முப்பத்தொன்பதாம் அத்தியாயம்
உலகம் சுழன்றது!
முதிய பிராயத்தில் தாம் கலியாணம் செய்து கொண்டது பற்றிப் பலர்
பலவிதமாகப் பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் பழுவேட்டரையர் அறிந்திருந்தார். அப்படி
நிந்தனையாகப் பேசியவர்களில் குந்தவைப் பிராட்டியும் ஒருத்தி என்பது அவர் காதுக்கு
எட்டியிருந்தது. ஆனால் குந்தவை என்ன சொன்னாள் என்பதை இதுவரை யாரும் அவரிடம்
பச்சையாக எடுத்துச் சொல்லவில்லை.
இப்போது நந்தினியின் வாயினால் அதைக் கேட்டதும் அவருடைய உள்ளம்
கொல்லர் உலைக் களத்தை ஒத்தது. குப், குப்
என்று அனல் கலந்த பெருமூச்சு வந்தது. நந்தினியின் கண்ணீர் அவருடைய உள்ளத் தீயை
மேலும் கொழுந்து விட்டெரியச் செய்ய நெய்யாக உதவிற்று.
"என் கண்ணே! அந்தச் சண்டாளப் பாதகி அப்படியா சொன்னாள்? என்னைக் கிழ எருமை மாடு என்றா சொன்னாள்? இருக்கட்டும்; அவளை...அவளை....என்ன
செய்கிறேன், பார்! எருமை மாடு அல்லிக் கொடியைக் காலில்
வைத்து நசுக்குவது போல் நசுக்கி எறிகிறேன், பார்!
இன்னும்...அவளை...அவளை....." என்று பழுவேட்டரையர், கோபாவேசத்தினால் பேச முடியாது தத்தளித்தார். அவர் முகம் அடைந்த
கோர சொரூபத்தை வர்ணிக்க முடியாது.
நந்தினி அவரை சாந்தப்படுத்த முயன்றாள். அவருடைய இரும்புக்
கையைத் தன் பூவையொத்த கரத்தினால் பற்றி விரல்களோடு விரல்களை இணைத்துக் கோத்துக்
கொண்டாள்.
"நாதா! எனக்கு நேர்ந்த அவமானத்தைத் தாங்கள் பொறுக்க மாட்டீர்கள்
என்பது எனக்குத் தெரியும். ஆனால் மத்தகஜத்தின் மண்டையைப் பிளந்து இரத்தத்தைக்
குடிக்கும் வலிமையுள்ள சிங்கம், கேவலம் ஒரு பூனையின்
மீது பாய முடியாது. குந்தவை ஒரு பெண் பூனை.
ஆனால் பெரிய மந்திரக்காரி. மாயமும் மந்திரமும் செய்துதான்
எல்லோரையும் அவள் இஷ்டம் போல் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறாள்! இந்த சோழ
ராஜ்யத்தையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறாள்! அவளுடைய மந்திரத்தை மாற்று
மந்திரத்தால் தான் வெல்ல வேண்டும்.
தங்களுக்கு விருப்பமில்லாவிட்டால் சொல்லி விடுங்கள். இன்றைக்கே
நான் இந்த மாளிகையை விட்டு வெளியேறுகிறேன்..." என்று கூறி மீண்டும்
விம்மினாள்.
பழுவேட்டரையரின் கோப வெறி தணிந்தது; மோக வெறி மிகுந்தது.
"வேண்டாம்; வேண்டாம்! ஆயிரம்
மந்திரவாதிகளை வேண்டுமானாலும் அழைத்து வைத்துக்கொள். நீ போக வேண்டாம்! என் உயிர்
அனையவள் நீ! அனையவள் என்ன? என் உயிரே நீதான்! உயிர் போய்விட்டால்
அப்புறம் இந்த உடம்பு என்ன செய்யும்?...
இப்போதே என்னை நீ விலக்கி வைத்திருப்பது என்னை உயிரோடு வைத்துக்
கொல்கிறது! இத்தனை மந்திரம் தெரிந்து வைத்திருக்கிறாயே? எனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தரக்கூடாதா?" என்றார்.
