Tuesday 20 December 2016

திரைப்பட உணவுக் கோட்பாடு





இந்த காலத்தில் எந்த ஒரு விஷயத்தைச் சொன்னாலும் அதை ஒரு சித்தாந்தத்தின் அல்லது கோட்பாட்டின் அடிப்படையில் சொல்லவேண்டும் என்று பலரும் அறிவுறுத்துகின்றனர். அந்த விதத்தில் நான் இங்கு சொல்லவரும் கருத்துக்களை நடைமுறையில் பேசப்படுகின்ற ஏதாவது ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் விளக்க முடியுமா என்று தெரியவில்லை.
நான் அனுபவித்த, கற்றுக்கொண்ட விஷயங்களை திரும்பிப் பார்க்கையில், இங்கே சொல்லவரும் விஷயங்களை ஒரு கருத்துடன் பொருத்திப்பார்க்க முடியும் என்று நன்றாகவே தெரிந்தது. அந்த கருத்தையே ஒரு கோட்பாடாக இங்கே குறிப்பிடுகிறேன்.
சினிமா என்கிற பொழுதுபோக்கு, கலை வடிவம் இந்திய மக்களிடம், அதிலும் குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் போன்ற தென்னக மாநில மக்களிடம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை சாதாரணமாக சொல்லிவிட முடியாது.
இவர்களைப் பொருத்தவரை திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு சாதனமோ அல்லது கலை வடிவமோ அல்ல. உயிர்கள் அனைத்திற்கும் சுவாசத்திற்கு அடுத்தபடியாக உணவு எந்த அளவுக்கு தேவையோ அப்படித்தான் மனிதனுக்கும் உணவு இருந்து வருகிறது.
இந்த மக்களுக்கு திரைப்படமும் ஒரு உணவுபோலத்தான் இருந்து வருகிறது. உணவுக்கு கொடுக்கும் மரியாதையைவிட இவர்கள் திரைப்படத்திற்கு தருகின்றனர். திரைப்படத்தை தங்களுடைய வாழ்வின் ஒரு பகுதியாகவே இவர்கள் உணருகின்றனர்.
மற்ற மாநில மக்களிடம் இந்த உணர்வு இந்த அளவுக்கு இல்லையென்றாலும், ஒரளவுக்கு இதே எண்ணம்தான் அவர்கள் மத்தியிலும் இருக்கிறது.
அதனால் திரைப்படத்தை மற்றநாடுகளில் உள்ளவர்கள் பார்ப்பதுபோல ஒரு பொழுதுபோக்கு சாதனமாக அல்லது கலைவடிவமாக மட்டும் பார்ப்பது சரியாகாது.
திரைப்படம் என்பது மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றுஎன்ற கோணத்தில்தான் பார்க்கவேண்டும்
இப்படியான ஒரு கோணத்தில் திரைப்படத்தை பார்க்கும்போதுதான், பல புதிய புதிய கேள்விகள் எழுகின்றன. அத்துடன் திரைத்துறைக்குள்ளேயே இருந்துவரும் பல கேள்விகளுக்கு விடைகளும் கிடைக்க ஆரம்பிக்கின்.
திரைப்படம் சார்ந்த எழுத்து, படைப்பு, ரசனை, விமர்சனம் என பல விஷயங்களை இந்த கருத்தின் அடிப்படையில் ஆராயந்தால் பல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
எத்தனையோ உணவு வகைகள் உலகில் இருக்கின்றன. சைவம், அசைவம் என்ற இரு பிரிவுகளில், எத்தனையோ சமையல் முறைகள்! எத்தனையோ உணவு பழக்கங்கள்! உணவுகள்!
அதைப்போலத்தான் திரைப்படத்துறையிலும் இருபிரிவுகளும், அதன் கீழ் பல விதமான படைப்புகளும் இருக்கின்றன.
இந்த கருத்துக்களை உள்ளடக்கித்தான் திரைப்பட உணவுக் கோட்பாடு என்றபெயரில் ஒரு அடிப்படை கோட்பாடாக இங்கே தருகிறேன். அதுதான் இது:
திரைப்படம் என்பது மனிதனுக்கு ஒரு உணவு, இந்த உணவை உட்கொள்ளாமல் மனிதன் வாழலாம், ஆனால் இந்த உணவின் பக்கவிளைவுகளை எதிர்கொள்ளாமல் யாராலும் இவ்வுலகில் வாழ முடியாது.”
(திரைப்படம் என்பது அனைத்து காட்சி ஊடகங்களையும் உள்ளடக்கியது.)
இந்த கோட்பாட்டின் அடிப்படையில் திரைத்துறையில் உள்ள ஏறக்குறைய அனைத்து விஷயங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த முடிகிறது என்பதில் ஐயமில்லை. தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் தேவைப்படும் இடங்களில் இது குறிப்பிடப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment

Let others know your opinions about this post