Saturday 10 May 2014

பொழுதுபோக்கின் வரலாறு



பொழுதுபோக்கின் வரலாறு மனிதகுலத்தின் வரலாற்றை விட மிகவும் பெரியது. பரிணாம வளர்ச்சியில் மனிதன் தோன்றுவதற்கு முன்பே பொழுதுபோக்கு என்பது தோனறி, வளர்ந்து பல பரிணாமங்களை கடந்து வந்துள்ளது!
அனைத்து உயிரினங்களும் - பசியெடுக்கும் நேரம் மற்றும் உறங்கும் நேரம் தவிர - மற்ற நேரங்களில் தங்கள் பொழுதை கழிக்கவும் ஓய்வு நேரங்களில் சந்தோஷமாக இருக்க ஏதாவது வழிகளை பின்பற்றுவது உயிரனத்தின் மறபு. அதன் ஆரம்பம் தான் ஒருவருடன் ஒருவர் விளையாடுவது.
எந்த ஒரு உயிரினமாக இருந்தாலும் அது தன்னுடைய வாழ்ககை சூழ்நிலைக்கு ஏற்ப தனது இணையுடன் விளையாடுவது வழக்கம். அது தங்கள் காதலுக்காக இருக்கலாம். அல்லது தனது இணையை தன்பால் ஈர்ப்பதற்காக இருக்கலாம். சந்தோஷத்தை வெளிப்படுத்தும் ஆட்டமாக இருக்கலாம் அல்லது அவர்களுக்குள் நடக்கும் ஊடலாக கூட இருக்கலாம்.
தாய் தன் குழந்தைகளின் பசியாற்றிவிட்ட பின் தன் பாசத்தை வெளிப்படுத்துவது அவர்களுடன் விளையாட்டு காட்டித்தானே! இதில் பறவை என்றோ மிருகம் என்றோ மனிதன் என்றோ எந்த வேறுபாடும் இல்லையே.
ஏன் வேட்டையாடும் போது கூட சில உயிரினங்கள் அதை ஒரு விளையாட்டாகவே ரசித்து செய்வதுண்டு. உதாரணத்திற்கு பூனை எலியை பிடிப்பதை குறிப்பிடலாம்.
உயிரினங்கள் பூமியில் தோன்றிது முதல் இந்த விளையாட்டுக்கள் காலகாலமாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 
உயிரினங்கள் தோன்றி எத்தனையோ கோடி ஆண்டுகள் பரிணாம மாற்றங்கள் ஏற்பட அந்த பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாக குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்.
உலகமெங்கும் மனிதன் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆரம்பித்தான். அதற்கு பரிணாம வளர்ச்சியால் பெற்றெடுத்த சிந்திக்கும் திறனை பயன்படுத்த துவங்கினான். வெற்றி பெறவும் ஆரம்பித்தான். உலகில் உள்ள அனைத்து இடங்களையும் உயிரினங்களையும் கட்டுப்படுத்தி தன் ஆதிக்கத்தை உறுதி செய்தான். 
மனிதகுலம் வளர்ச்சி அடைய அடைய அவன் உள்ளுக்குள் இருந்த பல மிருக குணங்களும் காலத்திற்கு ஏற்ப வளர ஆரம்பித்தது. மேற்சொன்ன விளையாட்டுக்களும் அதற்கு ஏற்றபடி பரிணாம வளர்ச்சி பெற்றது.
மனிதன் தன் புத்திசாலித்தனத்தை உணவுக்காக வேட்டையாடுவதில் மட்டுமல்ல, மற்ற உயிரினங்கள் மீதும், மற்ற மனிதர்கள் மீதும் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டவும் பயன்படுத்தினான்.
ஓய்வு நேரங்களில் மட்டுமன்றி வேட்டையாடும்போது கூட அதை சந்தோஷமாக ரசித்து செய்ய ஆரம்பித்தான். தன் புத்திசாலித்தனத்தை விளையாடுவதிலும் காட்ட புதிய புதிய விளையாட்டுகள் பிறந்தது.
