Wednesday, 23 September 2020

பொன்னியின் செல்வன் பாகம் 1 - 32

 


முப்பத்திரண்டாம் அத்தியாயம்
பரிசோதனை

 

சின்னப பழுவேட்டரையரை கண்டதும் வந்தியத்தேவன் சண்டையை நிறுத்திவிட்டு அவரை நோக்கி நடந்தான். காவலர்கள் எழுந்து ஓடி வந்து அவனைப் பிடித்துக் கொண்டார்கள்.

அவர்களை அவன் சிறிதும் இலட்சியம் செய்யாமல் நாலு அடி முன்னால் நடந்து வந்து, "தளபதி! நல்ல சமயத்தில் தாங்கள் வந்து சேர்ந்தீர்கள். இந்தப் பக்காத் திருடர்கள் என்னுடைய உடைமைகளைத் திருடிக் கொண்டதுமல்லாமல், என்னையும் கொல்லப் பார்த்தார்கள்! விருந்தாளியை இப்படித்தானா நடத்துவது?

இதுவா தஞ்சாவூர் சம்பிரதாயம்? நான் தங்களுக்கு மட்டும் விருந்தாளியல்ல, சக்கரவர்த்திக்கும் விருந்தாளி; சக்கரவர்த்தினி சொன்னதைத்தான் தாங்களும் கேட்டீர்களே! பட்டத்து இளவரசரிடமிருந்து ஓலை கொண்டு வந்த தூதன். அப்படிப்பட்ட என்னை இந்தப் பாடுபடுத்துகிறவர்கள் மற்றவர்களை என்ன செய்து விட மாட்டார்கள்!

இப்படிப்பட்ட திருடர்களைத் தங்கள் பணி ஆட்களாக வைத்துக் கொண்டிருப்பது பற்றி ஆச்சரியப்படுகிறேன். எங்கள் தொண்டை மண்டலத்தில் இப்படிப்பட்ட திருடர்களை உடனே கழுவில் ஏற்றிவிட்டு மறுகாரியம் பார்ப்போம்!" என்று சரமாரியாய்ப் பொழிந்தான்.

மூன்று வீரர்களை ஏக காலத்தில் எதிர்த்துப் புரட்டிக் கீழே தள்ளிய வாலிபனுடைய வீரச் செயலைப் பற்றிய வியப்பு இன்னும் பழுவேட்டரையரின் மனத்தை விட்டகலவில்லை. இத்தகைய வீரனை நாம் நமது காவற் படையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்னும் ஆசை அவருக்கு அதிகமாயிற்று.

எனவே, அவர் சாந்தமான குரலில், "பொறு! தம்பி! பொறு! அப்படியெல்லாம் இவர்கள் செய்திருப்பார்கள் என்று தோன்றவில்லை! இவர்களை விசாரித்துப் பார்க்கிறேன்!" என்றார்.

"நான் கோருவதும் அதுதான்! இவர்களை விசாரியுங்கள்; விசாரித்து நீதி வழங்குங்கள்! என்னுடைய உடையும் உடைமையும் என்னிடம் திரும்பி வருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்!" என்றான் வல்லவரையன்.

"அடே! அந்தப் பிள்ளையை விட்டு விட்டு இப்படி வாருங்கள்! நான் சொன்னது என்ன? நீங்கள் செய்தது என்ன? இவன் மீது ஏன் கை வைத்தீர்கள்?" என்று கோபமாகக் கேட்டார் கோட்டைத் தளபதி.

"எஜமானே! தாங்கள் சொன்னது சொன்னபடியே செய்தோம். இவரை எண்ணெய் முழுக்காட்டிப் புதிய ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிவித்தோம்; அறுசுவை உண்டி அளித்தோம். சித்திர மண்டபத்துக்கும் அழைத்து வந்தோம்!

இவர் சிறிது நேரம் சித்திர மண்டபத்தில் உள்ள சித்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று நினைத்துக் கொண்டு இவருடைய பழைய உடைகளைக் கேட்டார். உடனே எங்களைத் தாக்கவும் ஆரம்பித்தார்!" என்றான் அவ்வீரர்களில் ஒருவன்.