"நாதா! உங்கள் கையில் வாளும் வேலும் இருக்கும்போது மந்திரம்
எதற்கு? பேதைப் பெண்ணாகிய என்னிடம் விட்டு விடுங்கள்
மாயமந்திரங்களை! தங்களுக்கு எதற்கு மாயமும் மந்திரமும்?" என்றாள் நந்தினி.
"கண்ணே! நீ உன் பவள வாய் திறந்து 'நாதா' என்று அழைக்கும்போதே என் உடம்பு சிலிர்க்கிறது...உன் பொன்
முகத்தைப் பார்த்தால் என் மதி சுழல்கிறது! என் கையில் வாளும் வேலும் இருப்பது
உண்மைதான். அதையெல்லாம் போர்க்களத்தில் பகைவர்களைத் தாக்குவதற்கு உபயோகிப்பேன்.
ஆனால் அந்த ஆயுதங்களை வைத்துக் கொண்டு இந்தக் கொடி மண்டபத்தில்
என்ன செய்வேன்? மன்மதனுடைய பாணங்களுக்கு எதிர்ப் பாணம்
என்னிடம் ஒன்றுமில்லையே? உன்னிடம் அல்லவா இருக்கிறது? எனக்கு மந்திரம் எதற்காக என்று கேட்கிறாய்!
என் உடலையும் உயிரையும் ஓயாமல் எரித்துக் கொண்டிருக்கிறதே, அந்தத் தீயைத் தணிப்பதற்காகத்தான்! அதற்கு ஏதாவது மந்திரம்
உனக்குத் தெரிந்திருந்தால் சொல்லு! இல்லையென்றால், உன்
பூ மேனியைத் தொட்டு மகிழும் பாக்கியத்தை எனக்குக் கொடு!
எப்படியாவது என் உயிரைக் காப்பாற்று! கண்மணி! உலகம் அறிய சாஸ்திர
விதிப்படி நீயும் நானும் மணந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன! ஆயினும் நாம் உலக
வழக்கப்படி இல்வாழ்க்கை நடத்த ஆரம்பிக்கவில்லை.
விரதம் என்றும், நோன்பு
என்றும் சொல்லி என்னை ஒதுக்கியே வைத்துக் கொண்டிருக்கிறாய். கரம் பிடித்து மணந்து
கொண்ட கணவனை வாட்டி வதைக்கிறாய்! அல்லது ஒரு வழியாக எனக்கு உன் கையினால் விஷத்தைக்
கொடுத்துக் கொன்று விடு!..."
நந்தினி தன் செவிகளைப் பொத்திக் கொண்டு, "ஐயையோ! இம்மாதிரி கொடிய வார்த்தைகளைச்
சொல்லாதீர்கள்! இன்னொரு முறை இப்படிச் சொன்னால், நீங்கள்
சொல்லுகிறபடியே செய்துவிடுவேன். விஷத்தைக் குடித்துச் செத்துப் போவேன். அப்புறம்
தாங்கள் கவலையற்று நிம்மதியாக இருக்கலாம்!" என்றாள்.
"இல்லை, இல்லை; இனி
அப்படிச் சொல்லவில்லை. என்னை மன்னித்து விடு! நீ விஷங்குடித்து இறந்தால் எனக்கு மன
நிம்மதி உண்டாகுமா? இப்போது அரைப் பைத்தியமாயிருக்கிறேன் அப்போது
முழுப் பைத்தியமாகி விடுவேன்...!"
"நாதா! எதற்காகத் தாங்கள் பைத்தியமாக வேண்டும்? என்றைக்கு நாம் கைப்பிடித்து மணந்து கொண்டோமோ, அன்றைக்கே நாம் இரண்டு உடம்பும் ஓர் உயிரும் ஆகிவிட்டோம்.
