Sunday 29 May 2016

வாசகசாலை நிகழ்வு – ஒரு பார்வை




நேற்று (28-5-16) வாசகசாலையின் சார்பாக நடந்த ஒரு முழுநாள் இலக்கியக்கூட்டத்தில் முழுமையாக பங்குபெற்றபின், அதைப்பற்றி மனதில் எழுந்த சில கருத்துக்களை எழுதாமல் அடுத்த பணிக்கு செல்ல முடியவில்லை. பிறகு எழுதலாம் என்று விடவும் மனம் வரவில்லை. அந்த அளவுக்கு அந்த விழா என் மனதுக்கு நெறுக்கமாக இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பின் இப்படி ஒரு அனுபவத்தை தந்த வாசகசாலை அமைப்பினருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான்கு அமர்வுகளாக இந்த நிகழ்வு நடந்ததனால் அதைப்பற்றி நானும் என் கருத்துக்களை நான்கு பகுதிகளாகவே  இங்கு பதிவு செய்கிறேன்.

1

திரைப்படத்துறையினருக்கும் இலக்கியத்துறையினருக்கும் மத்தியில் நட்பை வளர்க்கவேண்டும் என்ற எண்ணத்துடன் திரைப்பட இலக்கியச் சங்கமம் என்ற நிகழ்வை தொடர்ந்து ஐந்து வருடங்களாக நடத்திவருபவன் நான். அதனாலேயே திரைக்கு நகரும் இலக்கியங்கள் என்பது போன்ற ஒரு தலைப்பை கண்ட உடனேயே, தலைப்பை முழுமையாக படிப்பதற்கு முன்பே இந்த நிகழ்வின்பால் ஈர்க்கப்பட்டேன். உண்மையைச் சொன்னால் அந்த ஈர்ப்பினால்தான் நான் இந்த நிகழ்வுக்கு வந்தேன். அந்த அளவுக்கு திரைப்படம் மற்றும் இலக்கியம் சம்பந்தமான தலைப்புடன் ஒரு நெருக்கம் என் மனதில் எப்போதும் உண்டு.
இந்த அமர்வில் பல புதுவிஷயங்கள் தெரிந்துகொள்ள முடியும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்த்து. ஆனால் அது பூர்த்தியானதா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். பல இடங்களில், இலக்கிய மேடைகளில், திரைப்படம் சம்பந்தமான சந்திப்புகளில் பலரும் சொன்ன விஷயங்கள் தான் இந்த அமர்விலும் விவாதிக்கப்பட்டன என்பது தான் உண்மை.
சாம்ராஜ் தன்னுடைய மலையாள இலக்கிய உலகுடன் கொண்ட நட்பின் அடிப்படையில் தமிழ் திரையுலகையும் மலையாளத் திரையுலகையும் ஒப்பிட்டு பல விஷயங்களை எடுத்துரைத்தார். தமிழில் இலக்கியங்களின் அடிப்படையாகக் கொண்டு படமாக்கப்பட்ட படங்களை பட்டியல்களாக பிரித்து விரிவாகவே பேசினார். இதை ஒரு சிறந்த ஆய்வறிக்கையாகவே எடுத்துக்கொள்ளலாம். ஆனால் மற்றவர்களின் மனதில் இது ஏதாவது அழுத்தம் கொடுக்குமா என்று கேட்டால் இல்லையென்பதே என் கருத்து.
சுபகுணராஜன் வழக்கம் போலவே பேசினார். மாதஇதழில் செய்த பணியை அவர் இங்கும் செய்துவிட்டார். அவர் தன்னுடைய உரையையே எடிட் செய்து சுருக்கமாக ஆற்றிவிட்டார். நேரம் குறைவாக பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அதுவே நல்லதாக போய்விட்டது. உரை சுருக்கமாக கச்சிதமாக அமைந்துவிட்டது.
பிரபாகர் முன்பு பேசிய இருவருடைய கருத்துக்களில் சிலவற்றை மறுத்தும், சிலவற்றை ஏற்றும் உரையாற்றினார். ஆனால் வேறுவழியின்றி பல மேடைகளிலும் எழுத்துக்களிலும் உள்ளதைத்தான் அவரும் சொல்ல வேண்டியிருந்தது. அதை அவர் தன் பாணியில் சொன்னார்.
எத்தனைகாலம் தான் இப்படியே நாம் எல்லோரும் பேசிக்கொண்டே இருப்போம் என்று தெரியவில்லை. இந்த விஷயத்தில் கரு.பழனியப்பன் மட்டும்தான் சற்று வித்தியாசமாக, அடுத்தகட்டத்திற்கு இந்த விவாதத்தை எடுத்துச் செல்லும் ஒரு கருத்தை முன்வைத்தார். நானும் அந்த பாதையில் சிந்தித்துவருபவன் என்பதாலோ என்னமோ எனக்கு அதுதான் மிகவும் அழுத்தமாக பட்டது.
அவர் யதார்த்தமான விஷயங்களை, திரைத்துறையில் நடைமுறையில் இருப்பதை எடுத்துரைத்ததோடு, இந்த விஷயத்தில் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு உள்ள பங்கை கோடிட்டு காட்டினார். உண்மையில் அந்த கோட்டை பாதையாக்கி அதுவழியாக சென்றால் மட்டும்தான் இந்த அமர்வில் சொல்லப்பட்ட, பல மேடைகளிலும் சொல்லப்பட்டு வருகிற குறைகளை நீக்கமுடியும் என்பதுதான் என்னுடைய அபிபிராயமும்.