"ஒரு சிறு பிள்ளையிடமா மூன்று தடியர்கள் அடிபட்டு விழுந்தீர்கள்?" என்று கூறி இரத்தக் கனல் வீச விழித்துப் பார்த்தார்.

"எஜமான்! அரண்மனை விருந்தாளியாயிற்றே என்று யோசித்தோம். இப்போது சற்று அனுமதி கொடுங்கள்; இவனை உடனே வேலை தீர்த்துவிடுகிறோம்."

"போதும் உங்கள் வீரப் பிரதாபம்! நிறுத்துங்கள்! தம்பி!... நீ என்ன சொல்லுகிறாய்?"

"இவர்களுக்கு அனுமதி கொடுங்கள் என்றுதான் சொல்கிறேன். எனக்கும் அனுமதி கொடுங்கள். சோழ குலத்துப் பகைவர்களோடு போராடி கொஞ்சம் நாள் ஆயிற்று. தோள்கள் தினவெடுக்கின்றன. அரண்மனை விருந்தாளிகளை எப்படி நடத்த வேண்டுமென்று இவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றேன்!" என்றான் நமது வீரன்.

சின்னப் பழுவேட்டரையர் புன்னகை புரிந்து, "தம்பி! உன் தோள் தினவைத் தீர்த்துக் கொள்வதைச் சோழப் பகைவர்களோடேயே வைத்துக் கொள்! சக்கரவர்த்தி நோய்வாய்ப்பட்டிருக்கும் நிலையில் தஞ்சைக் கோட்டைக்குள் இவ்விதம் சண்டை, சந்தடி ஒன்றும் உதவாது என்று கட்டளை!" என்று சொன்னார்.

"அப்படியானால் என்னுடைய உடைகளையும் உடைமைகளையும் உடனே கொண்டு வந்து கொடுக்கச் சொல்லுங்கள்!"

"எங்கேடா அவை?"

"எஜமான்! தங்கள் கட்டளைப்படி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறோம்."

"தளபதி! இவர்கள் எப்படிப் புளுகுகிறார்கள், பாருங்கள்! சற்றுமுன் உடைகளை வெளுக்கப் போட்டிருப்பதாய்ச் சொன்னார்கள். இப்போது தாங்கள் 'பத்திரப்படுத்தி' வைக்கச் சொன்னதாகக் கூறுகிறார்கள். சற்றுப் போனால் தங்களுக்கே திருட்டுப் பட்டம்கூடக் கட்டி விடுவார்கள்!" என்றான் வந்தியத்தேவன்.

தளபதி காவலர்களைப் பார்த்து, "முட்டாள்களா! இந்தப் பிள்ளைக்கு புது ஆடைகள் கொடுக்கும்படி மட்டுந்தானே சொன்னேன்? பழையவைகளைப் பற்றி நான் ஒன்றுமே சொல்லவில்லையே?...

இந்த மூடர்கள் என்னவோ உளறுகிறார்கள், தம்பி! போனால் போகட்டும், பழைய உடைகளைப் பற்றி எதற்காக இவ்வளவு கவலைப்படுகிறாய்? அதற்குள் ஏதாவது உயர்ந்த பொருள் வைத்திருந்தாயோ?" என்று கேட்டார்.

"ஆம்; வழிநடைச் செலவுக்காகப் பொற்காசுகள் வைத்திருந்தேன்..." என்று வந்தியத்தேவன் சொல்வதற்குள், "அதற்காக நீ கவலைப்பட வேண்டாம். உனக்கு வழிச் செலவுக்கு எவ்வளவு பொன் வேண்டுமோ அவ்வளவு தருகிறேன்!" என்றார் பழுவேட்டரையர்.

"தளபதி! நான் இளவரசர் கரிகாலருடைய தூதன். பிறரிடம் கை நீட்டி பணம் பெறும் வழக்கம் என்னிடம் கிடையாது..."

"அப்படியானால், உன்னுடைய உடைகளையும் அதற்குள்ளிருந்த பொற்காசுகளையும் திருப்பி உன்னிடம் சேர்ப்பிக்கச் செய்கிறேன். கவலைப்படாதே! உன் உடையில் வேறு பொருள் ஒன்றும் இல்லையல்லவா?"

