Sunday 30 August 2015

இலங்கைத் தமிழ் குறும்படங்கள்இன்று டிஸ்கவரி புக் பாலசில நடந்த இலங்கைத் தமிழ் குறும்படங்கள் திரையிடளுக்குச் சென்றிருந்தேன். உண்மையிலேயே அந்தப் படங்களை பார்த்ததில் மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். கடந்த வாரம் பனுவலில் நடந்த திரையிடலுக்கு நண்பர் கவிதா பாரதி அழைத்திருந்தும் செல்ல முடியவில்லை. அந்த வருத்தம் இன்று தீர்ந்தது,
அட்சரம் என்ற தலைப்பில் தொகுத்த ஆறு படங்கள் திரையிடப்பட்டன. ஆரம்பகால படிப்பாளிகள் எடுத்த் படங்கள் என்ற முறையில் இவற்றில் உள்ள குறைகளைத் தேடிக் கண்டுபிடித்து குற்றம் கூறி விமர்சனம் பண்ணவேண்டிய அவசியம் இல்லை. அதற்காக இவற்றை ஒரு அனுதாபத்துடன் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. காரணம், இந்த படைப்பாளிகள் அந்த மழலை நிலையை எல்லாம் தாண்டிவிட்டார்கள்.
உண்மையைச்சொன்னால் இங்கு, தமிழ்நாட்டில் எடுக்கப்படும்  குறும்படங்களுக்கு சற்றும் குறையாத தரத்தில் தான் இந்த படங்கள் இருக்கிறது என்று மட்டும் அல்ல, நானும் குறும்படம் எடுக்கிறேன் என்று இங்கு சிலர் திரைப்படத்துறையில் வாய்ப்பு கிடைப்பதற்கு ஒரு வழி என்ற முறையில் எடுக்கும் குறும்படங்களை விட இந்த படங்கள் மிகவும் அழகானவைதான்.
அரசியல். பொருளாதார. சமூக சூழ்நிலைகள் காரணமாக, அவர்களுடைய வாழ்வின் எல்லா பிரச்சினைகளையும் இவை பிரதிபலிக்கவில்லை என்றாலும், ஆரம்ப கட்டம் என்ற முறையில் அவர்களுடைய வாழ்வியல் சோகங்கள் இந்த படங்களில் இழயோடியிருப்பதை உணரமுடிகிறது,
திரு ட்ராடஸ்கி மருது அவர்கள் தன்னுடைய வழக்கமான பாணியில் ஒரு முன்னரை தந்தது இந்த படங்களை இன்னொரு கோணத்தில் ரசிக்க மேலும் உதவியது. அவருக்கு நன்றி.
இந்த படங்களை திரையிட்ட அமுதன் அவர்களுக்கும் நன்றி.

இந்த படங்களில் பாரறிய அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

Monday 3 August 2015

திரைப்பட இலக்கியச் சங்கமம் – ஒரு வேண்டுகோள்
நேற்று நடந்த தனியாவர்த்தனம் திரையிடல் நிகழ்வின் அனுபவம் உண்மையாகவே என்னை உலுக்கியது. இது திரைப்பட இலக்கியச் சங்கமத்தை தொடர்ந்து நடத்துவது பற்றியும், அதன் லட்சியத்தை அடைவதற்கான மாற்று வழிகளைப் பற்றியும் மேலும் ஆழமாக சிந்திக்கத் தூண்டியது.
அதன் அடிப்படையில் ஒரு முடிவை எடுத்தேன். திரைப்படத்தில், குறிப்பாக தமிழ்த் திரையுலகில் ஒரு நல்ல முயற்சி என்ற கோணத்தில், என்னால் செய்யக்குடிய, செய்தே ஆகவேண்டும் என்று மனப்பூர்வமாக கருதிய திரைப்பட இலக்கியச் சங்கமத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அடுத்த ஆண்டு ஐந்தாவது ஆண்டுவிழா கொண்டாடுவதற்கு முன்பு பல மேடைகளிலும் இதைப்பற்றி பேசவேண்டும் என்ற முடிவிலும் மாற்றம் ஏற்படவில்லை. மாறாக அத்துடன் சேர்ந்து, அதைச்சார்ந்த, என்னால் முடிந்த இன்னும் சில விஷயங்களைச் செய்யவேண்டும் என்று தோன்றியது.
