Monday 6 July 2015

பஷீர் நினைவுநாள்



வைக்கம் முகம்மது பஷீரின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் மொழி பெயர்த்தது தான் என் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கவும், என் வாழ்க்கைப் பாதையை வேறு பாதையில் திருப்பவும் காரணமாக அமைந்தது.
திரைத்துறையில் இயக்குநராக வேண்டும் என்று பல வருடங்களாக போராடி வரும் நிலையில், அதற்காக மற்ற அனைத்து வேலைகளையும் தவிர்த்து வந்தாலும், கடந்த சில வருடங்களில் நடந்த பல நிகழ்வுகள் என்னை மீண்டும் இலக்கியப்பாதையில் இழுத்துச் சென்றது என்று சொன்னால் அது மிகையாகாது.
சிறு வயதிலேயே நான் திருக்குறளுக்கு என்னுடைய பாணியில் ஒரு உரை எழுதி வைத்திருந்ததை பார்த்த என் நண்பர் ஒருவர் ஊக்குவிக்க, அந்த உரையை அவசர அவசரமாக புத்தகமாக்கி வெளியிட்டேன். அது தான் இலக்கியவட்டத்தில் மீண்டும் என்னை இணைப்பதற்கான முதல் காரணமாக இருந்தது.
அந்த உரையை மேலும் திருத்தி, ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து “திருக்குறள் எளியகுறள்” என்ற பெயரில் மறு பதிப்பு செய்வதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
என்னுடைய எளியகுறளை பார்த்த சில நண்பர்கள், என்னை புத்தகங்களை மொழிபெயர்க்க அறிவுறித்தனர். அதன் அடிப்படையில் தற்பொழுது நான் சில புத்தகங்களை மொழி பெயர்த்துள்ளேன். அவற்றில் இரண்டு புத்தகங்கள் கடந்த வருடம் வெளியாயின. (காரல் மார்க்சின் கவிதைகள், கலீல் ஜிப்ரானின் ஏதன் தோட்டம்).
இதற்கிடையில், திரைப்படத் துறையையும் இலக்கியத் துறையையும் இணைக்கும் ஒரு முயற்சியாக நான் “திரைப்பட இலக்கியச் சங்கமம்“ என்ற நிகழ்வை தொடர்ந்து நடத்த ஆரம்பித்தேன், அது இந்த விஷயத்தில் மேலும் எனக்கு  ஊக்குவிப்பை அளித்தது.
இந்த நேரத்தில் நண்பர் வேடியப்பன் நான் முதன் முதலில் மொழி பெயர்த்த பஷீரின் வாழ்க்கை வரலாற்றையும் மற்றும் சில புத்தகங்களை வெளியிட முன்வந்து, அதன் வேலைகளும் நடந்து வருகிறது. அந்த மொழி பெயர்ப்புதான் அவர் என்னை இந்த நிகழ்வில் பேசுவதற்கு அழைக்கவும் காரணம் ஆயிருக்கிறது.
ஒரு வேளை வருங்காலத்தில் ஒரு இலக்கிய பேச்சாளராக மாறினால், அதற்கு இதுதான் விதை. அதற்கா தைரியத்தைத் தந்த பஷீருக்கும் வாய்ப்பைத் தந்த வேடியப்பனுக்கும் நன்றி.
நேற்றைய நிகழ்வில் என்னுடைய பேச்சில் தெரிந்த சொதப்பல்கள் யு.கே.ஜி. பையனின் தடுமாற்றம் தான். எல்.கே.ஜி.யில் சக்திஜோதியின் கவிதையைப் பற்றி ஒரு முறை யாவரும் டாட்காமின் நிகழ்வில் பேச முற்பட்டிருக்கிறேன். ஆனால் வேறு சில குடும்ப பிரச்சினைகளால் முழுவதுமாக பேச முடியவில்லை. அதனால் பரீட்சை எழுதாமலே, உண்மையை சொன்னால் சும்மா தேர்வு அறைக்கு சென்று வந்தாலேயே நான் வெற்றி பெற்றதாக வேல்கண்ணன் போன்றவர்கள் அறிவித்து விட்டார்கள். கடந்த வாரம் விஜய் மகேந்திரனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது கூட அந்த “எல்.கே.ஜி. சர்ட்டிபிக்கட்“டின் நகலை கொடுத்து என்னை பாராட்டுவதை பார்த்திருக்கிறேன். (அந்த நேரத்தில் என்னுடைய 32 பற்களும் சந்தோஷத்தில் துள்ளியதை அவர்கள் பார்க்கவில்லை.)
தற்பொழுது நேற்றைய நிகழ்விற்கு வருவோம். நான் பஷீரைப்பற்றிய சில மலையாள நூல்களைத் தேர்ந்தெடுத்து, குறிப்புகளை எடுத்து, பேசிவிடலாம் என்று எதற்கும் தயாராகத்தான் வந்திருந்தேன்.
நிகழ்வில் திரையிட மதிலுகள் கிடைக்காத பதட்டத்தில் வேடியப்பன் இருக்க, உடனடியாக நண்பர்களிடம் தேடி பால்யகாலசகியை திரையிடும் அவசரத்திலும் நிகழ்வு சொன்ன நேரத்தில் நடக்கும் நேரத்தை முறையாக பின்பற்றுவேன் என்று சொல்ல, அதைக் கேட்டு நான் அநாவசியமாக பயந்து பதட்டமடைந்துவிட்டேன். (நானும் பேசவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி காரணமாக இது ஒரு இலக்கியக்கூட்டம், சொன்ன நேரத்தில் ஒருபோதும் ஆரம்பிக்காது, முடியாது என்பதை நான் மறந்து விட்டேனோ?)