ஒருவன் கண்டுபிடித்த ஆட்டத்தில் ஒருவித சந்தோஷம் இருப்பதைக் கண்டதும் மற்றவர்களும் அதை பின்பற்ற ஆரம்பித்தனர். அப்படி விளையாட்டுக்களும் மனிதர்களைப் போலவே உலகமெங்கும் இடம் பெயற ஆரம்பித்தன. அதை மீண்டும் மெருகேற்றவும் மீண்டும் தொடர்ந்து ரசிக்கவும் செய்திட சில வரைமுறைகளை ஏற்படுத்த ஆரம்பித்தான்.
இதுதான் உலகில் உள்ள அனைத்து விளையாட்டுகளின் அடிப்படையாக இருக்கிறது.
அந்த காலத்தில் எல்லா விளையாட்டுக்களும் மனிதர்களின் உடல்பலத்தை அடிப்படையாகக் கொண்டே வரையறுக்கப்பட்டு வந்தன. சிலர் வேகத்தை அடிப்படையாகக் கொண்டு விளையாட ஆரம்பித்தனர்.
இதுபோன்ற ஆட்டங்களால் ஈர்க்கப்படாத சிலர் இயற்கையின் அழகை ரசிப்பதில் அதே பொழுதுபோக்கையும் சந்தோஷத்தையும் காண ஆரம்த்தார்கள்.
சிலர் இயற்கையில் காணும் வண்ணங்களையும் ஒளி வடிவங்களையும் அதன் அழகையும் ரசிக்க ஆரம்பிக்க, சிலர் இயற்கையில் கேட்ட வெவ்வேறு ஒலிகளை ரசிக்க ஆரம்பித்தனர்.
தான் கண்ணால் கண்டு ரசித்ததை மனிதன் தன் மனதில் பதியவைக்க முயற்சித்தான். அவற்றை மணலில் வரைந்து பார்க்க முயற்சித்தான். சிலர் சிறு கற்களால் பாறைகளில் வரைய முயற்சி செய்தனர்.
ஒலிகளை ரசித்தவர்கள் தங்கள் குரலால் இயற்கையில் கேட்ட ஒலிகளை பின்பற்ற முயற்சித்தனர்.
கல்லிலும், மரங்களிலும் ஒலிகள் எழுப்பி இயற்கையில் கேட்ட ஒலிகளை பின்பற்றவும் புதுமையான ஒலிகளை எழுப்பவும் முயற்சித்தனர்.
இப்படியாக பூமியில் ஓவியங்களும் இசையும் தோன்ற ஆரம்பித்தது.
மனிதர்கள் தங்கள் எண்ணங்களை மற்றவர்களுக்கு பரிமாற ஒலிகளை பயன்படுத்தினர். தன் இணையை காதலிக்க, தன் தாய் அல்லது மற்ற உறவுகளிடம் பாசத்தைகாட்ட தங்கள் வாயிலிருந்து வரும் ஒலிகளை பயன்படுத்த ஆரம்பித்தனர்.
இதுதான் மொழிகளின் பிறப்பாக மாறியது.
சிலர் தங்கள் உடல் அசைவுகளால் எண்ணங்களை பரிமாற முற்பட்டனர். அவற்றை முறைபடுத்த சில அசைவுகளை குறியீட்டாக தொடர்ந்து பின்பற்றினர். இப்படித்தான் நடனம் போன்ற கலைகள் உருவாயின.
பலவித விளையாட்டுக்களும் நடனங்களும் மற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் உருவாகி வளர, அவற்றை மக்கள் ஒன்று கூடி அரங்கேற்றி ரசிக்க ஆரம்பித்தனர். அதன் வழியாக உலகில் வாழும் மனிதர்களின் ஒவ்வொரு குழுக்களுக்கும் தங்களுக்கே உரித்தான உற்சவங்களும் விழாக்களும் உருவாக ஆரம்பித்தன.
இந்த விளையாட்டுக்களையும் நடனங்களையும் விழாக்களையும் ஓவியர்கள் தங்கள் ஓவியங்களுக்கு கருக்களாக எடுத்தாள ஆரம்பித்தனர். அவை சரித்திர ஏடுகளாக மாறியது. கலை மற்றும் பண்பாட்டுச் சின்னங்களாக உலகில் நிலைபெற்றது.

மொழிகள் வளர்ச்சி பெற உலகில் பல இடங்களில் நாகரீகங்கள் தோன்ற ஆரம்பித்தன. அதை பின்பற்றி பலவிதமான கலைகளும் இலக்கியங்களும் உருவாயின.

No comments:

Post a Comment

Let others know your opinions about this post