2

சமகால இலக்கியங்களின் முகம் பற்றிய இரண்டாவது அமர்வில் பொதுவாக அனைத்து விஷயங்களையும் மூன்று விருந்தினர்களும் ஒவ்வொரு தளங்களாகப் பிரித்து, இன்றைய இலக்கியத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி பேசுவார்கள் என நினைத்தேன். ஆனால் மூவரும் இலக்கியத்தின் அரசியல் பற்றி மட்டுமே பேசினார்கள். இலக்கியத்தில் அரசியல் தவிர வேறு எதுவும் இல்லையோ?
அழகியல், மொழியை பயன்படுத்துவதில் வந்த மாற்றங்கள், கமூகவலைதள எழுத்துக்களின் தாக்கம் போன்ற எந்த விஷயத்தை யாரும் தொடவே இல்லை. இதெல்லாம் சமகால மாற்றங்களே ஆகாதா?
ஒரு தளத்தில் மட்டுமே பயணித்த உரைகள் கடைசியில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தியதுதான் இந்த அமர்வின் ஒரே பலன்! தமிழில் அரசியல் படைப்புகள் தேவையான அளவுக்கு, ஒரு இயக்கமாகவே வளரும் அளவுக்கு வரவில்லை என்று அகரமுதல்வன் குரல் கொடுக்க, தமிழில் அரசியல் படைப்புகள் வந்திருக்கின்றன என்று பார்வையாளர்களில் சிலர் சொல்ல, மற்ற இருவிருந்தினர்களும் அகரனுக்கு ஆதரவாக பேச, மேலும் சில வாசகர்கள் மறுபுறம் பேச, விவாதம் தொடர்ந்து கொண்டே போனது.
இதை பார்த்துக்கொண்டிருந்த என் மனதில் இரு சந்தேகங்கள் எழுந்தன.
இவர்கள் எல்லோரும் பட்டிமன்ற பேச்சாளர்களா? எதிர் தரப்பு எதைச் சொன்னாலும் எதிர்த்து வாதம் பண்ணத்தான் வேண்டுமா?”
ஆனால் பதில்தான் கிடைக்கவில்லை!
இரண்டு தரப்பிலும் உண்மை இருக்கிறது. இரு தரப்பும் விவாதித்த விதம்தான் உறுத்தலாக மாறியது. எதிர்தரப்பில் உண்மை இருக்கிறது என்பதை ஏற்க முன்வராமல் தங்கள் தரப்பை முன்னிறுத்துவதற்கு மட்டுமே இரு தரப்பினரும் பேசிக்கொண்டிருந்தனர். அதனாலேயே உண்மையாக பேசப்படவேண்டிய பல விஷயங்கள் பேசப்படாமலே போனது! இதற்கு இருதரப்ப்பினரும் தான் பொறுப்பேற்க வேண்டும்!       
நல்லவேளையாக நேரம் கடந்து விட்டதனாலும், பசி ஒவ்வொருவரையும் திசைதிருப்ப ஆரம்பித்த்தனாலும் இந்த விவாதமும் முழுப்பெறாமலேயே முடிவுக்கு வந்தது.

