Wednesday 19 June 2019

பொன்னியின் செல்வன் பாகம் 1 - 9






ஒன்பதாம்அத்தியாயம்
வழிநடைப் பேச்சு
பாலாற்றுக்கு வடக்கேயுள்ள வறண்ட பிரதேசங்களிலேயே வந்தியத்தேவன் அதுகாறும் தன் வாழ்நாளைக் கழித்தவன் ஆகையால் ஆற்று வெள்ளத்தில் நீந்துவதற்கு அவனுக்குத் தெரியாமலிருந்தது.
ஒரு சமயம் வடபெண்ணைக் கரையில் எல்லைக் காவல் புரிந்துவந்தபோது, குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினான்.
ஒரு பெரிய நீர்ச் சுழலில் அகப்பட்டுக் கொண்டான்.
அதே சமயத்தில் கீழேயும் இழுத்துக் கொண்டிருந்தது.
சீக்கிரத்தில் வந்தியதேவனுடைய பலத்தையெல்லாம் அந்தச் சுழல் உறிஞ்சிவிட்டது.
"இனிப் பிழைக்க முடியாது, சுழலில் மூழ்கிச்சாக வேண்டியதுதான்!" என்று வந்தியத்தேவன் நிராசை அடைந்த சமயத்தில் தெய்வாதீனமாக நதிச் சுழலிலிருந்து வெளிப்பட்டான்.
வெள்ளம் அவனை அடித்துக் கொண்டு போய்க் கரையில் ஒதுக்கிக் காப்பாற்றியது!
அன்றிரவு வந்தியத்தேவன் மீண்டும் சென்று படுத்தபோது அவனுக்கு நதியின் சுழலில் அகப்பட்டுத் திண்டாடியது போன்ற அதே உணர்ச்சி ஏற்பட்டது.
சோழ மகா சாம்ராஜ்யத்துக்கு வெளிப்பகைவர்களால் ஏற்பட்டிருந்த தொல்லைகள் நீங்கிச் சில வருஷங்கள்தான் ஆகியிருந்தன.
இளவரசர் ஆதித்த கரிகாலர் மகாவீரர், போர்க் கலையில் நிபுணர்;
ராஜதந்திரத்தில் சாணக்கியர்.
தம்முடைய அறிவாற்றல்களையும் சோழ நாட்டுப் படைகளின் போர்த் திறனையும் பூரணமாகப் பயன்படுத்தி இரட்டை மண்டலத்துக் கிருஷ்ண மன்னனின் ஆதிக்கத்தைத் தொண்டை மண்டலத்திலிருந்து அடியோடு தொலைத்தார்.
வெளிப்பகை ஒருவாறு ஒழிந்தது.
இந்த நிலைமையில் உட்கலகமும் சதியும் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன.
ஆதித்த கரிகாலரா? மதுராந்தகரா? யோசிக்க யோசிக்க, இரு தரப்பிலும் நியாயம் இருப்பதாகவே தோன்றியது.
போட்டி என்று உண்மையில் ஏற்பட்டால், இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள்?
தன்னுடைய கடமை என்ன?
ஆஹா! என்னென்னவோ மனக் கோட்டை கட்டிக் கொண்டு காஞ்சியிலிருந்து இந்த யாத்திரை கிளம்பினோமே?
பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலருக்கு உகந்தபடி நடந்து கொண்டு சோழப் பேரரசில் பெரிய பதவிகளை அடையலாம் என்று ஆசைப்பட்டோமே!
காலாகாலத்தில் வாணர் குலத்தின் பூர்வீக ராஜ்யத்தைக்கூடத் திரும்பப் பெறலாம் என்று நினைத்தோமே?
 இதற்கெல்லாம் சாதனமாக எந்தப் புளியங்கொம்பைப் பிடித்தோமோ அதுவே முறிந்துவிடும் போலிருக்கிறதே...?
இத்தகைய சிந்தனைகளினால் வந்தியத்தேவன் இரண்டாம் முறை வந்து படுத்த பிறகு வெகுநேரம் தூக்கம் பிடிக்காமல் திண்டாடினான்.
கடைசியாக, இரவு நாலாம் ஜாமத்தில் கிழக்கு வெளுக்கும் நேரத்தில் அவனுக்கு ஒருவாறு தூக்கம் வந்தது.
மறுநாள் காலையில் உதய சூரியனுடைய செங்கிரணங்கள் சுளீர் என்று அவன்பேரில் பட்டபோது கூட வந்தியத்தேவன் எழுந்திருக்கவில்லை.
கந்தமாறன் வந்து தட்டி எழுப்பியபோது தான் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்தான்.
"இராத்திரி நன்றாய்த் தூக்கம் வந்ததா?" என்று கந்தமாறன் விருந்தினரை உபசரிக்கும் முறைப்படி கேட்டான்.
பிறகு அவனாகவே, "மற்ற விருந்தினரெல்லாம் தூங்கச் சென்ற பிறகு நான் இங்கு வந்து பார்த்தேன். நீ நன்றாய்க் கும்பகர்ண சேவை செய்து கொண்டிருந்தாய்!" என்று சொன்னான்.
வந்தியத்தேவன் மனத்தில் பொங்கி எழுந்த நினைவுகளையெல்லாம் அடக்கிக் கொண்டு, "குரவைக் கூத்துப் பார்த்து விட்டு இங்கு வந்து படுத்ததுதான் தெரியும், இப்போது தான் எழுந்திருக்கிறேன்.
அடாடா! இவ்வளவு நேரம் ஆகி விட்டதே! உதித்து ஒரு ஜாமம்  இருக்கும் போலிருக்கிறதே! உடனே நான் கிளம்ப வேண்டும்.
