Wednesday 30 March 2016

பிச்சைக்காரன் மற்றும் தோழா



திரைப்பட இலக்கியச் சங்கமம் தன்னுடைய வளர்ச்சிப்பாதையில் அடுத்த கட்டத்தை அடைந்திருக்கிறது. இது திரு பாலுமகேந்திராவால் துவங்ப்பட்டு, திரு ஆர்.சி.சக்தி மற்றும் திரு ராம நாரயணன் அவர்களால் வளர்க்கப்பட்டு, ஆர்.கே.செல்வமணி, எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற ஆளுமைகளால் ஆதரிக்கப்பட்டு, பல திரைப்பட இலக்கிய நண்பர்களுடைய உதவியால் வளர்ந்துவருகிறது.
தற்பொழுது இந்த சங்கமம் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வெளிவரும் படங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களைப் பற்றிய சந்திப்புகளை நடத்திவருகிறது. அந்த வரிசையில், 2016 மார்ச்சு மாத சங்கமத்திற்காக பிச்சைக்காரன் மற்றும் தோழா ஆகிய இரண்டு படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மார்ச்சு மாதத்தில் வெளிவந்த 19 தமிழ் படங்களிலிருந்து, அந்த இரண்டு படங்களுடன் என்று தணியும்படமும் தேர்வு செய்யப்பட்டிருந்தது. அந்த படத்தின் இயக்குனர் திரு பாரதி கிருஷ்ணகுமாருடன் நடந்த உரையாடலின் அடிப்படையில், ‘என்று தணியும்படத்தை விரைவில் ஒரு முறை திரையிட்டு, அதை தொடர்ந்து அதைப்பற்றி ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதனால், தற்பொழுது மற்ற இரண்டு படங்களைப் பற்றி மட்டுமே விவாதிக்கப்படும்.
இரண்டு நல்லபடங்கள் இந்த சங்கமத்தில் பேசுவதறாக கிடைத்ததில் மிகவும் பெருமைப்படுகிறோம். இந்த சந்திப்பு, திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் பயணத்தில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் நம்புகிறோம்.
இந்த இரண்டு படங்களும் விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பெற்று, பாக்ஸ் ஆபிசில் உண்மையான ஹிட்படங்களாக மாறியிருக்கின்றன.
‘பிச்சைக்காரன்’ படத்தின் இயக்குநரான திரு சசி அவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். அதுபோல தோழா’ படத்தின் இயக்குநரான திரு வம்சி.பி அவர்களும் ஹைதராபாதிலிருந்து வந்து இந்த சந்திப்பில் கலந்துகொள்ள தன்னால் இயன்றவரை முயற்சிப்பேன் என்று சொல்லியிருக்கிறார். அவரும் சரியான நேரத்தில் வந்துவிடுவார் என்று நம்புகிறோம். தோழா படத்தின் வசனகர்த்தாவான முருகேஷ்பாபுவும் இந்த சந்திப்பில் பங்குபெறுவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பில், திரைப்படம் மற்றும் இலக்கியத்தில் பணியாற்றிவரும் நமது நண்பர்களான திரு சுரேகா மற்றும் திரு விஜயமகேந்திரன் ஆகியோர் இந்த படங்களைப்பற்றிய தங்கள் கருத்துக்களை முன்வைக்க உள்ளனர். நண்பர்களான திரு கேபிள் சங்கர் போன்றவர்கள் இந்த சந்திப்பில் பங்குகொண்டு சிறப்பு விருந்தினர்களுடன் மேடையில் கலந்துரையாடுவார்கள் என்று நம்புகிறோம்.
இவர்கள் அனைவரும் இந்த சந்திப்பில் தங்கள் கருத்துக்களை சொல்ல உள்ளனர். அதனால், இங்கு நான் இந்த படங்களைப்பற்றிய என் கருத்துக்களை தற்பொழுது எழுதுவதாக இல்லை. (சங்கமம் நடந்ததற்கு பிறகு எழுதுகிறேன்.)

இந்த சங்கமத்தை ஒரு மாபெரும் வெற்றியாக மாற்றிட, அனைத்து நண்பர்களின் வருகையையும் எதிர்பார்க்கிறேன்.

No comments:

Post a Comment

Let others know your opinions about this post