மூன்றாம் அத்தியாயம்
விண்ணகரக் கோயில்
சில சமயம் சிறிய நிகழ்ச்சியிலிருந்து பெரிய
சம்பவங்கள் விளைகின்றன.
வந்தியத்தேவன் வாழ்க்கையில் அத்தகைய ஒரு
சிறிய நிகழ்ச்சி இப்போது நேர்ந்தது.
சாலையோரத்திலே நின்று பழுவேட்டரையரின் பரிவாரங்கள்
போவதை வந்தியத்தேவன் பார்த்துக் கொண்டிருந்தான்
அல்லவா? அவன் நின்ற இடத்துக்குச்
சற்றுத்
தூரத்திலேய அவனுடைய குதிரை நின்று
கொண்டிருந்தது.
பழுவேட்டரையரின் ஆட்களிலே கடைசியாகச் சென்ற
சிலரின் பார்வை அக்குதிரை மீது சென்றது.
"அடே! இந்தக் குருதையைப்
பாரடா!" என்றான் ஒருவன்.
"குருதை என்று சொல்லாதேடா!
குதிரை என் சொல்!" என்றான் இன்னொருவன்.
"உங்கள் இலக்கோண ஆராய்ச்சி
இருக்கட்டும்; முதலில் அது குருதையா
அல்லது
கழுதையா
என்று தெரிந்து கொள்ளுங்கள்!" என்றான் இன்னொருவன் வேடிக்கைப் பிரியன்.
"அதையும் பார்த்து விடலாமடா!"
என்று சொல்லிக் கொண்டு, அந்த ஆட்களில் ஒருவன் குதிரையை அணுகி வந்தான்.
அதன் மேல் தாவி ஏற முயன்றான்.
ஏறப் பார்க்கிறவன் தன் எஜமானன் அல்ல என்பதை அந்த
அறிவுக் கூர்மையுள்ள குதிரை தெரிந்து கொண்டது.
அந்த வேற்று மனிதனை ஏற்றிக்
கொள்ள மாட்டேன் என்று முரண்டு பிடித்தது!
"இது பொல்லாத குதிரையடா!
இதன் பேரில் நான் ஏறக் கூடாதாம்! பரம்பரையான அரசகுலத்தவன்தான் இதன்
மேல் ஏறலாமாம்.
"அதையும் சோதித்துப் பார்த்து
விடுகிறேன்" என்று சொல்லிக் கொண்டு குதிரை மீது ஏறப்போன தாண்டவராயன் அதனுடைய
வாலை முறுக்கினான்.
ரோஷமுள்ள அக்குதிரை உடனே பின்னங்கால்களை நாலு
தடவை விசிறி உதைத்துவிட்டு ஓட்டம் பிடித்தது.
"குருதை ஓடுகிறதடா! நிஜக்
குருதை தானடா!" என்று அவ்வீரர்கள் கூச்சலிட்டு, "உய்! உய்!" என்று கோஷித்து, ஓடுகிற குதிரையை மேலும் விரட்டினார்கள்!.
குதிரை, திருநாள்
கூட்டத்துக்கிடையே புகுந்து ஓடிற்று.
ஜனங்கள் அதன் காலடியில் மிதிபடாமலிருப்பதற்காகப்
பரபரப்புடன் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டார்கள்.
அப்படியும் அவர்களில் சிலர் உதைபட்டு
விழுந்தார்கள்.
குதிரை நெறிகெட்டு வெறி கொண்டு ஓடியது.
இவ்வளவும் வந்தியத்தேவன் கண்ணெதிரே அதி சீக்கிரத்தில்
நடந்து விட்டது.
அவனுடைய முகத் தோற்றத்திலிருந்து குதிரை
அவனுடைய குதிரை என்பதை ஆழ்வார்க்கடியான்
கண்டு கொண்டான்.
"பார்த்தாயா, தம்பி! அந்தப் பழுவூர்த் தடியர்கள் செய்த
வேலையை! என்னிடம் நீ காட்ட
வந்த வீரத்தை அவர்களிடம் காட்டுவதுதானே!" என்று குத்திக் காட்டினான்.
வந்தியத்தேவனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு
வந்தது.
எனினும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையைக்
கடைப்பிடித்தான்.