கந்தமாறா! குதிரையை ஆயத்தம் பண்ணும்படி உன் வேலைக்காரர்களுக்குக் கட்டளையிடு!" என்றான்.
"அழகாயிருக்கிறது! அதற்குள்ளே நீ புறப்படுவதாவது? என்ன அவசரம்? பத்து நாளாவது இங்கே தங்கிவிட்டுத்தான் போக வேண்டும்" என்றான் கந்தமாறன்.
"இல்லை, அப்பனே! தஞ்சாவூரில் என் மாமனுக்கு உடம்பு செவ்வையாக இல்லை.
பிழைப்பதே துர்லபம் என்று செய்தி வந்தது.
ஆகையால் சீக்கிரத்தில் அவரைப் போய்ப் பார்க்க வேண்டும், உடனே புறப்பட வேண்டும்" என்று ஒரே போடாகப் போட்டான் வல்லவரையன்.
"அப்படியானால், திரும்பி வரும் போதாவது இங்கே சில நாள் கட்டாயம் தாமதிக்க வேண்டும்."
"அதற்கென்ன, அப்போது பார்த்துக் கொள்ளலாம், இப்போது நான் புறப்படுவதற்கு விடைகொடு!"
"அவ்வளவு அவசரப்படாதே! காலை உணவு அருந்திவிட்டுப் புறப்படலாம்.
நானும் உன்னுடன் கொள்ளிட நதி வரையில் வருகிறேன்."
"அது எப்படி முடியும்? யார், யாரோ, பெரிய பெரிய விருந்தாளிகள் உன் வீட்டுக்கு வந்திருக்கிறார்களே, அவர்களை விட்டுவிட்டு.."
"உன்னைவிடப் பெரிய விருந்தாளி எனக்கு யாரும் இல்லை!.." என்று கூறிய கந்தன் மாறவேள் சட்டென்று நிறுத்திக் கொண்டான்.
"வந்தவர்கள் பெரிய விருந்தாளிகள் தான் ஆனால் அவர்களைக் கவனித்துக்கொள்ள என் தந்தை இருக்கிறார்; அரண்மனை அதிகாரிகளும் இருக்கிறார்கள்.
உன்னோடு நேற்று ராத்திரிகூட நான் அதிக நேரம் பேசவில்லை.
வழி நடையிலாவது சிறிது நேரம் உன்னோடு சல்லாபம் செய்தால்தான் என் மனம் நிம்மதி அடையும்.
அவசியம் கொள்ளிடக்கரை வரையில் வந்தே தீருவேன்!" என்றான்.
"எனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை. உன் இஷ்டம், உன் சௌகரியம்" என்றான் வந்தியத்தேவன்.
ஒரு நாழிகை நேரத்துக்குப் பிறகு இரு நண்பர்களும் இரு குதிரைகளில் ஏறிச் சம்புவரையர் மாளிகையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்கள்.
குதிரைகள் மெதுவாகவே சென்றன.
பிரயாணம் மிகவும் இன்பகரமாயிருந்தது.
சிறிது நேரத்துக்கெல்லாம் வந்தியத்தேவன் கூறினான்; "கந்தமாறா! உன் வீட்டில் ஒரே ஒரு இரவுதான் தங்கினாலும் அது எனக்கு எவ்வளவோ பயனுள்ளதாயிருந்தது.
ஆனால் ஒரே ஒரு ஏமாற்றம்.
உன் சகோதரியைப் பற்றி வடபெண்ணை நதிக்கரையில் என்னவெல்லாமோ
வர்ணனை செய்து கொண்டிருந்தாய்! அவளை நன்றாய்ப் பார்க்கக் கூட முடியவில்லை.
உன் அன்னைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அவள் எட்டிப் பார்த்தபோது அவள் முகத்தில் எட்டில் ஒரு பங்குதான் தெரிந்தது! நாணமும் மடமும் பெண்களுக்கு இருக்க வேண்டியதைவிட உன் தங்கையிடம் சற்று அதிகமாகவேயிருக்கிறது."
கந்தமாறனுடைய வாயும் உதடுகளும் ஏதோ சொல்வதற்குத் துடித்தன.
ஆனால் வார்த்தை ஒன்றும் உருவாகி வரவில்லை.
"ஆயினும் பாதகமில்லை நீதான் நான் திரும்பி வரும்போது சில நாள் உன் வீட்டில் தங்கவேண்டும் என்று சொல்கிறாயே? அப்போது பார்த்துப் பேசிக் கொண்டால் போகிறது.
அதற்குள் உன் தங்கையின் கூச்சமும் கொஞ்சம் நீங்கிவிடலாம் அல்லவா? கந்தமாறா! உன் சகோதரியின் பெயர் என்னவென்று சொன்னாய்?"
"மணிமேகலை!"
"அடடா! என்ன இனிமையான பெயர்! பெயரைப் போலவே அழகும் குணமும் இருந்து விட்டால்.."
கந்தமாறன் குறுக்கிட்டு, "நண்பா! உன்னை ஒன்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
என் தங்கையை நீ மறந்து விடு; அவளைப் பற்றி நான் சொன்னதையெல்லாம் மறந்துவிடு; அவள் பேச்சையே எடுக்காதே!" என்றான்.
"இது என்ன, கந்தமாறா! ஒரே தலை கீழ் மாறுதலாயிருக்கிறதே! நேற்று இரவு கூட உன் வீட்டுக்கு நான் மருமகனாக வரப் போவதைப் பற்றி ஜாடையாகச் சொன்னாயே!"
