Sunday 11 May 2014

பொழுதுபோக்கின் வரலாறு - தொடர்ச்சி..



மனிதனின் சிந்தனைகளை இவை மேலும் தூண்டிவிட்டன. பல பல புது கலை மற்றும் இலக்கிய படைப்புகள் உருவாயின. அவை மனிதனின் கற்பனை வளத்தை மேலும் வளர்க்க ஆரம்பித்தன. கலை இலக்கியங்களின் தூண்டுதலால் பல விஞ்ஞான கண்டுபிடிப்புகள் கூட உலகில் நிகழ ஆரம்பித்தன என்றால் மிகையாகாது.
மனிதனின் கற்பனையும் சிந்தனையும் புதுப்புது கனவுகளை தந்தது. கனவுகள் பல பரிசோதனை முயற்சிகளுக்கு தூண்டுகோலாக மாறியது. பரிசோதனை முயற்சிகள் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது.
சில பரிசோதனை முயற்சிகள் எதை நினைத்து செய்யப்பட்டதோ அதே பாதையில் வெற்றிப்பாதையில் செல்ல, சில முயற்சிகள் எதிர்பாராத பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்தது.
புத்தம்புதிய எண்ணங்கள்! புதிய கண்டுபிடிப்புகள்!
இவைதான் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்தில் பல துறைகளுக்கு வழிகளை திறந்துவிட்டது.
விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் வளர, புதிய புதிய கருவிகள் உருவாக, கலைகளும் இலக்கியங்களும் அந்த கருவிகளை தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்தி மேலும் பல பரிணாமங்களை கண்டது.
குகை ஓவியங்கள், தெருக்கூத்து, ஓலைச்சுவடி என ஆரம்பித்து சிற்பக்கலை, மேடை நாடகம், அச்சிட்ட புத்தகம் என வளர ஆரம்பித்தது.
இவை அனைத்துமே மனிதனின் பொழுது போக்குக்காகத்தான் உருவானது. இருப்பினும் சில ஞானிகள் தாங்கள் மனிதகுலத்திற்கு சொல்ல நினைத்ததை எளிமையாக சொல்ல இந்த பொழுதுபோக்கு சாதனங்களை பயன் படுத்த ஆரம்பித்தனர். இவற்றில் புதிய செய்திகளை உள்ளடக்கி அழகுடன் சொல்ல, அவை மேலும் பயனுள்ளதாக மாறியது. காவியங்களும் புராணங்களும் உருவாக ஆரம்பித்தது.
அவற்றில் அழகும் உள்ளடக்கமும் வலுப்பெற பல இதிகாசங்கள் உருவாகியது. இந்த காவியங்களும் புராணங்களும் இதிகாசங்களும் வெறும் பொழுதுபோக்கு என்பதை தாண்டி மனித சமுதாயங்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
அதன் தொடர்ச்சியாக வந்த நாடகங்கள் சமுதாய புரட்சிகளுக்கே உறுதுணையாக வளர்ந்தது என்பது இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு காரணம் இருந்தது. நாடகங்கள் மூலமாக மனிதர்கள் மனிதர்களுடன் நேரடியாக எண்ணங்களை பரிமாற முடிந்தது. வசனம், நடிப்பு, அரங்க அமைப்பு போன்றவை கூட இதில் முக்கிய பங்கு வகித்ததை அறிஞர்கள் புரிந்து கொண்டனர். அவற்றை மேலும் திறமையாக பயன் படுத்த ஆரம்பித்தனர். நாடகம்; என்ற இலக்கியத்தை நடனம் போன்ற கலைகளுடன் இணைத்து சிறந்த காட்சி ஊடகமாக மாற்றினார்கள்.
நாடகங்கள் உலகமெங்கம் வெகுவேகமாக வளர்ந்தது. பொழுதுபோக்கு என்ற பெயரிலேயே இவை சமூக அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது. இதை உணர்ந்துகொண்ட அறிஞர்கள் நாடகங்களை மென்மேலும் மெருகேற்ற விஞ்ஞான, தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆரம்பித்தனர்.
இதற்கிடையில்தான் ஒளியை பதிவு செய்யும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப் பட்டது. கேமராவும் சினிமாட்டோகிராபியும் படிப்படியாக வளர்ந்தது.
ஆரம்பத்தில் சிறு சிறு சித்திரங்களையும், இயற்கை அழகையும் பதிவு செய்ய ஆரம்பித்தவர்கள் பிறகு மனிதனின் அசைவுகளை பதிவு செய்ய அரம்பித்தனர். அதில் வெற்றி பெற்றதும் நாடகங்களை படமாக பதிவு செய்ய ஆரம்பித்தனர்.
சினிமா வளர ஆரம்பித்தது!
இலக்கியங்களை நாடகங்களாக மாற்றி, அவற்றை பதிவு செய்வதற்காகவே நடித்துக்காட்ட ஆரம்பித்தனர். அப்படி படமாக்கிய படங்களைக்காண மக்கள் ஆரவம் காட்டினார்கள். நாடகங்களை பார்ப்பதைவிட படங்களை பார்ப்பதில் ஒரு புதிய சுகத்தை அனுபவித்தார்கள்.
சினிமா மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறியது.
புராணங்களை தொடர்ந்து மற்ற எழுத்துக்களும் படமாக்கப்பட்டது. என்றும் புதுமைகளை விரும்பும் மனிதனுக்கு புராணங்கள் மட்டும் பார்த்தால் போதாது என்று தோன்றியது.
புதியதாக படம் எடுப்பதற்காகவே நாடகங்கள் எழுத ஆரம்பித்தனர். திரைப்படத்திற்காக புது புது உக்திகளை கையாண்டு, வசனங்களை விட காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுத ஆரம்பிக்க திரைக்கதை என்ற இலக்கியம் வளர ஆரம்பித்தது.
செய்திப்படங்கள், குறும்படங்கள், கதைப்படங்கள் என சினிமா வளர்ந்து விரிந்தது.
இந்த படங்களைக்காண மக்கள் காசு கொடுக்க முன் வர ஆரம்பித்தனர். சினிமா என்ற அதிசயத்தை வியாபாரமாக்கி திரைப்படத்தின் முன்னோடிகள் சம்பாதிக்க ஆரம்பித்தனர். அதைக்கண்ட பலரும் இந்த துறைக்கு வர ஆரம்பித்தனர்.
சினிமா என்பது ஒரு வர்த்தகமாக வளர்ந்தது. மற்ற அனைத்து கலைகளையும் இலக்கியங்களையும் தாண்டி பணம் சம்பாதித்து தரும் ஒரு துறையாக மாறியது.
தொடர்ந்து வந்த காலங்களில் கதைப்படங்கள் குறும்படங்களையும் செய்திப்படங்களையும் பின்னுக்கு தள்ளி பெறும் வர்த்தகமாக வளர, சினிமா என்றால் கதைப்படங்கள் என்ற வர்த்தகப்படங்கள்தான் என்ற நிலை பரவலாக உருவாகியது.

திரைப்படத்தை தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்ட தொலைக்காட்சியும் சினிமாவின் குழந்தையாகத்தான் வளர்ந்தது.

No comments:

Post a Comment

Let others know your opinions about this post