Thursday 11 August 2016

திரைப்பட விமர்சனம் மற்றும் திரைப்பார்வை





திரைப்படம் என்பது ரசிப்பதற்கான ஒரு கலைவடிவம் மட்டும்தான். அதன் கலைத்திறன் மற்றும் அது சொல்லும் செய்தியின் அடிப்படையில் ஒரு பார்வையாளன்தான் அதை மதிப்பீடு செய்யவேண்டும்.
ஒவ்வொரு கலைவடிவமும் பார்வையாளர்களால் விமர்சனம் செய்யப்படும். அவர்களுக்கு பிடித்திருந்தால் அதை அவர்கள் பாராட்டுவார்கள், இல்லையெனில் அவர்கள் அந்த கலைவடிவத்தை விட்டுவிட்டு செல்வார்கள் அல்லது அடுத்த படைப்பை பார்க்க சென்று விடுவார்கள். அவர்களில் ஒரு சிலர் மட்டும்தான் தங்கள் விமர்சனங்களை அந்த படைப்பு பற்றிய அல்லது படைப்பாளி பற்றிய ஒரு விமர்சனப் பதிவாக மாற்றுவார்கள்.
விமர்சனம் செய்வதே ஒரு கலைதான். அது எந்த ஒரு படைப்பை விமர்சனம் செய்கிறதோ அந்த படைப்பின் அடிப்படையில் உருவான மற்றொரு படைப்பாக இருக்கவேண்டும். விமர்சனம் என்பது ஒரு படைப்பில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவதற்கு மட்டுமானதல்ல, அதன் நல்ல அம்சங்களை பாராட்டுவதற்குமானது தான்.
ஒரு சில விமர்சகர்கள் குறைகளைச் சுட்டிக்காட்டுவதற்கு மட்டுமாக பயன்படுத்துகின்றனர். வேறு சிலர் நல்ல அம்சங்களை பாராட்டுவதற்கு மட்டுமாக பயன்படுத்துகின்றனர். தங்கள் அறிவையும் திறமையையும் பயன்படுத்தி அதற்கான விஷயங்களை மட்டுமே அவர்கள் அந்த படைப்பில் தேடுகின்றனர்.
ஒரு நல்ல விமர்சகன் அனைத்து நல்ல மற்றும் கெட்ட அம்சங்களை கண்டுபிடிக்க வேண்டும், அவை அந்த படைப்பில் மொத்தமாக ஏற்படுத்தும் தாக்கத்தை மதிப்பீடு செய்யவேண்டும், வருங்காலத்தில் வரும் படைப்புகளில் நல்லவற்றை வளர்க்கவும் கெட்டவற்றை குறைக்கவும் வழிகளை பரிந்துரைக்க வேண்டும்.
உண்மையில் நான் தமிழ் இலக்கிய உலகில் நல்ல விமர்சகர்களை வெகு அரிதாகவே பார்த்திருக்கிறேன். புத்தகங்களைப் பற்றிய ஆய்வு நூல்களும் மிக அரிதாகவே இருக்கின்றன.
திரைத்துறையில் இந்த நிலை இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது. இதுவரை நான் ஒரு நல்ல திரைப்பட விமர்சகரை கண்டதில்லை. முகநூல் மற்றும் டிவிட்டர் போன்ற சமூகவலைதளங்களின் புரட்சி பரவலாக மாறியதற்குப் பிறகு, ஏறக்குறைய அனைத்து சினிமா ரசிகர்களும் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுத ஆரம்பித்து விட்டனர்.
இந்த விமர்சனங்களுக்கெல்லாம் பொதுவான சில குணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த விமர்சனங்கள் இரண்டு பக்கங்களுக்கு மேல் இருக்காது. ஒவ்வொருவரும் அந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள், இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியலை குறிப்பிடுவார்கள்.
ஒவ்வொருவரும் கதைச் சுருக்கத்தை சொல்வார்கள். பாராட்டுவதற்காக அல்லது குற்றம் சொல்ல சில காட்சிகளை குறிப்பிடுவார்கள். (ஏறக்குறைய அனைவருமே ஒரே காட்சியைத்தான் குறிப்பிடுவார்கள். அல்லது அந்த படத்தில் தேர்ந்தெடுப்பதற்கு அவை மட்டும்தான் இருக்கும்.)
முடிவுரையாக அனைவரும் தங்கள் இலக்கிய அறிவை பறைசாற்றும் விதமாக ஒரு கருத்தை (பஞ்ச்!) சொல்வார்கள். கடைசியாக அதன் நடிகர்களுக்கும், படைப்பாளிகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் பாடம் நடத்திய ஆசிரியரைப்போல் மார்க் அல்லது க்ரேட் போடுவார்கள்!
இதுபோன்ற விமர்சனங்கள் உண்மையில் வெகுஜன பத்திரிகைகளில் வரும் விமர்சனங்களை பின்பற்றி வந்தவைதான். இன்றும் இந்த பத்திரிகைகள் இதே முறையைதான் விமர்சனங்களுக்கு பின்பற்றுகின்றன.