"அவ்விதம் நான் சொன்னது உண்மை தான்.
ஆனால் பிறகு வேறு நிலைமை ஏற்பட்டுவிட்டது.
என் பெற்றோர்கள் வேறு இடத்தில் என் சகோதரியைக் கலியாணம் செய்து கொடுக்க முடிவு செய்து விட்டார்கள்; மணிமேகலையும் அதற்குச் சம்மதித்து விட்டாள்!"
வந்தியத்தேவன் மனத்திற்குள் "மணிமேகலை வாழ்க!" என்று சொல்லிக் கொண்டான்.
மணிமேகலையை யாருக்குக் கொடுக்க நிச்சயித்திருப்பார்கள் என்று ஊகிப்பதிலும் அவனுக்குக் கஷ்டம் ஏற்படவில்லை.
மூடு பல்லக்கிலிருந்து வெளிப்பட்ட இளவரசர் மதுராந்தகருக்குத்தான் நிச்சயித்திருப்பார்கள்.
மதுராந்தகருடைய கட்சிக்குப் பலம் தேட இப்படியெல்லாம் உறவுகளையும் ஏற்படுத்துகிறார்களாக்கும்.
பழுவேட்டரையர் பொல்லாத கெட்டிக்காரர்தான்!
"ஆஹா! நேற்று ராத்திரி வந்திருந்த பணக்கார விருந்தாளிகளில் ஒருவரை மாப்பிள்ளையாக்கத் திட்டம் செய்தீர்களாக்கும்! கந்தமாறா! இதில் எனக்கு வியப்பும் இல்லை; ஏமாற்றமும் இல்லை ஒரு மாதிரி நான் எதிர்பார்த்ததுதான்..."
"எதிர்பார்த்தாயா அது எப்படி?"
"என்னைப்போல் ஏழை அநாதைக்கு யார் பெண்ணைக் கொடுப்பார்கள்?
 ஊரும் வீடும் இல்லாதவனை எந்தப் பெண் மணந்து கொள்ள இணங்குவாள்?
"நண்பா! போதும் நிறுத்து; என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் அவ்வளவு கேவலப்படுத்தாதே! நீ சொல்வது ஒன்றும் காரணமில்லை.
வேறு மிக முக்கியமான காரணம் இருக்கிறது.
அதை அறிந்தால் நீயே ஒப்புக் கொள்வாய்.
ஆனால் அதை நான் இப்போது வெளிப்படுத்துவதற்கில்லை.
சமயம் வரும்போது நீயே தெரிந்து கொள்வாய்!"
"கந்தமாறா! இது என்ன ஒரே மர்மமாகவே இன்றைக்கு நீ பேசிக் கொண்டு வருகிறாயே?"
"அதற்காக என்னை மன்னித்துவிடு.
உன்னிடம்கூட நான் மனம் விட்டுப் பேச முடியாதபடி அப்படி ஒரு பெரிய காரியந்தான்.
எது எப்படியானாலும் நம்முடைய சிநேகத்துக்கு எவ்வித பங்கமும் வராது என்பதை நம்பு.
விஷயம் வெளியாக வேண்டிய சமயம் வரும்போது, ஓட்டமாக ஓடி வந்து உன்னிடந்தான் முதலில் சொல்வேன்.
அதுவரையில் என்னிடம் நம்பிக்கை வைத்திரு.
உன்னை நான் ஒருநாளும் கைவிட மாட்டேன் என்னை நம்பு!.."
"இந்த வாக்குறுதிக்காக ரொம்ப வந்தனம்.
ஆனால் என்னைக் கைவிடும்படியான நிலைமை என்ன என்பதுதான் தெரியவில்லை! அப்படி நான் இன்னொருவரை நம்பிப் பிழைக்கிறவனும் அல்ல, கந்தமாறா! என்னுடைய உடைவாளையும் கைவேலையுமே நான் நம்பியிருப்பவன்!"
"அந்த உடைவாளையும் வேலையும் உபயோகிக்க வேண்டிய சந்தர்ப்பம் சீக்கிரத்தில் வரலாம்.
அப்போது நாம் இருவரும் ஒரே கட்சியில் நின்று தோளோடு தோள் சேர்ந்து போரிடுவோம்; அதனால் உன்னுடைய நோக்கமும் கைகூடும்..."
"இது என்ன? ஏதாவது யுத்தம் சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கிறாயா? அல்லது ஈழ நாட்டில் நடக்கும் யுத்தத்துக்குப் போகும் உத்தேசம் உனக்கு உண்டா?"
"ஈழத்துக்கா? ஈழத்தில் நடக்கும் அழகான யுத்தத்தைப் பற்றிக் கேட்டால் நீ ஆச்சரியப்பட்டுப் போவாய்! ஈழத்தில் உள்ள நம் வீரர்களுக்காகச் சோழ நாட்டிலிருந்து அரிசியும் மற்ற உணவுப் பொருள்களும் போக வேண்டுமாம்! வெட்கக்கேடு! நான் சொல்லுவது வேறு விஷயம்.
கொஞ்சம் பொறுமையாயிரு, சமயம் வரும்போது சொல்லுகிறேன்; தயவு செய்து இப்போது என் வாயைப் பிடுங்காதே!"
"சரி, சரி! உனக்கு விருப்பம் இல்லை என்றால் ஒன்றும் சொல்ல வேண்டாம்.
வாயைக்கூடத் திறக்க வேண்டாம் அதோ கொள்ளிடமும் தெரிகிறது!" என்றான் வந்தியத்தேவன்.
சில நிமிஷ நேரத்தில் நண்பர்கள் நதிக்கரையை அடைந்தார்கள்.
