Monday, 5 May 2014

என்னைப்பற்றி


புத்தகத்திற்குள் செல்வதற்கு முன்பு என்னைப்பற்றி சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன். இங்கே அது தேவையாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.
நான் பிறந்தது தமிழ்நாட்டில்.  வளர்ந்தது கேரளாவில். சிறுவயதிலிருந்தே எனக்கு திரைப்படங்டகள் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. இந்த விஷயத்தில் முக்கியமாக நான் என் தந்தைக்குதான் நன்றி சொல்லவேண்டும். அவர் ஒவ்வொரு வியாழக்கிழமையும் எங்கள் கிராமத்திலுள்ள வாரச்சந்தைக்கு செல்வது வழக்கம். தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் அனைவருக்கும் வியாழக்கிழமையின் முக்கியத்துவம் புரிந்திருக்கும்.
பொதுவாக தியேட்டர்களில் வெள்ளிக்கிழமை தான் புதிய படங்கள் திரையிட ஆரம்பிப்பார்கள். பட்டணம் மற்றும் நகரங்களில் உள்ள தியேட்டர்களில் புதிய படங்கள் வெளியாகும். கடந்த நூற்றாண்டில் பல படங்கள் தியேட்டர்களில் பலவாரங்கள் ஓடுவது வழக்கம். ஆனால் கிராமங்களில் ஒவ்வொரு வாரமும் படம் மாற்றப்படும். நாங்கள் வாழ்ந்தது தமிழ்நாடு, கேரள எல்லைக்கு அருகில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில்தான்.
எங்கள் கிராமத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் சற்று பெரிய கிராமம் இருந்தது. (இருபது வருட வளர்ச்சிக்கு பிறகு, இன்று அதை நாம் ஒரு சிறு பட்டணம் என்று சொல்லலாம். அப்படியென்றால் அந்த கிராமத்தின் அன்றைய நிலை பற்றி புரிந்து கொள்ளலாம்.) அங்கு ஒரு தியேட்டர் இருக்கிறது. அங்கு வெள்ளிக்கிழமைகளில் புதியபடங்கள் திரையிட ஆரம்பிப்பார்கள். புதிய படங்கள் என்றால் ரிலீஸ் சென்டர்கள் மற்றும் சிறு டவுண்களிலிருந்து ஷிப்ட் செய்யப்பட்ட படங்கள். அதாவது சினிமா உலக மொழியில் சொன்னால் அது ஒரு சிசென்டர். வெள்ளிக்கிழமை திரையிட அரும்பித்த படம் திங்கள் கிழமை வரை மட்டுமே ஓடும். பிறகு செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை வேறு பழைய படங்கள் திரையிடப்படும். அந்த தியேட்டரில் ஒரு வாரம் முழுவதும் ஒரு படம் ஓடினால் அது கண்டிப்பாக பட்டணங்களிலும் நகரங்களிலும் நூறுநாள் ஓடிய சூப்பர் ஹிட் படமாகத்தான் இருக்கும். அந்த வகையில் எப்படியும் வியாழக்கிழமைகளில் எங்கள் கிராமத்து தியேட்டரில் திரையிடும் படங்கள் நல்ல படங்களாகவே இருக்கும்.  
என் தந்தைதான் இந்த கருத்தை எனக்கு சொல்லித்தந்தார். வாரச்சந்தையில் காய்கறிகள் வாங்கிய பிறகு அந்த தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது அவருடைய வழக்கம். என்னையும் அவர் படம் பார்க்க அழைத்து செல்வார். அவர்தான் எனக்கு கதை சொல்லும் கலையையும் திரைப்படம் பற்றிய மற்ற பல விஷயங்களையும் சொல்லித்தந்தார்.
நாங்கள் கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில், தமிழ்நாட்டிலுள்ள கோயமுத்தூர் மாவட்டத்தின் எல்லையோரம் இருந்ததால் எங்கள்தியேட்டரில் தமிழ் மற்றும் மலையாள படங்கள் வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை திரையிட்டனர். பிறகு பழைய தமிழ் படங்கள் மற்றும் பிரபல ஆங்கில, ஹிந்தி படங்கள் செவ்வாய்கிழமை முதல் வியாழக்கிழமை வரை திரையிட்டு வந்தனர். அதனால் இந்த நான்கு மொழி படங்களையும் பார்க்கும் வாய்ப்பு எனக்கு சிறுவயதிலிருந்தே கிடைத்தது.
நான் கல்லூரியில் சேர்ந்த பிறகு, பாலக்காடு பட்டணத்தில் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். இந்த பட்டணத்துக்கு, மாவட்ட தலைநகருக்கு திரைப்பட உலகை பொருத்தவறையில் ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. நான்கு மொழிகளில் வரும் புதியபடங்களும் இங்கே வெளியிடப்படும். எண்பதுகளில் நான் எனக்காக ஒரு சர்வே எடுத்து பார்த்து ஒரு விஷயத்தை புரிந்து கொண்டேன். பாலக்காட்டில் ஒரு படம் ஒரு வாரம் ஓடுவது சகஜம். ஒரு வேளை ஒரு படம் இரண்டாவது வாரம் ஓடினால் அது சென்னையில் நூறு நாள்படமாக இருக்கும். 