உயிரும் உயிரும் கலந்து விட்டன; உள்ளமும் உள்ளமும்
சேர்ந்து விட்டன; தங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் இங்கே
என் இதயத்தில் எதிரொலியை உண்டாக்குகிறது.
தங்கள் நெஞ்சில் உதிக்கும் ஒவ்வொரு எண்ணமும் இங்கே என் அகக்
கண்ணாடியில் பிரதிபலிக்கிறது. தங்கள் புருவம் நெரிந்தால் என் கண் கலங்குகிறது.
தங்கள் மீசை துடித்தால் என் குடல் துடிக்கிறது. இப்படி நாம் உயிர்க்குயிரான பிறகு, கேவலம் இந்த உடலைப் பற்றி ஏன் சிந்தனை? மண்ணினால் ஆன உடம்பு இது; ஒருநாள்
எரிந்து சாம்பலாகி மண்ணோடு மண் ஆகபோகிற உடம்பு இது!..."
"நிறுத்து! நிறுத்து! உன் கொடுமையான வார்த்தைகளைக் கேட்டு என்
காது கொப்புளிக்கிறது!" என்று பழுவேட்டரையர் அலறினார். மேலும் அவள் பேச
இடங்கொடாமல் பேசினார்: "மண்ணினால் ஆன உடம்பு என்றா சொன்னாய்? பொய்! பொய்! தேன் மணம் கமழும் உன் கனி வாயினால் அத்தகைய பெரும்
பொய்யைச் சொல்லாதே! உன் உடம்பை மண்ணினால் செய்ததாகவா சொன்னாய்? ஒருநாளும் இல்லை.
உலகில் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம்
பிரம்மதேவன் மண்ணினாலும் செய்திருக்கலாம், கல்லினாலும்
செய்திருக்கலாம். கரியையும் சாம்பரையும் கலந்து செய்திருக்கலாம். ஆனால் உன்னுடைய
திருமேனியைப் பிரம்மா எப்படிச் செய்தான் தெரியுமா?
தேவலோகத்து மந்தார மரங்களிலிருந்து உதிர்ந்த மலர்களைச்
சேகரித்தான்; தமிழகத்துக்கு வந்து செந்தாமரை மலர்களைப்
பறித்துச் சேகரித்தான்; சேகரித்த மலர்களைத் தேவலோகத்தில் தேவாமிர்தம்
வைத்திருக்கும் தங்கக் கலசத்தில் போட்டான்.
அமுதமும் மலர்களும் ஊறிக் கலந்து ஒரே குழம்பான பிறகு எடுத்தான்.
அந்தக் குழம்பில் வெண்ணிலா கிரணங்களை ஊட்டினான். பண்டைத் தமிழகத்துப் பாணர்களை
அழைத்து வந்து யாழ் வாசிக்கச் சொன்னான். அந்த யாழின் இசையையும் கலந்தான். அப்படி
ஏற்பட்ட அற்புதமான கலவையினால் உன் திருமேனியைப் படைத்தான் பிரம்மதேவன்..."
"நாதா! ஏதோ பிரம்மாவுக்குப் பக்கத்தில் இருந்து பார்த்தவரைப்
போல் பேசுகிறீர்களே! இந்த வர்ணனைகளுக்கெல்லாம் நான் ஒருத்திதானா அகப்பட்டேன்? தங்களுடைய அந்தப்புரத்தில் எவ்வளவோ பெண்ணரசிகள் இருக்கிறார்கள்; இராஜ குலங்களில் பிறந்தவர்கள்.
எத்தனையோ நீண்ட காலமாக அவர்களுடன் இல்லறம்
நடத்தியிருக்கிறீர்கள். என்னைத் தாங்கள் பார்த்து இரண்டரை ஆண்டுதான்
ஆகிறது!..." என்று நந்தினி சொல்வதற்குள், பழுவேட்டரையர்
குறுக்கிட்டார்.
அவருடைய உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்த உணர்ச்சி வெள்ளத்தை
வார்த்தைகளின் மூலமாகவாவது வெளிப்படுத்திவிட விரும்பினார் போலும். அவரைப் பற்றி
எரிந்த தாபத்தீயைச் சொல்மாரியினால் நனைத்து அணைக்க முயன்றார் போலும்.
