நேற்று
நடந்த செவ்வியின் ஆறாவது நிகழ்வில் பிரான்சிஸ் இட்டிக்கோர மற்றும் லைம்லைட் ஆகிய இரண்டு
மலையாள நாவல்களின் மொழிபெயர்ப்பு பற்றி பேசினார்கள். மிகவும் சந்தோஷம்.
அதைப்பற்றி
அந்த மேடையிலேயே என்னுடைய சிறு கருத்து ஒன்றை சொல்ல விரும்பினேன். ஆனால், வழக்கம் போல
தயக்கம் என்ற நோய் என்னை பேசவிடாமல் தடுத்தது. இருந்தாலும் அதை செல்லாமல் விடவும் மனம்
வரவில்லை. அதனால் என் மனதில் தோன்றியதை இங்கே எழுதிட முடிவு செய்தேன்.
லைம்லைட்
நாவலைப்பற்றி யுவகிருஷ்ணா பேசும்போது மலையாள சினிமா உலகத்தின் தற்பொழுதைய நிலைமை, தமிழ்
அல்லது மற்ற திரை உலகங்களைப்போலத்தான் இருக்கிறது, சொல்லும்படியான மாறுபாடுகள் ஒன்றும்
இருப்பதாக தோன்றவில்லை என்று கூறினார்.
இட்டிக்கோரா
நாவரைப்பற்றி அபிலாஷ் பேசும்போது மலையாள இலக்கிய உலகத்தில் பின்நவீனத்துவம் கால்பதிக்கவில்லை
என்றும், அதனால் சாருவின் தாக்கத்தால் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்றும், இது
ஆரம்பம் என்பதால்தான் அங்கு இந்த நாவல் பெருவெற்றி பெற்றிருக்கிறது என்றும் சொன்னார்.
வினாயக
முருகனும் அதை வழிமொழிவது போலவே பேசினார்.
சந்திரா
மட்டும் அதற்கு சற்று மாறாக பேசினார். அவர் இந்த நவீனம், பின் நவீனம் போன்றவற்றை விட்டுவிட்டு
நாவலின் உள்ளடக்கத்தை (இதுதான் விரிவாகன உரையா அல்லது சுருக்கமானதா என்று எனக்கு புரியவில்லை)
பேசினார். பாலியல் வன்மம் என்பது ஆண்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு கலையல்ல என்பதையும்
எடுத்துரைத்தார்!
கேரளத்தில்
பிறந்து வளர்ந்து, இங்கு வந்து வாழும் எனக்கு இவற்றையெல்லாம் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி.
காரணம், மலையாளத்தில் கூட இந்த நாவல்களைப்பற்றி இந்த அளவுக்கு விவாதித்து நிகழ்வுகள்
நடந்ததாக தெரியவில்லை. அதற்காக விஜய் மகேந்திரனுக்கும், வினாயக முருகனுக்கும் பாராட்டுக்கள்.
நான்
சொல்ல வரும் விஷயம் இந்த இரண்டு நாவல்களுக்கும் பொதுவான ஒரு கருத்தை மட்டும்தான்.
மிகவும்
கல்வியறிவு பெற்ற மாநிலம், பொருளாதாரத்திலும், இலக்கியத்திலும், அதுபோல எல்லா விஷயங்களிலும்
மிகவும் வளர்ந்த மாநிலம், இப்படி கேரளத்தை பல அடிப்படைகளிலும் புகழலாம். அதில் உண்மையும்
இருக்கிறது. (அதே நேரத்தில் கேரளம் பைத்தயக்காரர்களின் கூடாரம் என்று விவேகானந்தர்
சொன்னதையும் மறக்கக்கூடாது!)
சமூகம்
என்பது தனிமனிதர்களின் கூட்டம் தானே. அதனால் தனிமனிதர்களைப்போலவே சமூகத்தின் பொதுபுத்தியிலும்
சில குணாதிசயங்கள் இருக்கத்தானே செய்யும். பொதுவாகவே எந்த ஒரு மனிதனும் முற்றிலும்
நல்லவனும் அல்ல, முற்றிலும் கெட்டவனும் அல்ல. எல்லோருடைய புத்தியிலும் அன்பு, அறிவு,
விவேகம், கட்டுப்பாடு போன்ற நல்ல குணங்களுடன் வக்கிரம், காமம் போன்ற கெட்டகுணங்களும்
இருக்கத்தான் செய்கின்றன. அவற்றின் விகிதாச்சாரம்தான் வேறுபடும். ஒவ்வொருவரும் மற்றவற்றை
கட்டுப்படுத்தி ஒரு சில குணங்களை மட்டும் வெளிக்காட்டுவதனால் தான் அவன் நல்லவன், வல்லவன் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றனர்.
இது
சமூகத்திற்கும் பொருந்தும். ஒரு தனி மனிதன், தனியாக இருக்கும் போது, யாரும் அவனை கண்டுகொள்ளாமல்
இருக்கும் போது, அப்படி யாரும் தன்னை பார்க்கும் வாய்ப்பே இல்லை என்று அவனுக்கு நன்றாக
தெரியும் நேரங்களில் அவனிடம் ஒரு கம்ப்யூட்டர் (இணையதள இணைப்புடன்) இருந்தால் அவன்
இணையத்தில் எதை தேடிப்பார்ப்பான் என்று யோசித்துப்பாருங்கள்!