ஆடிப் புதுப் பிரவாகம் அந்த மாநதியில் கரை புரண்டு சென்றது.
மறுகரை வெகு தூரத்தில் இருப்பதாகத் தோன்றியது.
மறுகரையிலேயுள்ள மரங்கள் சிறிய செடிகளைப் போலிருந்தன.
தோணித்துறையில் ஓடம் ஒன்று நின்றது.
ஓடந்தள்ளுவோர் இருவர் கையில் நீண்ட கோல்களுடன் ஆயத்தமாயிருந்தார்கள். படகில் ஒரு மனிதர் ஏற்கனவே ஏறியிருந்தார்.
அவரைப் பார்த்தால் பெரிய சிவபக்த சிகாமணி என்று தோன்றியது.
கரையில் வந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து, "சாமி படகில் வரப் போகிறீர்களா? என்று படகோட்டிகளில் ஒருவன் கேட்டான்.
"ஆம்; இவர் வரப்போகிறார் கொஞ்சம் படகை நிறுத்து!" என்றான் கந்தமாறன்! இரு நண்பர்களும், குதிரை மீதிருந்து கீழே குதித்தார்கள்.
"யோசனை இல்லாமல் வந்து விட்டேனே? இந்தக் குதிரையை என்ன செய்வது? படகில் ஏற்ற முடியுமா?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.
"தேவையில்லை, நம்மைத் தொடர்ந்து இதோ இரண்டு ஆட்கள் வந்திருக்கிறார்கள்.
ஒருவன் உன் குதிரையை இங்கிருந்து கடம்பூருக்கு இட்டு வருவான்.
இன்னொருவன் உன்னுடன் படகில் ஏறி வந்து அக்கரையில் உனக்கு வேறு குதிரை சம்பாதித்துக் கொடுப்பான்!" என்றான் கந்தமாறன்.
"ஆஹா! எவ்வளவு முன்யோசனை? நீ அல்லவா உண்மை நண்பன்!" என்றான் வந்தியத்தேவன்.
"பாலாற்றையும் பெண்ணையாற்றையும் போலத்தான் கொள்ளிடத்தைப் பற்றி நீ நினைத்திருப்பாய்.
இதில் குதிரையைக் கொண்டு போக முடியாது என்று நீ எண்ணியிருக்கமாட்டாய்!"
"ஆமாம்; அவ்விதம் உங்கள் சோழ நாட்டு நதியைப் பற்றி அலட்சியமாய் நினைத்ததற்காக மன்னித்துவிடு! அப்பப்பா இது என்ன ஆறு? இது என்ன வெள்ளம்? சமுத்திரம் போலவல்லவா பொங்கி வருகிறது?"
இரு நண்பர்களும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு விடை பெற்றுக் கொண்டார்கள்.
வந்தியத்தேவன் நதிக்கரையோரமாகச் சென்று படகில் ஏறினான்.
கந்தமாறனுடன் வந்த ஆட்களில் ஒருவனும் ஏறிக் கொண்டான்.
படகு புறப்படுவதற்குச் சித்தமாயிருந்தது.
ஓடக்காரர்கள் கோல் போட ஆரம்பித்தார்கள்.
திடீரென்று கொஞ்ச தூரத்திலிருந்து, "நிறுத்து! நிறுத்து! படகை நிறுத்து!" என்று ஒரு குரல் கேட்டது.
ஓடக்காரர்கள் கோல் போடாமல் கொஞ்சம் தயங்கி நின்றார்கள்.
கூவிக் கொண்டு ஓடி வந்தவன் அதிவிரைவில் கரைக்கருகில் வந்து சேர்ந்தான்.
முதற்பார்வையிலேயே அவன் யார் என்பது வந்தியத்தேவனுக்குத் தெரிந்து போயிற்று; அவன் ஆழ்வார்க்கடியான் நம்பி தான்.
வருகிறவர் வைஷ்ணவர் என்பதை அறிந்ததும் படகிலிருந்த சைவர், "விடு! படகை விடு! அந்தப் பாஷாண்டியுடன் நான் படகில் வரமாட்டேன்; அவன் அடுத்த படகில் வரட்டும்!" என்றார்.
ஆனால் வந்தியத்தேவன் ஓடக்காரர்களைப் பார்த்து, "கொஞ்சம் பொறுங்கள் அவரும் வரட்டும்! படகில் நிறைய இடம் இருக்கிறதே! ஏற்றிக் கொண்டு போகலாம்!" என்றான்.
ஆழ்வார்க்கடியானிடமிருந்து நேற்றிரவு நிகழ்ச்சிகளைப் பற்றிப் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வந்தியத்தேவன் விரும்பினான்.
-------------

பொன்னியின் செல்வன் பாகம் 1 - 8







எட்டாம் அத்தியாயம்
பல்லக்கில் யார்?
சற்று நேரம் அந்தக் கூட்டத்தில் ஒருவருக்கொருவர் ஏதோ பேசி விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
பல குரல்கள் ஒருங்கே கலந்து ஒலித்தபடியால் வந்தியத்தேவன் காதில் ஒன்றும் தெளிவாக விழவில்லை.
சம்புவரையர் உரத்த குரலில், " பழுவூர் மன்னர் கேட்டதற்கு நாம் மறுமொழி சொல்ல வேண்டாமா? தலைக்குத் தலை பேசிக் கொண்டிருந்தால் என்ன ஆகிறது? இரவு மூன்றாம் ஜாமம் ஆரம்பமாகி விட்டது.
அதோ சந்திரனும் வந்து விட்டது" என்றான்.
"எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது.
என்னைப் போல் இன்னும் சிலருடைய மனத்திலும் அது இருக்கலாம்.
பழுவூர்த்தேவர் கோபித்துக் கொள்வதில்லையென்றால், அதைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன்!" என்று முன்னால் ஒரு தடவை பேசிய கம்மல் குரல் சொல்லிற்று.
"இப்போது பேசுகிறது வணங்காமுடியார் தானே? எழுந்து நன்றாக வெளிச்சத்திற்கு வரட்டும்!" என்றார் பழுவேட்டரையர்.
"ஆமாம்; நான் தான் இதோ வெளிச்சத்துக்கு வந்து விட்டேன்.
"என்னுடைய கோபத்தையெல்லாம் நான் போர்க்களத்தில் காட்டுவதுதான் வழக்கம்; பகைவர்களிடம் காட்டுவது வழக்கம்; என் சிநேகிதர்களிடம் காட்டமாட்டேன்.
ஆகையால் எது வேண்டுமானாலும் மனம் விட்டுத் தாராளமாகக் கேட்கலாம்."
"அப்படியானால் கேட்கிறேன், சுந்தரசோழ மகாராஜாவின் பேரில் பழுவேட்டரையர் என்ன குற்றம் சொல்கிறாரோ, அதே குற்றத்தைப் பழுவேட்டரையர் மீதும் சிலர் சுமத்துகிறார்கள்! அதை நான் நம்பாவிட்டாலும் இந்தச் சமயத்தில் கேட்டுத் தெளிய விரும்புகிறேன்!" என்றார் வணங்காமுடியார்.
"அது என்ன? எப்படி? விவரம் சொல்ல வேணும்?"
"பழுவூர்த்தேவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை மணம் புரிந்து கொண்டது நம் எல்லோருக்கும் தெரியும்..."
இச்சமயம், சம்புவரையரின் குரல் கோபத்தொனியில், "வணங்காமுடியார் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம்.
நம் மாபெருந் தலைவரை, நமது பிரதம விருந்தாளியை, இவ்விதம் அசந்தர்ப்பமான கேள்வி கேட்பது சிறிதும் தகாத காரியம்..." என்றார்.
"சம்புவரையரைப் பொறுமையாயிருக்கும்படி நான் ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன்.
வணங்காமுடியார் கேட்க விரும்புவதைத் தாராளமாகக் கேட்கட்டும்.
மனத்தில் ஒன்றை வைத்துக் கொண்டிருப்பதைவிடக் கீறிக் கேட்டு விடுவதே நல்லது.
ஐம்பத்தைந்து பிராயத்துக்கு மேல் நான் ஒரு பெண்ணை மணந்து கொண்டது உண்மைதான்.
அதைத் தாராளமாக ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால் நான்தான் கலியுக ராமாவதாரம் என்று எப்போதும் சொல்லிக் கொண்டதில்லை.
ஏகபத்தினி விரதம் கொண்டவன் என்றும் சொல்லிக் கொண்டதில்லை.
அந்தப் பெண்ணை நான் காதலித்தேன்; அவளும் என்னைக் காதலித்தாள்.
பழந்தமிழ்நாட்டு முறைப்படி இஷ்டப்பட்டு மணந்து கொண்டோம் இதில் என்ன தவறு?"
"ஒரு தவறும் இல்லை!" என்று பல குரல்கள் எழுந்தன.
"மணம் புரிந்து கொண்டது தவறு என்று நானும் சொல்லவில்லை.
நம்மில் யார்தான் ஒரு தார விரதம் கொண்டவர்கள்? ஆனால்....ஆனால்..."
"ஆனால் என்ன! தயங்காமல் மனத்தைத் திறந்து கேட்டு விடுங்கள்!"
"புது மணம் புரிந்து கொண்ட இளைய ராணியின் சொல்லை எல்லா காரியங்களிலும் பழுவேட்டரையர் கேட்டு நடப்பதாகச் சிலர் சொல்கிறார்கள்.
இராஜரீக காரியங்களில் கூட இளைய ராணியின் யோசனையைக் கேட்பதாகச் சொல்லுகிறார்கள்.
தாம் போகுமிடங்களுக்கெல்லாம் இளைய ராணியையும் அழைத்துப் போவதாகச் சொல்லுகிறார்கள்."
இப்போது கூட்டத்தில் ஒரு சிரிப்புச் சப்தம் எழுந்தது.
சம்புவரையர் குதித்து எழுந்து, "சிரித்தது யார்? உடனே முன் வந்து சிரித்ததற்குக் காரணம் சொல்லட்டும்!" என்று கர்ஜித்துக் கத்தியை உறையிலிருந்து உருவினார்.
"நான்தான் சிரித்தேன்! பதற வேண்டாம் சம்புவரையரே!" என்றார் பழுவேட்டரையர்.
பிறகு, "வணங்காமுடியாரே! தாலி கட்டி மணந்த மனைவியை நான் போகுமிடத்துக் கெல்லாம் அழைத்துப் போவது குற்றமா? அவ்விதம் நான் பல இடங்களுக்கு அழைத்துப் போவது உண்மைதான்.
ஆனால் ராஜரீக காரியங்களில் இளையராணியின் யோசனையைக் கேட்கிறேன் என்று சொல்வது மட்டும் பிசகு. அவ்விதம் நான் ஒரு நாளும் செய்வதில்லை..."
"அப்படியானால், இன்னும் ஓரே ஒரு சந்தேகத்தை மட்டும் நிவர்த்தி செய்யும்படி பழுவூர்த்தேவரை வேண்டிக் கொள்கிறேன்.
