அனைவரும் திரைப்படத்தை விரும்புகின்றனர். திரைப்படக் கலைஞர்களை ஆராதிக்கின்றனர். ஒவ்வொருவரும் திரைப்பட நடிகர் நடிகையர்கள் பற்றிய கிசுகிசுக்களைக்கூட விரும்பி படிக்கின்றனர்.
இந்தியாவில் திரைப்படம் என்பது ஒவ்வொருவருக்கும் உணவுக்கு இணையான அன்றாடத் தேவையாகவே இருக்கிறது. அதிலும் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளை பேசுபவர்களுக்கு அதையும் தாண்டிய அத்தியாவசியத் தேவையாகவே இருக்கிறது.
திரைப்படத்திற்கும், ஒரு சில திரைத்துறையினருக்கும் மக்கள் மத்தியில் இவ்வளவு மதிப்பு இருந்தாலும், திரைத்துறையில் பலரும் தங்கள் வாழ்வை தொலைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். சென்னையில் கோடம்பாக்கம்-வடபழனி பகுதிகளிலும், ஹைதராபாதில் பிலிம்நகர்-கிருஷ்ணாநகர் பகுதிகளிலும், பெங்களுரில் காந்திநகர் பகுதியிலும் எத்தனையோ திறமைசாலிகள் ஒரு வாய்ப்புக்காக தெருக்களில் அலைந்துகொண்டும், ஒரு வெற்றிக்காக தங்கள் வாழ்நாள் முழுவதையும் விரயமாக்கிக் கொண்டும்தான் இருக்கின்றனர்.
பல எழுத்தாளர்களும். படைப்பாளிகளும், சமூக ஆர்வலர்களும் இவர்களின் துயரங்கள் பற்றி அவ்வப்போது சொல்லுவதும் எழுதுவதும் உண்டு. இவர்களுக்காக பரிதாபப்படுவதும் உண்டு! ஒரு சிலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்வதும் உண்டு! உதாரணத்திற்கு சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல், உதவி இயக்குநர்களுக்கு சாப்பாட்டின் விலையில் தள்ளுபடி தருகிறது. சில தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் உதவி இயக்குநர்களுக்காக தங்கள் புதுப்படங்களை இலவசமாக திரையிடுகின்றனர்.
அரசாங்க ஆஸ்பத்திரிக்கு சென்றால் பதிவேட்டில் ‘உதவி இயக்குநர்’ என்றதும் ‘கூலி’ என்று அவர்களே எழுதி இலவசங்கள் கிடைக்க உதவுகின்றனர். (சொந்த அனுபவம்தான்!) உதவி இயக்குநர்கள் மீது இப்படி அனைவரும் பரிவு காட்டுகின்றனர்.
ஆனால் சம்பந்தப்பட்ட யாராவது இதுவரை இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வுக்காக எதையாவது செய்திருக்கிறார்களா என்று கேட்டால், பதில் ஏறக்குறைய இல்லை என்றே வரும்!
திரைத்துறைக்கு வரும் பெருவாரியான புதுமுகங்களும் தங்கள் வாழ்வில் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். கஷ்டப்படும் வேளையில் அனைவரும் பிரச்சினைகள் பற்றி பேசுவார்கள். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக எதையாவது செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். அதில் ஒரு சிலர் மட்டும்தான் வெற்றிபெற்று உச்சத்தை எட்டுவார்கள். வெற்றியும் வசதியும் வந்ததும் அவர்கள் பழையதை மறந்துவிடுவார்கள்.
ஒரு தயாரிப்பாளராக அல்லது இயக்குநராக வெற்றிபெற்றால் நானும் அப்படி மாறிவிடுவேனோ என்ற பயம் எனக்குள் இருக்கிறது. அதனால்தான் இப்போதே எனக்கு தெரிந்ததவற்றை மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்ல ஆசைப்படுகிறேன்.
கடந்த இருபது வருட அனுபவத்தில் நான் நேரடியாக பார்த்தவை, அனுபவித்தவை, உணர்ந்து கொண்டவை மட்டுமல்ல, நண்பர்கள் பலரும் அனுபவித்தவையும் சொன்னவையும் இந்த புத்தகத்திற்கு ஆதாரமாக இருந்திருக்கிறது. இதற்காகவே பல பிரபலங்களையும் அனுபவம் வாய்ந்தவர்களையும் சந்தித்து பேசியிருக்கிறேன்.
அனைத்தையும் நான் என்னுடைய பாணியில் அலசி,
‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்’
(நோய்பார்த்து காரணம்பார்த்து அது தணிக்கும்
வழிபார்த்து பொருந்தச் செய்க- திருக்குறள் எளியகுறள்)
என்ற குறளுக்கேற்ப பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வைச் சொல்ல முயற்சித்திருக்கிறேன்.
‘திரைத்துறையில் வெற்றிபெறுவது எப்படி’ என்று அறிந்து கொள்ளவேண்டுமென்றால் முதலில் அந்த துறையில் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய பிரச்சினைகள் என்ன வென்று அறிந்துகொள்ளவேண்டும். அந்த களைகளை எடுப்பதற்கு, அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு என்ன வழி என்று யோசிக்கவேண்டும்.