பழுவூர் வீரர்கள் பெருங்கூட்டமாயிருந்தனர்.
அவ்வளவு பேருடன் ஒரே சமயத்தில் சண்டைக்குப்
போவதில் பொருள் இல்லை.
அவர்கள் இவனுடன் சண்டை போடுவதற்காகக்
காத்திருக்கவும் இல்லை.
குதிரை ஓடியதைப் பார்த்துச் சிரித்து விட்டு, அவர்களும் விரைந்து மேலே நடந்தார்கள். குதிரை போன திசையை நோக்கி வந்தியத்தேவன் சென்றான்.
அது கொஞ்ச தூரம் ஓடிவிட்டுத் தானாகவே நின்று
விடும் என்று அவனுக்குத்
தெரியும்.
ஆகையால் அதைப் பற்றி அவன் கவலைப்படவில்லை.
பழுவேட்டரையரின் அகம்பாவம் பிடித்த ஆட்களுக்கு
புத்தி கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்தது.
"தம்பி! நீ எந்தப் பக்கம் போகப் போகிறாய்?" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.
"நானா? கொஞ்சம் மேற்குப் பக்கம் சென்று, பிறகு தெற்குப் பக்கம் திரும்பி, சிறிது கிழக்குப் பக்கம் வளைத்துக்
கொண்டு போய் அப்புறம் தென் மேற்குப் பக்கம் போவேன்!" என்றான் வந்தியத்தேவன்.
"அதையெல்லாம் நான் கேட்கவில்லை
இன்று ராத்திரி எங்கே தங்குவாய் என்று கேட்டேன்."
"நீ எதற்காக அதைக் கேட்கிறாய்?"
"ஒருவேளை கடம்பூர்ச் சம்புவரையர்
அரண்மனையில் நீ தங்குவதாயிருந்தால், எனக்கு அங்கே ஒரு வேலை இருக்கிறது.."
"உனக்கு மந்திரதந்திரம்
தெரியுமா, என்ன? நான் கடம்பூர் அரண்மனைக்குப் போகிறேன் என்பதை எப்படி
அறிந்தாய்?"
"இதில் என்ன அதிசயம்? இன்றைக்குப் பல ஊர்களிலிருந்தும் பல விருந்தாளிகள் அங்கே வருகிறார்கள்.
பழுவேட்டரையரும் அவர் பரிவாரமும் அங்கேதான்
போகிறார்கள்."
"மெய்யாகவா?" என்று வந்தியத்தேவன் தன் வியப்பை வெளியிட்டான்.
"மெய்யாகத்தான்! அது உனக்குத்
தெரியாதா, என்ன? யானை, குதிரை, பல்லக்கு,பரிவட்டம், எல்லாம் கடம்பூர் அரண்மனையைச் சேர்ந்தவைதான்.
பழுவேட்டரையரை எதிர்கொண்டு அழைத்துப்
போகின்றன.
பழுவேட்டரையர் எங்கே போனாலும் இந்த மரியாதையெல்லாம் அவருக்கு
நடைபெற்றே ஆக வேண்டும்."
வந்தியத்தேவன் மௌன யோசனையில் ஆழ்ந்தான்.
"தம்பி! எனக்கு ஒரு உதவி
செய்வாயா?" என்று ஆழ்வார்க்கடியான்
இரக்கமான குரலில் கேட்டான்.
"உனக்கு நான் செய்யக்கூடிய
உதவி என்ன இருக்க முடியும்? இந்தப் பக்கத்துக்கே நான் புதியவன்."
"உன்னால் முடியக்கூடிய
காரியத்தையே சொல்வேன்.
இன்றிரவு என்னைக் கடம்பூர் அரண்மனைக்கு அழைத்துக்
கொண்டு போ!"
"எதற்காக? அங்கே யாராவது வீரசைவர் வருகிறாரா? சிவன் பெரிய தெய்வமா? திருமால் பெரிய தெய்வமா? என்று விவாதித்து முடிவு கட்டப் போகிறீர்களா?"
"இல்லை, இல்லை சண்டை பிடிப்பதே என் வேலை என்று நினைக்க
வேண்டாம்.