அந்தப்புரத்தில் இருந்திருக்க வேண்டிய பல்லக்கு இங்கே நாம் அந்தரங்க யோசனை செய்யும் இடத்திற்கு ஏன் வந்திருக்கிறது? பல்லக்கிற்குள்ளே யாராவது இருக்கிறார்களா; இல்லையா? இல்லையென்றால் சற்று முன்பு கேட்ட கனைப்புச் சத்தமும், வளையல் குலுங்கும் சத்தமும் எங்கிருந்து வந்தன?"
இவ்விதம் வணங்காமுடியார் கேட்டதும் அந்தக் கூட்டத்தில் ஒரு விசித்திரமான நிசப்தம் நிலவிற்று.
பலருடைய மனத்திலும் இதே வித எண்ணமும் கேள்வியும் தோன்றியிருந்தபடியால், வணங்காமுடியாரை எதிர்த்துப் பேச யாருக்கும் உடனே துணிவு ஏற்படவில்லை.
சம்புவரையரின் உதடுகள் ஏதோ முணுமுணுத்தன.
ஆனால் அவர் வாயிலிருந்தும் வார்த்தை ஒன்றும் கேட்கவில்லை.
அந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு பழுவேட்டரையர் கணீர் என்று கூறினார்:
"சரியான கேள்வி; மறுமொழி சொல்ல நான் கடமைப்பட்டவன்.
இந்தக் கூட்டம் கலைவதற்கு முன்னால் உங்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறேன்.
இன்னும் அரை நாழிகை பொறுத்திருக்கலாம் அல்லவா? அவ்வளவு நம்பிக்கை என்னிடம் உங்களுக்கு இருக்கிறதல்லவா?"
"இருக்கிறது, இருக்கிறது பழுவேட்டரையரிடம் எங்களுக்குப் பரிபூரண நம்பிக்கை இருக்கிறது!" என்று பல குரல்கள் கூவின.
"மற்றவர்களைக் காட்டிலும் பழுவேட்டரையரிடம் எனக்குப் பக்தியும் மரியாதையும் குறைவு என்று யாரும் எண்ண வேண்டாம்.
அவர் மனத்தைத் திறந்து கேட்கச் சொன்னபடியால் கேட்டேன்.
மற்றபடி அவர் இட்ட கட்டளையை நிறைவேற்றச் சித்தமாயிருக்கிறேன்.
இந்தக் கணத்தில் என் உயிரைக் கொடுக்கச் சொன்னாலும் கொடுக்கச் சித்தம்!" என்றார் வணங்காமுடி முனையரையர்.
"வணங்காமுடியாரின் மனத்தை நான் அறிவேன்.
நீங்கள் எல்லோரும் என்னிடம் வைத்துள்ள நம்பிக்கையையும் அறிவேன்.
ஆகையால் இன்று எதற்காகக் கூடினோமோ அதைப் பற்றி முதலில் முடிவு கொள்வோம்.
சுந்தர சோழ மகாராஜா நீடூழி இவ்வுலகில் வாழ்ந்து இந்தச் சோழ சாம்ராஜ்யத்தை ஆளட்டும்.
ஆனால் ஒருவேளை ஏதாவது அவருக்கு நேர்ந்துவிட்டால், வைத்தியர்களுடைய வாக்குப் பலித்து விட்டால், சில நாளாகத் தோன்றி வரும் தூமகேது முதலிய உற்பாதங்கள் பலித்து விட்டால், அடுத்தபடி இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் பட்டத்திற்கு உரியவர் யார் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்."
"அது விஷயமாகத் தங்கள் கருத்தைத் தெரிவிக்கும்படி கோருகிறோம்.
தங்களுடைய கருத்துக்கு மாறாகச் சொல்லக் கூடியவர் இந்தக் கூட்டத்தில் யாரும் இல்லை."
"அது சரியல்ல, ஒவ்வொருவரும் சிந்தித்துத் தங்கள் கருத்தை வெளியிட வேண்டும்.
சில பழைய செய்திகளை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
மகா வீரரும் மகா ஞானியும் புண்ணிய புருஷருமான கண்டராதித்ததேவர் யாரும் எதிர்பாராத வண்ணம் இருபத்து நாலுஆண்டுகளுக்கு முன்னால் காலமானார்.
அச்சமயம் அவருடைய புதல்வர் மதுராந்தகத் தேவர் ஒரு வயதுக் குழந்தை.
ஆகவே தமது தம்பி அரிஞ்சயதேவர் பட்டத்துக்கு வர வேண்டும் என்று திருவாய் மலர்ந்து விட்டுப் போனார்.
இதை அவருடைய தர்ம பத்தினியும் பட்ட மகிஷியுமான செம்பியன் மாதேவி தான் நமக்கு அறிவித்தார்கள்.
அதன்படியே அரிஞ்சய சோழருக்கு முடிசூட்டி சக்கரவர்த்தி பீடத்தில் அமர்த்தினோம். ஆனால் விதிவசமாக அரிஞ்சய சக்கரவர்த்தி சோழ சிம்மாசனத்தில் ஓர் ஆண்டுக்கு மேல் அமர்ந்திருக்கவில்லை.
அரிஞ்சய சோழருடைய மூத்த புதல்வர் பராந்தக சுந்தர சோழர் இருபது வயது இளங் காளைப் பருவம் எய்தியிருந்தார்.
எனவே ராஜ்யத்தின் நன்மையை முன்னிட்டு மந்திரிகளும் சாமந்தர்களும் குறுநில மன்னர்களும் நகரத்தலைவர்களும் கூற்றத் தலைவர்களும் சேர்ந்து யோசித்துப் பராந்தக சுந்தர சோழருக்கு முடிசூட்டினோம்.