அதில் முக்கியமானது, இதுபோன்ற திரையிடல்கள் நடக்கும் முன்பு அந்த திரைப்படங்கள் பற்றிய ஒரு அறிமுக உரை வலைதளம் மூலமாக வெளியிடவேண்டும் என்பதுதான். அது அந்த படங்களுக்கும், அதை உருவாக்கிய கலைஞர்களுக்கும் செய்யும் ஒரு மரியாதையாகவும் இருக்கும், அதிக ரசிகர்களை, கலைஞர்களை அல்லது திரைப்பட மாணவர்களை அந்த கூட்டத்திற்கு வரும்படி ஈர்க்க ஒரு வழியாகவும் இருக்கும். இந்த வேலையை என்னால் முடிந்த அளவு செய்ய முடிவுசெய்திருக்கிறேன்.
இன்னொரு விஷயம்,  இது சம்பந்தமாக,  இதன் தொடர்ச்சியாக, நடத்தப்பட வேண்டிய சில உரையாடல்களைப்பற்றியது. பலநேரங்களில் திரைப்படம் சார்ந்த விஷயங்களில், குறிப்பாக எழுத்து, தொழில்நுட்பம், மற்றும் வியாபாரம் பற்றிய விஷயங்களில், பலருடைய மேடைப்பேச்சுக்கள் என் மனதில் பல கேள்விகளை எழுப்பி வருகிறது.
இதைப்பற்றியெல்லாம் நான் ஒரு இயக்குநராக வெற்றிபெற்ற பிறகுதான் எழுதுவேண்டும் என்ற முடிவில்தான் இதுவரை இருந்து வந்தேன். ஆனால், இதுவரையிலான அனுபவத்தின் அடிப்படையில், இவற்றைப்பற்றி நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்று இப்போது தோன்றுகிறது. குறிப்பாக திரைப்பட இலக்கியம் சம்பந்தமான விஷயங்கள்.
இயக்குநராவதற்கான முயற்சி ஒரு புறம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அது அதன்பாட்டில் நடக்கட்டும். அதே நேரத்தில், நண்பர்கள் விருப்பப்பட்டால், அல்லது இந்த விஷயங்களில் ஏதாவது சந்தேகம் கேட்டால், அந்த விஷயங்களைப்பற்றி எழுதலாம், அல்லது உரையாடலாம் என்றும் முடிவு செய்துள்ளேன்.
நண்பர்கள், மாணவர்கள் கேட்டால் அதற்குத் தகுந்த பதிலை, எனக்குத் தெரிந்தவரை, எனக்குத் தெரியாத விஷயமாக இருந்தால் முடிந்தவரை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்தாவது இங்கே  எழுதுகிறேன்.
உண்மையாக திரைப்படத்தை நேசிப்பவர்கள், இலக்கியத்தை திரைப்படத்துடன் இணைக்க விரும்புவர்கள், ஏதாவது ஒரு நிகழ்வை அமைத்து, அதில் எனக்கு பேச வாய்ப்புத் தந்தால் கண்டிப்பாக நான் திரைப்படமும் இலக்கியமும் என்ற தலைப்பின் அடிப்படையில் பேச தயாராக உள்ளேன். திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் லட்சியத்தை நிறைவேற்ற அது பெரும் உதவியாக இருக்கும். இதற்காக திரைப்படம், இலக்கியம் என்பது போன்ற தலைப்பிற்காகவே ஒரு நிகழ்வை நடத்தவேண்டும் என்பதில்லை. திரைப்படம் சார்ந்த நிகழ்வுகள் நடத்தும்போது, அதனையொட்டி பேச வாய்ப்பு தந்தாலே போதுமானது. அதற்காக நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.