ஒரு படம் இருபத்தைந்து நாட்கள் பாலக்காட்டில் திரையிடப்பட்டால் சென்னையல் அது வெள்ளிவிழா(25 வாரங்கள்) படமாக இருக்கும். பாலக்காட்டில் இருபத்தைந்து நாட்கள் தான் வெள்ளிவிழாவாக இருந்தது. அங்கே உள்ள சில பிரபல திரையரங்குகளில் அப்படி இருபத்தைந்து நாட்கள் ஒடி வெள்ளிவிழா கண்ட படங்களுக்கு கொடுக்கப்பட்ட ஷீல்டுகளை இன்றும் காணலாம்.
பாலக்காட்டில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களையும் பார்ப்பது என்னுடைய வழக்கம். நன்றாக படித்தால் படம் பார்ப்பதில் தவறிலலை என்று என் தந்தை அதற்கு அனுமதி அளித்திருந்தார். அந்த காலத்தில் நான் ஒரு நல்ல மாணவனாக இருந்தேன். அதனால் அப்பாவிடமிருந்து தடை வரவில்லை. அப்படி எண்பதுகளிலும் தொண்ணூறுகளின் முதல் பகுதியிலும் வெளியான அனைத்து படங்களையும் பார்த்தேன். அந்த காலம் தான் சினிமாவிற்கு குறிப்பாக தென்னகமொழி படங்களுக்கு பொற்காலம்!
அரவிந்தன், பரதன், பாலசந்தர், ராய், கட்டக் போன்றவர்களின் க்ளாஸ் படங்கள் முதல் ஐவி சசி, ஹரிஹரன், பாசில், எஸ்பி.முத்துராமன், பி.வாசு, மணிரத்னம், தாசரி, சுபாஷ்கை போன்றவர்களின் மாஸ் படங்களையும் பார்த்தேன்.
நான் சினிமாவின் தீவிர ரசிகன். அது கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின மசாலா படமாக இருந்தாலும் சரி அடூர் கோபாலகிருஷ்ணனின் கலைப்படமாக இருந்தாலும் சரி ஒரே நாளில் பார்ப்பேன்.
எனக்கு கதை எழுதும் திறமை இருக்கிறது. ஆனால் திரைத்துறைபற்றி எதுவும் தெரியாது. அதனால் முதலில் நான் சென்னைக்கு வந்து ஒரு எழுத்தாளர்-இயக்குனர் ஆக வாய்ப்பு தேடினேன். சில பிரபலங்களை சந்தித்தேன். எழுத்தாளர் வாய்ப்பும் கிடைத்தது. அது சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது மிக எளிது என்று என்னை நினைக்க வைத்தது. அதனால் நான் திரும்பி சென்றுவிட்டேன். விரைவில் ஒரு தயாரிப்பாளர் இயக்குநராகவே வந்து விடலாம் என்ற முடிவுடன்! 
எல்லா சாதாரண மனிதர்களின் வாழ்க்கையிலும் நடப்பது போல என் வாழ்க்கையிலும் பல திருப்பங்களும் மாற்றங்களும் நிகழ்ந்தது. நான் நினைத்தபடி பணம் சம்பாதிக்க என்னால் முடியவில்லை. என்னுடைய வியாபார வேலைகளில் அனைத்து வீழ்ச்சிகளுக்கும் சினிமா பார்க்கும் ஆர்வம் தான் காரணமானது. அதனால் அங்குள்ள வேலைகளை விட்டுவிட்டு 1996 ஜனவரி முதல் தேதி சென்னைக்கு திரும்பினேன். இந்த முறை வெற்றிபெறாமல் கிராமத்துக்கு திரும்புவதில்லை என்ற முடிவுடன் வந்தேன். தமிழ் படங்களில் கவனம் செலுத்த ஆசைப்பட்டேன். அதுவும் இந்த முறை மனைவி மக்களையும் உடன் அழைத்து வந்தேன். (இந்த இடைப்பட்ட காலத்தில் அது மட்டும்தான் என் வாழ்க்கையில் நேரத்திற்கு நடந்திருக்கிறது.)
ஒரு தெலைக்காட்சி தொடரிலும் பிறகு ஒரு படத்திலும் உதவி இயக்குநராக வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது. பிறகு துணை இயக்குநர், எழுத்தாளர். இணை இயக்குநர் படிப்படியாக வளர்ந்து விட்டேன். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப்படங்களில் வேலைசெய்தேன். ஆனால் அதிக நேரமும் கதைகளை எழுதி வைப்பதற்கும் குடும்பத்திற்காக சம்பாதிப்பதற்கும் செலவானது. அதற்காக மொழிபெயர்ப்பாளர், சென்சார் ஸ்க்ரிப்ட் எழுதுபவர் போன்ற பல பணிகளை செய்தேன். அதனால் ஒரு படத்தை இயக்கும்ட வாய்ப்பு மட்டும் இன்றுவிரை கிடைக்கவே இல்லை.
இதற்கிடையில் நான் திரைப்பட இலக்கியச் சங்கமம் (இதைப்பற்றிய விளக்கம் மறற தலைப்புகளில் இருக்கிறது) நிகழ்வை நடத்திவருகிறேன். தற்பொழுது என்னுடைய முதல் படத்தை தயாரித்து இயக்க ஆரம்பித்துள்ளேன்.

நான் என்னுடைய அனுபவங்கள் வாயிலாக இந்த பதினெட்டு வருடங்களல் கற்ற விஷயங்களை என் நண்பர்களும் பின்வருபவர்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். உண்மையில் திரைத்துறையில் வெறுமெனே வாழ்பவர்களுக்கு அல்ல, திரைப்படத்தில் வெற்றிபெற விரும்புவர்களுக்கும் திரைத்துறையில் இருப்பதற்காக எதையும் செய்ய துணிபவர்களுக்கும். இந்த கட்டுரைகள் அவர்களுக்கு ஒரு பாதையை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

No comments:

Post a Comment

Let others know your opinions about this post