அதைக் குறித்து யாரும் வருத்தப்பட இடமில்லை.
ஏனெனில், சுந்தர சோழ மகாராஜா இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வரையில் நெறி தவறாமல் நாட்டைப் பரிபாலித்து வந்தார்.
நம்மையெல்லாம் நன்கு மதித்து யோசனை கேட்டு ராஜ்ய பாரம் நடத்தினார்.
இதனால் சோழ ராஜ்யம் மேலும் விஸ்தரித்துச் செழித்தது.
இப்போது சுந்தர சோழ மகாராஜாவின் உடல்நிலை கவலைக்கிடமாயிருக்கிறது.
இந்த நிலைமையில் அடுத்தபடி பட்டத்துக்குரியவர் யார்? கண்டராதித்ததேவரின் திருக்குமாரர் மதுராந்தகர் இப்போது பிராயம் வந்து ராஜ்ய பரிபாலனம் செய்யக் கூடியவராயிருக்கிறார்.
அறிவினாலும் கல்வியினாலும் குணத்தினாலும் பக்திசிரத்தையினாலும் எல்லா விதத்திலும் பட்டத்துக்கு தகுந்தவராயிருக்கிறார்.
அவரிலும் ஒரு வயது இளையவரான ஆதித்த கரிகாலர் - சுந்தர சோழரின் புதல்வர் - காஞ்சியில் வடதிசைப்படையின் சேனாதிபதியாக இருந்து வருகிறார்.
இந்த இருவரில் யார் பட்டத்துக்கு வருவது நியாயம்? குலமுறை என்ன? மனு நீதி என்ன? தமிழகத்தின் பழைமையான மரபு என்ன? மூத்தவரின் புதல்வர் மதுராந்தகர் பட்டத்துக்கு வருவது நியாயமா? அல்லது இளையவரின் பேரர் பட்டத்துக்கு வருவது முறைமையா? நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கருத்தை மனம் விட்டுச் சொல்ல வேண்டும்..."
"மூத்தவராகிய கண்டராதித்ததேவரின் புதல்வர் மதுராந்தகர் தான் பட்டத்துக்கு உரியவர்.
அதுதான் நியாயம், தர்மம், முறைமை" என்றார் சம்புவரையர்.
"என் அபிப்பிராயமும் அதுவே", "என் கருத்தும் அதுவே" என்று அக்கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் சொல்லி வந்தார்கள்.
"உங்கள் அபிப்பிராயம்தான் என் அபிப்பிராயமும்.
மதுராந்தகருக்குத்தான் பட்டம் உரியது.
ஆனால் அந்த உரிமையை நிலைநாட்டுவதற்காக நாம் ஒவ்வொருவரும் பிரயத்தனம் செய்யச் சித்தமாயிருக்கிறோமா? உடல் பொருள் ஆவியைத் தத்தம் செய்து போராடச் சித்தமாயிருக்கிறோமா? இந்த நிமிஷத்தில் துர்க்காதேவியின் பாதத்தில் ஆணையிட்டு அவ்விதம் சபதம் செய்வதற்குச் சித்தமாயிருக்கிறோமா?" என்று பழுவேட்டரையர் கேட்டபோது அவர் குரலில் அதுவரையில் இல்லாத ஆவேசம் தொனித்தது.
கூட்டத்தில் சிறிது நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது.
பிறகு சம்புவரையர், "அவ்விதமே தெய்வ சாட்சியாகச் சபதம் கூறச் சித்தமாயிருக்கிறோம்.
ஆனால் சபதம் எடுத்துக் கொள்வதற்கு முன்னால் ஒரு விஷயத்தைத் தாங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
இளவரசர் மதுராந்தகரின் கருத்து என்ன? அவர் சிங்காதனம் ஏறி ராஜ்யபாரத்தை ஏற்கச் சித்தமாயிருக்கிறாரா? கண்டராதித்தரின் தவப் புதல்வர் உலக வாழ்க்கையை வெறுத்துச் சிவபக்தியில் பூரணமாக ஈடுபட்டுள்ளார் என்று கேள்விப்படுகிறோம்.
இராஜ்யத்தில் அவருக்கு விருப்பமில்லை என்று பலர் சொல்லவும் கேட்டிருக்கிறோம்.
அவருடைய அன்னையார் செம்பியன் மாதேவியார் தமது புதல்வர் பட்டத்துக்கு வருவதற்கு முற்றும் விரோதமாயிருக்கிறார் என்றும் கேட்டிருக்கிறோம்.
தங்களிடமிருந்து இதைப் பற்றிய உண்மையை அறிய விரும்புகிறோம்."
"சரியான கேள்வி; தக்க சமயத்தில் கேட்டீர்கள்.
இதைத் தெளிவுபடுத்தும் கடமையும் எனக்கு உண்டு.
முன்னமே சொல்லியிருக்க வேண்டும்.
சொல்லத் தவறியதற்காக மன்னியுங்கள்" என்று பீடிகை போட்டுக் கொண்டு பழுவேட்டரையர் கூறத் தொடங்கினார்.
"செம்பியன் மாதேவி தமது ஏக புதல்வரை இராஜ யபார ஆசையிலிருந்து திருப்பிச் சிவபக்தி மார்க்கத்தில் செலுத்துவதற்குப் பிரயத்தனப்பட்டு வந்தது நாடு அறிந்த விஷயம்.
