Thursday, 17 March 2016

வீணடிக்கப்பட்ட திறமைகள்ஒரு கலைஞன் தன் திறமையால்தான் வெற்றி பெறுகிறான். அதிலும் ஒவ்வொரு கலைஞனுக்கும் தனக்கென்று சில தனித்துவமான திறமைகள் இருக்கும். அப்படிப்பட்ட தனித்துவமான திறமைகள்தான் அவனுக்கு பெரும் புகழையும் பெருமையையும் பெற்றுத்தருகிறது. ஆனால் அந்த திறமையே சில நேரங்களில் அவர்களுடைய வளர்ச்சிக்கு எதிராகவும் இருந்து விடுவதுண்டு!
திரைப்படத்துறையில் இந்த தன்மையை மிகவும் வெளிப்படையாக காணலாம். ஒரு இயக்குநர் நடுத்தர வர்க்கத்தின் பிரச்சினைகளை படமாக்குவதில் பிரபலமாக இருப்பார். இன்னொருவர் கிராமத்து கதைகளை படமாக்குவதில் மிகவும் பிரபலமாக இருக்கலாம். இதற்கெல்லாம் இவர்களுடைய தனித்திறமைதான் காரணம்.
அதேபோல ஒரு நடிகர் தனக்கு கிடைத்த ஒரு கதாபாத்திரத்தில் திறமையை காட்டி வெற்றிபெற்றால் அதுவே பிரபலமாகி அவருக்கு பேரும் புகழும் கிடைத்து விடும். அதைத் தொடர்ந்து அதே போன்ற பாத்திரங்கள் அவரைத்தேடி வந்துகொண்டே இருக்கும். அதில் அவர் வெற்றிபெறவும் செய்வார். அதுவே அவருடைய ப்ரான்ட்ஆகவும் மாறிவிடும். அது பெரும் வெற்றியாக தொடர்ந்தால், அந்த நடிகர்களும் அதையே தொடர்ந்து விரும்பி ஏற்பார்கள். ரஜினிகாந்தின் ஸ்டைல், கமலின் மேக்அப் போட்ட பாத்திரங்கள் எல்லாம் அதற்கு உதாரணங்கள்தான்.
இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், எழுத்தாளர்களும்கூட அந்த நடிகரின் அந்த குறி;ப்பிட்டதனித்திறமையை வியாபாரமாக்கத்தான் முயற்சி செய்கின்றனர். அந்த நடிகர்களின் பாணியிலேயே கதையையும் கதாபாத்திரங்களையும் அமைத்து தாங்களும் வெற்றிபெறவே நினைக்கின்றனர்
அதனாலேயே அந்த நடிகர்கள் தங்கள் பாணியில் இருந்து விலகி வித்தியாசமாக வேறு எந்த பாத்திரத்திலும் நடிக்க முடியாமல் போய் விடுகிறது. அவர்கள் உள்ளேயிருக்கும் திறமையின் ஒரு பகுதியைத்தான் ரசிகர்களால் பார்க்க முடிகிறது. இதை திரைத்துறையின் சாபம் என்றே சொல்லவேண்டும்!
நடிகர்திலகம் என்று போற்றப்பட்டு செவாலியர் பட்டம் வரை பெற்று விட்ட நடிகர் சிவாஜிகணேசன். சினிமாவை நேசிக்கும் அனைவருக்கும் அவருடைய நடிப்புத் திறமைபற்றி தெரிந்திருக்கும். ஒரு பாத்திரத்iதை கொடுத்தால், அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற அனைத்து உணர்ச்சிகளையும் ஒரே நேரத்தில் மாறிமாறி வெளிப்படுத்தி நடிக்கக்கூடிய ஒரே நடிகர் அவர் மட்டும்தான்.
உண்மையில் அது அவருடைய தனித்திறமைதான். உலகத்தில் எந்த ஒரு நடிகராவது இந்த அளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடித்திருக்கிறாரா, அல்லது நடிக்க முடியுமா என்று யாரை கேட்டாலும், இல்லையென்றே பதில் வரும்!
உணர்ச்சிகரமாக வசனம் பேசி ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் வீரபாண்டிய கட்டபொம்மன், மனோகரா போன்ற கதாபாத்திரங்களும், பக்தியால் மட்டுமே கண்டுவந்த பரமசிவன், வீரபாகு போன்ற கதாபாத்திரங்களும், சரித்திரத்தில் புகழ் பெற்ற கப்பலோட்டிய தமிழன் போன்ற கதாபாத்திரங்களும் சிவாஜி நடித்தபிறகுதான், “இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்என்று மக்கள் நம்ப ஆரம்பித்தார்கள். அதுதான் சிவாஜியின் திறமை!