"நந்தினி! என் அந்தப்புரத்து மாதர்களைப் பற்றிச் சொன்னாய்.
பழமையான பழுவூர் மன்னர் குலம் நீடித்து வளர வேண்டும் என்பதற்காகவே அவர்களை நான்
மணந்தேன். அவர்களில் சிலர் மலடிகளாகித் தொலைந்தார்கள்.
வேறு சிலர் பெண்களையே பெற்றளித்தார்கள். 'கடவுள் அருள் அவ்வளவுதான்' என்று
மன நிம்மதியடைந்தேன். பெண்களின் நினைவையே வெகு காலம் விட்டொழித்திருந்தேன்.
இராஜாங்கக் காரியங்களே என் கவனம் முழுவதையும் கவர்ந்திருந்தன.
சோழ ராஜ்யத்தின் மேன்மையைத் தவிர வேறு எந்த நினைவுக்கும் இந்த
நெஞ்சில் இடமிருக்கவில்லை. இப்படி இருக்கும்போதுதான் பாண்டியர்களோடு இறுதிப்
பெரும் யுத்தம் வந்தது. வாலிபப் பிராயத்து தளபதிகள் பலர் இருந்தபோதிலும் என்னால்
பின்தங்கி இருக்க முடியவில்லை.
நான் போர்க்களம் சென்றிராவிட்டால், அத்தகைய மாபெரும் வெற்றி கிடைத்தும் இராது. பாண்டியர் படையை
அடியோடு நாசம் செய்து மதுரையில் வெற்றிக் கொடி நாட்டிய பிறகு கொங்கு நாடு
சென்றேன். அங்கிருந்து அகண்ட காவேரிக் கரையோடு திரும்பி வந்து கொண்டிருந்தேன்.
வழியில் காடு அடர்ந்த ஓர் இடத்தில் உன்னைக் கண்டேன். முதலில் நீ
அங்கு நிற்கிறாய் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. கண்ணை மூடித் திறந்து
பார்த்தேன். அப்போதும் நீ நின்றாய். 'நீ
வனதேவதையாக இருக்க வேண்டும்; அருகில் சென்றதும்
மறைந்து விடுவாய்! என்று எண்ணிக் கொண்டு நெருங்கினேன்.
அப்போதும் நீ மறைந்து விடவில்லை. 'புராணக் கதைகளிலே சொல்லியிருப்பது போல், சொர்க்கத்திலிருந்து சாபம் பெற்றுப் பூமிக்கு வந்த தேவ கன்னிகை
அல்லது கந்தர்வப் பெண்ணாயிருக்க வேண்டும்; மனித
பாஷை உனக்குத் தெரிந்திராது!' என்று எண்ணி கொண்டு, 'பெண்ணே! நீ யார்?' என்று
கேட்டேன்.
நீ நல்ல தமிழில் மறுமொழி கூறினாய். 'நான் அநாதைப் பெண்; உங்களிடம்
அடைக்கலம் புகுந்தேன்; என்னைக் காப்பாற்றுங்கள்' என்றாய். உன்னைப் பல்லக்கில் ஏற்றி அழைத்துக் கொண்டு வந்தபோது
என் மனம் எண்ணாததெல்லாம் எண்ணியது.
உன்னை எங்கேயோ, எப்போதோ, முன்னம் பார்த்திருப்பது போலத் தோன்றியது. ஆனால் நினைத்து
நினைத்துப் பார்த்தும் எங்கே என்று தெரியவில்லை. சட்டென்று என் மனத்தை மூடியிருந்த
மாயத்திரை விலகியது; உண்மை உதயமாயிற்று.