இதுவேதான் திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் அடுத்த கட்ட பயணமாகவும் இருக்கும்.
இதுவேதான் நான் என்னுடைய நண்பர்களிடம், அவர்கள் சார்ந்த அமைப்புகளிடமும், திரைப்படம் சார்ந்த கல்வி நிறுவனங்களிடமும் இதன் மூலம் வைக்கும் ஒரே விண்ணப்பம். 

திரைப்பட இலக்கியமும் நடிப்பும் - ஒரு தனியாவர்த்தனம்.
திரைப்படங்கள், அல்லது நாடகங்களில் உள்ள நடிப்பிற்கும் அதன் இலக்கியத்திற்கும மிக ஆழமான தொடர்பு இருக்கிறது. அது என்றும் எப்போதும் எல்லா நிலையிலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் அது என்றும் தனியாவர்த்தனம் தான்.
நடிப்புக்கு என்று சில இலக்கணங்கள் இருக்கின்றன. அதை எல்லோரும் கற்றுக்கொண்டு நடிக்கிறார்களா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், வெற்றிபெற்ற எல்லா நடிகர்களின் நடிப்பிலும் அந்த இலக்கணத்தின் பிரிவுகளை நாம் பொருத்திப் பார்க்க முடியும்.
அதற்கு மிகச்சிறந்த உதாரணம் தான் இந்த தனியாவர்த்தனம் என்ற திரைப்படம். உண்மையிலேயே தம்பிசோழன் ஒரு மிகச்சிறந்த படத்தைத்தான் தேர்ந்தெடுத்திருந்தார். நடிப்பைப் பற்றி சொல்ல இதுபோன்ற படங்களைவிட வேறு எதுவும் தேவையில்லை.
திரைப்பட இலக்கியம் எப்படி திரைப்பட நடிப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை சுட்டிக்காட்ட இந்த படம் மிகப்பெரும் உதாரணமாக திகழுகிறது என்பதில் எந்த சந்தேகமில்லை.
ஒருவர் நேரிலோ, மேடையிலோ, அல்லது திரையிலோ வெறுமெனே அழுதால் நாம் அழுவோமா? இல்லை. அது பாசமலரில் சிவாஜி நடித்த கைவீசம்மா கைவீசம்மா காட்சியாகவே இருந்தாலும், அழுபவருக்கு ஏதோ பிரச்சினை, பைத்தியம் என்று தான் நாம் நினைப்போம். வேண்டுமென்றால் பரிதாபப்படுவோம்.
அப்புறம் சில படங்களில் வரும் இதுபோன்ற காட்சிகளை பார்க்கும்போது நாமும் ஏன் சேர்ந்து அழுகிறோம்? எந்த காட்சியை பார்த்தும் அழாதவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி நான் இங்கே குறிப்பிடவில்லை. என்னைப்போன்ற சாதாரண ரசிகர்களை மட்டும்தான் நான் சொல்கிறேன்.
நான் சினிமா பார்க்கும்போது நகைச்சுவை காட்சிகளைக் கண்டு வாய்விட்டு சிரிப்பேன், சோகக்காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டு அழுவேன். அதை ஒரு குறையாக நினைத்து யார் முன்பும் மறைத்ததில்லை.
நேற்றும் கூட நானும் என் மனைவியும் இந்த தனியாவர்த்தனத்தை  பார்த்து தேம்பித் தேம்பி அழுதோம். இத்தனைக்கும் இதை நாங்கள் முதன்முதலாகப் பார்த்தது அல்ல. எத்தனையோ முறை பார்த்தும் மறுமுறை பார்க்கும்போதும் நாங்கள் அழுகிறோம்.
