரம் ஆகவேண்டும், பெருவாரியான மக்களிடம் போய் சேரவேண்டும் என்பது தான்.

அதனால் முற்றிலுமாக ஒரு கலைப்படமாக எடுத்து ஏதோ ஒரு சில காம்பிளக்ஸ் தியேட்டர்களில் மட்டும் வெளியிட்டு கண்டிப்பாக நஷ்டம் ஏற்படும் என்று தெரிந்தும் எடுக்கப்படும் 'கலைப்படம்' என்ற பெயர் கொண்ட படமாக இருக்காது என்பதையும ஆனால் தரத்தில் எந்த அளவும் குறையிருக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Thursday 21 May 2015

அறிமுகம்



தமிழ் திரைப்படத் துறையில் இன்று மிகவும் தேவையாக இருப்பது, அனைவராலும் தேடப்படுவது, ஆனால் காண்பதற்கு அரிதாக இருப்பது 'நல்ல தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள்” தான்.
முன்னணியில் இருக்கும் தயாரிப்பாளர்களால் திரைத்துறைக்கு தேவையான எண்ணிக்கையில் படங்களை எடுக்க முடிவதில்லை. புதியதாக வரும் தயாரிப்பாளர்களில் 99 சதவீதத்தினரால் நிறைய படங்கள் தயாரிக்க முடியுதே தவிற வெற்றிபெற முடிவதில்லை.
இதற்கு துறைசார்ந்தும் தனிநபர்கள் சார்ந்தும் பல காரணஙகள் இருக்கலாம். அவற்ளைத் தாண்டி தொழில் ரீதியாக தரமான படங்ளை எடுத்து வெற்றிபெற என்ன வழி என்ற கேள்விக்கு கிடைத்த ஒரு பதில்தான் இந்த திரைப்படத் தோழமை தயாரிப்பு.
ஒரு படம் வெற்றிபெற்றால் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நடிகர்கள் என ஆரம்பித்து ஸ்டுடியோ, தியேட்டர்கள் மற்றும் அவற்றைச் சார்ந்த பலரும் பயன்படுவார்கள். ஒரு படத்தின் வெற்றியால் சிலருக்கு வளம் செழிக்கும். பலருக்கு வாழ்க்கையை நல்லமுறையில் வாழ்வதற்கான வரும். சில புதியவர்களுக்க நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
இப்படி பல வடங்கள் வெற்றிபெற்றால்தான் திரைத்துறையும் அதை சார்ந்திருப்பவர்களும் தொடர்ந்து வளர முடியும். இவற்றிற்கு தேவை நல்ல எழுத்தாளர்களும் கலைஞர்களும் தான். ஆனால் அவர்கள் தங்கள் திறமையை காட்ட அவர்களுக்கு தேவை அதற்கான களத்தை உருவாக்கும் தயாரிப்பாளர்கள் தான்.
தமிழில் ஒரு சில இயக்குநர்களுக்கும் நடிகர்களுக்கும் மரியாதையும் வருமானமும் அளவுக்கு அதிகமாகவே கிடைத்தாலும் பலருக்கும் உழைப்பிற்கேற்ற வருமானமோ மரியாதையோ கிடைப்பதில்லை.
இதில் தமிழ் திரைத்துறைக்கும் மற்ற இந்திய மொழி திரைத்துறைகளுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.
இந்த நிலை மாற படத்தயாரிப்பு, படைப்பு மற்றும் அவற்றைச் சார்ந்த அனைத்துப பணிகளிலும் ஆக்கப்பூர்வமான ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. முக்கியமாக தயாரிப்பாளர்களின் மனநிலையிலும் தயாரிப்பு முறைகளிலும் பல மாற்றங்கள் வர வேண்டியிருக்கிறது. அந்த வகையில் சிந்தித்து ஆரம்பிக்கப்படும் ஒரு புதிய முறைதான் இந்த திரைப்படத் தோழமை தயாரிப்பு.
புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவும், ஏற்கனவே வாய்ப்பு பெற்றவர்கள் வெற்றிபெறவும், வெற்றிபெற்றவர்கள் தங்கள் வெற்றியை தொடர்ந்து தக்கவைக்கவும் இது ஒரு புதிய பாதையாக இருக்கும்.
திரைப்படம் மீது குறிப்பாக தமிழ் திரைப்படம் மீது பற்று கொண்டவர்கள், திரைத்துறையில் பணியாற்றுபவர்கள், திரைத்துறையில் பணியாற்ற ஆசைப்படுபவர்கள் அனைவரிடமும் இதைப்பற்றி நேரடியாக பேச விரும்புகிறேன். அதற்காக உங்கள் அனைவருடைய உதவியையும் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.


Saturday 9 May 2015

Film Friendship Production



       After a long break for thinking and rethinking, and preparations for the next step, today I am ready to start the new venture officially.