இதை பின்பற்றி எத்தனையோ கதாபாத்திரங்களின் நவரசங்களும் இவருடைய முகஅசைவிலும் உடல் மொழியிலும் உயிர்பெற்றிருக்கின்றன. நுணுக்கமான அங்க அசைவுகள்;கூட இவர் நடிப்பில் அழகாக தெரியும். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் மிருதங்க சக்ரவர்த்திதிரைப்படம். அதில் அவருடைய கழுத்து நரம்புகள் கூட நடித்திருக்கும்!
இந்த அளவு திறமையானவர் என்பது நமக்கு மட்டும் அல்ல அவரை வைத்து படம் எடுத்த இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும், அவருக்காக பாத்திரங்களை படைத்த எழுத்தாளர்களுக்கும் தெரிந்துதானே இருக்கும்? ஆனால் அவர்கள் அவருக்கு இந்த உணர்ச்சிகரமான வேடங்களைத்தவிர வேறுவிதமான பாத்திரங்களை கொடுக்கவில்லை என்பது தான் வேதனைதரும் உண்மை.
அவர் நடித்துவந்த காலத்தில் தமிழில் கலைப்படங்கள் என்று சொல்லப்படும் யதார்த்த படங்கள் பெருவாரியாக வரவில்லை என்பது உண்மைதான். ஒரு சில நல்ல முயற்சிகள் நடந்தாலும், அதன் படைப்பாளிகள் சிவாஜியை அவற்றிலிருந்து ஒதுக்கிவைத்தனர் அல்லது பெரிய நட்சத்திர அந்தஸ்தில் இருந்த சிவாஜியிடமிருந்து அவர்கள் விலகியிருந்தனர்.
ஸ்ரீகாந்த் போன்ற நடிகருக்கு கிடைத்த அளவுகூட சிவாஜிக்கு யதார்த்தமான பாத்திரங்கள் கிடைக்கவில்லை. கே.பாலசந்தரின் சில படங்களில் சிவாஜி நடித்திருந்தாலும் அந்த பாத்திரங்களும் உணர்ச்சிப்பிழம்புகளாகத்தான் இருந்தன. ஓரளவுக்கு யதார்த்தத்தை ஒற்றிருந்தன என்று வேண்டுமென்றால் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். அவ்வளவுதான் சிவாஜிக்கு கிடைத்த வித்தியாசமான பாத்திரங்கள்.
இதற்கு விதிவிலக்காக ஒரு சில படங்களை மட்டும் சொல்லலாம். முதலில் எஸ்.பாலசந்தர், பிறகு பாரதிராஜா மற்றும் பரதன் போன்ற இயக்குநர்கள் மட்டும்தான் அவருடைய திறமையை வெளிக்காட்ட சரியான வாய்ப்புகள் தந்தனர். ஒரு அந்தநாள்;’ ஒரு முதல் மரியாதை ஒரு தேவர் மகன்! இவை போதுமா அந்த மாபெரும் கலைஞனுக்கு?
சிவாஜிக்கு உலகத்தரத்தில் நடிக்க திறமை இல்லாமல் அல்ல, தரமாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்கததால் தான் அவரால் அதுபோனற படங்களில் நடிக்க முடியாமல் போனது. அவருடைய திறமையில் ஒரு பக்கம் அல்லது ஒரு சிறுசதவீதம் மட்டும்தான் வெளியே தெரிந்திருக்கிறது. மறுபக்கத்தை அல்லது பெரும் சதவீதத்தை யாரும் கண்டுகொள்ளவே இல்லை! அதற்காக எந்த ஒரு இயக்குநரும் ரசிகரும் முயற்சி எடுக்கவும் இல்லை.
சிவாஜியை மற்ற மொழிகளில் நடிக்க அழைத்தபோதும் இதே நிலைதான் தொடர்ந்தது என்பது மேலும் ஒரு சாபம் என்றே சொல்ல வேண்டும். வழக்கமாக மற்ற மொழிகளில் நடித்து வருபவர்களுக்கு மலையாளத்தில் நடிக்க வரும்போது வித்தியாசமான பாத்திரங்கள் கிடைப்பதுண்டு. ஆனால் சிவாஜிக்கு அந்த பாக்கியமும் கிடைக்கவில்லை. வழக்கமாக சிவாஜி தமிழில் நடித்து புகழ்பெற்ற ராஜநடை, அதே கம்பீரம், அதே பாவனை கொண்ட பாத்திரத்தில் மட்டும்தான் நடிக்க வைத்தார்கள். பிற்காலத்தில் ஒரு சாந்தமான பாத்திரத்தில் நடித்தாலும் அதுவும் தமிழ்நாட்டில் இருக்கும் கதாபாத்திரம் என்ற முறையில் எடுபடாமலும் போய்விட்டது.
