நண்பர்களே,
வழக்கம்போலத்தான் இந்த முறையும் நிகழ்வை நடத்த திட்டமிட்டிருந்தேன். நண்பர்களை முகநூல் முலமாகவும் மற்ற விருந்தினர்களை தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் மூலமாகவும் அழைக்கும் பணிகளும் நடந்துகொண்டிருக்கின்றன.
நமது நிகழ்வு நடக்கும் அதே நாள், அதே நேரம், வேறு ஒரு நிகழ்ச்சியில் இம்மாத நிகழ்விற்காக நாம் தேர்ந்தெடுத்த படங்களின் (குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை) இயக்குநர் பங்குபெற உள்ளதாக இன்று முகநூலில் ஒரு அழைப்பிதழை பார்த்தேன்.
அதனால் ஒரு விஷயம் நன்றாக தெரிகிறது. கண்டிப்பாக நமது நிகழ்வில் அந்த இயக்குநர் பங்குபெற வாய்ப்பில்லை!
இதற்கு முன்பும் இதேபோல இருமுறை நேர்ந்திருக்கிறது. ‘விசாரணை மற்றும் கபாலி’ படங்களை நமது சங்கமத்தில் அலச தீர்மானித்தபோதும் அந்த இயக்குநர்கள் அதே நாளில் மற்றொரு நிகழ்வில் கலந்துகொள்வதை பார்த்திருக்கிறேன். இதில் என்ன விசேஷம் என்றால், அந்த மூன்று நிகழ்வுகளும் எனக்கு தெரிந்த நண்பர்கள் நடத்தும் நிகழ்வுகள்தான்!
கடந்த இரண்டு முறையும் நடந்தது போலவே இன்றும் இதை நினைத்து வருத்தப்பட்டேன். பிறகு யோசித்தேன். ‘இதையே நமது சங்கமத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக பயன்படுத்தினால் என்ன’ என்று தோன்றியது.
படைப்பாளிகளுடன் (குறிப்பாக இயக்குநர்களுடன்) கலந்துரையாடுவது ஒரு ரகம். அது இப்படி பல நிகழ்வுகளில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. படைப்புகளைப்பற்றி ரசிகர்களும் விமர்சகர்களும் கலந்துரையாடுவது இரண்டாவது ரகம். நாம் இரண்டாவது ரகத்தை பின்பற்றலாம்.
இயக்குநர்கள் நமது நிகழ்விற்கு வராததை நமக்கு சாதகமாக்க முடிவு செய்துள்ளேன். இயக்குநர் இல்லை என்பதால் இந்த படங்களைப்பற்றி நாம் அனைவரும் மனம் விட்டு விமர்சிக்கலாம். பாராட்டலாம். கருத்துக்களை பரிமாறலாம்.
இதனால் அனைவருக்கும் (அளவாக) பேச வாய்ப்பு தரலாம்!
படங்களைப்பற்றி அனைத்து விஷயங்களையும் (கவுரமாக) பேச வாய்ப்பு தரலாம்.
இதை நாம் கடந்த சில சங்கமங்களில் அனுபவித்து ரசித்திருக்கிறோம்.
இந்த முறை தொடர்ந்து இந்த நிகழ்விற்கு வரும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
(உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.)
அதற்காக நண்பர்கள் அனைவரும் தேர்ந்தெடுத்த படங்களை பார்த்துவிட்டு வரவேண்டும்! ‘திருட்டு விசிடி’யிலாவது பார்த்துவிட்டு வாருங்கள். இதுவே என் கோரிக்கை.
மற்றபடி இந்த நிகழ்வை படமாக்கினால் (வீடியோ) அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று பல நண்பர்கள் குறிப்பிடுகின்றனர். நிகழ்விற்கு வரும் நண்பர்களில் யாராவது இதற்கு உதவிசெய்தால் நன்றாக இருக்கும்.
வீடியோவை இணையத்தில் பதிவேற்றும் போது படமெடுத்தவர் பெயரை குறிப்பிட்டே ஏற்றுகிறேன்.
நண்பர்களே பரிசீலியுங்கள்! இது இன்னொரு கோரிக்கை.
மற்றபடி தயாரிப்பாளர்கள் பற்றிய கலந்துரையாடலும், புத்தகம் பற்றிய அறிமுகமும் திட்டமிட்டபடியே நடக்கும்.
நிகழ்வில் சந்திப்போம்.
No comments:
Post a Comment
Let others know your opinions about this post