இன்னொரு விதமான விமர்சனங்கள் வேறு சில பத்திரிகைகளில் வருவதுண்டு. (சிறு பத்திரிகைகள் என்று சொல்லப்படும் இலக்கிய பத்திரிகைகளும் சினிமா பத்திரிகைகளும்.) இவற்றில் வரும் விமர்சனங்கள் பொதுவாக அந்த பத்திரிகையின் தரத்தையும் எழுத்தாளர்களின் திறமையையும் எடுத்துக் காட்டுவதற்காகவே இருக்கும். (அவர்கள் சினிமா விமர்சகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்!) இந்த விமர்சனங்கள் விரிவானவையாக இருக்கும். சில நேரங்களில் ஞாபகத்தில் வைக்கமுடியாத அளவுக்கு நீளமானதாக இருக்கும்.
அவர்கள் தங்கள் விருப்பப்படி திரைப்படங்களை விமர்சனம் செய்வார்கள். இந்த எழுத்தாளர்கள் அந்த இயக்குனர்களுக்கு எப்படி படம் எடுக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது போலவும், அதை கேட்காமல் இயக்குநர்கள் தவறுகள் செய்தது போலவும் குறை சொல்வார்கள். மற்றும் தாங்கள் நினைத்தபடியே இயக்குநர்கள் எடுத்ததுபோல சில விஷயங்களை பாராட்டவும் செய்வார்கள்.
அந்த கதை, வசனங்களில் உள்ள அரசியல் மற்றும் படமெடுக்கும் முறையை பற்றிஉலக படங்களுடன்ஒப்பிட்டு பக்கம் பக்கமாக எழுதுவார்கள். (இவர்கள் உள்ளுர் படங்களை உலகப் படங்களாக ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை.   
சமூக வலைதள விமர்சகர்கள் தாங்கள் பார்க்கும் அனைத்து படங்களுக்கும் விமர்சனம் எழுதுவார்கள். (ஏறக்குறைய வெளியாகும் அனைத்து படங்களுக்கும், ஒரு கடமையாக! அப்படி செய்யவில்லை என்றால் மற்றவர்கள் தங்களை மறந்துவிடுவார்களோ என்று இவர்கள் பயப்படுகின்றனர்.) சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் பிரபலமான படங்கள் அல்லது பரவலாக பேசப்பட்ட படங்களுக்கு மட்டுமே விமர்சனம் எழுதுவார்கள்
ஒரு பிரபல எழுத்தாளர் ஒரு படத்தைப் பற்றிய விமர்சனம் எழுதினால், மற்ற எழுத்தாளர்களும் அந்த படத்தைப் பற்றி எழுதியே ஆகவேண்டும். இல்லையெனில் அந்த எழுத்தாளர்கள் மரியாதைக்குறிய எழுத்தாளர்கள் அல்லாமல் ஆகிவிடுவார்கள், அந்த பத்திரிகைகளும் தங்களுடைய அறிவுத் தரத்தை தொலைத்துவிடுவார்கள். அதனால் அந்த எழுத்தாளர்கள் விமர்சனங்கள் எழுத நிர்பந்திக்கப்படுகின்றனர். சிறு பத்திரிகைகளிலும் திரைப்படங்கள் ஹாட் கேக் தான். அவர்கள் அதை ஒத்துக்கொண்டாலும் இல்லையென்றாலும் அது தான் உண்மை. இப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு இதுவும் ஒரு காரணம்தான்.
சில நண்பர்கள் என்னை திரைப்பட விமர்சனம் எழுதச் சொன்னபொழுது, இந்த இருவகை விமர்சனங்களையும் பின்பற்றுவது எப்படி என்று குழம்பித்தான் போனேன்நிறைய வாசகர்களை சென்றடையவும், திரைப்பட விமர்சன முறைக்கு சிறு மரியாதை கொடுக்கவும் நான் இந்த இரண்டு பாணிகளையும் ஒன்றிணைக்க விரும்புகிறேன்
ஒரு திரை எழுத்தாளன் என்ற முறையிலும், அனைத்து படங்களுக்கும் விசிறி என்ற முறையிலும் (“பிட் படங்கள்என்று சொல்லப்படும் படங்கள் முதல்உலக அளவில் பெயர்பெற்ற படங்கள்வரை), இந்த இரு பாணிகளின் எல்லைகளுக்கும் செல்லாமல் என்னுடைய பாணியில் திரைப்படங்களை விமர்சனம் செய்ய ஆரம்பிக்கிறேன். சில தேர்ந்தெடுத்த படங்கள் மற்றும் முக்கியமாக திரைக்கதையை மட்டுமே குறிப்பிட்டு விமர்சனம் செய்ய உள்ளேன். (இது எனக்கு தொழில் அல்ல. அதனால் அனைத்து படங்களுக்கும் விமர்சனம் எழுத முடியாது.) 
படங்களை தேர்வு செய்வதையே என்னுடைய சார்பில் வைக்கும் ஒரு பாராட்டாகவே கொண்டுதான் நான் படங்களை தேர்வு செய்ய உள்ளேன். அவற்றிற்கு திரைப்பார்வை என்ற தலைப்பிலேயே விமர்சனம் எழுத உள்ளேன்.
என்னுடைய திரைப்பார்வைகளையும் திரைப்படத்தை விரும்புவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.


No comments:

Post a Comment

Let others know your opinions about this post