காரணம், அதன் கதை, அதையொட்டி வரும் காட்சிகள், அதை எடுத்த விதம், அதில் காதாபாத்திரங்களாக வாழ்ந்தவர்களின் நடிப்பு , இவையெல்லாம் சேர்ந்த சரியான சதவீதம்தான்.
ஒரு காட்சியைப் பார்த்து நாம் சிரிக்கிறோம் என்றால் கூட அதற்கு முந்தைய காட்சிகளுடன் தொடர்பு வேண்டியதில்லை. ஆனால்,  ஒரு காட்சி நம்மை அழவைக்கவேண்டும் என்றால், உணர்ச்சிவசப்பட வைக்கவேண்டும் என்றால், நம்மை புரட்சிகர சிந்தனைக்கு தூண்டிவிடவேண்டும் என்றால், கண்டிப்பாக அந்த காட்சிக்கு முன்னால் வந்த காட்சிகளும், அதன் பின்புலத்தில் உள்ள கதையம்சமும், கதைக்களமும், கதாபாத்திரங்களும் அந்த உணர்வை ஏர்ப்படுத்துவதாக இருக்கவேண்டும். அதுதானே திரைப்பட இலக்கியம்.
ஒரு நடிகர் நன்றாக நடிக்கலாம். ஒரு இயக்குநர் சொன்னபடி நடித்துவிடலாம். அதற்கு பிறப்பால் வந்த திறமையோ, பயிற்சியினால் வளர்த்த திறமையோ போதும். உதாரணமாக சிவாஜி, கமல், மம்முட்டி, மோகன்லால், திலகன் இப்படி எல்லோரும் சிறந்த நடிகர்கள்தான். இதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. இருந்தாலும் இவர்கள் நடித்த எல்லா படங்களும் நம்மை அழவைத்திருக்கிறதா, உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறதா, சிந்திக்கத்தான் வைத்திருக்கிறதா?
அவர்கள் நடிப்பை வெளிப்படுத்தும் அளவுக்கு, அதை நாம் போற்றும் அளவுக்கு, கதையும் கதாபாததிரமும் அமைந்தால் மட்டும் தான் அவர்களுடைய நடிப்புத் திறன் கூட வெற்றிபெறும்.
திலகன் ஒரு முறை சொல்லியிருந்தார். ”நடிப்பில் இரண்டு பாணி இருக்கின்றன. ஒன்று யதார்த்த நடிப்பு, கமல், மோகன்லால் போன்றவர்கள் பின்பற்றுவது. கமல் சிலநேரங்களில் நடித்துக் குதறிவிடுவார், அதனால் அவருடைய ஆரம்பகால நடிப்பை மட்டும் தான் இங்கு குறிப்பிடுகிறேன். இரண்டாவது, டீடைல்ட் நடிப்பு. சிவாஜியும் நானும் பின்பற்றுவது. எங்கள் நடிப்பு சிலநேரங்களில் யதார்த்தத்தை மீறுவதுபோல் தோன்றும். நாடகத்துறையில் இருந்து வந்ததால் எங்களால் அதை தவிர்க்க முடியாது.“
ஆனால், திலகன் யதார்த்த நடிப்பிலும் டீடைலாக நடித்து தன் திறமையை வெளிக்காட்டியவர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
இன்னொரு விதமாக சொன்னால் நடிப்பு என்பது ஆக்ஷன் மட்டுமல்ல, ரியாக்ஷனும்தான். ரியாக்ஷன் இல்லையென்றால் ஆக்ஷன் எடுபடாமல் போய்விடும். ஒன்றுக்கு மேற்பட்டோர் நடிக்கும் காட்சியில் ஒருவருடைய நடிப்பபின் வெற்றி அவருடைய ஆக்ஷனுக்கு தகுந்தபடி வரும் மற்றவர்களின் ரியாக்ஷனில்தான் இருக்கிறது.