இதே போல்தான் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும். சிவாஜியின் கம்பீரமான நடை, உணர்ச்சிகரமான நடிப்பு, சிம்ம குரல், இவற்றை மட்டும் தான் அவர்களும் பயன்படுத்தி வந்தனர். குரல் மட்டும் வேறு யாராவது டப்பிங் கொடுத்திருப்பார். அதுவும் தமிழில்; சிவாஜி பேசும் சிம்மக்குரலை பின்பற்றித்தான் இருக்கும்.
இப்படி கடைசி வரையிலும் அந்த பிறவிக் கலைஞனை இன்னொரு கோணத்தில் யாருமே பார்க்க முடியாமல் போனது. அவருடைய திறமை முழுமையாக பயன்படுத்தப்படாமலேயே வீணடிக்கப்பட்டது!
இதே நிலைதான் கலாபவன் மணிக்கும்!
மணி அடித்தட்டு நிலையிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்து வந்தவர். சாதாரண ஆட்டோ ஓட்டுனராக இருந்த மணி தன் திறமையால் மட்டுமே இந்த நிலைக்கு வளர்ந்து வந்தார்.
அவரது சிறப்பம்சம், தனித்தன்மை என்பது மிமிக்ரி! அதில் அவர் பெரும் வெற்றி பெற்றார்.
மலையாளப்படஉலகில் அப்போது அப்படி ஒரு டிரென்ட் இருந்தது. கேரளம் முழுவதும் மேடைகளில் மிமிக்ரி நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. நாடகங்களைப் போலவே மிமிக்ரியும் மலையாளிகளுக்கு பிடித்த பொழுதுபோக்காக மாறியது. இந்த நிலை வளர தொலைக்காட்சிகளும் முக்கிய பங்கு வகித்தன. மிமிக்ரியில் புகழ்பெற்ற கலைஞர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்தனர். பலர் நடிகர்களாகவும் இயக்குநர்களாகவும் வெற்றிபெற்றனர். இப்போதும் அந்த டிரென்ட் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
அப்படி மிமிக்ரியின் மூலம் திரையுலகில் நுழைந்தவர்களில் ஒருவர்தான் கலாபவன் மணி. மிமிக்ரி அவரை வளர்த்தது. அவரது நடிப்புத் திறமையை மெறுகேற்றியது. சிறுசிறு கதாபாத்திரங்களில் தன் திறமையைக் காட்டி வெற்றி பெற ஆரம்பித்தார். பிரபலமான எல்லா இயக்குநர்களும் அவருக்கு நல்ல பாத்திரங்கள் கொடுத்தாலும் அதனுடன் சேர்ந்து பல கதாபாத்திரங்களில் அவரை மிமிக்ரி செய்யவைத்தார்கள். வில்லனாக நடித்தாலும், அப்பாவாக நடித்தாலும் மிமிக்ரி செய்தார். அது அவரை மற்ற நடிகர்களிடமிருந்து தனித்துக் காட்டியது. அந்த விஷயத்தில் ஓரளவு வெற்றியும் பெற்றார்.
ஆனால் தொடர்ந்து அதே போன்ற பாத்திரங்கள் வர, மிமிக்ரிகாட்டும் அந்த திறமையே அவருக்கு ஒரு சாபமாக மாறியது.
மலையாளத்தில் ஒரிரு படங்களில் அவர் எல்லோர் மனதிலும் நிற்கும்படியான மையப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார். உதாரணமாக வாசந்தியும் லக்ஷிமியும் பின்னே ஞானும்’, ‘கருமாடிக்குட்டன்போன்ற படங்கள். இவையெல்லாம் பெரு வெற்றி பெற்ற படங்கள்தான். அவற்றுடன் பெண் ஜான்சன்போன்ற படங்களும் வெற்றி பெற்றன. அவை மணியை சிறு முதலீட்டு படங்களின் நாயகனாக மாற்றியது.
அந்த சமயத்தில்தான் ஜெமினிமூலமாக தமிழிலும், அதே படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்தார். இரண்டிலும் ஒரே பாத்திரம்தான். வில்லன் பாத்திரம்;. அந்த படத்தில் வில்லன் பாத்திரத்தை வித்தியாசமாக மாற்றியதற்கும், படத்தை மிகப்பெரும் வெற்றியாக மாற்றியதற்கும் மணியின் மிமிக்ரி நடிப்பும் ஒரு காரணம்தான்!
