Monday 25 December 2017

அருவி சிறப்பு ஆய்வரங்கம் மற்றும் கலந்துரையாடல் – ஒரு பார்வை




திரைப்பட இலக்கிய சங்கமம்  அருவி சிறப்பு ஆய்வரங்கம் மற்றும் கலந்துரையாடல்ஒரு பார்வை

திரைப்பட இலக்கிய சங்கமம்  அருவி சிறப்பு ஆய்வரங்கம் மற்றும் கலந்துரையாடல் 17-12-17 ஞாயிறு அன்று மாலை சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் வெற்றிகரமாக நடைபெற்றது.

திரைப்பட இலக்கிய சங்கமம் ஒவ்வொரு மாதமும் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து அதற்கான ஆய்வரங்கத்தை
நடத்துவார்கள். தேர்ந்தெடுக்கும் படங்கள் க்ளாஸ் மாஸ் என இல்லாமல் எல்லா ஜானர்களிலும் இருக்கும். அந்த வரிசையில் இந்த முறையும் நவம்பர் மாதம் வெளியான அறம், தீரன் அதிகாரம் ஒன்று, விழித்திரு ஆகிய படங்களுக்கான கலந்துரையாடல்
கூட்டம் நடத்தத்தான் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த வாரம் அருவி வெளியாகி, நல்ல படம் என்று பலதரப்பினராலும் விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், ஒரு நல்ல விஷயமாக, அந்த படத்திற்கு செய்யும் ஒரு உதவியாக,  உடனடியாக இந்த படத்திற்கு ஆய்வரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு கூட்டம் நடத்தப்பட்டது. இதை நிகழ்ச்சியில் சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர் கமலபாலா பா.விஜயன் அவர்கள் நிகழ்வின் துவக்கத்திலேயே தெரிவித்தார். நிகழ்ச்சியையும் அவரே தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அதில் நடித்திருந்த நடிகர்கள் பங்கெடுத்திருந்தனர். நிகழ்வை காணவந்த பலரும் கடைசி வரைக்கும் அமர இடம் கிடைக்காமல் நின்று கொண்டு பார்க்கும் அளவுக்கு அரங்கம் நிறைந்திருந்தது.

முதல் நிகழ்வாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த இயக்குநரின் அப்பா மற்றும் சகோதரி அவர்களை அழைத்து கவுரவித்தனர். அரங்கமே எழுந்து நின்று அவர்களுக்கு மரியாதை செய்தது. அது பார்ப்பதற்கு நெகிழ்ச்சியாகவும், புதிய அனுபவமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. இயக்குநரும் எதிர்பாராத அந்த நிகழ்ச்சியால் நெகிழ்ந்து போனார்.

படக்குழுவினரை அறிமுகம் செய்ய, முக்கியமாக அதில் நடித்திருந்த நடிகர்களை அறிமுகம் செய்ய சிறப்பு விருந்தினராக
வந்திருந்த, படத்தில் இயக்குநராகவே நடித்த கவிதா பாரதி அவர்கள் அழைக்கப்பட்டார். அவரும் நடிகர்கள், தொழில்நுட்ப
கலைஞர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் என அனைவரையும் அறிமுகப்படுத்தினார். பின்னர் தொகுப்பாளரும்
ஒருங்கிணைப்பாளருமான விஜயன் அவர்கள் ஒவ்வொருவரையும் பேச அழைத்தார். முதலில் அதில் நடித்த நடிகர்களை
பேச அழைத்தார்.

முதலில் படத்தில் அருவியின் அப்பாவாக நடித்திருந்த திருநாவுக்கரசர் பேசினார். பின்னர் சாமியராக நடித்திருந்த நடிகர் மற்றும் அதில் அரசியல்வாதியாக நடித்திருந்த மதன் பேசினார்கள். மூவரும் அவரவர் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அதன் பிறகு இணை இயக்குநர், மற்றும் எடிட்டரை பேச அழைத்தனர். ஆனால் அவர்கள் பேசவில்லை.

அதைத் தொடர்ந்து படத்தை பற்றிய ஒரு பாராட்டுரையை எழுத்தாளர் அகர முதல்வன் வழங்கினார். அதைத் தொடர்ந்து கேபிள் சங்கர் அவர்கள் படத்திற்கான பாராட்டையும், விமர்சனத்தையும் ஒரு சேர முன்வைத்தார். அதன் பின் மீண்டும் கவிதா பாரதி பேசினார். ஆனால் இம்முறை சிறப்பு விருந்தினராக பேசினார். படத்தை பற்றியும் அதில் நடித்த
அனுபவங்கள் பற்றியும் குறிப்பிட்டு சிறப்பான ஒரு உரையை நிகழ்த்தினார்.