3

மதியத்திற்கு மேல் அமைந்த அமர்வில் ஜே.டி.க்ரூஸ் உரையாற்றி, கலந்துரையாடலிலும் பங்குபெற்றார். இது கேட்பவர்களுக்கு புதுசாகவும் க்ரூஸிற்கு வழக்கமானதாகவும் இருந்ததை நன்றாக காண முடிந்தது.
எந்த மாதிரி கேள்வி கேட்டாலும், சற்றும் தயங்காமல் அவர் பதிலளித்தவிதம் இதுபோன்ற பல உரையாடல்களில், பலரும் கேள்விகேட்டு பதில் சொல்லி பழகியது போல தெரியவில்லை.
இப்படியெல்லாம் கேள்விகள் வரும், அதற்கு எப்படியெல்லாம் பதில்சொல்லி கேள்வி கேட்பவர்களை மடக்கவேண்டும்என்பதற்காக பலநாள் பயிற்சி எடுத்ததாகவே தோன்றியது. ஒரு வேளை அவரே குறிப்பிட்டது போல, அவருடைய எம்.பி.. மூளைஇப்படி ஒரு பயிற்சியை எடுத்திருக்குமோ!
இன்றைய அமர்வகளில் பல புதிய விஷயங்களையும் தெரவுகளையும் தெரிந்துகொள்ள உதவியானது இந்த அமர்வுதான். நம்நாட்டில் சிறுதுறைமுகங்களின் தேவை, சிங்கள மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மீண்பிடிக்கும் விஷயத்தில் நடக்கும் அரசியல் போன்றவை இதற்கு உதாரணமாக சொல்லலாம். அதற்காக ஜே.டி.க்ரூஸிற்கு மனமார்ந்த நன்றி!
 ஆனால் இவருடைய உரையில் ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை. புதியவர்கள் நிறையபேர் எழுத வருதற்காக இவர் நாவல்கள் எழுதுவதை நிறுத்திவிடுவதாக சொன்னார்.
ஏன், இவர் வழிவிட்டால்தான் மற்ற இளைஞர்கள் அவருடைய சமூகத்திலிருந்து எழுதவருவார்களா? அல்லது, அந்த அளவுக்கு இந்த சமூகத்தில் உள்ள இளைஞர்கள் வளராமல் இருக்க இவர்தான் இதுவரை காரணமாக இருந்தவரா?
இவர் எழுத வந்ததனால் ஈர்க்கப்பட்டு, தன்னம்பிக்கை கொண்டு, இதுவரை தயங்கிக்கொண்டிருந்த அனுபவம் மிக்கவர்களும், வளர்ந்து வரும் புதியவர்களும் நிறைய எழுதவருவார்கள் என்றல்லவா நான் நினைத்தேன். அப்படி மற்றவர்களை ஊக்குவிப்பதற்கும், வழிகாட்டுவதற்கும் தொடர்ந்தும் இவர் எழுதுவது உதவியாக இருக்கும் என்றல்லவா நான் நினைத்தேன்!
ஒரு வேளை அப்படி தன்னால் ஊக்குவிக்கப்பட்டு, இனி யாரும் வளர்ந்து வந்துவிடக்கூடாது என்று நினைக்கிறாரோ?! (வாசகசாலை நண்பர்கள் இதை அவரிடமே கேட்டு ஒரு பதிலை எனக்கு தாருங்களேன்.)