உன்னை இந்த ஜன்மத்தில் நான் முன்னால் பார்த்ததில்லை. ஆனால்
முந்தைய பல பிறவிகளில் பார்த்திருக்கிறேன் என்பது தெரிந்தது. அந்தப் பூர்வ ஜன்மத்து
நினைவுகள் எல்லாம் மோதிக் கொண்டு வந்தன. நீ அகலிகையாக இந்த உலகில் பிறந்திருந்தாய்; அப்போது நான் தேவேந்திரனாக இருந்தேன்.
சொர்க்கலோக ஆட்சியைத் துறந்து ரிஷி சாபத்துக்கும் துணிந்து
உன்னைத் தேடிக் கொண்டு வந்தேன். பிறகு நான் சந்தனு மகாராஜனாகப் பிறந்திருந்தேன்.
கங்கைக் கரையோடு வேட்டையாடச் செல்லுகையில் உன்னைக் கண்டேன்; பூலோகப் பெண்ணைப் போல் உருக்கொண்டிருந்த கங்கையாகிய உன்னைக்
காதலித்தேன்.
பிறகு ஒரு காலத்தில் காவேரிப் பூம்பட்டினத்தில் நான் கோவலனாய்ப்
பிறந்திருந்தேன்; நீ கண்ணகியாக அவதரித்திருந்தாய். என் அறிவை
மறைத்த மாயையினால் உன்னைச் சில காலம் மறந்திருந்தேன். பிறகு மாயைத் திரை விலகிற்று.
உன் அருமை அறிந்தேன். மதுரை நகருக்கு அழைத்துச் சென்றேன்.
வழியில் உன்னை ஆயர் குடியில் விட்டு விட்டுச் சிலம்பு விற்கச்
சென்றேன். வஞ்சகத்தினால் உயிரை இழந்தேன். அதற்குப் பழிக்குப் பழியாக இந்தப்
பிறவியில் மதுரைப் பாண்டியன் குலத்தை நாசம் செய்து விட்டுத் திரும்பி வரும் போது
உன்னைக் கண்டேன். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த கண்ணகி நீதான் என்பதை
உணர்ந்தேன்!...."
இப்படிப் பழுவேட்டரையர் முற்பிறவிக் கதைகளைச் சொல்லிக் கொண்டு
வந்தபோது நந்தினி, அவர் முகத்தைப் பார்க்காமல் வேறு திசையை
நோக்கிக் கொண்டிருந்தாள். அதனால் அவள் முகத்தில் அப்போது தோன்றிய பாவ
வேறுபாடுகளைப் பழுவேட்டரையர் கவனிக்கவில்லை. கவனித்திருந்தால், அவர் தொடர்ந்து பேசியிருப்பாரா என்பது சந்தேகந்தான்.
மூச்சு விடுவதற்காக அவர் சற்று நிறுத்தியபோது, நந்தினி அவரைத் திரும்பிப் பார்த்து, "நாதா! தாங்கள் கூறிய உதாரணங்கள் அவ்வளவு
பொருத்தமாயில்லை. எல்லாம் கொஞ்சம் அபசகுனமாகவே இருக்கின்றன. வேண்டுமென்றால், தங்களை மன்மதன் என்றும் என்னை ரதி என்றும் சொல்லுங்கள்!"
என்று முன்போல் முகமலர்ந்து புன்னகை செய்தாள்.
பழுவேட்டரையரின் முகம் அப்போது மகிழ்ச்சியினாலும்
பெருமையினாலும் மலர்ந்து விளங்கியது. எவ்வளவு அவலட்சணமான மனிதனாயினும், தான் காதலித்த பெண்ணினால் 'மன்மதன்' என்று அழைக்கப்பட்டால் குதூகலப்படாதவன் யார்? என்றாலும், தற்பெருமையை
விரும்பாதவர் போல் பேசினார்:
"கண்மணி! உன்னை ரதி என்பது மிகவும் பொருத்தமானதுதான். ஆனால்
என்னை 'மன்மதன்' என்று
சொல்லுவது பொருந்துமா! உன் அன்பு மிகுதியினால் சொல்கிறாய்!' என்றார்.