வல்லவரையன் ஒரு கணம் யோசித்தான். அந்தத் தயக்கத்தைச் சின்னப் பழுவேட்டரையரும் பார்த்துக் கொண்டார்.

"வேறொரு முக்கியமான பொருளும் என் அரைச்சுற்று ஆடையில் இருக்கிறது. அதை உங்கள் ஆட்கள் தொட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். தொட்டிருந்தால் அவர்கள் தொலைந்தார்கள்!..."

"ஆகா! உனக்கு எத்தனை கோபம் வருகிறது? எங்கே, யாரிடத்தில் பேசுகிறோம் என்பதை மறந்துவிட்டே பேசுகிறாய். சிறு பிள்ளையாயிற்றே என்று மன்னித்து விடுகிறேன்; அப்படிப்பட்ட பொருள் என்ன?"

"தளபதி! அதைச் சொல்வதற்கு இல்லை. அது அந்தரங்க விஷயம்!"

"தஞ்சைக் கோட்டைக்குள் எனக்குத் தெரியாத அந்தரங்கம் ஒன்றும் இருக்க முடியாது!"

"இளவரசர் கரிகாலர் என்னிடம் ஒப்புவித்த அந்தரங்க விஷயம்."

"இளவரசர் வடதிசையின் மாதண்ட நாயகர். அவருடைய அதிகாரம் பாலாற்றுக்கு வடக்கே செல்லும். இங்கே சக்கரவர்த்தியின் அதிகாரந்தான் செல்லும்."

"தளபதி! புலிக் கொடி பறக்கும் இடமெல்லாம் சக்கரவர்த்தியின் அதிகாரந்தான். அதில் என்ன சந்தேகம்?"

"ஆகையினால்தான், இந்தக் கோட்டைக்குள்ளே எனக்குத் தெரியாத அந்தரங்கம் எதுவும் இருக்க முடியாது என்று சொல்கிறேன். சக்கரவர்த்தியின் க்ஷேமத்தைக் கருதித்தான்!"

"தளபதி! சக்கரவர்த்தியைக் கண்ணுங் கருத்துமாய்க் காப்பாற்றி வருவதற்காக தங்களுக்கும் பெரிய பழுவேட்டரையருக்கும் சோழ சாம்ராஜ்யம் நன்றிக் கடன்பட்டிருக்கிறது. இன்றைக்குச் சக்கரவர்த்தி தங்களைப் பாராட்டியதும் என் காதில் விழுந்தது. தங்களுக்குப் பயந்து கொண்டு தான் யமன் தஞ்சைக் கோட்டைக்குள் புகுந்து வராமல் தயங்கிக் கொண்டிருக்கிறான் என்று சக்கரவர்த்தி சொன்னாரே? அது எவ்வளவு பொருள் பொதிந்த வார்த்தை!"

"ஆம், தம்பி! பழையாறையிலிருந்து சக்கரவர்த்தியை நாங்கள் இங்கே அழைத்து வந்து கட்டுக் காவலுக்குள் வைத்திராவிட்டால், இத்தனை நாளும் என்ன விபரீதம் நடந்திருக்குமோ, தெரியாது. பாண்டிய நாட்டுச் சதிகாரர்களின் நோக்கம் நிறைவேறியிருந்தாலும் இருக்கலாம்."

"ஆ! தாங்கள்கூட அவ்விதமே சொல்கிறீர்களே! அப்படியானால் நான் கேள்விப்பட்டது உண்மையாகத்தான் இருக்க வேண்டும்!"

"என்ன கேள்விப்பட்டாய்?"

"சக்கரவர்த்திக்கு விரோதமாக ஒரு சதி நடக்கிறதென்றும், சக்கரவர்த்தியின் திருக்குமாரர்களுக்கு விரோதமாக இன்னொரு சதி நடக்கிறதென்றும் கேள்விப்பட்டேன்."

சின்னப் பழுவேட்டரையர் தம் வஜ்ரப் பற்களினால் உதட்டைக் கடித்துக் கொண்டார். இந்த சிறு அறியாப் பையனுடன் பேச்சுக் கொடுத்ததில் தமக்கே இத்தனை நேரமும் தோல்வி என்பதை உணர்ந்தார்.

