Thursday 26 May 2016

படி விருதுகள்




சாதாரணமாக விருதுகள் என்றாலே, அதற்காக தேர்வுசெய்யப்படுபவர்கள் பற்றி கேட்டதும் மனதிற்குள் அவ்வப்போது ஒரு அதிருப்தி ஏற்படுவதுண்டு. திரையுலகிலும், இலக்கிய உலகிலும் மட்டுமல்ல மற்ற துறைகளிலும்கூட இது வழக்கம் தான். ஆனால் நேற்று டிஸ்கவரி புக் பேலஸ் தங்களது இரண்டாம் ஆண்டு படி விருதுகளை அறிவித்தபோது மிகவும் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. ஏதோ அந்த மூன்று விருதுகளும் எனக்கே கிடைத்ததுபோல!
தமிழ் இலக்கிய உலகில் தற்பொழுது எழுத்தாளர்களுக்கு பஞ்சமொன்றும் இல்லை. நல்ல வாசகர்களும், நல்ல நூல்களை வாசகர்களிடம் கொண்டுசெல்லும் விமர்சகர்களும்தான் மிகக் குறைவாக இருக்கின்றனர். அதனாலேயே அவர்களை ஊக்குவிப்பதற்கு உதவும் இந்த விருதுகள் மிகவும் வரவேற்கத்தக்கவையே.
இந்த வருடம் சிறந்த வாசகர்களுக்கான விருதை மணிவண்ணன் பார்த்தசாரதியும், நாச்சியாள் சுகந்தியும் பெற்றுக்கொள்ள, சிறந்த புத்தக விமர்சகருக்கான விருதை விஜயமகேந்திரனும் பெற்றுக்கொள்கின்றனர். இவர்களில் மணிவண்ணனையும் விஜயமகேந்திரனையும் எனது நண்பர்கள் என்ற முறையிலும், நாச்சியாள் சுகந்தியை பல இலக்கியக் கூட்டங்களிலும் பார்த்து பழகிய பரிச்சயம் இருப்பதாலும் நன்றாக தெரியும். மூவருமே இந்த விருதுகளுக்கு மிகவும் பொருத்தமானவர்கள்தான்!
மணிவண்ணன் இலக்கிய உலகிற்கு தொடர்பு இல்லாத துறையில் வேலை செய்து வந்தாலும், இலக்கியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தொடர்ந்து புத்தகங்களை வாசிப்பவர். அதுவும் தொடர்ந்து புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி வாசிப்பவர்! இதுபோன்ற வாசகர்கள்தான் இலக்கிய உலகின், குறிப்பாக பதிப்பகத் துறையின் வளர்ச்சிக்கும் அதுவழி இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் மிகவும் தேவை.
நாச்சியாள் சுகந்தி ஒரு ஊடகவியலாளர் என்றுதான் நினைக்கிறேன். அவர் பல இலக்கியக்கூட்டங்களில் பேசுவதை கேட்டிருக்கிறேன். இவருக்கும் புத்தக விமர்சகர் என்ற விருதையே கொடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். விமர்சகர் என்றாலே நல்ல வாசகராக இருப்பாரே. (ஒரு வேளை இந்த வருடம் இவர் டிஸ்கவரியில் இருந்து நிறைய புத்தகங்கள் வாங்கியதால் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டாரோ!)
விஜயமகேந்திரன் பல விழாக்களில் சிறப்பு விருந்தினராக வந்து நூல்கள் குறித்து அறிமுகம் மற்றும் விமர்சனங்களை எடுத்துவைத்துள்ளார். அதைவிட அதிகமாக பொதுவாக சந்திக்கும்போதுகூட பல நூல்களைப்பற்றி சொல்லி நண்பர்களிடம் அறிமுகம் செய்துவைப்பதை நான் கவனித்திருக்கிறேன். இலக்கிய உலகில் இப்படி தான் படித்த நூல்கள் பற்றி பாராட்டி பேசுபவர்கள் மிகவும் குறைவு.  
விஜயமகேந்திரனுக்கு உண்மையிலேயே விமர்சகர் என்பதைக் காட்டிலும் நல்ல புத்தகங்களின் முகவர் என்ற விருதை கொடுத்திருக்கலாம்.இலக்கிய உலகில் விமர்சகர்களைப்போலவே நல்ல புத்தகங்களை வாசகர்களுக்கு எடுத்துச்சொல்லி வாங்கத்துண்டுபவர்கள் பெருமளவில் வரவேண்டும். அடுத்த வருஷத்திலிருந்து இப்படி ஒரு விருதையும் கொடுக்கலாம். வேடியப்பன் இதை கவனிப்பார் என்று நம்புகிறேன்.

இந்த வருடம் படி விருதுகளைப் பெறும் இந்த மூன்று நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த விருதுகளை வழங்கும் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Let others know your opinions about this post