"நாதா! என் கண்களுக்குத் தாங்கள் தான் மன்மதன். ஆண்
பிள்ளைகளுக்கு அழகு வீரம். தங்களைப் போன்ற வீராதி வீரர் இந்தத் தென்னாட்டில்
யாரும் இல்லை என்பதை உலகமே சொல்லும். அடுத்தபடியாக, ஆண்மை
படைத்தவர்களுக்கு அழகு தருவது அபலைகளிடம் இரக்கம்.
அந்த இரக்கம் தங்களிடம் இருப்பதற்கு நானே அத்தாட்சி. இன்ன ஊர், இன்ன குலம் என்று தெரியாத இந்த ஏழை அநாதைப் பெண்ணைத் தாங்கள்
அழைத்து வந்து அடைக்கலம் அளித்தீர்கள். இணையில்லாத அன்பையும் ஆதரவையும் என் பேரில்
சொரிந்தீர்கள்.
அப்படிப்பட்ட தங்களை நான் வெகு காலம் காத்திருக்கும்படி செய்ய
மாட்டேன். என்னுடைய விரதமும் நோன்பும் முடியும் காலம் நெருங்கி விட்டது..."
என்றாள்.
"கண்மணி! என்ன விரதம், என்ன
நோன்பு என்பதை மட்டும் தெளிவாகச் சொல்லிவிடு! எவ்வளவு சீக்கிரம் முடித்துத் தரலாமோ
அவ்வளவு சீக்கிரத்தில் முடித்துத் தருவேன்!" என்றார் பழுவூர் அரசர்.
"தன்னைக் காட்டிலும் மன்மதன் வேறு இல்லை என்று எண்ணியிருக்கும்
இந்த சுந்தர சோழருடைய சந்ததிகள் தஞ்சை சிம்மாசனத்தில் ஏறக்கூடாது. தற்பெருமை கொண்ட
அந்த குந்தவையின் கர்வத்தை ஒடுக்க வேண்டும்..."
"நந்தினி! அந்த இரண்டு காரியங்களும் நிறைவேறி விட்டதாகவே நீ
வைத்துக் கொள்ளலாம். ஆதித்தனுக்கும் அருள்மொழிவர்மனுக்கும் பட்டம் கிடையாது.
மதுராந்தகனுக்கே பட்டம் கட்ட வேண்டும் என்று இந்த ராஜ்யத்தின் தலைவர்கள் எல்லாரும்
சம்மதித்து விட்டார்கள்..."
" 'எல்லாரும்' சம்மதித்து
விட்டார்களா? உண்மைதானா?" என்று நந்தினி அழுத்தமாகக் கேட்டாள்.
"இரண்டு மூன்று பேரைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் சம்மதித்து
விட்டார்கள். கொடும்பாளூரானும், மலையமானும், பார்த்திபேந்திரனும் நம்முடன் என்றும் இணங்க மாட்டார்கள்.
அவர்களைப் பற்றிக் கவலையில்லை..."
"ஆயினும் காரியம் முடியும் வரையில் ஜாக்கிரதையாக இருக்க
வேண்டியதுதானே?"
"அதற்குச் சந்தேகம் இல்லை. எல்லா ஜாக்கிரதையும் நான் செய்து
கொண்டு தான் வருகிறேன். மற்றவர்களின் முட்டாள்தனத்தினால் பிசகு நேர்ந்தால்தான்
நேர்ந்தது. இன்றைக்குக் கூட அத்தகைய பிசகு ஒன்று நேர்ந்திருக்கிறது.
காஞ்சியிலிருந்து வந்த ஒரு வாலிபன் காலாந்தகனை ஏமாற்றி விட்டுச் சக்கரவர்த்தியைச்
சந்தித்து ஓலை கொடுத்திருக்கிறான்..."
"ஆகா! தங்கள் தம்பியைப் பற்றி தாங்கள் ஓயாமல் புகழ்ந்து
கொண்டிருக்கிறீர்கள். அவருக்குச் சாமர்த்தியம் போதாது என்று நான் சொல்லவில்லையா?"
