Thursday 30 June 2016

தமிழ் படங்கள் மே-ஜூன் 2016


சென்னை புத்தக கண்காட்சி காரணமாக கட்நதமாதம் நமது சங்கமம் நடத்த முடியாமல் போனதால் தற்பொழுது இரண்டு மாதங்களுக்கும் சேர்த்து ஒரே சங்கமமாக நடத்தப்பட இருக்கிறது. இந்த இரண்டு மாத காலையளவில் தமிழில் 25ற்கும் மேலான படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றிலிருந்து சட்டென குறிப்பிடும்படியாக, பெருவெற்றிபெற்ற படங்களோ, அல்லது பரவலாக பேசப்பட்ட படங்களோ இல்லை என்பது உண்மைதான்.
இதை கவனிக்கும் பொழுது தொடர்ந்து இதேபோல இரண்டுமாதங்களுக்கு ஒருமுறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சங்கமத்தை நடத்துவதுதான் நல்லது என்றே தோன்றுகிறது. இது தமிழ் படங்களை பொருத்தவரையில் வருத்தப்படவேண்டிய ஒரு விஷயம்தான்!
இருப்பினும் திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் லட்சியத்திற்கு ஏற்றபடி இந்த மாதங்களில் வெளிவந்த படங்களில் இருந்து, மனதை கவர்ந்த படங்களாக, பாராட்டப்படவேண்டியவை என்று கருதிய நான்கு படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


உறியடி

இந்த சங்கமத்திற்காக எந்தெந்த படங்களை தேர்வு செய்வது என்று கேட்டபோது பல நண்பர்களும் பரிந்துரைத்தது இந்த பெயரைத்தான். அதுவே இந்த படத்திற்கான முதல் வெற்றிதான். இந்த படத்தின் இயக்குனர் ஒரு புதுமுகம். இந்த படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். புதியதாக ஒரு படத்தை தயாரித்து இயக்க முன்வருபவர் வழக்கமாக அதிகமான ரிஸ்க்எடுக்காமல் ஒரு காதல் கதையையோ அல்லது பேய்கதையையோ தான் எடுப்பார். ஆனால் இவர் சமூகத்தில் நிகழ்ந்துவரும் ஒரு பிரச்சினையை மையமாகவைத்து, எந்த சமரசவுமின்றி ஒரு படத்தை எடுத்திருக்கிறார். அதற்காகவே இவரை பாராட்டவேண்டும்.


ஒரு நாள் கூத்து

இந்த மே-ஜூன் மாத காலகட்டத்தில் வெளிவந்த ஒரு பெரிய படம் இறைவி’. மூன்று வெவ்வேறு பெண்களின் வாழ்க்கையைப் பற்றியதுதான் அதன் கதை. இந்த ஒரு நாள் கூத்தும் இதே போல மூன்று பெண்களின் வாழ்க்கையை சொல்வதாகத்தான் இருக்கிறது. சில நண்பர்கள் இறைவிபற்றி பேச சொன்னார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் அதைவிட ஒரு நாள் கூத்தைதேர்ந்தெடுப்பதுதான் நல்லது என தோன்றியது. ஒரு ஜேணரில் ஒரு படம் போதும் என்பதாலும் இந்த படம் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது.


அம்மா கணக்கு

இந்த படம் ஹிந்தியில் வெளியாகி பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. நல்ல பெயரும் கிடைத்திருக்கிறது. ஆனால் இங்கு இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெற்றிருக்கிறதா, தரத்தில் அதே அளவுக்கு இருக்கிறதா என்று கேட்டால் பதில் அனேகமாக இல்லையென்றே வரும். ஒரே கதை, ஒரே நேரத்தில், இரு மொழிகளில் எடுக்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்களைப்பற்றி அலசுவதற்கு இந்த படம் நல்லதொரு உதாரணம். அதுவுமின்றி இந்த படத்தில் சொல்ல வந்த கருத்தும் இதை தேர்வுசெய்வதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.


ராஜா மந்திரி

கடந்த பல வருடங்களாக பெண் இயக்குநர் என்றாலே அவர் பெண்ணீயம் பேசுகின்ற படம் அல்லது விருதை குறிவைத்து எடுக்கும் படம் மட்டுமே எடுப்பார் என்ற எண்ணம் பரவலாகவே இருக்கிறது. அந்த எண்ணத்தை உடைக்கும் விதமாக இந்த படத்தின் இயக்குநர் முற்றிலும் பொழுதுபோக்கை முன் நிறுத்தி, அதே நேரம் விரசமில்லாமல், முடிந்தவரை இயல்பாக இந்த படத்தை எடுத்திருக்கிறார். காளி வெங்கட்என்ற நடிகனை இந்த படம் அடுத்தகட்டத்திற்கு உயர்த்தியிருக்கிறது.
   
இந்த படங்களைப்பற்றிய விரிவான விமர்சனங்களும், பாராட்டுக்களும், நண்பர்களின் கேள்விகளும் அவற்றிற்கான படைப்பாளிகளின் பதில்களும் சங்கமத்தில் இடம்பெற இருக்கின்றன.

இந்த சங்கமத்தில் பேசுவதற்காக தேர்ந்தெடுப்பதே அந்த படங்களுக்கான ஒரு அங்கீகாரம்தான். அந்த வகையில் இந்தபடங்கள் பற்றி நமது சங்கமத்தில் பேசப்படும் விமர்சனங்கள்கூட பாராட்டுக்களாகவே இருக்கும்.

No comments:

Post a Comment

Let others know your opinions about this post