காதரலிக்க நேரமில்லை படத்தில் வரும் பிரபல காட்சியை இதற்கு மிகச்சரியான உதாரணமாகச் சொல்லலாம். ஒரு வேளை திரு நாகேஷ் அவர்கள் கஷ்டப்பட்டு நடித்துக்கொண்டிருக்கும்போது, திரு பாலையா அவர்கள், ஸ்டோன் ஃபேஸ் என்று சொல்வார்களே, அந்த பாவத்துடன் சும்மா இருந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
இந்த தனியாவர்த்தனத்தை பொறுத்தவரை இதன் வெற்றிக்கு முழு மூலக்காரணம் ஏ.கே.லோஹிததாசின் கதைதான். ஏற்கனவே குறிப்பிட்டது போல ஒரு வித்தியாசமான களத்தை எடுத்து, நல்லதொரு கதையை அமைத்து, திரைக் காட்சிகளாக வடித்துவிட்டார். அதை மிகச்சரியான முறையில் இயக்கியிருக்கிறார் சிபிமலையில். இதுபோன்ற படங்களை எடுப்பதில் அவர் கைதேர்ந்தவர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். லோஹிததாஸ், சிபி மலையில் கூட்டணியில் வெளிவந்த பரதம், ஹிஸ் ஹைனஸ் அப்துள்ளா, கமலதளம், கிரீடம் போன்ற படங்கள் எந்த தரத்தில் இருந்தன என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. அப்படிப்பட்ட இவர்கள் கூட்டணியில் உருவான இந்த தனியாவர்த்தனத்தில் யார் நடித்தாலும் வெற்றி பெறும். ஆனால் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை நடிக்க வைத்திருந்தார் சிபி மலையில்.
லோஹிதாஸைப் பொருத்தவரை இது முதல் படம். அதனால் இதை தேர்வு செய்த சிபிமலையிலும், மம்முட்டியையும் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த படம் வெளிவந்த காலத்தில், இந்த படத்தையும் இதில் நடித்த அனைவரையும் பாராட்டத திரையுலகத்தினரே இல்லை என்று சொல்லலாம். அந்த வருடத்தின் சிறந்த கதை என்ற கேரள மாநில அரசின் விருது இந்தப்படத்திற்காக லோஹிததாசுக்கு கிடைத்தது என்பது இதன் மற்றொரு சிறப்பு.
இந்த படம் ஆரம்பிக்கும்போதே கதையினுள் சென்றுவிடும். அதனால் கதையின் களத்தைப்பற்றியும் கதாபாத்திரங்கள் பற்றியும் ஒரு விரிவான அடிப்படைச் சித்திரம் நம் மனதில் பதிந்துவிடும். தொடர்ந்து வரும் காட்சிகள் அதன்மீது வண்ணங்களை முறையாக இறைத்துக்கொண்டே இருக்கும்.
எந்த கதாபாத்திரத்திற்கும் அறிமுகம் வேண்டும் என்றவிதத்தில் தனியாக காட்சிகள் எதுவும் அமைக்கப்படவில்லை. திரைக்கதையின் ஓட்டத்திலேயே எல்லா கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தி இருப்பார்கள்.
அப்படி நம்மை கட்டிப்போடும் திரைக்கதை ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தோன்றிய ஒவ்வொரு நடிகருக்கும் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை தந்திருக்கிறது. எல்லா நடிகர்களும் அதை உணர்ந்து நடித்திருக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணம்.
அந்த வருடத்தின் சிறந்த நடிகர் என்ற கேரள அரசின் விருது மம்முட்டிக்கு கிடைக்கவில்லை. அது அவர் சிறந்த நடிகர் அல்லாததாலோ, அல்லது இந்த படத்தில் அவர் நன்றாக நடிக்கவில்லை என்பதாலோ அல்ல.  அந்த வருடத்தில் மற்றொரு படத்தில் மோகன்லால் இதைவிட சிறப்பாக நடித்ததால் தான். ஆனால் அந்த வருடத்திய பிலிம்பேர் விருது மம்முட்டிக்கு இந்த படத்திற்காக கிடைத்தது.
