Tuesday 16 August 2016

நன்றியும் பெருமையும்




நேற்று திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் சுதந்திரதின சிறப்புச் சஙகமம் இனிதே நடந்தது. இந்த மாதப்படங்களாக அப்பா மற்றும் கபாலி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.
அவ்வப்போது சில பரிசோதனை முயற்சி செய்வதுபோலவே நேற்றும் ஒரு புது முயற்சி எடுத்திருந்தேன்.
யாரிடமும் முதலில் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றாலும் நான் நினைத்த படியே தான் இந்த சந்திப்பை நடத்தினேன். சிறப்பு விருந்தினர்கள் என்று யாரையும் அழைக்கவில்லை. வழக்கமாக அழைப்பிதழில் சிறப்பு விருந்தினர்கள் பெயரை நான் குறிப்பிடுவதில்லை. இருந்தாலும் ஒரிரு விருந்தினர்களை ஒவ்வொரு கூட்டத்திற்கும் அழைத்து பேசவைப்பேன்.
ஆனால் நேற்று அதையும் தவிர்த்தேன். வழக்கமாக இந்த கூட்டத்திற்கு வரும் நண்பர்களில் சிலரை பேசவைக்க திட்டமிட்டிருந்தேன். அதுதான் சுதந்திரதின சிறப்பம்சமாக இருக்கட்டும் என்று முடிவு செய்திருந்தேன். அப்படி வந்திருந்த நண்பர்களில் பலரை பேசவைத்தேன்.
குறிப்பாக திரைப்பட விமர்சகர்களான சிவகுமார், இளமாறன் போன்றவர்களும் நடிகர் சத்தியேந்திரா போன்றவர்களும் இந்த இருபடங்கள் பற்றிய பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் எடுத்துரைத்தனர்.
வழக்கமாக மற்றவர்களை பேசவிட்டு பேசாமல் இருக்கும் நானும் இந்த கூட்டத்தில் இந்த இருபடங்கள் பற்றிய என்னுடைய பார்வையை முன்வைத்தேன்.
மொத்தத்தில் நிகழ்வு மனதிற்கு வெகுவும் திருப்தியாக இருந்தது.
மாலையில் ஒரு தொலைக்காட்சியில் கபாலி பற்றிய ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன். கடந்த இருவாரங்களாக இந்த படம் பற்றி பல தொலைக்காட்சிகளிலும் வரும் நிகழ்ச்சிகளில் சிலவற்றை பார்த்துக்கொண்டுதான் வருகிறேன்.
இந்த படம் பற்றிய ஒரு விழாவை நேற்று நேரில் பார்க்கவும் செய்தேன். நண்பர்கள் ஒருங்கிணைப்பதால் அதிக ஈடுபாட்டுடன்தான் அந்த நிகழ்விற்கு சென்றேன். இதுபோன்ற பல நிகழ்வுகளும் நடந்துவருவது அறிந்த விஷயம்தான். இதுவும் அதுபோன்ற ஒன்றுதான். ஆனால் சற்று பெரிய நிகழ்வு. பல சிறப்புவிருந்தினர்கள் பேசினார்கள். இயக்குநர் பா.ரஞ்சித் வந்தவர்களிடம் ஒரு உரையாடல் நடத்தினார்.
அந்த நிகழ்வும் மனதிற்கு சந்தோஷத்தை தந்தது. அத்துடன் இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், நேரடி நிகழ்வுகளையும் பார்க்கும்போது நமது திரைப்பட இலக்கியச் சங்கமத்தை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது.
எல்லா நிகழ்ச்சிகளும் கூட்டங்களும் ஒருவிதமாக ரஞ்சித்திற்கு அல்லது ரஜினிக்கான பாராட்டுவிழாக்களாகத்தான் இருக்கின்றன. ரஞ்சித்தும் ஒரே மாதிரிதான் பேசுகிறார். எல்லாம் ஒரே நிகழ்வின் தொடர்ச்சி போலத்தான் தெரிகிறது.
நமது சங்கமம் மட்டும்தான் கபாலியை ஒரு சினிமாவாக பார்த்து அலசியிருக்கிறது. நல்லவற்றை தேர்ந்தெடுத்து பாராட்டியும், குறைகளை சுட்டிக்காட்டி விமர்சித்தும் ஒரு நடுநிலையான ஆய்வரங்கமாக நமது சங்கமம் தான் திகழ்ந்தது. இதை நினைக்கையில் உண்மையிலேயே பெருமையாகத்தான் இருக்கிறது.
அது நமது சங்கமத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல ஊக்கத்தை தருகிறது. இதை சாத்தியப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பின்குறிப்பு: ரஜினியையும் தன்னையும் பற்றியும், படத்தில் வந்த அரசியல் பற்றியும் மட்டும்தான் எல்லோரும் பேசுகிறார்கள், மற்றபடி படத்தை ஒரு கலைவடிவமாக பார்த்து யாரும் பேசுவதில்லையே என பா.ரஞ்சித் அந்த பெரிய மேடையில் வருத்தப்பட்டார்.

இந்த சிறிய கூட்டத்தை பார்க்க நீங்கள் தவறிவிட்டீர்கள் ரஞ்சித் அவர்களே!இப்படித்தான் அவரிடம் எனக்கு சொல்லத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment

Let others know your opinions about this post