Tuesday 9 July 2013

நிகழ்ச்சி நிரல்


திரைப்பட இலக்கியச் சங்கமம் இதுவரை பத்து முறை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்திற்காக தயாரிக்கும் முன்னோட்டமாகவே (டிரைலர்) இவற்றை எடுத்துக் கொள்ளலாம். இந்த சங்கமங்களை கருத்தரங்கமாகவும், கலந்துரையாடலாகவும், தலைப்பு கொடுத்து பேசியும், தலைப்பு எதுவுமில்லாமல் பேசியும் இதுவரை நடத்திப் பார்த்துவிட்டேன்.
மற்ற பல விஷயங்களைப் போலவே இந்த விஷயத்திலும் சங்கமத்தைப் பார்க்க வரும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ஆசை இருப்பதைத் தெரிந்து கொண்டேன். அவற்றைத் தொகுத்து, அதற்கு ஏற்றார்போல எல்லோரும் ரசிக்கும்படியாகவும், விரும்பும் படியாகவும், பயனுள்ளதாகவும் ஆன ஒரு நிகழச்சியாக இதை தொடர்ந்து  நடத்த முடிவு செய்துள்ளேன்.
     முதலில் ஒவ்வொரு சங்கமத்தையும் திரைப்பட கலைஞர் (படைப்பாளி, நடிகர், தயாரிப்பாளர் அல்லது தொழில் நுட்பக்கலைஞர்) ஒருவருடைய சாதனைகளை அல்லது எழுத்தாளர் ஒருவருடைய படைப்புக்களை நினைவுகூறும் விதமாகமும் பாராட்டும் விதமாகவும்  நடத்த  திட்டமிட்டேன்.
     அதற்கு ஏற்றாற்போல ஒரு தலைப்பில் திரைப்படக் கலைஞர்களும் எழுத்தாளர்களும் மற்ற துறையினரும் பேசும்படி செய்தேன். தலைப்புகளும் பேச்சுக்களும் வித்தியாசமான கோணத்தில் இருப்பது நல்லது என்று நினைத்தேன். அதற்காக எல்லாமே வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று மரபுகளை மீற உத்தேசிக்கவில்லை. இதுவரை இல்லாத முறையில் தனித்துவமாக தெரிய வேண்டும் என்பதால் மட்டுமல்ல, இதுவரை யாரும் பார்த்திராத, பார்க்காமல் விட்டுப்போன, பார்க்க மறந்த விஷயத்தை சுட்டிக்காட்டவும் அதுவழி இன்றைய ரசிகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் அந்த கலைஞர்களையும் படைப்புகளையும் அறிமுகம் செய்வதும் தான் இதன் நோக்கம்.
     இதன் முதல் கட்டமாகத்தான் ஐந்தாவது சங்கமத்தில் ஸ்ரீதரின் சித்திரங்கள் என்ற தலைப்பில் இயக்குநர் ஸ்ரீதரைப்பற்றி அனைவரும் பேசினார்கள்.
     முதலில் யாருடைய படைப்புகளைப்பற்றி பேசலாம் என்று பல நண்பர்களிடம் கேட்டபோது, கிருஷணன் பஞ்சு முதல் மணிரத்னம் வரை- பல பெயர்களை சொன்னாலும்- அதிகமானவர்கள் விரும்பியது ஸ்ரீதருடைய படங்களைத்தான். (சிலர் அவருடைய படங்களை பார்த்திருக்கவில்லை என்றாலும் கூட). அதனால் தான் ஸ்ரீதரின் படங்களை முதலில் தேர்ந்தெடுத்தேன்.
பிரபலமானவர்களைப்பற்றியும் இன்னும் பிரபல மாகியிருக்க வேண்டியவர்களைப்பற்றியும் அவர்களுடைய படைப்புகள் பற்றியும் தொடர்நது வரும் சங்கமங்களில் அலசினோம். அதற்காக, 'முதலில் இவர், அடுத்ததுதான் இவர்என்று யாரையும் வரிசைப்படுத்துவதில்லை.
அடுத்த சங்கமம் 'உலக சினிமாவில் கலைஞர்' என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. இதில் முதல் பகுதியாக உலக சினிமா அரங்கில் கலைஞரின் படைப்புகள் பெற்ற இடம், கௌரவம் பற்றிய ஆய்வாகவும், உலக சினிமாக்களுக்கும் அந்த படைப்புகளுக்கும் உள்ள ஒப்பீடாகவும் இருக்கவேண்டும் என்றும் நினைத்தேன். அது  தமிழ் சினிமாவில் அந்த படைப்புகள் ஏற்படுத்திய தாக்கம், சமூகத்தில் ஏற்படுத்திய ஏக்கம், இலக்கியங்களில் ஏற்படுத்திய மாற்றம் போன்றவற்றை விளக்கும் விதமாக இருக்கும், கடைசியாக அந்த படைப்புகள் தற்கால சினிமாவிலும் இலக்கியத்திலும் சமூகத்திலும் எந்த வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அலசுவதாக இருக்கும் என்று நினைத்தேன்.
ஆனால் இந்த சங்கமங்களுக்கு நான் நினைத்தபடி போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. தமிழகத்தில் அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது என்பதாலேயே என்னமோ இதை அரசியலாக நினைத்து, அல்லது அரசியலாகக் கூடாது என்ற நல்ல எண்ணத்திலேயோ நிறைய நண்பர்கள் அதில் பங்குபெறவில்லை.
அதுவுமின்றி ஒவ்வொரு படைப்பாளியின் படங்களைப்பற்றி பேசுவது புதுமையல்ல, அது பல இடங்களில் பல தளங்களில் அவ்வப்போது நடைபெறுவதுதான் என்ற எண்ணமும் பல நண்பர்கள் வெளிப்படுத்தினார்கள்.
திரைப்படத்துறைக்கு வரும் புதியவர்களுக்கும் ஏற்கனவே இருப்பவர்களுக்கும் பயனுள்ளதான ஒரு நிகழ்வாக இந்த திரைப்பட இலக்கியச் சங்கமத்தை வளர்க்க வேண்டும் என்ற கோணத்தில் மீண்டும் சிந்திக்க ஆரம்பித்தேன்.
அதுவுமின்றி திரைப்பட இலக்கியம் என்றதும் நமக்கு சம்பந்தப்பட்டதல்ல என்று பல கலைஞர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் இந்த சங்கமத்திற்கு வர தயங்குவதை கண்டேன். இந்த குறையை தீர்க்க தற்பொழுது ஒரு வழி கிடைத்துவிட்டது. அதுதான் திரைப்பட தோழமை சங்கமம். மாதம் ஒரு முறை திரைப்பட இலக்கியச்சங்கமத்தையும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சிறப்பு திரைப்பட தோழமைச்சங்கம்த்தையும் நடத்த முடிவு செய்துள்ளேன்.   

திரைப்பட தோழமைச் சங்கமம் என்றாலே இப்படிப்பட்ட நிகழ்வுதான் என்று சொல்லும் வண்ணம் தற்பொழுது நிகழ்ச்சி அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு சங்கமத்திலும் கடந்த சங்கத்திற்கும் தற்பொழுதைய சங்கமத்திற்கும் இடைப்பட்ட நாட்களில் வெளிவந்த திரைப்படங்களைப்பற்றி இந்த சங்கமங்களில் விவாதிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment

Let others know your opinions about this post