Wednesday 1 May 2013

புத்தக விமர்சனம்


கடந்த சில வருடங்களாக நான் புத்தகங்களை படிப்பதைவிட அதிகமாகவே புத்தகங்கள் தொடர்பாக நடக்கும் வெளியீட்டு விழா, அறிமுக விழா, விமர்சனக் கூட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு செல்வதை மிகவும் விரும்புகிறேன். ஒரே புத்தகத்தைப்பற்றிய பலருடைய பார்வைகள், பல புதிய தகவல்கள் இந்நிகழ்வுகள் மூலமாக நமக்கு தெரியவரும் என்பதுதான் இதற்கு முக்கியமான காரணம்.
     அதனால் நேரடியான பரிச்சயமே இல்லாத எழத்தாளர்களின் புத்தகங்கள் தொடர்பான நிகழ்வுகளுக்கும் நான் செல்வதுண்டு. அதுபோன்ற நிகழ்வுகளுக்கு செல்லும் நண்பர்கள் யாராவது அழைத்தாலே போதும்.
     ஆனால் சமீபகாலமாக புத்தகவிமர்சனம் என்ற பெயரில் நடக்கும் கூட்டங்கள் பலவும் புத்தகவிமர்சனக் கூட்டங்களாகவே தெரிவதில்லை. வெளியீட்டுவிழாக்களும் விமர்சனக்கூட்டங்களும் எல்லாமே பாராட்டுவிழாக்களாகவே நடக்கிறது.
     உதாரணமாக இந்த வாரத்தில் தொடர்ந்து இரண்டு நிகழ்வுகளுக்கு சென்றிருந்தேன். கடந்த சனிக்கிழமை யாவரும் டாட்காம் நடத்திய தீபச்செல்வனின் புத்தகங்கள் பற்றிய கூட்டத்திற்கும் மற்றும் ஞாயிற்றுக் கிழமை நடந்த லட்சுமி சரவணகுமாரின் புத்தகங்கள் பற்றிய கூட்டத்திற்கும் சென்றிருந்தேன். அதற்கு முந்தைய வாரக்கடைசியில் அகரமுதல்வனின் புத்தகம் பற்றிய கூட்டத்திற்கும் சென்றிருந்தேன். இவை எல்லாமே ஒரே அரங்கில் தான் நடந்தது என்பதைவிட அதிகமாகவே எல்லா கூட்டங்களிலும் பாராட்டுவிழாக்களுக்கே உரித்தான பல ஒற்றுமைகளை பார்க்க முடிந்தது.
     குறிப்பாக ஈழத்து எழுத்துக்கள் பற்றிய விமர்சனக்கூட்டமாக இருக்கும்போது இந்த போக்கு இன்னும் மேலோஙகியே பார்க்க முடிகிறது. லிவி என்ற ஒரு நண்பர் இதை பற்றி பலகூட்டங்களில் எடுத்தச்சொல்வதை நானே கவனித்திருக்கிறேன். அப்போதெல்லாம் மவுனமாக பார்த்துக்கொண்டு இருப்பதுதான் என்னுடைய வழக்கம். ஆனால் இப்பொழுதேனும் அந்த மவுனத்தை கலைக்காமல் இருந்தால் என் மனசாட்சிக்கு நானே துரோகம் செய்ததுபோல ஆகிவிடும். அதனால்தான் இப்போது இதை இங்கே பதிவு செய்கிறேன்.
     ஒரு புத்தகத்தை விமர்சனம் செயவது என்பது அதை வாசகர்களுக்கு அறிமுகம் செய்வது மட்டுமல்ல, பாராட்டுவது மட்டுமல்ல, அந்த புத்தகத்தின் நிறைகுறைகளை சுட்டிக்காட்டவும், இனிவரும் படைப்புகளில் அந்த நிறைகளை வளர்க்கவும் குறைகளை தவிர்க்கவும் உதவுவதற்குத்தான். அப்படி செய்தால்தான் இதுபோன்ற கூட்டங்கள் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
