Friday 9 December 2016

மாற்றுப்பார்வை





மாற்றங்கள் - அவை மட்டும்தான் உலகில் மாறாதவைஎன்பது உலக நியதி.
காலமாற்றங்களுக்கு ஏற்ப மனிதனின் சிந்தனைகளும் ஒவ்வொரு விஷயத்திலும் அவன் கொண்ட பார்வைகளும் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன. உண்மையில் அப்படிப்பட்ட மாற்றங்களைத்தான் அறிவு வளர்ச்சி என்றே சொல்கிறோம்.
காரணம் இப்படிப்பட்ட சிந்தனை மற்றும் பார்வை மாற்றங்கள்தான் எல்லா கண்டுபிடிப்புகளுக்கும், வளர்ச்சி களுக்கும் அடிப்படையாக இருக்கின்றன.
மனிதர்களின் மாற்றுப்பார்வை என்பது எந்த ஒரு விஷயத்திலும் ஏதோ ஒரு தனிமனிதன் எடுத்துக்கொள்ளும் வித்தியாசமான ஒரு முயற்சியில் இருந்துதான் ஆரம்பமாகிறது.
வழக்கமாக எல்லோரும் பார்க்கும் கோணத்தை விட்டுவிட்டு மற்றொரு புதிய கோணத்தில் ஒருவர் பார்க்கும் போது அந்த விஷயத்தின் அடிப்படையே சிலநேரங்களில் வேறாக தெரியும்.
எல்லோரும் ஒரு விதமாக யோசிக்க அல்லது பழைய கோட்பாடுகளை பின்பற்ற, ஒருசிலர் வேறுவிதமான கோட்பாட்டை பின்பற்றும்பொழுது ஒரு தர்க்கரீதியிலான விவாதம் ஒவ்வொருவர் மனதிலும் எழுவதற்கான வாய்ப்பு உருவாகிறது.
அதன் விளைவாக, ஒன்று ஏற்கனவே பின்பற்றிவரும் மரபுரீதிதான் சிறந்தது எனத் தெரியும், அல்லது மரபுரீதியை விட்டு புதிய பாதைக்கு மாறவேண்டிய காலம் நெறுங்கிவிட்டது எனப் புரியும்.
இப்படி தெரிந்துகொண்ட அல்ல புரிந்துகொண்ட கருத்துக்களை பின்பற்றி நடக்க ஆரம்பித்தால், அதுவே உலகில் பல மாற்றங்களுக்கு மட்டுமல்ல சாதனைகளுக்கும் அடிப்படையாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
திரைத்துறையும் இந்த விஷயத்தில் விதிவிலக்கானது அல்ல. திரைப்படம் சம்பந்தமான பொதுவான ஒரு பார்வை ஆரம்பகாலத்திலிருந்தே இருந்து வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்ல, படைப்பாளிகளும் கூட சில பிம்பங்களை உருவாக்கிவிட்டு, அதை பெரிதாக பிரபலப்படுத்தி, அந்த பிம்பங்களை கடவுள் போல வழிபடுகின்றனர்!
என்றோ, எங்கோ, யாரோ சொன்ன கருத்துக்களை அலசாமல், ஆராயாமல் அப்படியே பின்பற்றுகின்றனர். அவற்றில் மிக முக்கியமானவை என்று மூன்று விஷயங்களைச் சொல்லலாம். குறிப்பிட்டுச் சொன்னால் மூன்று நம்பிக்கைகள்!
ஒன்று - திரைப்படம் என்பது இயக்குநர்களின் கலை என்று நினைப்பது,
இரண்டு - படங்களை கலைப்படங்கள், வியாபாரப் படங்கள் என இருவகைப்படுத்துவது,
மூன்று - இதுதான் நல்ல படம்என்று ஒரு படத்தை வரையறுப்பது.
இந்த மூன்று கருத்துக்களுமே வெறும் நம்பிக்கைகள் தானே தவிர மாற்றமுடியாத அல்லது திருத்தக்கூடாத சித்தாந்தங்கள் அல்ல.
இந்த நம்பிக்கைகளின் ஆதாரத்தை கேள்வி கேட்பதற்கு, புதிய கருத்துக்களை உருவாக்குவதற்கு, முதலில் தற்பொழுது திரைத்துறையில் உள்ள செயல்பாடுகள், நடைமுறைகள், நிலைமைகள் பற்றி தெரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது நம்பிக்கைகள் பற்றி தற்பொழுது இங்கே ஆராய்ச்சி நடத்த தேவையில்லை. முதலில் முதல் நம்பிக்கையையும் அதன் அடிப்படையில் திரைத்துறையில் உள்ள பிரச்சினைகளை ஆராய வேண்டும். காரணம் இதன் அஸ்திவாரமாகக் கொண்டுதான் மற்ற நம்பிக்கைகளிலும், அதன் தாக்கங்களிலும் ஒரு மாற்றத்தை கொண்டுவரமுடியும்.
அதனால் முதல் நம்பிக்கை சார்ந்த விஷயங்களை வழக்கமாக யாரும் பார்க்காத, அல்லது இதுவரை பார்க்கத் தவறிய கோணத்தில் பார்த்த்தனால் தோன்றிய புதிய கருத்துக்களை அடுத்த அத்தியாயங்களில் சுருக்கமாக காணலாம்.


No comments:

Post a Comment

Let others know your opinions about this post