Saturday 23 May 2015

ஆரம்பம்..
இன்றைய காலகட்டத்தில் படம் தயாரிப்பதோ இயக்குவதோ பெரிய ஒரு விஷயமாக யாருக்கும் தெரிவதில்லை. அதற்கு சான்றுதான் ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஆறேழு படங்கள் வெளியாவதும், ஆயிரக்கணக்கான படங்கள் முழுமையாக வெளியிட தயாராக இருந்தும் வெளியிட முடியாமல் இருப்பதும். இதற்கு வேறு பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியாமானது, படங்களை வாங்கி முறையாக வெளியிடுவதற்கு போதுமான டிஸ்ட்ரிப்யூட்டர்கள் இல்லை என்பதுதான்.
தியேட்டர்களை எடுத்து படங்களை நல்ல முறையில் வெளியிடுவதற்கான சக்தி படைத்த வெளியீட்டாளர்கள் வெகு சிலரே. அவர்கள் இங்கு தயாராகும் எல்லா திரைப்படங்களையும் வாங்கி வெளியிடுவதற்கான வாய்ப்பும் இல்லை. அதில் அவர்களுக்கு விருப்பமும் இல்லை.
அப்படியிருக்க நாம் தயாரிக்கும் படங்களை அவர்கள் வாங்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி அவர்களுக்கு பிடித்ததுபோல பொழுதுபோக்கு அம்சங்களுடன், அல்லது நட்சத்திர அந்தஸ்துடன், அல்லது மிகக் குறைந்த முதலீட்டில் படம் எடுப்பது மட்டும் தான்.
ஒரே நபர் தயாரிப்பாளராக ஒரு படத்திற்கான முழு முதலீட்டையும் செய்வதானாலும் சரி, அல்லது ஒரு சில தயாரிப்பாளர்கள் இணைந்து அந்த பொறுப்பை பகிர்ந்து கொண்டாலும் சரி, அல்லது ஒரு கூட்டு முயற்சியாக பல முதலீட்டாளர்களை ஒருங்கிணைத்து படம் எடுத்தாலும் சரி இந்த விஷயத்தில் மாற்றம் எதுவும் இல்லை.
புதியதாக படம் எடுக்க வருபவர்கள் இதை மனதில் வைத்துக் கொண்டுதான் ஆகவேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து. முதன் முதலாக ஒரு படத்தை இயக்கும் போது, ஒரு கதையை எடுத்துக்கொண்டு தயாரிப்பாளர்கள் அல்லது நட்சத்திரங்களை பின் தொடர்ந்து வாய்ப்பை பெறுவதுதான் சாதாரணமான பாதை. அந்த வழியாகத்தான் தற்பொழுது நானும் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். இருப்பினும் அதற்கு இணையாகவே சற்று 'ரிஸ்க் எடுத்தாலும்' மாற்றுப்பாதையில் பயணிக்கவும் ஆசைப்படுகிறேன். அது எனக்கும் அதைத் தொடர்ந்து இந்த திரைத்துறைக்கும் ஒரு நல்ல வழியை காட்டும் என்று நம்புகிறேன்.
எனது குருநாதர்களில் ஒருவரான மறைந்த திரு ராமநாராயணன் அவர்கள்தான் இந்த விஷயத்தில் எனக்கு என்றுமே வழிகாட்டியாக - இன்றும்-  இருக்கிறார். திரைக்கதை எழுதும்போதே படத்தின் பட்ஜெட்டையும் வியாபாரத்தையும் கணக்கில் கொண்டு அதற்கு தகுந்தாற்போல காட்சிகளை அமைக்க கற்றுத் தந்தவர் அவர்தான்.
அவர் மறைந்த பின்னும் தற்பொழுது நான் இந்த படத்தை திரைப்படத் தோழமை தயாரிப்பாக எடுக்க நினைத்தபோது அதற்கு அவர் சொல்லித்தந்த வழிமுறைகள் தான் என்னை ஊக்கப்படுத்தி வருகிறது. உண்மையில் நான் இந்த திட்டத்தை சில வருடங்களுக்கு முன்பே செயல்படுத்த தயாராக இருந்தேன்.
கூட்டு முயற்சி, க்ரவுட் பண்டிங், என பல முறைகளைப்பற்றி யோசித்தேன். விவாதித்தேன். அதற்குள் என்னுடைய சில நண்பர்கள்  இந்த முறைகளில் படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை அறிந்தேன். அவர்களுடைய திட்டத்திற்கும் அனுபவங்களுக்கும் என்னுடைய திட்டத்திற்கும் அனுபவங்களுக்கும் முற்றிலும் வித்தியாசம் இருக்கிறது.. இருப்பினும் ஒரே நேரம் போட்டியிடுவது போன்ற நிலை வரக்ககூடாது என்று சற்று தயங்கினேன். நான் என் திட்டத்தை ஆரம்பிப்பதை சற்று தள்ளிவைத்தேன். இந்த இடைப்பட்ட காலத்தை இந்த திட்டத்திற்கு தகுந்த கதையை தேர்ந்தெடுப்பதற்கும், மற்ற நிறை குறைகளைப்பற்றி யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குமாக பயன்படுத்திக் கொண்டேன்.
திரு ராமநாராயணன் அவர்கள் தான் இந்த நேரத்தில் நான் மனமுடைந்து போகாமல் இருக்க எனக்கு அறிவுரைகள் சொல்லி ஊக்கப்படுத்தினார். இந்த விததியாசமான முயற்சி திரைத்துறைக்கு தேவை என்று அவர் நினைத்தார்.
அவருடைய வழிகாட்டுதலின் பேரில் தான் இந்த படத்தயாரிப்பிற்கான ஏற்பாடுகளை செய்யவும், முறையாக திட்டமிடவும், செயல்படுத்தவும் ஆரம்பித்தேன்.
எதிர்பாராத விதமான விதியின் விளையாட்டால் அவர் இந்த உலகவாழ்கையை விட்டு சென்றுவிட்டதால் நான் சற்று தடுமாறினேன். அவருடைய துணை இல்லாததால் மேலும் கவனமாக செயல் பட வேண்டியதாயிற்று.
இடையில் என்னுடைய நண்பரான திரு ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஒரு மெல்லிய கோடு' படத்தின் திரைக்கதை அமைப்பிலும் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள வேண்டியதாயிற்று. அந்த படத்தில் வசன கர்த்தாவாகவும் இணை இயக்குனராகவும் பணியாற்ற வேண்டியதாயிற்று. அது மேலும் சில மாதங்களை எடுத்துக்கொண்டது.
இருப்பினும் தளராமல், மிகுந்த தன்னம்பிக்கையுடன் எனது குருநாதரின் நல்லாசியுடன் தற்பொழுது நான் இதற்கான வேலைகளை முழுமூச்சுடன் ஆரம்பித்துள்ளேன்.  

No comments:

Post a Comment

Let others know your opinions about this post