       Even though a title 'THEEVIDHAI' is registered officially I would like to announce the first film in the name simply as 'FILM FRIENDSHIP PRODUCTION NO: 1' to make this name reach all first.        
      To make this a grand success I need all your support and co-operation. The details of the project will be posted in detail from now onward regularly.

Thursday 7 May 2015

நல்லதொரு ஆரம்பம்




இப்படித்தான் நடக்கவேண்டும் என்று பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. அதற்கான ஆயத்தப்பணிகளும் நடந்து கொண்டுதான் இருந்தது. இருப்பினும் வழக்கம்போலவே தாமதமாகிவிட்டது.
எந்த பாதையில் பயணிக்கவேண்டும், எந்த முறையில் செயல்படவேண்டும் என்பது போன்ற விஷயங்களை மாற்றி மாற்றி யோசித்து யோசித்து காலம் கடத்திவந்தேன்.
அந்த தவறை மேலும் செய்யக்கூடாது என்பதறகாகவே சில கட்டுப்பாடுகளை எனக்கு நானே உருவாக்கி, இதை செய்யாமல் இனி வேறு வழியில்லை என்ற நிலைமைக்குள் என்னை ஆட்படுத்திக்கொண்டேன்.
அதற்கு பலனும் கிடைத்துவிட்டது. தற்பொழுது என்னுடைய முதல் படத்தின் வேலைகள் முறையாகவே ஆரம்பிக்கப்பட்டு விட்டது.
இதற்கான முன்னேற்பாடுகளை, குறிப்பாக திரைக்கதை எழுதும் பணியும் திட்டமிதலும் பல மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்து நடந்து வருகிறது. ஆனால் எனக்குள் இருந்த பயமும், தயக்குமும் அதன் வேகத்தை கட்டுப்படுத்தி வந்தது.
தற்பொழுதுதான் எனக்குள்ளேயும், எனக்கு மிக அருகில் இருப்பவர்களிடமும் மட்டுமே சொல்லிவந்த இந்த “திரைப்படத் தோழமை தயாரிப்பு“ பற்றி மற்றவர்களிடமும் சொல்ல தயாராகியுள்ளேன். இதுவே ஒரு நல்ல ஆரம்பம் தானே!
இந்த திட்டத்தின் கீழ் தயாரிப்பதற்கான கதையை தேர்வு செய்து, அதற்கு பொருத்தமான தலைப்பாக “தீவிதை“ என்ற புதுச்சொல்லையே உருவாக்கி, அதை முறையாக பதிவு செய்தே ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தொடர்ந்து ஆறுமாதங்களுக்கு ஒரு முறை அதை மறுபதிவு செய்து புதுப்பித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.
ஆனாலும் இதை வெளிப்படையாக மற்றவர்களிடம் சொல்வதற்கான நேரம் தற்பொழுதுதான் வந்திருக்கிறது.
திரைக்கதை எழுதும் வேலையில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்ததால் கடந்த சில மாதங்களாக “திரைப்பட இலக்கியச் சங்கமம்“ நடத்துவதை தள்ளிவைத்திருந்தேன்.
படவேலைகளை ஆரம்பித்திருக்கும் இந்த சந்தோஷமான நேரத்தில் ஏற்கனவே நடத்திவந்த இந்த சங்கமத்தினை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல முடிவு செய்துள்ளேன்.
கடந்த மூன்று வருடங்களாக நமது சங்கமத்தில் பல விதமான கூட்டங்களை நடத்தி வந்துள்ளேன். ஒரு தலைப்பில் பேசுவது, தலைப்பே இல்லாமல் உரையாடுவது, ஒரு கலைஞரின் படைப்புகள் பற்றி விவாதிப்பது போன்று பல விதமாக.
தற்பொழுது அதன் வளர்ச்சியாக புதியதாக வெளிவந்த படங்களைப்பற்றி விவாதிக்க முடிவுசெய்துள்ளேன். இதை வழக்கமான பாராட்டுவிழாவாக இல்லாமல் அதேபோல குறைகளை மட்டும் சொல்லும் விமர்சனக் கூட்டமாகவும் இல்லாமல் அனைவருக்கும் பயன் தரும் ஒரு கூட்டமாக நடத்த நினைக்கிறேன்.
“திரைப்பட இலக்கியச் சங்கமத்தின்“ லட்சியத்தை இது நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.
இந்த முயற்சியில் ஆரம்பமாக ஒரு புதிய படத்தை தேர்வு செய்து அதைப்பற்றி விவாதிக்க முடிவு செய்துள்ளேன். அது எந்த படம், எங்கே நடக்கிறது, எப்போது என்பது பற்றிய அறிவிப்புகள் விரைவில்..