Tuesday 24 May 2016

அழகி 1



காய்ந்துபோன கருவேலத்தின்
கிளைகளை உடைத்து
கைக்கடக்கக் குச்சிகளாக்கி
ஒன்றிணைத்து கட்டுகிறாள்,
கருப்புவண்ண மேனியெல்லாம்
வேர்வைத்துளிகள் மினுமினுக்க,
இலவசமாய் கிடைத்த சேலை
வரிந்து கட்டிய பெண்ணொருத்தி…

விறகுக்கட்டை ஒருகணம் பார்த்து
முந்தானையால் முகம் துடைத்து
அதே முனையை இழுத்துச்சுற்றி
தெருக்கையாகத் தலையில் வைத்து
கீழே விழாமல் கவனமாய் பார்த்து
சுள்ளிக்கட்டைத் தூக்கியெடுத்து
தலையில் தொடாமல் தெருக்கையில் வைத்து,
கருவேலங்காட்டிலிருந்து காணமுடியா
தொலைவிலிருக்கும் ஊருக்குள்ளே
வேகமாய்ச்சென்று வீட்டையணைந்து,
கடனை வாங்கியும் டாஸ்மாக்கில் குடித்து
திரும்பும் கணவன் திட்டுவதற்கு முன்பே
உலையில் அரிசியை போட்டிட எண்ணி,
விடுவிடுவென நடந்தால் கற்புக்கரசி…

காய்ந்த மரங்களின் இலைகள் மீதும்
வெளிறிய மண் திட்டுகள் மீதும்
அதில் பரவிய மணலின் மீதும்
உச்சிவெயிலில் மின்னும் சூரியன்,
அகலிகையைக் கண்ட இந்திரன் போல
அவளைக் கண்டு காதல் கொண்டு
சுற்றிச்சுற்றி வட்டமிட…

செருப்பை ஒரு நாளும்
பார்க்காத பாதங்கள்
மண்பாதை மீது  
அழுத்தி அழுத்தி
‘இதுபோல் அறைவேன்’ எனபது போல
எச்சரித்துக்கொண்டே செல்கின்றன…

அவள் பாதங்கள் தாளம் போட
அதனால் பூமியில் தீப்பற்ற,
அதன்மீது பரவிய சூரியனும்
வெக்கை தாங்காமல்
தகித்துத் தவிக்கிறான்…

தன்னிச்சையாகவே பாதங்கள்
தங்கள் வேலையை செய்வதனால்
தன்னுடைய கவனத்தை சிதறாமல்
நேர்கொண்ட பார்வையுடன் செல்லுகிறாள்
பாரதம் கண்ட புதுமைப்பெண்…

சீரான வேகத்தில் இடையை ஆட்டி
பாதங்களின் தாளத்தில் பவனி வரும்
ஒய்யார நடையின் அழகே அழகு!
இந்த நளினத்தை,
இந்தக் கவர்ச்சியை,
எந்த ஊரில் என்று நடந்த
அழகுப்போட்டி அணிவகுப்பிலும் 
ஒப்பனையிட்ட அழகியரிலும்
என்றும் நான் கண்டதில்லை!
இனியும் யாரும் கான்பதற்குமில்லை!


No comments:

Post a Comment

Let others know your opinions about this post