     இங்கே ஒரு விஷயத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும். இதுபோன்ற விமர்சனக்கூட்டங்களில்  வழக்கமாக எழுத்தாளர்கள் விமர்சனங்களை ஏற்பதாகவே தெரிவதில்லை. யாராவது லேசாக குறைகளை எடுத்துச்சொன்னால்கூட அதை ஆக்கப்பூர்வமான விமர்சனமாக எடுத்துக்கொள்ள மனமில்லாமல் குற்றச்சாட்டாகவே பார்க்கின்றனர். அவற்றிற்கு பதிலாக தன்னிலை விளக்கம் அளித்து நியாயப்படுத்த முயற்சிப்பதையே காணமுடிகிறது.
     விமர்சிப்பவர்களும் எழுத்தாளரின் பின்புலம் , அவர்களுடன் கொண்ட நட்பு போன்ற விஷயங்களை மனதில்வைத்துதான் புத்தகத்தைப்பற்றி பேசுகின்றனர். விமர்சிப்பவர்கள் இப்படி இருக்கும்போது எழுத்தாளர்கள் அப்படி இருப்பதில் அதிசயம் இல்லை. (அதுவும் தன்னுடைய புத்தகத்திற்கு எழுத்தாளரே விமர்சனக் கூட்டம் நடத்தவேண்டிய சூழ்நிலையில் தமிழகத்து எழுத்தாளர்கள் இருக்கும்போது!)
     இந்த நிலையில் ஈழத்து எழுத்துக்களை யாரும் விமர்சிப்பதே இல்லை. ஈழத்தில் தற்பொழுது இருக்கும் நிலையில் ஈழத்து எழுத்துக்களையும் ஈழத்தைப்பற்றிய எழுத்துக்களையும் ஊக்குவிப்பது நம்முடைய கடமைதான். ஆனால் அனுதாபத்தை காட்டுகிறோம் என்று, எழுத்தாளருக்கு நல்லது செயவதாக நினைத்து உண்மையாக விமர்சிக்காமல் வெறுமெனே பாராட்டிவிட்டு செல்வதால் இதுபோன்ற விமர்சனக்கூட்டங்களால் எந்த பிரயஜனமும் இல்லாமல் போகிறது என்றே எனக்குத் தோன்றுகிறது.
(தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஈழத்தைப்பற்றி பேசிப்பேசியே ஈழத்துமக்களை கைவிட்டதைப்போல.)
     நிறைய படித்த, தகுதிபெற்ற விமர்சகர்கள் பல புத்தகங்களை ஒப்பிட்டு தங்கள் விமர்சனங்களை வைக்கலாம். அதுதான் சிறப்பு. அது முடியவில்லை என்றால் நண்பர்களான படைப்பாளிகள் அந்த பொறுப்பை ஏற்கலாமே. அதுவும் இல்லையென்றால் ஒரு சாதாரண வாசகனாக நிறைகளை சுட்டிக்காட்டி பாராட்டவும் குறைகளை எடுத்துச்சொல்லி ஊக்குவிக்கவும் செய்தால் அதுவே நல்லதொரு விமர்சனமாக இருக்குமே. அதுதானே அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
     எழுத்தாளனே ஏற்காமல் போனாலும்கூட கூட்டத்திற்கு வரும் மற்ற எழுத்தாளர்களுக்கும் புதியதாக எழுதுபவர்களுக்கும் அந்த விமர்சனங்கள் மிகவும் உதவியாக இருக்கும். புத்தகவிமர்சனங்களின் உண்மையான இலக்கு அதுதானே. அதுவாகத்தான் இருக்கவேண்டும்.
     இதை இனிமேல் புத்தக விமர்சனக்கூட்டங்கள் நடத்துபவர்களும் அந்த கூட்டங்களில் பேசுபவர்களும் மனதில் கொள்ளுவார்கள் என்று நம்புவோம்.              

No comments:

Post a Comment

Let others know your opinions about this post