காமம்,
வக்கிரம் போன்றவையெல்லாம் தானாக வெளிப்படும். சிலவருடங்களுக்கு முன்னால்வரை பரங்கிமலை
தியேட்டரில் ஷக்கீலா, ரேஷ்மா படங்களுக்கு கூட்டம் அலைமோதுவதற்கும், அதற்கு முந்தைய
காலங்களில் ஜெயபாரதி, சீமா படங்களுக்கு கூட்டம்
அலைமோதியதற்கும், அதற்கு இணையாகவே அன்று முதல் இன்று வரை ஆங்கில மொழி தெரியாத கிராமங்களில்
கூட ஆங்கிலப்படங்கள் (பயர் போன்ற இந்தியப் படங்களும்தான்) திரையிட்டு வெற்றிபெற்றதற்கும்
காரணம் இதுதான்.
கேரளத்திலும்
இதற்கு மாற்றம் ஒன்றும் இல்லை. அவர்களும் இந்தியர்கள் தானே!
இந்தியத்
திரை உலகிலும் உலகத் திரையரங்கிலும் மலையாள சினிமா கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்த காலகட்டத்தில்,
செம்மீன், சுயம்வரம், கொடியேற்றம் போன்ற படங்கள் வெளிவந்த காலத்தில்தான் இதா இவிடே
வரே, ரதிநிர்வேதம், அவளுடெ ராவுகள் போன்ற படங்களும் அதற்கு இணையாகவே சத்திரத்தில் ஒரு
ராத்திரி போன்ற படங்களும் வெளிவந்து வெற்றிபெற்றன.
அதே
போல மம்முட்டி, மோகன்லால், சத்யன் அந்திக்காடு, சித்திக் லால் போன்றவர்கள் உச்சத்தில்
இருந்த காலகட்டத்தில்தான் ஷக்கீலா, ரேஷமா ஆகியோரது படங்களும் அவர்களுக்கு சவாலாக இருந்து
வந்தன.
இது
காலம் காலமாக தொடர்ந்து வருவதுதான். ஆனால் அதை அடிப்படையாக எடுத்துக்கொண்டு மலையாள
சினிமா ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக ஜெயபாரதி ரசிகர்களாக இருந்தார்கள் என்றோ, ஷக்கீலா ரசிகர்களாக
இருக்கிறார்கள் என்றோ சொல்வது சரியல்ல.
அதே
நிலைதான் இலக்கியத்திலும். மலையாளத்தில் சாருவின் கதைகள் போன்ற பல கதைகள் வருடங்களுக்கு
முன்பே வெளிவந்திருக்கின்றன. (நானும் கூட சிறுவயதிலேயே படித்திருக்கிறேன்). அந்த வயதின்
ஆர்வத்தில் படித்திருந்தாலும், அதை படிப்பதை யாராவது பார்த்தால் நம்மை தரக்குறைவாக
பார்ப்பார்களோ என்ற எண்ணத்தில் காலப்போக்கில் எல்லோரும் அவற்றை படிப்பதை விட்டுவிட்டனர்.
வயது முதிர்ச்சியும், அறிவு முதிர்ச்சியும் கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
அதனால்தான்
அதுபோன்ற புத்தகங்கள் பிரபலமடையாமல் போயின. (அபிலாஷ் சொன்னது போல மலையாளிகள் பாரம்பரியத்தை
மிகவும் விரும்புகின்றனர் என்பதும் இதற்கான ஒரு முக்கிய காரணம்தான்.)
இருந்தாலும்
அவ்வப்போது, இதுபோன்ற படங்களும் புத்தகங்களும் ஒரளவு கட்டமைப்புடனும், தரத்துடனும்
வெளிவருவதும் வெற்றி பெறுவதும் இயற்கைதான். அப்படி வெற்றி பெற்ற புத்தகங்கள்தான் இந்த
இரண்டு புத்தகங்களும்.
அதனால்
இந்த இரண்டு புத்தகங்களை வைத்துக்கொண்டு தற்போதைய மலையாள சினிமா மற்றும் இலக்கியச்
சூழலை மதிப்பிடுவது சரியாகாது என்பதுதான் என்னுடைய எண்ணம்.
பி.கு.
– உலகில் வெற்றி பெற்றவர்களை விட வெற்றிபெறாதவர்கள்தான் “வெற்றிபெறுவது எப்படி“ என்று
புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். அதுபோல சினிமாவைப்பற்றியும் உண்மையில் கடை நிலையிலிருந்து
வளர்ந்து வந்த யாரும் எழுதியதாக தெரியவில்லை.
சோகன்லாலும்
திரைத்துறைக்கு மேல் மாடிவழியாக நுழைந்து தன்னால் இயன்ற வெற்றியை பார்த்தவர் தான்.
அவர் இயக்குநர் என்பதனாலேயே சினிமாவைப்பற்றி முழுமையாக சொன்னார் என்று எடுத்துக்கொள்ளக்
கூடாது.
அவர்
பிரபல எழுத்தாள் மாதவிக்குட்டியின் (கமலா சுரய்யா அல்லது கமலாதாஸ்) மகன். அவர் திரைத்துறைக்கு
எப்படி வந்திருப்பார், ஒரு எழுத்தாளரின் மகனுக்கு ஆரம்பத்தில், அதுவும் மலையாளத்தில்,
எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்திருக்கும் என்பதை
நாம் யூகிக்க முடியும். தாயைப்போலவே அவருக்கும் எழுத்தாற்றல் இருக்கிறது. அதனால் இப்படி
ஒரு புனைவை எழுதியிருக்கிறார். அவ்வளவுதான். அதில் சில சிறு உண்மைகள் இருந்தாலும்,
அதை புனைவாக மட்டுமே எடுத்துக்கொள்வதுதான் மிகவும் சிறந்தது.
No comments:
Post a Comment
Let others know your opinions about this post