Monday 3 August 2015

திரைப்பட இலக்கியச் சங்கமம் – புதிய பாதையில்


உணமையில் நான் இந்த மாதம் எனது திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் நான்காவது ஆண்டுவிழாவை நடத்தவேண்டும் என்றுதான் திட்டமிட்டிருந்தேன்.
திரைப்படத்தையும் இலக்கியத்தையும் ஒன்றிணைக்க வேண்டும், குறிப்பாக தமிழ் திரையுலகில், என்ற லட்சியத்தின் அடிப்படையில் நான் ஆரம்பித்த அமைப்புதான் இது. கடந்த 2011ல் ஆரம்பித்து தொடர்ந்து மூனறாண்டுகளுக்கு மேல் இதை வெற்றிகரமாக நடத்தி வருகின்றேன்.
வழக்கமான குடும்பச் சிலவுகளுக்கு தேவையான வருமானத்தை விட, என் பாக்கட்டில் என்றெல்லாம் பத்தாயிரம் ரூபாய் இருந்ததோ அன்றெல்லாம் நான் திரைப்பட இலக்கியச் சங்கமத்தை நடத்தியுள்ளேன்.
ஆனால் கடந்த சில மாதங்களாக ஒரு தயக்கம், சந்தேகம். நான் இப்படி கஷ்டப்பட்டு இந்த நிகழ்வை நடத்துவதனால், நான் நினைத்த பலனை அடைய முடிகிரதா? இந்த சங்கமத்தின் லட்சியம் நிறைவேறுகிறதா? அப்படி யோசிக்கையில் திரைப்பத்தையும் இலக்கியத்தையும் இணைக்க வேண்டும் என்ற லடசியத்தை அடைய இதை விட சிறந்த வழிகள் இருக்கின்றனவா? போன்ற கேள்விகள் தொடர்ந்து மனதுக்குள் எழ, அதைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.
நான் எல்லோரையும் அழைத்து கூட்டம்போட்டு இப்படி சங்கமம் நடத்துவதால் பயன் இல்லாமல் இல்லை. இந்த சங்கமங்களுக்கு வரும் நண்பர்கள், புதியதாக வரும் கலைஞர்கள். படைப்பாளிகள் மற்றும மாணவர்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடிகிறது என்பதில் ஐயமில்லை.
ஆனால், என்னதான் நான் கஷ்டப்பட்டாலும், இந்தந சங்கமங்களுக்கு வருபவர்கள் மிகக்குறைவுதான். அதுவும் வந்தவர்கள்தான் அநேகமாக தொடர்ந்து வருகிறார்கள். அதுவும் இந்த விஷயத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர்கள் மட்டும் அல்லது நட்புக்காக வருபவர்கள்.
மேலும் அதிக எண்ணிக்கையிலான கலைஞர்களையும், மாணவர்களையும் இந்தச் சங்கமத்தின் லட்சியம் சென்றடைய, இது வழியாக நான் சொல்ல நினைத்ததை எடுத்துரைக்க, வெவ்வேறு இடங்களுக்குச் சென்று நானே அவர்களைச் சந்தித்து, சொல்வதுதான் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்று புரிந்துகொண்டேன்.
அப்படி நடக்க வேண்டும் என்றால் நானே எல்லா இடங்களிலும், கூட்டம் போட வேண்டும். அது இயலாத காரியம். அதனால் நண்பர்கள், மற்ற அமைப்பினர் ஆகியோரின் உதவியை நாடி, அவர்கள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் இந்த திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் லட்சியத்தைப்பற்றி பேசுவதுதான் சிறந்தது என முடிவு செய்தேன்.
அப்படி பல இடங்களில் பேசி, முடிந்த வரை படைப்பாளிகளையும், மாணவர்களையும் ஈர்ததபின், இந்த சங்கமத்தின் ஐந்தாவது ஆண்டுவிழாவவை அடுத்த வருடம் விமரிசையாக கொண்டாடலாம் என்று முடிவெடுத்தேன்.
இந்த முடிவுகளை நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லி, இந்த பயணைத்தை தொடர்வதற்காக, நான்காவது ஆண்டுவிழாவை மிக எளிமையான ஒரு கூட்டமாக நடத்தத் திட்டமிட்டிருந்தேன்.
அந்த நேரத்தில் தான் நான் நினைத்த அதே தேதியில் திரு தம்பிசோழன் அவருடைய ஆக்டர்ஸ் ஸோன் சார்பில் நடக்கும் நான்காவது திரையிடலை நடத்த முடிவுசெய்து, என்னையும் அதில் பேச அழைத்தார்.
உண்மையிலேயே இது என்னைப் பொருத்தவரையில் பழம் நழுவி பாலில் விழுந்த கதைதான். அதனால் இந்த சந்தர்பத்தையே நான் என் திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் புதிய பயணத்தின் ஆரம்பமாக நினைத்துக்கொண்டேன்.
அந்த ஒரு சந்தோஷத்துடன் தான் நான் அந்த நிகழ்விற்கு சென்றிருந்தேன். ஆனால் அங்கு கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்ததும் மிகவும் வருத்தமாக இருந்தது. நிகழ்வை நடத்துபவரையும் அதில் பேச அழைத்தவர்களையும் தவிர்த்துப் பார்த்தால், வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை கைவிரல்களின் எண்ணிக்கையைவிட குறைவுதான்.
திரைப்பட இலக்கியச் சங்கமத்தை நடத்திய அனுபவம் இருப்பதால் இதை ஒரு ஆச்சரியமாக நான் பார்க்கவில்லை. காரணம் நூற்றுக்கும் மேற்பட்ட நண்பர்கள் வந்த சங்கமத்தையும் நான் பார்த்திருக்கிறேன். இருபதிற்கும் குறைவான நண்பர்கள் மட்டும் வந்த நிகழ்வையும் நான் நடத்தியிருக்கிறேன். அதுவும் பெரிய கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து நிகழ்வை நடத்தும்போதும் கூட.
இருந்தாலும் இப்படி ஒரு நல்ல படம் திரையிடப்படும் போது இவ்வளவுபேர் தான் வருவார்களா என்ற கேள்வி என்னை மேலும் சிந்திக்க வைத்தது.

நேற்றைய நிகழ்வின் அனுபவத்தால் ஒரு முடிவை எடுக்க வேண்டியதாயிற்று. அந்த முடிவையும், நேற்று நடந்த நிகழ்விற்காக எழுதிவைத்த “இலக்கியமும் நடிப்பும் - ஒரு தனியாவர்த்தனம்“ என்ற உரையையும் இதைத் தொடர்ந்து இங்கே பதிவுசெய்கிறேன். 

No comments:

Post a Comment

Let others know your opinions about this post