இன்றிரவு கடம்பூர் மாளிகையில் பெரிய விருந்து
நடைபெறும்.
விருந்துக்கு பிறகு களியாட்டம், சாமியாட்டம், குரவைக் கூத்து எல்லாம் நடைபெறும். குரவைக் கூத்துப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை!
"அப்படியிருந்தாலும் நான் உன்னை எப்படி
அழைத்துப் போக முடியும்?"
"என்னை உன் பணியாள் என்று
சொன்னால் போகிறது."
வந்தியத்தேவனுக்கு முன்னால் ஏற்பட்ட சந்தேகம்
வலுப்பட்டது.
"அந்த மாதிரி ஏமாற்று மோசடிக்கெல்லாம்
நீ வேறு யாரையாவது பார்க்க வேண்டும்.
உன்னைப் போன்ற பணியாளன் எனக்குத் தேவையில்லை, சொன்னால் நம்பவும் மாட்டார்கள்.
மேலும், நீ
சொன்னதையெல்லாம் யோசித்துப் பார்த்தால் என்னையே இன்று கோட்டைக்குள் விடுவார்களோ என்ற சந்தேகம்
உண்டாகிறது."
"அப்படியானால், நீ கடம்பூருக்கு அழைப்புப் பெற்று போகவில்லையென்று
சொல்லு!"
"ஒருவகையில் அழைப்பு இருக்கிறது, சம்புவரையர் மகன் கந்தமாறவேள் என்னுடைய உற்ற நண்பன்.
இந்தப் பக்கம் வந்தால் அவர்களுடைய அரண்மனைக்கு
அவசியம்
வரவேணுமென்று
என்னைப் பலமுறை அழைத்திருக்கிறான்."
"இவ்வளவுதானா? அப்படியானால் உன் பாடே இன்றைக்குக் கொஞ்சம் திண்டாட்டமாத்தான் இருக்கும்!"
இருவரும் சிறிது நேரம் மௌனமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.
"ஏன் என்னை இன்னும் தொடர்ந்து
வருகிறாய்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.
"அந்தக் கேள்வியையே நானும்
திருப்பிக் கேட்கலாம்; நீ ஏன் என்னைத் தொடர்கிறாய்? உன் வழியே போவதுதானே?"
"வழி தெரியாத குற்றத்தினால்
தான். நம்பி! நீ எங்கே போகிறாய்? ஒருவேலை கடம்பூருக்குத்தானா?"
"இல்லை; நீதான் என்னை அங்கு அழைத்துப் போக முடியாது
என்று சொல்லிவிட்டாயே? நான் விண்ணகரக் கோயிலுக்குப் போகிறேன்."
"வீரநாராயணப் பெருமாள்
சந்நிதிக்குத்தானே?"
"ஆம்."
"நானும் அந்த ஆலயத்துக்கு
வந்து பெருமாளைச் சேவிப்பதற்கு விரும்புகிறேன்."
"ஒருவேளை விஷ்ணுஆலயத்துக்கு
நீ வர மாட்டாயோ என்று பார்த்தேன்.
பார்க்க வேண்டிய கோயில்; தரிசிக்க வேண்டிய சந்நிதி.
இங்கே ஈசுவர முனிகள் என்ற பட்டர், பெருமாளுக்குக் கைங்கரியம் செய்து வருகிறார்
அவர் பெரிய மகான்."
"நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்
ஓரே கூட்டமாயிருக்கிறதே! கோயிலில் ஏதாவது விசேஷ உற்சவம் உண்டோ?"
"ஆம்; இன்று ஆண்டாள் திருநட்சத்திரம்.
ஆடிப் பதினெட்டாம் பெருக்கோடு ஆண்டாளின் திருநட்சத்திரமும்
சேர்ந்து கொண்டது; அதனால்தான் இவ்வளவு கோலாகலம்.
சந்நிதிக்கு வந்து நின்றதும் ஆழ்வார்க்கடியான்
பாட ஆரம்பித்தான்.