அந்த படத்தில் அவர் செய்த மிமிக்ரி அனைவரையும் கவர்ந்தது. தமிழிலும் தெலுங்கிலும் தொடர்ந்து அவர் நடித்த எல்லா படத்திலும் இயக்குநர்கள் அவரை மிமிக்ரி பண்ணவைத்தார்கள். ஒரு படத்தில்கூட அவரது முழுமையான நடிப்புத்திறமையை யாரும் காட்டவில்லை. வித்தியாசமாக நடிக்கவைக்க முயற்சிக்கவும் இல்லை.
மலையாளத்திலும் அதே நிலைதான் தொடர்ந்தது. நன்றாக நடித்திருக்கிறார் என்று அனைவராலும் போற்றப்பட்ட ஒரு கதாபாத்திரத்துக்கு நடிப்பிற்கான விருது கிடைக்கும் என்று மிகவும் எதிர்பார்த்தார். அதுவும் கிடைக்காமல் போனது. (ஒரு வேளை அவருக்கு விருது வாங்கும்திறமை மட்டும் இல்லாமல் இருந்ததும் அதற்கு காரணமாக இருக்கலாம்).
முன்பு கிடைத்ததுபோன்ற நல்ல, மையப் பாத்திரங்களும் கிடைக்காமல் போக, வேறு வழியின்றி ஒரு நடிகன் என்ற முறையில் தனக்கு கிடைத்த  சிறு சிறு பாத்திரங்களில் பிழைப்புக்காக நடிக்க ஆரம்பித்தார்.
இன்று அவர் இளவயதிலேயே இந்த உலகத்தை விட்டு போய்விட்டார். அவருடைய திறமையைபற்றி இங்கு எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால் தான் நடித்த சில கதாபாத்தரங்கள் மூலமாக அவர் அதை நமக்கு உணர்த்தியிருக்கறார். ஆனால் அந்த திறமையை முழுமையாக பார்க்காமலே நாம் அவரை இழந்துவிட்டோம்.
இந்த திரையுலகம் அவருடைய திறமைகளை சரியாக அல்லது முழுமையாக பயன்படுத்தாமல் வீணடித்துவிட்டது என்றே சொல்லவேண்டும்!
இதுபோன்ற எத்தனையோ கலைஞர்கள் திரைத்துறையில் இருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள், ஒரே மாதிரியான பாத்திரங்களில் நடித்து வருகின்ற பலரையும் நாம் பார்க்கலாம். உண்மையில் அவர்களில் பலருக்கும் பலவிதமான திறமைகள் இருக்கலாம். அதை யாரும் கவனிப்பதில்லை. அதை வெளிக்காட்ட வாய்ப்பும் கொடுப்பதில்லை. வாழ்க்கையை ஓட்டும் அவசரத்தில் தங்களுக்கு திறமை இருப்பதை அவர்களே கூட மறந்துவிடுகின்றனர்.
இதுபோன்ற கலைஞர்களைப் பற்றி ஒரு சில இயக்குநர்களாவது மாற்றி யோசித்தால் மட்டும்தான் இந்த நிலை மாறும். இதற்கு நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.
நாகேஷை பாலசந்தர் பயன்படுத்தியது போல-
ஜனகராஜை பாரதிராஜா பயன்படுத்தியது போல-
எம்.எஸ்.பாஸ்கரை ராதாமோகன் பயன்படுத்தியது போல-
இப்படி செய்வதற்கெல்லாம் இயக்குநர்களிடம் தன்னம்பிக்கை இருக்கவேண்டும், இந்த நடிகர்கள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். வித்தியாசமான பாத்திரங்களில் இவர்களை நடிக்க வைக்க முடியும் என்று இயக்குநர்கள் தைரியமாக நம்பி கொடுக்கவேண்டும்.

அப்படி செய்ய ஆரம்பித்தால் திரையுலகில் பல மாற்றங்கள் வரும். பல கலைஞர்களுடைய திறமைகள் வெளிச்சத்தைக் காணும். படங்களும் வெற்றிபெறும். இனிவரும் நாட்களிலாவது திரையுலகத்தில் உள்ள படைப்பாளிகள் இதுபோன்ற கலைஞர்களின் திறமைகளை வீணடிக்காமல் பயன்படுத்துவார்கள் என்று நம்புவோம்!

No comments:

Post a Comment

Let others know your opinions about this post