"இந்த விஷயத்தில் அசட்டுத்தனமாகத்தான் போய் விட்டான்! ஏதோ நம்
அரண்மனை முத்திரை மோதிரத்தை அந்த வாலிபன் காட்டியதாகச் சொல்கிறான்!"
"ஏமாந்து போனவர்கள் இப்படித்தான் ஏதாவது காரணம் சொல்லுவார்கள்!
ஏமாற்றிய அந்த வாலிபனைப் பிடிக்க முயற்சி ஏதும் செய்யவில்லையா?"
"முயற்சி செய்யாமல் என்ன? கோட்டைக்கு
உள்ளேயும் வெளியேயும் வேட்டை ஆரம்பமாகி விட்டது! எப்படியும் பிடித்து விடுவார்கள்.
இதனாலெல்லாம் நம்முடைய காரியத்துக்கு ஒன்றும் பங்கம் வந்து விடாது. சக்கரவர்த்தி
காலமானதும் மதுராந்தகன் சிம்மாசனம் ஏறுவது நிச்சயம்...."
"நாதா! என்னுடைய விரதம் என்னவென்பதைத் தங்களுக்குத்
தெரியப்படுத்தும் காலம் இப்போது நெருங்கி வந்து விட்டது..."
"கண்ணே! அதைச் சொல்லும்படி தான் நானும் கேட்கிறேன்.."'
"மதுராந்தகன் - அந்த அசட்டுப் பிள்ளை - பெண் என்றால் பல்லை
இளிப்பவன் - அவன் பட்டத்துக்கு வருவதினால் என்னுடைய விரதம் நிறைவேறி
விடாது..."
"வேறு எதனால் நிறைவேறும்? உன்
விருப்பத்தைச் சொல்லு! நிறைவேற்றி வைக்க நான் இருக்கிறேன்...'
"அரசே! என் சிறு பிராயத்தில் ஒரு பிரபல ஜோசியன் என் ஜாதகத்தைப்
பார்த்தான். பதினெட்டுப் பிராயம் வரையில் நான் பற்பல இன்னல்களுக்கு உள்ளாவேன்
என்று சொன்னான்..."
"இன்னும் என்ன சொன்னான்?"
"பதினெட்டுப் பிராயத்துக்குப் பிறகு தசை மாறும் என்றான். இணையில்லாத
உன்னத பதவியை அடைவேன் என்று சொன்னான்..."
"அவன் சொன்னது உண்மைதான்! அந்த ஜோசியன் யார் என்று சொல்லு!
அவனுக்குக் கனகாபிஷேகம் செய்து வைக்கிறேன்."
"நாதா!"
"கண்ணே!"
"இன்னும் அந்தச் ஜோசியன் கூறியது ஒன்று இருக்கிறது. அதைச்
சொல்லட்டுமா?"
"கட்டாயம் சொல்லு! சொல்லியே தீர வேண்டும்!"
"என்னை கைபிடித்து மணந்து கொள்ளும் கணவர், மணிமகுடம் தரித்து ஒரு மகா சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில்
ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் வந்து அடிபணிந்து ஏத்தும் சக்கரவர்த்தியாக
வீற்றிருப்பார் என்று அந்தச் ஜோசியன் சொன்னான். அதை நிறைவேற்றுவீர்களா?"
பழுவேட்டரையரின் செவியில் இவ்வார்த்தைகள் விழுந்ததும், அவருக்கு முன்னாலிருந்த நந்தினியும் அவள் வீற்றிருந்த மஞ்சமும்
சுழன்றன. லதா மண்டபம் சுழன்றது. அந்த மண்டபத்தின் தூண்கள் சுழன்றன. எதிரே இருந்த
இருளடர்ந்த தோப்பு சுழன்றது. நிலாக் கதிரில் ஒளிர்ந்த மர உச்சிகள் சுழன்றன.
வானத்து நட்சத்திரங்கள் சுழன்றன. இருபுறத்து மாளிகைகளும் சுழன்றன. உலகமே சுழன்றது!
No comments:
Post a Comment
Let others know your opinions about this post