ஆண்டாளின் பாசுரங்கள் சிலவற்றைப் பாடிய பிறகு
நம்மாழ்வாரின் தமிழ் வேதத்திலிருந்து சில பாசுரங்களைப் பாடினான்:-
"பொலிக பொலிக பொலிக
போயிற்று வல்லுயிர்ச்சாபம்
நலியும் நரகமும் நைந்த
நமனுக் கிங்கு யாதொன்றுமில்லை
கலியும் கெடும் கண்டு கொள்மின்
கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசைபாடி
ஆடி உழி தரக் கண்டோம்!
கண்டோம் கண்டோம் கண்டோம்
கண்ணுக் கினியன கண்டோம்!
தொண்டீர் எல்லீரும் வாரீர்!
தொழுது தொழுது நின்றார்த்தும்!
வண்டார் தண்ணந் துழாயான்
மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்டான் பாடிநின்றாடிப்
பரந்து திரிகின்றனவே!"
இவ்விதம் பாடி வந்தபோது ஆழ்வார்க்கடியானுடைய
கண்களிலிருந்து கண்ணீர்
பெருகித் தாரை தாரையாய் அவன் கன்னத்தின் வழியாக வழிந்தோடியது.
வந்தியத்தேவன் அப்பாடல்களைக் கவனமாகவே கேட்டு
வந்தான்.
அவனுக்குக் கண்ணீர் வராவிட்டாலும் உள்ளம்
கசிந்துருகியது.
ஆழ்வார்க்கடியானைப் பற்றி அவன் முன்னர் கொண்டிருந்த கருத்தும்
மாறியது.
'இவன் பரம பக்தன்!' என்று எண்ணிக் கொண்டான்.
வந்தியத்தேவனைப் போலவே கவனமாக அப்பாசுரங்களை
இன்னும் சிலரும் கேட்டார்கள்.
கோவில் முதலிமார்கள் கேட்டார்கள்; அர்ச்சகர் ஈசுவரபட்டரும்
கண்ணில் நீர்மல்கி நின்று கேட்டார்.
பெருமாளைச் சேவித்துவிட்டு ஆலயத்துக்கு வெளியில்
வந்ததும் வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானைப்
பார்த்து, "நம்பிகளே! தாங்கள் இத்தகைய
பரம பக்தர் என்றும், பண்டித சிகாமணி என்றும் எனக்குத்
தெரியாமல் போயிற்று.
ஏதாவது அபசாரமாக நான் பேசியிருந்தால் மன்னிக்க வேண்டும்"
என்றான்.
"மன்னித்து விடுகிறேன்; தம்பி! ஆனால் இப்போது எனக்கு ஒரு உதவி செய்வாயா, சொல்லு!"
"தாங்கள் கேட்கும் உதவி
என்னால் முடியாது என்றுதான் சொன்னேனே? நீங்களும் ஒப்புக் கொண்டீர்களே?"
"இது வேறு விஷயம்; ஒரு சிறிய சீட்டுக் கொடுக்கிறேன்.
கடம்பூர் அரண்மனையில் நீ தங்கினால் தக்க சமயம்
பார்த்து ஒருவரிடம் அதைக் கொடுக்க வேண்டும்."
"யாரிடம்?"
"பழுவேட்டரையரின் யானைக்குப்
பின்னால் மூடு பல்லக்கில் சென்றாளே, அந்தப் பெண்மணியிடம்!"
"நம்பிகளே! என்னை யார்
என்று நினைத்தீர்கள்? இம்மாதிரி வேலைக்கெல்லாம் நான்தானா அகப்பட்டேன்? தங்களைத் தவிர வேறு யாராவது இத்தகைய வார்த்தையை என்னிடம் சொல்லியிருந்தால்..."
"தம்பி! படபடப்பு வேண்டாம்!
உன்னால் முடியாது என்றால் மகாராஜனாய்ப் போய் வா!
ஆனால் எனக்கு மட்டும் இந்த உதவி நீ செய்திருந்தால், ஏதாவது ஒரு சமயத்தில் உனக்கும் என் உதவி பயன்பட்டிருக்கும்
பாதகமில்லை; போய் வா!"
வந்தியத்தேவன் பிறகு அங்கே ஒரு கணம்கூட நிற்கவில்லை.
குதிரை மீது தாவி ஏறி விரைவாக விட்டுக்கொண்டு
கடம்பூரை நோக்கிச் சென்றான்.
-------------
No comments:
Post a Comment
Let others know your opinions about this post