Saturday 17 May 2014

வர்த்தக சினிமா



திரைப்படத் தொழில்நுட்பத்தை தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்து, அதை தொடர்ந்து லூமியர் சகோதரர்கள் திரைப்படத்தை திரையிடும் வித்தையை கண்டுபிடித்து, முதன் முதலில் ஒரு படத்தை மற்றவர்கள் பார்ப்பதற்காக திரையிட்டு, அதை பார்க்க வருபவர்களிடம் பணம் வசூலிக்க ஆரம்பித்தார்களோ அன்றே சினிமா என்பது வர்த்தகம் ஆகிவிட்டது.
தங்கள் மனத்திருப்திக்காக சிலர் குறும்படங்கள் எடுப்பதுண்டு. தங்கள் கையிலிருந்து பணம் சிலவு பண்ணி எடுக்கும் அந்த படங்கள் வியாபார நோக்கு கொண்டவையாக இருக்காது. 
சிலர் இதேபோல் சில செய்திப்படங்களை எடுப்பதுண்டு. இதையும் வியாபாரப் படம் என்று சொல்லுவதற்கில்லை. சில குறும்படங்களும் செய்திப்படங்களும் தயாரித்தவர்கள் அதை பல அமைப்புகள் மூலமாகவும் வேறு சில வர்த்தக நிறுவனங்களின் உதவியாலும் வர்த்தக ரீதியில் திரையிட்டு பணம் சம்பாதித்து வருகிறார்கள் என்பதும் உண்மைதான். ஆனால் அதை ஒரு பொது விதியாக குறிப்பிட முடியாது.  
சில நேரங்களில் அரசாங்கம் அல்லது தொண்டு நிறுவனங்கள் ஏதாவது செய்தியை மக்களுக்கு சொல்வதற்கோ பரப்புவதற்கோ செய்திப்படங்களை அல்லது குறும்படங்களை தயாரித்து  வெளியிடுவதுண்டு. இதை பொது மக்களுக்காக செய்யும் ஒரு சேவையாக செய்கின்றனர்.
சில நிறுவனங்கள் தங்கள் விளம்பரத்திற்காக திரைப்படங்களை எடுத்து மக்களிடம் நேரடியாகவோ மற்ற ஊடகங்கள் மூலமாகவோ கொண்டு செல்வதும் வழக்கத்தில் உள்ளது. இவற்றையும் சாதாரணமாக மக்கள் திரைப்படங்கள் என்று சொல்வதில்லை. கதைப்படங்களைத்தான் வழக்கமாக மக்கள் திரைப்படங்கள் என்று குறிப்பிடுகின்றனர்.
பொதுமக்கள் பணம் கொடுத்து டிக்கட் வாங்கி பார்ப்பதற்காகத்தான் எல்லா கதைப்படங்களும் தயாரிக்கப்படுகின்றன. ஆகவே இவை அனைத்தும் வர்த்தக சினிமாக்கள் தான்
சிலர் சினிமாவை கலைப்படம், வர்த்தகப்படம் என்று இரண்டாக பிரித்து பேசுவார்கள். அவர்கள் பார்வையில் கலைப்படம் என்பது கலைத்தரம் வாய்ந்த க்ளீன் படமும், வர்த்தக படம் என்பது மசாலாக்களை நிரப்பிய பொழுது போக்கு படமும்தான்.
ஆனால் உண்மையில் இவை இரண்டும் கலைப்படம்தான்! வர்த்தக படமும்தான்!
கலைப்படம் என்று இவர்கள் கூறும் படங்களை யாரும் மனத்திருப்திக்காக எடுப்பதில்லை. இதையும் காசுக்காக விற்கத்தான் செய்கின்றனர். தியேட்டரில் டிக்கட் வாங்க கூட்டம் வரவில்லை என்றால் திரைப்பட விழாக்களில் பாஸ் வாங்க ஆட்கள் வருவதால்தான் இவை வெற்றி பெறுகின்றன.
பொழுதுபோக்கு மசாலா படங்களில் கலையும் இலக்கியமும் இருக்கிறது. அவற்றின் தரம் வேறாக இருக்கலாம். காரணம் அவை வெகு ஜனங்களின் ரசனைக்காக சில சமரசங்கள் செய்யப்பட்டது என்பதுதான்.
ஒரு விதத்தில் சொன்னால் இரண்டுமே ஹோட்டல் சாப்பாடுதான். ஒன்று தயிர்சாதம் என்றால் இன்னொன்று பிரியாணி. அவ்வளவுதான். சைவ உணவு சாப்பிட விரும்புபவர்கள் தயிர்சாதத்தை வாங்கி சாப்பிடுவார்கள். அசைவ உணவு சாப்பிட விரும்புபவர்கள் பிரியாணி வாங்கி சாப்பிடுவார்கள். சிலர் இரண்டையுமே ரசித்து சாப்பிடுவார்கள். ஆனால் சாப்பாட்டைப் பற்றி பேசும்போது, குறிப்பாக குறை கூறும்போது ஹைதராபாதி பிரியாணியையும் மலபார் பிரியாணியையும் ஒப்பிட்டு பேசலாமே தவிர, பிரியாணியையும் தயிர்சாதத்தையும் ஒப்பிட்டு, அது சிறந்தது இது கேவலமானது என்றெல்லாம் விமர்சனம் செய்வது சரியல்ல.
எல்லா வர்த்தக படங்களும் தயாரிப்பது ஒரே முறையில்தான். அதன் எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோரின் ரசனைக்கேற்ப அந்த படத்தின் தரம் முடிவு செய்யப்படுகிறது.

படத்தின் கதைக்கேற்ப அதை படமாக்கும் விதத்தில்தான் அது சிறிய பட்ஜெட் படமா பெரிய பட்ஜெட் படமா என்பது தீர்மானிக்கப்படுகிறது. என்னதான் சிறிய பட்ஜெட் படமானாலும் பெரிய பட்ஜெட் படமானாலும் எல்லாமே வர்த்தகப் படங்கள்தான்.

No comments:

Post a Comment

Let others know your opinions about this post