அந்த வருடத்தின் கேரள அரசு விருதுகளில் சிறந்த இரண்டாவது நடிகர் விருதை திலகன் இந்த படத்திற்காக பெற்றார். அத்தோடு இரண்டாவது சிறந்த நடிகை என்ற விருதை பிலோமினா அவர்கள் இந்த படத்திற்காக பெற்றிருந்தார்.
இதில் எந்த ஒரு நடிகருடைய நடிப்பு சிறந்தது என்று பிரித்துப் பார்க்க முடியாது. எல்லோரும் அவரவர்கள் பாத்திரத்தை உண்ர்ந்து நடித்திருந்தனர். சிறு சிறு பாத்திரங்களில் வரும் நடிகர்கள்கூட நம்மை வசீகரித்திருக்கிறார்கள். ஒவ்வொருவருடைய நடிப்புக்கும் முத்தாயப்பாக ஒவ்வொரு காட்சி இந்த படத்தில் காணலாம். அதற்காக இன்னொருமுறை லோஹிததாசையும் சிபி மலையிலையும் பாராட்டுவதில் தவறே இலலை.

திரைப்பட இலக்கியச் சங்கமம் – புதிய பாதையில்


உணமையில் நான் இந்த மாதம் எனது திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் நான்காவது ஆண்டுவிழாவை நடத்தவேண்டும் என்றுதான் திட்டமிட்டிருந்தேன்.
திரைப்படத்தையும் இலக்கியத்தையும் ஒன்றிணைக்க வேண்டும், குறிப்பாக தமிழ் திரையுலகில், என்ற லட்சியத்தின் அடிப்படையில் நான் ஆரம்பித்த அமைப்புதான் இது. கடந்த 2011ல் ஆரம்பித்து தொடர்ந்து மூனறாண்டுகளுக்கு மேல் இதை வெற்றிகரமாக நடத்தி வருகின்றேன்.
வழக்கமான குடும்பச் சிலவுகளுக்கு தேவையான வருமானத்தை விட, என் பாக்கட்டில் என்றெல்லாம் பத்தாயிரம் ரூபாய் இருந்ததோ அன்றெல்லாம் நான் திரைப்பட இலக்கியச் சங்கமத்தை நடத்தியுள்ளேன்.
ஆனால் கடந்த சில மாதங்களாக ஒரு தயக்கம், சந்தேகம். நான் இப்படி கஷ்டப்பட்டு இந்த நிகழ்வை நடத்துவதனால், நான் நினைத்த பலனை அடைய முடிகிரதா? இந்த சங்கமத்தின் லட்சியம் நிறைவேறுகிறதா? அப்படி யோசிக்கையில் திரைப்பத்தையும் இலக்கியத்தையும் இணைக்க வேண்டும் என்ற லடசியத்தை அடைய இதை விட சிறந்த வழிகள் இருக்கின்றனவா? போன்ற கேள்விகள் தொடர்ந்து மனதுக்குள் எழ, அதைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.
நான் எல்லோரையும் அழைத்து கூட்டம்போட்டு இப்படி சங்கமம் நடத்துவதால் பயன் இல்லாமல் இல்லை. இந்த சங்கமங்களுக்கு வரும் நண்பர்கள், புதியதாக வரும் கலைஞர்கள். படைப்பாளிகள் மற்றும மாணவர்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடிகிறது என்பதில் ஐயமில்லை.
ஆனால், என்னதான் நான் கஷ்டப்பட்டாலும், இந்தந சங்கமங்களுக்கு வருபவர்கள் மிகக்குறைவுதான். அதுவும் வந்தவர்கள்தான் அநேகமாக தொடர்ந்து வருகிறார்கள். அதுவும் இந்த விஷயத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர்கள் மட்டும் அல்லது நட்புக்காக வருபவர்கள்.
