Monday 5 September 2016

ஜோக்கர் வெற்றியும் திருப்தியும்





திரைப்பட இலக்கியச் சங்கமத்தின்சார்ப்பாக மாதம்தோறும் நடந்துவரும் கலந்துரையாடல் தொடரில் ஆகஸ்ட் மாதப் படங்களுக்கான கலந்துரையாடல் நடத்துவதற்கு முன்பு நேற்றைய தேதியில் (3-9-16) ‘திரைப்படம் தயாரிப்பாளர்களின் கலைஎன்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்துவதற்குத்தான் முடிவு செய்திருந்தேன்.
பிறகு வழக்கமாக மாதம்தோறும் நடக்கும் கலந்துரையாடலை தவிர்க்க வேண்டாம் என்று கலந்துரையாடலுடன் கருத்தரங்கமும் சேர்ந்து நடத்தலாம் என்று நிகழ்ச்சி நிரலை மாற்றியிருந்தேன். அப்படித்தான் முகநூலில் அழைப்பிதழும் பதிவேற்றியிருந்தேன்.
வழக்கம் போலவே இந்த மாதப்படங்களில் இருந்து ஜோக்கர்மற்றும் தர்மதுரைஆகிய படங்களை இதற்காக தேர்வு செய்திருந்தேன். அதேபோலவே அவற்றின் இயக்குநர்களையும் அழைத்திருந்தேன். வழக்கமாக வெற்றிபெற்ற இயக்குநர்கள் சொல்வதுபோலவே பிசியாக இருக்கிறோம் முடிந்தால் வருகிறோம் என்றுதான் பதில் சொன்னார்கள். வழக்கம்போலவே நானும் அதைப்பற்றி கவலைப்படாமலும், அவர்களை அதிகமாக வற்புறுத்தாமலும், நிகழ்வுக்கு வரும் நண்பர்களை பேசவைத்தே கலந்துரையாடலை நடத்த தீர்மானித்திருந்தேன்.
இருப்பினும் தயாரிப்பாளர்கள் பற்றிய கருத்துக்களை சொல்ல ஆசைப்பட்டதனால் இந்த படங்களின் தயாரிப்பாளர்களை அழைக்க நினைத்தேன். அதன்படித்தான் திரு எஸ்.ஆர்.பிரபு மற்றும் திரு ஆர்.கே.சுரேஷ் ஆகியோரை அழைத்தருந்தேன். (அதுவும் கடைசி நேரத்தில்.) இருவரும் நிகழ்வுக்கு வருவதாக ஒப்புக்கொண்டனர்.



நிகழ்ச்சி திட்டமிட்ட நேரத்தில் ஆரம்பிக்கவும் தயாராக இருந்தேன். ஆனால் எதிர்பாராமல் வந்த மாலைநேரத்து மழை திட்டங்களை மாற்றியமைக்க வைத்தது. கடும் மழை பெய்ததால் நண்பர்கள் பலரும் வரமுடியாமல் போய்விட்டது. அதேநேரம் சொன்ன நேரத்திற்கு முன்பாகவே எஸ்.ஆர்.பிரபு அவர்கள் வந்துவிட்டார். ஆனால் காரிலிருந்து கீழே இறங்கக்கூட முடியாத அளவு மழை!
தாமதமாகத்தான் நிகழ்வை ஆரம்பிக்க வேண்டியிருந்து. பல நண்பர்களும் மழையில் நனைந்தபடியே வந்திருந்தனர். தம்பி அகரமுதல்வனும் நண்பர் தமிழ்பாலனும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து நிகழ்ச்சியை ஆரம்பிக்க உதவினார்கள்.
சற்று தாமதமாக எஸ்.ஆர்.பிரபு அவர்கள் அரங்கத்திற்கு வந்துசேர்ந்தார். மழை காரணமாக திரு ஆர்.கே.சுரேஷ் அவர்களால் சொன்னபடி வர இயலவில்லை.
இரண்டு திரைப்படங்கள் பற்றியும் நண்பர்கள் பேச, தயாரிப்பாளர்கள் நிலைபற்றி சுருக்கமாக நான் பேச ஆரம்பிக்க, அதே நேரம் எஸ்.ஆர்.பிரபு அவர்கள் வந்தபின்பு ஜோக்கர் பற்றி மட்டுமே அனைவரும் பேசினோம். எஸ்.ஆர்.பிரபு அவர்களிடம் அனைவரும் கலந்துரையாடினோம்.



வழக்கமாக இயக்குநர்களிடம் மட்டுமே கலந்துரையாடல் நடப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் தற்பொழுது ஒரு தயாரிப்பாளரிடம் கலந்துரையாடல் நடந்தது எனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.
இதற்கு முக்கிய காரணம், எஸ்.ஆர்.பிரபு அவர்கள் வெறும் முதலீட்டாளர் அல்ல உண்மையிலேயே ஒரு தயாரிப்பாளர் என்பதுதான்!
நண்பர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் மட்டும் அல்ல, ஒரு படைப்பாளிபோலவே அவர் பதில்களை தந்தார். அவருடைய எளிமை, பண்பான பேச்சு, அனுபவம் (இத்தனைக்கும் மிக இளய வயதுதான்), சமூக அக்கரை, திரைப்படத்தின் மீது அவருக்கு உள்ள ஈடுபாடு, வியாபாரத்தில் உள்ள திறமை அனைத்தும் அவருடைய பேச்சிலும் பதில்களிலும் நிறைந்து காணப்பட்டன.
வந்திருந்த அனைவருக்கும் இது முழு திருப்தியை அளித்தது என்றால் அது மிகையல்ல. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நிகழ்வை இவ்வளவு திருப்தியாக நடத்தியதில் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்லமுடியாது.
இந்த வெற்றி திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு மிகவும் ஊக்கம் தருகிறது. மாதம் ஒரு முறை நடத்திவரும் திரைப்படங்களுக்கான கலந்துரையாடலை தொடர்ந்து நடத்துவதோடு, தயாரிப்பாளர்களின் ஒரு சந்திப்பை மாதம் ஒரு முறை நடத்தவும் இது என்னை தூண்டுகிறது.
அதுவும் நடக்கும் என்று நம்புகிறேன். அப்படி ஒரு நிகழ்வு திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் லட்சியங்களில் ஒன்று மட்டுமல்ல காலத்தின் கட்டாயம் என்றே நினைக்கிறேன்.
இந்த வெற்றியையும், திருப்தியையும் தந்த எஸ்.ஆர்.பிரபு அவர்களுக்கு இதயம்கனிந்த நன்றி!
கடும் மழையிலும் வந்தி;ருந்து சிறப்பித்த நண்பர்களுக்கும், தம்பி அகரமுதல்வனுக்கும், தமிழ்பாலனுக்கும் நன்றிகள்!

மழையால் வர இயலாமல் போனாலும், அழைத்தவுடன் நிகழ்வுக்கு வர சம்மதித்து எனக்கு ஊக்கம் அளித்த திரு ஆர்.கே.சுரேஷ் அவர்களுக்கும் நன்றி!

No comments:

Post a Comment

Let others know your opinions about this post