Wednesday, 1 June 2016

ஒரு எழுத்தாளனின் வருத்தம்




நண்பர்களே,
சென்னையில் 39வது புத்தகக் கண்காட்சி இன்று (1-6-16) இனிதே துவங்குகிறது. இதில் பங்குபெறும் பதிப்பகத்தாரர்களுக்கும், புத்தகங்களை படைத்த எழுத்தாளர்களுக்கும், அதைக் கண்டு, வாங்கி, படித்து ரசிக்க வரும் வாசகர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கடந்த ஜனவரியில் நடக்க வேண்டிய விழா இது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அந்த நேரத்திலேயே வெளிவரும் விதமாக நானும் நான்கு புத்தகங்களை எழுதியிருந்தேன். நான்குமே மொழி பெயர்ப்பு நூல்கள்தான்! (பஷீர் – வாழ்க்கை வரலாறு, கேரளத்தில் ஒரு ஆப்ரிக்கா, கலீல் ஜிப்ரான் கதைகள், பத்மராஜனின் இரண்டு திரைக்கதைகள்)
இந்த நான்கு புத்தகங்களும் டிஸ்கவரி புக் பேலஸ் மூலமாக வெளியிட தீர்மானிக்கப்பட்டு அதற்கான வேலைகள் துரிதமாக நடந்துவந்தன. எழுத்தாளன் என்ற முறையில் என்னுடைய பணிகளை முடித்து கடந்த ஆகஸ்டு மாதமே நான்கு புத்தகங்களையும் ஒரு முறை பிழைதிருத்தி கொடுக்கப்பட்டு விட்டன.
சென்னை மழை வெளத்தால் கண்காட்சி தள்ளிவைக்கப்பட்டபோது, இந்த புத்தகங்களை வெளியிடும் பணிகளும் தள்ளிவைக்கப்பட்டதாக நண்பர் வேடியப்பன் தெரிவித்திருந்தார்.
தற்பொழுது புத்தக கண்காட்சி துவங்கிவிட்டன. இதில் என்னுடைய எத்தனை புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன, அல்லது வருகிறதா என்பது கூட எனக்கு தெளிவாக தெரியவில்லை. எல்லாம் அந்த வேடியப்பனுக்கே வெளிச்சம்!
இந்த நான்கு நூல்களும் வெளியிடத்தயாராக உள்ளது என்று கடந்த வருடம் ஒரு முறை அவர் முகநூலில் பதிவிட்டார். அது என்னை சமாதானம் செய்வதற்காகத்தான் என்று தெரிகிறது. தற்பொழுது அந்த புத்தகங்களின் வெளியீடு எந்த நிலையில் இருக்கிறது என்றுகூட தெரியவில்லை. நானும் அதைப்பற்றி அதிகமாக வற்புறுத்தி கேட்கவுமில்லை.
ஆனால் புத்தக கண்காட்சி அருகில் வர வர, கடந்த வாரத்தில் சில இலக்கிய விழாக்களுக்கு செல்லும்போது, பல நண்பர்களும் இதைப்பற்றி என்னிடம் விசாரித்து வந்தனர். இப்போதும் விசாரிக்கின்றனர். அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
ஒரு புதிய எழுத்தாளர் இந்த தமிழ் சூழலில் எதிர்கொள்ள வேண்டிய பல பிரச்சினைகளில் இதுவும் ஒன்றுதான் என எனக்கு புரிகிறது. இருந்தாலும் நண்பர்கள் கேள்விகேட்கும் பொழுது, பதில் சொல்ல முடியவில்லை என்பதால் மனம் மிகவும் வருந்தத்தான் செய்கிறது.
அதனாலேயே நான் தற்பொழுது ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். இன்று ஆரம்பமாகும் புத்தக கண்காட்சிக்கு ஒரு வாரம் வரக்கூடாது என்று! கரணம் அங்கு வரும் நண்பர்கள் கண்டிப்பாக இதே கேள்வியை கேட்பார்கள். அதை தவிர்க்க இது ஒன்று தான் வழி. அதற்காக நான் இன்று கோயமுத்தூருக்கு செல்கிறேன். அடுத்த வாரம் புதன் கிழமை (8-6-16) அன்று திரும்பி வர திட்டமிட்டுள்ளேன். அதற்குள் என்னுடைய புத்தகங்களும் வெளிவந்து விடும் என்று நம்புகிறேன். அப்படி வந்துவிட்டால், 8ம் தேதி முதல் நண்பர்களை சந்திக்கிறேன். இல்லையேல், மீண்டும் ஒரு வாரம் வேறு பணிகளில் நேரத்தை செலுத்த வேண்டியதுதான். கண்காட்சி முடிந்த பின் சந்திக்கலாம்.

என் மீது கொண்ட அக்கரையினால் இதைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

No comments:

Post a Comment

Let others know your opinions about this post