ஆனால் இதன் காரணம் என்னவென்பதை நாடும் அறியாது; மக்களும் அறியார்கள். மதுராந்தகருக்கு இராஜ்யமாளும் விருப்பம் இருப்பதாகத் தெரிந்தால் அவருடைய உயிருக்கே  ஆபத்து வரலாம் என்று பெரிய பிராட்டியார் பயந்தது தான் காரணம்... "
"ஆஹா!" "அப்படியா?" என்ற குரல்கள் கூட்டத்தில் எழுந்தன.
"ஆம்; பெற்ற தாய்க்குத் தன் ஏக புதல்வன் சிம்மாசனம் ஏற வேண்டும் என்னும் ஆசையைக் காட்டிலும் பிள்ளை உயிரோடு இருக்க வேண்டும் என்ற ஆசை தானே அதிகமாயிருக்கும்?
அன்னையின் வாக்கே தெய்வத்தின் வாக்கு என்று மதித்து வந்த மதுராந்தகரும் மனத்தை விரக்தி மார்க்கத்தில் செலுத்தியிருந்தார்.
சிவ பக்தியில் முழுதும் ஈடுபட்டிருந்தார்.
ஆனால் சில காலமாக அவருடைய மனது சிறிது சிறிதாக மாறி வந்திருக்கிறது.
இந்தச் சோழ சாம்ராஜ்யம் தமக்கு உரியது, அதைப் பராமரிப்பது தம்முடைய கடமை என்ற எண்ணம் அவருடைய மனத்தில் வேரூன்றி வளர்ந்திருக்கிறது.
நீங்கள் எல்லாம் அவரை ஆதரிப்பதாகத் தெரிந்தால், தக்க சமயத்தில் பகிரங்கமாக முன்வந்து சொல்லவும் சித்தமாயிருக்கிறார்.."
"இதற்கு அத்தாட்சி என்ன?"
"உங்களுக்கெல்லாம் திருப்தி தரக்கூடிய அத்தாட்சியை இப்போதே அளிக்கிறேன்.
அளித்தால் அனைவரும் பிரமாணம் செய்யச் சித்தமாயிருக்கிறீர்களா?"
பல குரல்கள் "இருக்கிறோம்! இருக்கிறோம்!" என்று ஒலித்தன.
"யாருடைய மனதிலும் வேறு எவ்விதச் சந்தேகமும் இல்லையே?"
"இல்லை! இல்லை!"
"அப்படியானால் இதோ அத்தாட்சி கொண்டு வருகிறேன்.
வணங்காமுடி முனையரையரின் சந்தேகத்தையும் இப்போதே தீர்த்து வைக்கிறேன்!" என்று கூறிக் கொண்டே பழுவேட்டரையர் எழுந்தார்.
கம்பீரமாக நடந்து அங்கே சமீபத்தில் வைக்கப்பட்டிருந்த மூடு பல்லக்கின் அருகில் சென்றார்.
"இளவரசே! பல்லக்கின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே எழுந்தருள வேண்டும்.
தங்களுக்காக உடல் பொருள் ஆவியை அர்ப்பணம் செய்யச் சித்தமான இந்த வீராதி வீரர்களுக்குத் தங்கள் முக தரிசனத்தைத் தந்தருள வேண்டும்!" என்று மிகவும் பணிவான குரலில் கூறினார்.
மேல்மாடத்தில் தூண் மறைவில் உட்கார்ந்து ஒரு வார்த்தை விடாமல் அடங்கா ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த வந்தியத்தேவன் இப்போது ஜாக்கிரதையாகக் கீழே பார்த்தான்.
பல்லக்கின் திரையை முன்போலவே ஒரு கரம் விலக்கிற்று.
அது பொன் வண்ணமான கரம்.
முன்னே ஒருமுறை அவன் பார்த்த அதே செக்கச் சிவந்த கரந்தான்.
ஆனால் அவன் முன்னம் வளையல் என்று நினைத்தது உண்மையில் அரச குமாரர் அணியும் கங்கணம் என்பதை இப்போது கண்டான்.
அடுத்த கணம் பூரண சந்திரனையொத்த அந்தப் பொன் முகமும் தெரிந்தது.
மன்மதனையொத்த ஓர் அழகிய உருவம் பல்லக்கிலிருந்து வெளியே வந்து புன்னகை புரிந்துநின்றது.
ஆகா! கண்டராதித்த தேவரின் புதல்வரான இளவரசர் மதுராந்தகரா இவர்! பல்லக்கினுள் இருந்தபடியால் பெண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் அல்லவா அந்தத் தவறைச் செய்து விட்டோம்? தன்னைப் போல் அதே தவறைச் செய்த ஆழ்வார்க்கடியான் நம்பி சுவர் மேல் தலையை நீட்டிக் கொண்டிருக்கிறானா என்று வந்தியத்தேவன் பார்த்தான்.
அந்த இடத்தில் மர நிழல் விழுந்து இருள் சூழ்ந்திருந்தது ஆகையால் அங்கு ஒன்றும் தெரியவில்லை.
இதற்குள் கீழே, "மதுராந்தகத்தேவர் வாழ்க! பட்டத்து இளவரசர் வாழ்க! வெற்றி வேல்! வீரவேல்!" என்ற ஆவேசமான முழக்கங்கள் கிளம்பின.
கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் எழுந்து நின்று வாளையும் வேலையும் உயரத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அவ்விதம் கோஷமிட்டதை வந்தியத்தேவன் கண்டான்.
இனிமேல் அங்கிருப்பது அபாயமாக முடியலாம் என்று எண்ணி, தான் படுத்திருந்த இடத்துக்கு விரைந்து சென்று படுத்துக் கொண்டான்.
-------------