தினந்தோறும் திரைத்துறையில் வாய்ப்புத் தேடி குறைந்தது நூறு பேராவது சென்னை, ஹைதராபாத், பெங்களுர், மும்பை போன்ற நகரங்களுக்கு படையெடுத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அப்படி பார்த்தால், இந்திய சினிமாவின் கடந்த நூறுவருட சரித்திரத்தில் எத்தனை லட்சம் பேர் இப்படி வந்திருப்பார்கள்? அதில் வெற்றி பெற்றவர்கள் எத்தனைபேர்?
இவர்களில் நூற்றுக்கு ஐம்பது பேர் நடிகர்களாக ஆசைப்பட்டு வருகின்றனர். நாற்பது பேர் இயக்குநர்களாக ஆசைப்பட்டு வருகின்றனர். மீதி பத்துபேர் எழுத்தாளர் ஆவதற்காகவோ அல்லது வேறு எந்த வேலை கிடைத்தாலும் செய்யலாம் என்றோ வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு வாய்ப்பையும் ஊதியத்தையும் வழங்கும் தயாரிப்பாளர்களாக ஆசைப்பட்டு வருபவர்கள் யாரும் இல்லை. அப்படி யென்றால் அவர்களுக்கு வாய்ப்பை யார் கொடுப்பது? இந்த துறையிலிருக்கும் பிரச்சினைகளை யார் தீர்ப்பது? இது போன்ற கேள்விகள்தான் இந்த நூலுக்கு அஸ்திவாரமாக மாறியிருக்கிறது.
ஒரு பிம்பத்தை ஒருவர் தனது சுயநலத்திற்காக அல்லது சௌகரியத்திற்காக உருவாக்கி, வளர்த்துவிட்டு அதை அவரே ஆராதிக்க ஆரம்பித்தால், அவரைப் பின் தொடருபவர்களும் அந்த பிம்பத்தை எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் பின்பற்றி வருவதுதான் மனிதகுலத்தின் வழக்கம். அதுவும் அந்த பிம்பத்தை உருவாக்குபவர் திறமையானவரும் புகழ்பெற்ற வருமாக இருந்துவிட்டால் மற்ற அனைவரும் அதை வழி மொழிவார்கள். காலப்போக்கில் அதுவே ஒரு நடைமுறை யாகவும் எழுதப்படாத சட்டமாகவும் மாறிவிடும்.
அப்படிப்பட்ட பல பிம்பங்களும் திரையுலகில் காலகால மாக இருந்து வருகின்றன. அந்த வரிசையில் திரையுலகின் ஆரம்பப்படிகளை கடந்துவந்த, தன்னலமற்ற முன்னோடி களில் சிலர் உருவாக்கி வளர்த்த ஒரு பிம்பம்தான் ‘திரைப்படம், இயக்குநர்களின் கலை’ என்ற ஒரு வாதம்.
‘திரைப்படம் என்பது இயக்குநர்களின் கலை’ என்ற அந்த வாதம்தான் இதுவரை உலகம் முழுவதிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அப்படியிருக்க நான் ‘திரைப்படம் என்பது தயாரிப்பாளர்களின் கலை’ என்று சொல்வது, திரைத்துறையில் நிலவி வரும் கருத்துக்களை இன்னொரு கோணத்தில் பார்க்கும் முயற்சியே தவிர, வெறும் ஒரு விவாதமாக அல்ல.
திரைத்துறையில் வெற்றிபெற்று, கோலோச்சிக் கொண்டவர்களும், தற்பொழுது சிகரங்களை பிடிக்க முயற்சித்துக்கொண்டிருப்பவர்களும் இந்த கருத்துக்களை ஏற்க தயங்கலாம்! எதிர்த்து வாதம் புரியலாம்! தெருக்களில் அலைந்து திரியும் உதவியாளர்கள் பற்றி இதுவரையில் யோசிக்காத, எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாத, அதைப்பற்றி கவலைப்படாத, அந்த பெரியமனிதர்களின் எதிர்ப்பைப்பற்றி நானும் கவலைப்படுவதாக இல்லை. அது தேவையும் இல்லை என்று நினைக்கிறேன்.
உண்மையில் திரைத்துறையில் வெறுமெனே வாழ்பவர்களுக்கு மட்டுமல்ல, திரைத்துறைக்கு புதியதாக வருபவர்களுக்கும், மாணவர்களுக்கும், ஏற்கனவே வாய்ப்பைத் தேடி அலைந்துகொண்டிருப்பவர்களுக்கும், வெற்றியைத்தேடி காத்திருப்பவர்களுக்கும், திரைத்துறையில் தங்களை நிலை நிறுத்துவதற்காக எதையும் செய்ய துணிபவர்களுக்கும் ஒரு புதிய பாதையை தேர்ந்தெடுக்கவும் அந்த பாதையில் முதல்படி எடுத்துவைக்கவும் இந்நூல் ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இதுவரை தங்கள் படங்களில் பணிபுரிய எனக்கு வாய்ப்புத் தந்த, சினிமாவைப்பற்றி கற்றுத்தந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நான் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
-- கமலபாலா
Thanks for ones marvelous posting! I certainly enjoyed reading it, you're a great author. I will make certain to bookmark your blog and may come back from now on. I want to encourage you to ultimately continue your great work, have a nice evening! aol.com mail login sign
ReplyDelete