Friday 6 June 2014

தயாரிப்பாளரும் பைனான்சியரும்




ஆரம்பநாட்களில் திரைப்படம் தயாரித்தவர்கள் தான் அந்த படத்திற்கு எழுத்தாளராகவும் இயக்குநராகவும் பணியாற்றி வந்தனர். பிறகு  இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட சில தயாரிப்பாளர்கள் புகழ்பெற்ற இலக்கியவாதிகளின் படைப்புகளை படமாக்க ஆசைப்பட்டனர். அந்த இலக்கிய எழுத்தாளர்களை திரைக்கதை அமைக்க அழைத்து வந்தனர். சில வேளைகளில் திரைக்கதை எழுதுவதற்காக வேறு சில எழுத்தாளர்களை அழைத்து வந்து இந்த இலக்கியங்களை திரைக்கதையாக மாற்றினார்கள். சிலர் இலக்கியத்திலும் திரைப்படத்திலும் எழுத்தாளராக புகழ் பெற ஆரம்பித்தனர்.
அதே போல திரைப்படங்களில் தங்களுடன் பணிபுரிந்து பயிற்சி பெற்ற உதவியாளர்களை தயாரிப்பாளர் புதிய இயக்குநர்களாக அறிமுகம் செய்தனர்.
தயாரிப்பு பணிகளை மட்டும் பார்த்துக்கொள்ளவே தயாரிப்பாளர்களுக்கு முழுநேரமும் தேவைப்பட்டது தான் இதற்கு காரணம். அதுவுமின்றி உண்மையிலேயே தங்களைவிட தங்கள் படத்திற்கு பொருத்தமான இயக்குநர் இன்னொருவர்தான் என்பதை அவர்கள் உணர்ந்ததும், அதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டதும் ஒரு காரணமாக இருந்தது. 
இப்படி திரைத்துறை வளர்ந்து வர காலப்போக்கில் தயாரிப்பு செலவுகளும், கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் சம்பளமும் உயர உயர படத்தை தயாரிப்பதற்கான முதலீடு (பட்ஜெட்) பெரிதாக ஆரம்பித்தது. 
ஒரு சில கதைகளை அதிக பொருட் செலவு செய்து படமாக்க வேண்டிய அவசியமும் இருந்தது. பெரிய படங்கள் எடுக்கும்போது தயாரிப்பாளர்கள் அதிகப்படியான முதலீடு செய்யவேண்டி இருந்தது. 
திரைப்படம் என்பது முழுமையான வர்த்தக முதலீட்டாக மாறிவிட, எப்படியும் கடன் வாங்கியாவது நினைத்தபடி பெரிய பட்ஜெட்டிலேயே படம் எடுக்க தயாரிப்பாளர்கள் தயாரானார்கள்.
சில நேரங்களில் தங்கள் கைவசம் உள்ள பணத்தால் படத்தை முடிக்க முடியாமல் போக தங்கள் சுற்றத்தாரிடம் கடன் வாங்க துவங்கினர்.
எப்படியும் படம் வெற்றி பெற்று கடனை திருப்பித்தர முடியும் என்ற நம்பிக்கை இருந்ததால் தயக்கம் இல்லாமல் கடன் வாங்கினார்கள். படம் விற்பனையானதும் சொன்னபடி கடனை திருப்பி கொடுக்கவும் செய்து வந்தனர்.
படம் வெற்றி பெற்றால் பணம் திரும்ப கிடைக்கும் என்று பலர் கடன் கொடுக்கவும் முன்வந்தார்கள்.
திரைப்படங்களுக்கு நிதி உதவி செய்ய முன்வந்த அவர்கள் சினிமா பைனான்சியர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
சில தயாரிப்பாளர்களுக்கு வங்கிகள் கடன் உதவி செய்தாலும் படங்களின் வெற்றி தோல்வி என்பது நிரந்தரம் இல்லாததாலும், தோல்வியுற்ற தயாரிப்பாளர்களிடமிருந்து பணம் திரும்ப பெற வேறு வழி எதுவும் இல்லாததாலும் வங்கிகள் படத்தை மட்டுமே நம்பி கடன் தர மறுத்தன.
தொடர்ந்து பல தயாரிப்பாளர்கள் படம் எடுக்க வர அதில் பெருவாரியானோர் தனிநபர் பைனான்சியர்களையே நாடினார்கள். அவர்களை நம்பியே படத்தயாரிப்பு தொடர்ந்து வந்தது.
தயாரிப்பாளர்களுக்கு மட்டும் தான் படத்தின் லாபத்திலும் நஷ்டத்திலும் அனைத்து பொறுப்புகளும் என்றாகிவிட, மற்ற கலைஞர்களும் நடிகர்களும் தங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட தொகையை படம் வெற்றிபெற்றாலும் தோல்வியுற்றாலும் வாங்கிக் கொண்டனர்.
படம் வெற்றி பெற்று லாபம் கிடைத்தால் தயாரிப் பாளர்களுக்கு சந்தோஷம். கடன் கொடுத்த பைனான்சியர் களுக்கும் சந்தோஷம்.
அதுவே படம் தோல்வியுற்று, நஷ்டமானால் தயாரிப்பாளர்களுக்கு மட்டும்தான் நஷ்டம். எல்லா பாதிப்புகளும் அவர்களுக்கு தான்.
பைனான்சியருக்கு அப்படி ஒரு பிரச்சினை இல்லை. படம் தோல்வி அடைந்தாலும் சில வேளைகளில் கொடுத்த பணமும் வட்டியும் திரும்ப கிடைக்கும். அதற்கு காரணம் தயாரிப் பாளர்களின் மானமும் மரியாதையும் தான். ஆனால் சில தயாரிப்பாளர்கள் படம் தோல்வியுற்று கடனை திருப்பித்தர வேறுவழியின்றி தவித்தார்கள். அப்போது பைனான்சியருக்கும் நஷ்டம் ஏற்படுவது வழக்கமாகி விட்;டது.
மற்ற தொழில்கள் போல திரைப்படத் தயாரிப்பு என்பது நிரந்தரத் தொழில் அல்ல. ஒரு படம் நஷ்டமானால் போட்ட முதலுக்கு ஈடாக பிலிம் மட்டுமே பொருளாக மிச்சமாக இருக்கும். அன்று பிலிமை விற்றால் சிறு தொகையாவது கிடைக்கும். இன்று அனைத்தும் டிஜிட்டல் ஆகி விட்டதால் எதுவும் மிஞ்சாது.
ஆகையினால் பைனான்சியர்கள் கடன் கொடுப்பதற்கு அதிக அளவில் வட்டி வாங்க ஆரம்பித்தனர்.

சிலநேரங்களில் தயாரிப்பாளர்கள் வட்டிக்கு பணம் வாங்கி படம் எடுத்து, கடைசியில் வட்டி கட்டுவதற்காக படத்தின் முழு உரிமையையும் பைனான்சியர்களுக்கே எழுதி கொடுத்த சரித்திரங்களும் சினிமாவில் ஏராளமாக உண்டு.

No comments:

Post a Comment

Let others know your opinions about this post