Thursday 2 May 2013

சினிமா விமர்சனம்



     புத்தகவிமர்சனம் என்ற பெயரில் என்னுடைய அபிபிராயத்தை இங்கே பதிவு செய்யும்போது என் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருந்த இன்னொரு விஷயம் சினிமா விமர்சனம்.
     முன்பெல்லாம் சினிமா விமர்சனம் என்பது தினசரி பத்திரிக்கைகளிலும் பருவ இதழ்களிலும் வரும் விமர்சனங்கள்தான். அந்த விமர்சனங்களுக்கு அந்தந்த பத்திரிக்கைகளுக்கு ஏற்றபடி தரமும் தனித்துவமும் இருந்தது. அதற்கேற்றவாறுதான் மக்களும் அந்த விமர்சனங்களை ஆதரித்து வந்தார்கள்.
     அதன்பிறகு சின்னத்திரையின் ஆதிக்கம் வந்தது. திரைவிமர்சனம் என்ற பெயரில் தொலைக்காட்சியில் குறிப்பாக தனியார் தொலைக்காட்சிகளில் வந்த திரை விமர்சனங்கள் வரத்துவங்கியது. இப்பொழுது இணையதளத்தின் மூலமாக திரைப்பட விமர்சனங்கள் வர ஆரம்பித்து பெரிய அளவில் மக்களிடம் பிரபலமாகியிருக்கிறது.
     ஆனால் எல்லா விமர்சனங்களுக்கும் ஒரே வடிவம் தான் காணப்படுகிறது. எழுத்து நடையில் மட்டும் தான் ஒன்றுக்கொன்று கொஞ்சமாவது வித்தியாசம் தெரிகிறது.
எந்த படத்தின் விமர்சனமாக இருந்தாலும் முதலின் அந்த படத்தின் கதையின் சுருக்கத்தை எழுதுவாருகள். பிறகு நடிகர்கள் பற்றியும் அவர்களுடைய நடிப்புபற்றியும் தங்களுக்கு பிடித்ததை எழுதுவார்கள். அதன் பிறகு இயக்குநர்கள் பற்றி ஒருசில காட்சிகளை சுட்டிக்காட்டி ஒரு சில வரிகளில் குறிப்பிடுவார்கள்.
அதை தொடர்ந்து ஒளிப்பதிவு சூப்பர், எடிட்டிங் அங்கங்கே ஸ்லோவாக இருக்கிறது போன்ற கருத்துக்களை எழுதுவார்கள். (திரைப்படத்தின் தொழில்நுட்பங்கள் எங்களுக்கும் தெரியும் என்று சொல்வதற்காக இவற்றை எழுதியே ஆகவேண்டும் என்ற எண்ணம் எல்லா திரை விமர்சகர்களுக்கும் இருக்கிறது என்று நினைக்கிறேன்.)
கடைசியில் சூப்பர், பரவாயில்லை, பாக்கலாம், மொத்தத்தில் மொக்கை என்பது போன்ற ஒற்றைவரி முடிவுகள்! படம் பார்த்த உடனேயே இதுபோன்ற ஒற்றைவரி முடிவு எழுதவேண்டும் என்று முடிவுசெய்தபின்தான் விரிவான விமர்சன்த்தை எழுத ஆரம்பிப்பார்கள். இதில் பத்திரிக்கைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
புத்தக விமர்சனங்களுக்கு சொன்ன கருத்துக்கள் சினிமா விமர்சனத்திற்கும் பொருந்தும் என்றே நான் நினைக்கிறேன்.
சினிமா விமர்சனம் என்றால் ஒரு சினிமாவை பார்த்து அதை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்வது   மட்டுமல்ல, பாராட்டுவது மட்டுமல்ல, அந்த படத்தின் நிறைகுறைகளை சுட்டிக்காட்டவும், இனிவரும் படைப்புகளில் அந்த நிறைகளை வளர்க்கவும் குறைகளை தவிர்க்கவும் உதவுவதற்குத்தான். அப்படி செய்தால்தான் இதுபோன்ற விமர்சனங்கள் கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
     விமர்சிப்பவர்களும் படம் எடுத்தவரின் பின்புலம் , அவர்களுடன் கொண்ட நட்பு போன்ற விஷயங்களை மனதில்வைத்துதான் படத்தைப்பற்றி பேசுகின்றனர். ஒன்று சினிமாவை பாராட்டி ஏதோ ஆதாயம் தேடுகின்றனர், அல்லது குற்றம் சொல்லியே தங்களுக்கு விளம்பரம் தேடுகின்றனர். இதற்கு விதிவிலக்காக உண்மையிலேயே சினிமாவை நல்ல முறையில் விமர்சிக்கவேண்டும் என்று விமர்சிப்பவர்களும் இருக்கின்றனர். ஆனால் அவர்களுடைய விமர்சனங்களும் பத்திரிக்கையில் அல்லது தொலகாட்சியில் முழுமையாக வெளிவருவதில்லை.
     இதனாலேயே என்னுடைய ஆதங்கத்தை இங்கே எழதவேண்டியிருக்கிறது. சினிமாவைப்பற்றி நன்றாக தெரிந்த, நிறைய படித்த, தகுதிபெற்ற விமர்சகர்கள் ஒரு படத்தை விமர்சிக்கும்போது பல திரைப்படங்களை ஒப்பிட்டு தங்கள் விமர்சனங்களை வைக்கலாம். அதுதான் சிறப்பு. அது முடியவில்லை என்றால் நண்பர்களான படைப்பாளிகள் அந்த பொறுப்பை ஏற்கலாமே. அதுவும் இல்லையென்றால் ஒரு சாதாரண ரசிகனாக பார்த்த படத்தின் நிறைகளை சுட்டிக்காட்டி பாராட்டவும் குறைகளை எடுத்துச்சொல்லி ஊக்குவிக்கவும் செய்தால் அதுவே நல்லதொரு விமர்சனமாக இருக்குமே. அதுதானே அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
     அந்த சினிமாவை எடுத்த இயக்குநர், தயாரிப்பாளர் போன்றோர் அந்த விமர்சனத்தை ஏற்காமல் போனாலும்கூட அதை படிக்கும் அல்லது பார்க்கும் மற்ற படைப்பாளிகளுக்கும் புதியதாக திரை உலகில் நுழைபவர்களுக்கும் அந்த விமர்சனங்கள் மிகவும் உதவியாக இருக்கும். திரைப்பட விமர்சனங்களின் உண்மையான இலக்கு அதுதானே! அதுவாகத்தான் இருக்கவேண்டும்.
     இனிமேல் சினிமாவுக்கு விமர்சனம் வெளியிடுபவர்களும் அதை எழுதுபவர்களும் இதை மனதில் கொள்ளுவார்கள் என்று நம்புவோம்.            

No comments:

Post a Comment

Let others know your opinions about this post