4

ஏற்கனவே இரண்டாம் அமர்வில் சொன்னவிஷயங்கள் தான் இந்த அமர்விலும் தொடர்ந்தது. ஆனால் அந்த தலைப்பு இந்த அமர்வுக்குத்தான் கொடுத்திருந்தார்கள்.
தமிழ் இலக்கியத்தில் அனைத்து படைப்புகளிலும் அரசியல் இருக்கிறது, அரசியல் இல்லாத படைப்புகளும் இருக்கிறது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இருந்தாலும் அரசியல் பின்புலம் பற்றித்தான் இரு விருந்தினர்களும் பேசினார்கள். ஆனால் இருவேறு விதமான பட்டியல்களை பின்பற்றி பேசினார்கள்.
தன்னுடைய அனுபவங்களின் பின்னணியில், அரசியல் படைப்பகளில் ஒரு சிறு பட்டியலை வைத்தும், குறிப்பாக தன்னுடைய இருநாவல்களின் பின்னணியிலும் பாரதிநாதன் பேச, மற்றவர்களின் படைப்புகளிலிருந்து தேர்ந்தெடுத்த ஒரு சில படைப்புகளை பின்னணியாகக் கொண்டு அரவிந்தன் உரை நிகழ்த்தினார்.
இங்கேயும் நேரம் கடந்துவிட்டது என்ற எண்ணம் விருந்தினர்களின் உரைகளின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதில் ஐயமில்லை.
சமூக மாற்றத்திற்கு ஆயுதம்தான் வழியென்று பாரதிநாதன் சொன்னது ஒரு சிறு விவாதத்திற்கு வழிவகுதத்து. நல்லவேளை! காலதாமதம் அந்த விவாதத்தை வளர்க்காமல் காப்பாற்றியது.
கடைசியல் பேசவந்த பா.ரஞ்சித் நிகழ்ச்சிக்கு மட்டும் அல்ல, அதைப்பார்த்துக் கொண்டிருந்த எங்களைப் போன்றவர்களுக்கும் ஒரு நிறைவை தந்தார்.
அவருடைய உரை மிகவும் யதார்த்தமாக இருந்தது. அவருடைய உரை, அவரைப்பற்றி மற்றவர்கள் மனதில் இருந்த ஒரு பிம்பத்தை உடைத்து, உண்மையான பிம்பத்தை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியது. இலக்கியமும் அரசியலும் எப்படி அவர் மனதில் இணைந்து பணியாற்றி வருகிறது என்பதை சொன்னார். அவருடைய படைப்புகளில் உள்ள அரசியலும், அது அப்படி உருவாக காரணமான பின்னணிகளையும் சுருக்கமாக சொன்னார். இது அவர்மீது மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கபாலிக்குப்பின், தொடர்ந்து உச்ச நட்சத்திரங்களை வைத்து பல படங்களை எடுத்தபின்னும், இதே யதார்த்தத்துடன் இவரை காண ஆசைப்படுகிறேன். காணமுடியுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்!


5

வாசகசாலை நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில்
சாதாரணமாகவே ஒரு இலக்கிய நிகழ்வை தொடர்ந்து நடத்திவருவது எவ்வளவு கஷ்டமான காரியம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். காரணம், நானும் இப்படி ஒரு நிகழ்வை தனியாகவே நடத்துபவன்தான்.
அப்படி இருக்க, இதுபோன்று ஒரு முழுநாள் நிகழ்வை நடத்துவது எவ்வளவு சிரமம் என்பது உணரமுடிகிறது.
இந்த முழுநாள் நிகழ்வில் நேரத்தை திட்டமிடுவதில் மட்டும் சற்று சருக்கிவிட்டதோ என்று தோன்றுகிறது. முதல் அமர்வில் ஒரு விருந்தினர் சற்று விரிவாக பேசுவதற்குள் மற்ற இருவரும் தங்கள் பேச்சை குறைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டனர். தொடர்ந்து நடந்த அமர்வுகளில் கூட இந்த காலதாமதம் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்பது தான் உண்மை. பேசுபவர்கள் எல்லோரும் தாங்கள் பேசிய கருத்துக்களில் மனம் செலுத்தியதைவிட, தாங்க சொல்லநினைத்த விஷயங்களை சுருக்கமாகவேனும் சொல்லவேண்டும் என்று அவசரப்பட்டதையும் அதற்காக படபடத்ததையும் காணமுடிந்தது.
ஜே.டி.க்ரூஸ் மட்டும்தான் தாமதமாக ஆரம்பித்தாலும் சொல்ல வேண்டியதை சொல்லி, ஏறக்குறைய அவர் நினைத்தபடியே அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தார். நான் ஏற்கனவே குறிப்பிட்டப்படி, அவருடைய ஆளுமையினால் தான் அது நடந்தது என்பதை மறக்க முடியாது.
இப்படி முழுநாள் நிகழ்வில் மூன்று அமர்வுகள் மட்டும் வைப்பதுதான் நல்லது என்று நினைக்கிறேன். அப்பொழுதுதான், விரிவான பேச்சுக்களும், அழுத்தமான கலந்துரையாடல்களும் சிறப்பான முறையில் நடக்கும் என்று நம்புகிறேன். அடுத்தமுறை வாசகசாலையும் அப்படியே நடத்தலாமே!
இதை ஒரு விமர்சனமாக அல்ல, விண்ணப்பமாகத்தான் வைக்கிறேன்.
இப்படி ஒரு இலக்கிய நிகழ்வை பார்ப்பதற்கு வாய்ப்பை தந்த வாசகசாலை நண்பர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.
என் மனதில் பட்டதைத்தான் நான் இங்கே குறித்துள்ளேன். இது குறித்து நண்பர்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.

---- கமலபாலா (விஜயன்.பா)

  

No comments:

Post a Comment

Let others know your opinions about this post