ஏறக்குறைய அவனுடைய குற்றச்சாட்டுகளுக்குத் தாம் பதில் சொல்லிச் சமாளிக்கும் நிலைமை வந்து விட்டது! எனவே, பேச்சை அத்துடன் வெட்டிவிட விரும்பினார்.

"உனக்கென்ன அதை பற்றிக் கவலை? எல்லா சதிகளையும் உடைத்து சோழ குலத்தைப் பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம். உன்னுடைய கோரிக்கையை சொல்லு. உன் பழைய ஆடைகள் உனக்கு வேண்டும்; அவ்வளவுதானே!" என்றார்.

"என் பழைய ஆடைகளும் வேண்டும்; அவற்றுக்குள் இருந்த பொருள்களும் வேண்டும்."

"என்ன பொருள்கள் என்று இன்னமும் நீ சொல்லவில்லையே!"

"சொல்லத்தான் வேண்டுமானால் சொல்லுகிறேன். அதன் பொறுப்பு தங்களை சார்ந்தது. இளவரசர் சக்கரவர்த்திக்குக் கொடுத்திருந்த ஓலையைத் தவிர இன்னொரு ஓலையும் என்னிடம் கொடுத்திருந்தார்..."

"இன்னொரு ஓலையா! யாருக்கு? நீ சொல்லவே இல்லையே!"

"அந்தரங்கமானபடியால் சொல்லவில்லை; நீங்கள் இப்போது வற்புறுத்துகிறபடியால் சொல்லுகிறேன். பழையாறையிலுள்ள இளையபிராட்டி குந்தவை தேவிக்கு இளவரசர் ஓலை ஒன்று கொடுத்தார்!..."

"ஓஹோ! அப்படியானால், நாளைக்கு சக்கரவர்த்தி கொடுக்கும் திருமுகத்தை நீ உடனே எடுத்துக் கொண்டு காஞ்சிக்குப் போக முடியாது. இளைய பிராட்டிக்கு இளவரசர் ஓலை அனுப்பும்படி இப்போது என்ன அவசரம் நேர்ந்ததோ?"

"தளபதி! நான் பிறருக்கு எழுதப்படும் ஓலையைப் படிப்பதில்லை. சக்கரவர்த்தியின் ஓலையைப் படித்ததுபோல் இதையும் நீங்கள் படிப்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபம் கிடையாது. அந்தப் பொறுப்பு தங்களுடையது. என் உடையிலிருந்த பொன்னும் ஓலையும் களவு போகாமல் என்னிடம் திரும்பி வந்தால் போதும்."

"அதைப் பற்றி பயம் வேண்டாம். நானே பார்த்து எடுத்து வருகிறேன்" என்று சின்னப் பழுவேட்டரையர் நடந்தார். அவர் பின்னோடு வந்தியத்தேவனும் தொடர்ந்தான். அதையறிந்த கோட்டைத் தளபதி கண்களினால் சமிக்ஞை செய்யவே ஐந்தாறு வேல் பிடித்த வீரர்கள் வந்து வாசற்படியண்டை குறுக்கே நின்றார்கள். அவர்களுடன் சண்டை பிடிப்பதில் அனுகூலம் ஒன்றுமில்லையென்று கருதி வந்தியத்தேவன் அங்கேயே நின்றான்.

சற்று நேரத்துக்கெல்லாம் சின்னப் பழுவேட்டரையர் திரும்பி வந்தார். அவருக்குப் பின்னால் ஒருவன் ஒரு தட்டில் சீர் வரிசை ஏந்திக் கொண்டு வருவது போல் வந்தியத்தேவனுடைய பழைய ஆடைகளை எடுத்து வந்தான்.

"தம்பி! இதோ உன் ஆடைகள், பத்திரமாயிருக்கின்றன. நன்றாக சோதனை செய்து பார்த்துக் கொள்!" என்றார் கோட்டைத் தளபதி.

அவ்விதமே வந்தியத்தேவன் சோதனை செய்து பார்த்தான். அரைச்சுற்றுச் சுருளில் அவன் வைத்திருந்ததைக் காட்டிலும் அதிகமாகப் பொற்காசுகள் இருந்தன. குந்தவை தேவியிடம் சேர்ப்பிக்க வேண்டிய ஓலையும் இருந்தது.