அதனால் எனக்கு ஒதுக்கப்பட்ட பத்தே நிமிடத்தில் எப்படி குறிப்புகள் எடுத்துவைத்த அனைத்து விஷயங்களையும் பேசுவது என்று முப்பது நிமிடம் யோசித்து, ஒரு சில குறிப்புகளை மட்டும் சொல்லலாம் என்றால் இந்த கிருஷணபிரபு வேறு.. நான் எடுத்து வைத்த குறிப்புகளையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து விரிவாகவே பேச, அதன் பிறகு மணிபாரதி வந்து தன் திறமையான நடிப்பால் மனதை கனக்க வைக்க, பிறகு நான் என்னதான் செய்வது. (இப்படி, பேசுவதற்கு தடுமாறியதன் காரணத்தை கண்டுபிடித்து எனக்கு நானே சமாதானம் செய்வதைத் தவி).
நல்ல வேளை கே.பி. அடூர் கோபாலகிருஷ்ணன் பற்றிய விஷயத்தை பேசும் போது சிறு தவறை செய்ய அதை திருத்துவது போல நான் பேசி, ஏதோ பேசியதாக கணக்கும் காட்டிவிட்டேன், கே.பி.யை பழிவாங்கவும் செய்து விட்டேன். (ஹிஹி.. )அடுத்தவர்களின் குறையை எடுத்துச் சொல்லும் போது மனதிற்குள் என்ன ஒரு ஆனந்தம், திருப்தி! ஒரு சில நிகழ்வுகளில் சில புதிய பேச்சாளர்கள் சிறு தவறான செய்திகளை சொன்னதும் (அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவர் பேச்சை பாராட்டுவார்கள் என்ற நிஜத்தை மறந்து அல்லது மறுத்து) சில பெரிய புகழ்பெற்ற எழுத்தாளர்கள் அழையாமலே வந்து மேடையேறி அந்த புதுப் பேச்சாளர்களின் குற்றத்தை “நக்கீரன்“ என்ற நினைப்பில் எடுத்துச் சொல்வது ஏன் என்று இப்போதுதான் எனக்குப் புரிகிறது. அதை புரியவைத்த கே.பி.க்கு நன்றி.
அப்படியே தொடர்ந்து பேசலாம் என்று நினைத்தால் கூட வேடியப்பன் அவையில் அமர்ந்த படி என்னை பார்ப்பது பட்டிமன்றத்தில் நடுவர் மணியடிப்பது போலவே தோன்றியது. ஒரு வேளை அதற்காகவே அவர் என்னை அப்படி பார்த்தாரா என்றும் தெரியவில்லை. அதனால் அத்தோடு என் உரையை வெகு சிறிதாக முடித்துக் கொண்டேன். இருப்பினும் மனம் வருந்திக் கொண்டிருந்தது.
பிறகு லக்ஷ்மி சரவணகுமார் பேசி முடித்தார். அந்த நேரத்தில் டீ வர இன்னும் தாமதமாகும் என்று வேடியப்பன் ஒரு அறிவிப்பை வெளியிட்டு, மேலும் சில நிமிடங்கள் யார் வேண்டும் என்றாலும் கலந்துரையாடலாம் என்று அனுமதியளித்தார்.
அது நான் எடுத்து வைத்த குறிப்புகளில் ஒரு சிலவற்றை பேச மீண்டும் ஒரு வாய்ப்பைத் தந்தது. கே.பி.யும் அதற்கு உதவி செய்தார். அதனால் என் மனம் சற்று திருப்தியடைந்தது. உண்மையில் அந்த வாய்ப்பை தந்தது அந்த டீக்கடைக்காரர் தான். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.
அந்த நன்றியை நேரடியாக சொல்லலாம் என்று டீக்கடைக்கு செல்ல நினைத்தேன். பிறகு அதை வேண்டாம் என்று தவிர்த்தேன். வழக்கமாக இதே அரங்கில் பல இலக்கியக் கூட்டங்களில் சிலருடைய பேச்சை டீக்கடைக்காரராவது குறுக்கே வந்து முடிக்க மாட்டார்களா என்று பலரும் நினைப்பதுண்டு. (நானும்தான்).       
இந்த நிலையில் நான் அந்த டீக்கடைக்காரரை நேரடியாக சென்று பாராட்ட, அவர் அதையே வழக்கமாக்கி விட்டால்? அந்த பயத்தில் நிகழ்வு முடிந்து திரும்பும் பொழுது, தம்பி அகரமுதல்வனுடன் அந்த கடைப்பக்கம் திரும்பி பார்க்காமலேயே வந்து விட்டேன்.
இரவில் நடந்து வரும்போது இதை எழுதவேண்டும் என்று தோன்றியது. அதன் பலன்தான் இந்த குறிப்பு.
ஒரு வேளை நான் மொழி பெயர்ப்பை ஆரம்பிக்க, மேடையில் விரும்பி பேச, தூண்டுதலாக இருந்த பஷீர்தான் என்னை நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி எழுதவும் தூண்டுகிறாரோ! 


(பி.கு.- பஷீரைப்பற்றி பேசுவதற்காக எடுத்து வைத்த குறிப்புகளை தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். இங்கே அது நாளை..)

No comments:

Post a Comment

Let others know your opinions about this post