கதாநாயகி அதிதி பாலன் அதன் பின் பேச அழைக்கப்பட்டார். படத்தில் பேசியது போல நீளமான வசனங்களாக இல்லாமல் அனைவருக்கும் நன்றி’ தெரிவித்து ஒரு வார்த்தையில் தனது உரையை முடித்தார். அடுத்ததாக இயக்குநர் அருண் பேசினார். பேசுவதற்கு சற்று தயங்கினார். அதனால் கலந்துரையாடலாக நிகழ்வு தொடர்ந்தது. அரங்கத்தில் அமர்ந்திருந்த
நண்பர்கள் கேள்வி கேட்க அனைத்திற்கும் பொறுமையாக பதிலளித்தார் இயக்குநர்.

அவரை தொடர்ந்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசினார். இயக்குநருக்கும் சேர்த்து படத்தை பற்றிய பல விஷயங்களை எடுத்துரைத்தார்.. படங்களுக்கான கதைத்தேர்வு செய்தது, வெளியிடுவதற்கு எவ்வளவு பொறுமை காத்தது, விளம்பரம் செய்தது என அனைத்து விபரங்களையும்
தெளிவாக விளக்கினார். ஜோக்கர் முதல் அருவி வரையில் படத்திற்காக தங்கள் கம்பனி செய்த விளம்பர செலவுகளை கூட வெளிப்படையாக சொன்னார்.. சமகால திரைப்பட தயாரிப்பு பற்றியும், தயாரிப்பாளர்களின் நிலைமை பற்றியும் எடுத்துரைத்தார். அவரிடமும் நண்பர்கள் கலந்துரையாடினார்கள். அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்தார்.

அப்படி கேள்வி கேட்கையில் ஒரு நண்பர் இந்த நிகழ்ச்சியை குறித்தும் இதுபோல நிகழ்வுகள் ஏன் பெரிய அளவில் நடப்பதில்லை என்றும் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளிக்கையில், திரைப்பட இலக்கிய
சங்கமத்தை பாராட்டியும், இப்படியொரு நிகழ்ச்சி திரைத்துறைக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், இதுபோல நிகழ்ச்சிகளை எவ்வாறு ஊக்குவிக்க வேண்டும் என்பதையும், நிகழ்ச்சி நடத்துபவர்களை எவ்வாறு ஊக்கப்படுத்த வேண்டும் என்பதையும் எடுத்து கூறினார்.

அவருடனான கலந்துரையாடலுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றதாக ஒருங்கிணைப்பாளர் அறிவித்தார்.

விசாரணை, ஜோக்கர், அறம் போன்று அவ்வப்போது நல்ல படங்கள் வெளிவரும்போது அந்த படங்களை பாராட்டும் பல நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் ஆங்காங்கே நடந்து வருவது அனிவருக்கும் தெரிந்த விழயம் தான்..
ஆனால் இங்கே புதியதாய் வெற்றிபெற்ற இயக்குநரின் பெற்றோரை அழைத்து பாராட்டியது சற்று புதிய அனுபவமாக இருந்தது. மனதிற்கு இதமாகவும் இருந்தது. மேலும் எல்லா பாராட்டு கூட்டங்களிலும் இயக்குநர் மற்றும் நடிகர்களை தான் அனைவரும் அழைப்பார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உட்பட.. ஆனால் திரைப்பட இலக்கிய சங்கமத்தில் மட்டும் தான்
இப்படி நல்ல படம் எடுக்கும் தயாரிப்பாளர்களையும் அழைத்து சிறப்பித்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியின் சிறப்பும் அதுதான்.
மீண்டும் இதுபோல் ஒரு நல்ல படத்துடன் இந்த சங்கமத்தில் சந்திக்க புதுப்படம் எடுக்கும் அனைத்து கலைஞர்களுக்கும், தொடர்ந்து நடத்த இந்த சங்கமத்திற்கும் வாழ்த்துக்கள்..

விஜிலா விஜயன்



17-12-17 அன்று நடந்த நிகழ்வில் போடோக்களையும் எடுத்து, நிகழ்வை பற்றிய ஒரு ரிப்போர்ட்டையும் அளித்த விஜிலாவுக்கு நன்றி..
நிகழ்வை படம் பிடித்து தந்த (சற்று தாமதமாக தந்தாலும்..) peoples consent network நந்தகுமாருக்கும் குழுவினருக்கும் நன்றி..
(அவர்களுக்கும் இது ஆரம்பம் தான்.. அதனாலேயே இந்த தாமதம்.. அதுவுமில்லாமல் எஸ்.ஆர்.பிரபு பேசுவது முழுமையாக பதிவாகவில்லை.. பேட்டரி தீர்ந்துவிட்டதாம்.. அதையும் மன்னிப்போம்.. குறிப்பாக பிரபு சாரை மன்னிக்கும்படி கேட்டுகொள்கிறேன்..)

-- கமலபாலா பா.விஜயன்     

No comments:

Post a Comment

Let others know your opinions about this post