அதிக பொற்காசுகள் எப்படி வந்தன? முதலில் அவன் தேடிப் பார்த்தபோது இல்லாத ஓலை இப்போது எப்படி வந்தது? சின்னப் பழுவேட்டரையரிடம் அது அகப்பட்டிருக்க வேண்டும். அதைப் பார்த்துவிட்டு இப்போது திரும்பி வந்த பிறகு அவர் அந்த ஓலையைத் திரும்பச் செருகியிருக்க வேண்டும்!

எதற்காக இப்படிச் செய்திருக்கிறார்? பொற்காசுகள் எதற்காக அதிகம் வைத்திருக்கிறார்? பொல்லாத மனிதர் இவர்! இன்னும் எப்படியெல்லாம் தன்னை சோதிக்கப் போகிறாரோ, தெரியாது! இவரிடம் சர்வ ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். ஏமாந்து போகக் கூடாது!

"எல்லாம் சரியாயிருக்கிறதா, தம்பி! நீ கொண்டு வந்த பொன், பொருள் எல்லாம்?" என்று சின்னப் பழுவேட்டரையர் கேட்டார்.

"இதோ பார்த்துச் சொல்கிறேன்." என்று கூறி வந்தியத்தேவன் பொற்காசுகளை எண்ணினான்.

அதிகப்படி காசுகளை எடுத்து தனியாக பழுவேட்டரையர் முன்பு வைத்துவிட்டு, "தளபதி! வாணர் குலத்தில் பிறந்தவன் நான்; ஆதித்த கரிகாலரின் தூதன்; பிறர் பொருளுக்கு ஆசைப்படுவதில்லை!" என்றான்.

"உன்னுடைய நேர்மையை மிக மெச்சுகிறேன். ஆயினும் உன்னுடைய வழிச் செலவுக்கு இதை நீ வைத்துக் கொள்ளலாம்! எப்போது புறப்பட விரும்புகிறாய்? இன்றைக்கே புறப்படுகிறாயா? அல்லது இன்றிரவு தங்கி இளைப்பாறிவிட்டு, பெரியவரையும் பார்த்துவிட்டுப் போகிறாயா?" என்று கேட்டார் தளபதி.

"அவசியம் இன்றிரவு இங்கே தங்கிப் பெரிய பழுவேட்டரையரையும் தரிசித்து விட்டுத்தான் போக எண்ணியிருக்கிறேன். ஆனால் உங்கள் ஆட்களிடம் மட்டும் கொஞ்சம் சொல்லி வையுங்கள்; என் பொருள்களில் கை வைக்க வேண்டாம் என்று!" இவ்விதம் சொல்லிக் கொண்டே அதிகப்படியாயிருந்த பொற்காசுகளையும் வந்தியத்தேவன் எடுத்துத் துணிச்சுருளில் பத்திரப்படுத்திக் கொண்டான்.

"மிக்க சந்தோஷம். உனக்கு இங்கே எந்தவிதமான இடைஞ்சல்களும் இனிமேல் இராது. உனக்கு என்ன வேண்டுமோ, தாராளமாய்க் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்."

"தளபதி! இந்தத் தஞ்சை நகரைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாயிருக்கிறது. பார்க்கலாம் அல்லவா?"

"தாராளமாகப் பார்க்கலாம். இதோ இவர்கள் இருவரும் உன்னோடு வந்து கோட்டைக்குள் எல்லா இடங்களையும் காட்டுவார்கள். கோட்டைக்கு வெளியில் மட்டும் போக வேண்டாம். சாயங்காலம் கோட்டை கதவுகளை சாத்திவிடுவார்கள்! வெளியில் போய்விட்டால் திரும்பி இரவு வரமுடியாது. கோட்டைக்குள்ளே உன் விருப்பப்படி சுற்றி அலையலாம்!"

இவ்விதம் கூறிவிட்டு இரண்டு புதிய ஆட்களைச் சின்னப் பழுவேட்டரையர் தம் அருகில் அழைத்து அவர்களிடம் ஏதோ சொன்னார். அவர் சொன்னது என்னவாயிருக்கும் என்று வந்தியத்தேவன் ஒருவாறு ஊகித்துத் தெரிந்து கொண்டான்.

 


No comments:

Post a Comment

Let others know your opinions about this post