மேலும் அதிக எண்ணிக்கையிலான கலைஞர்களையும், மாணவர்களையும் இந்தச் சங்கமத்தின் லட்சியம் சென்றடைய, இது வழியாக நான் சொல்ல நினைத்ததை எடுத்துரைக்க, வெவ்வேறு இடங்களுக்குச் சென்று நானே அவர்களைச் சந்தித்து, சொல்வதுதான் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்று புரிந்துகொண்டேன்.
அப்படி நடக்க வேண்டும் என்றால் நானே எல்லா இடங்களிலும், கூட்டம் போட வேண்டும். அது இயலாத காரியம். அதனால் நண்பர்கள், மற்ற அமைப்பினர் ஆகியோரின் உதவியை நாடி, அவர்கள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் இந்த திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் லட்சியத்தைப்பற்றி பேசுவதுதான் சிறந்தது என முடிவு செய்தேன்.
அப்படி பல இடங்களில் பேசி, முடிந்த வரை படைப்பாளிகளையும், மாணவர்களையும் ஈர்ததபின், இந்த சங்கமத்தின் ஐந்தாவது ஆண்டுவிழாவவை அடுத்த வருடம் விமரிசையாக கொண்டாடலாம் என்று முடிவெடுத்தேன்.
இந்த முடிவுகளை நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லி, இந்த பயணைத்தை தொடர்வதற்காக, நான்காவது ஆண்டுவிழாவை மிக எளிமையான ஒரு கூட்டமாக நடத்தத் திட்டமிட்டிருந்தேன்.
அந்த நேரத்தில் தான் நான் நினைத்த அதே தேதியில் திரு தம்பிசோழன் அவருடைய ஆக்டர்ஸ் ஸோன் சார்பில் நடக்கும் நான்காவது திரையிடலை நடத்த முடிவுசெய்து, என்னையும் அதில் பேச அழைத்தார்.
உண்மையிலேயே இது என்னைப் பொருத்தவரையில் பழம் நழுவி பாலில் விழுந்த கதைதான். அதனால் இந்த சந்தர்பத்தையே நான் என் திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் புதிய பயணத்தின் ஆரம்பமாக நினைத்துக்கொண்டேன்.
அந்த ஒரு சந்தோஷத்துடன் தான் நான் அந்த நிகழ்விற்கு சென்றிருந்தேன். ஆனால் அங்கு கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்ததும் மிகவும் வருத்தமாக இருந்தது. நிகழ்வை நடத்துபவரையும் அதில் பேச அழைத்தவர்களையும் தவிர்த்துப் பார்த்தால், வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை கைவிரல்களின் எண்ணிக்கையைவிட குறைவுதான்.
திரைப்பட இலக்கியச் சங்கமத்தை நடத்திய அனுபவம் இருப்பதால் இதை ஒரு ஆச்சரியமாக நான் பார்க்கவில்லை. காரணம் நூற்றுக்கும் மேற்பட்ட நண்பர்கள் வந்த சங்கமத்தையும் நான் பார்த்திருக்கிறேன். இருபதிற்கும் குறைவான நண்பர்கள் மட்டும் வந்த நிகழ்வையும் நான் நடத்தியிருக்கிறேன். அதுவும் பெரிய கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து நிகழ்வை நடத்தும்போதும் கூட.
இருந்தாலும் இப்படி ஒரு நல்ல படம் திரையிடப்படும் போது இவ்வளவுபேர் தான் வருவார்களா என்ற கேள்வி என்னை மேலும் சிந்திக்க வைத்தது.

நேற்றைய நிகழ்வின் அனுபவத்தால் ஒரு முடிவை எடுக்க வேண்டியதாயிற்று. அந்த முடிவையும், நேற்று நடந்த நிகழ்விற்காக எழுதிவைத்த “இலக்கியமும் நடிப்பும் - ஒரு தனியாவர்த்தனம்“ என்ற உரையையும் இதைத் தொடர்ந்து இங்கே பதிவுசெய்கிறேன்.