Tuesday 12 January 2016

திரைப்பட இலக்கிய சங்கமம் இதுவரை - 2


வெற்றி



முயற்சி திருவினையாக்கும் என்பது பொதுமறை. சில நேரங்களில் லட்சியம் அந்த முயற்சியை மேலும் சிறப்பான வெற்றியை தேடித்தரும். எந்த பின்புலவுமின்றி நான் திரைப்பட இலக்கியச் சங்கமத்தை நடத்த முடிவு செய்த்து வேண்டுமானால் என்னுடைய தைரியத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். ஆனால் முதல் நிகழ்வு நடப்பதற்கு முன்பே இந்த சங்கமம் வெற்றிபெறுவதற்கு காரணம் இந்த சங்கமத்தின் லட்சியம் தான்!
திரு பாலுமகேந்திரா அவர்கள் என்னுடைய நோட்டீசைப் பார்த்து தானாகவே முன்வந்து, என்னை அழைத்துப் பாராட்டியது என் வாழ்நாளில் நான் பெற்ற மிகப்பெரும் விருதாகவே நினைக்கிறேன். ”நாங்களெல்லாம் இருபத்தஞ்சு வருஷமா சொல்லிக்கிட்டேதான் இருக்கோம், ஆனா நீ செஞ்சிட்டே..” அப்படின்னு அவர் சொன்னதற்கு மேல் இந்த சங்கமத்திற்கு வேறு என்னதான் வெற்றியாக அமையும். அவர் அப்படி பாராட்டியதோடு மட்டுமல்லாமல் முதல் நிகழ்வில் சிறப்புவிருந்தினராக கலந்துகொள்ள சம்மதித்தார். அதுவே இந்த நிகழ்வின் முதல் வெற்றி.


அதுபோலத்தான் திரு ஆர்.சி.சக்தி அவர்களும். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் இணைப்பதுதான் என்னுடைய நோக்கம் என்று சொன்ன உடனேயே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதுவும் காலையில் டயாலிசிஸ் என்ற சிகிச்சையை எடுத்துக்கொண்டு மதியம் மருத்துவ மனையிலிருந்து திரும்பி வந்ததும் நேராக அந்த நிகழ்வுக்கு வந்து விட்டார். வரும் வழியில் தும்மல் வந்தாலே கூட்டத்துக்கு வருவதை தவிர்க்கும் சிறப்பு விருந்தினர்கள் உள்ள இந்த உலகத்தில் இப்படி என்னை ஊக்குவிக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அவர் வந்தார் என்றால் அதற்கு இந்த சங்கமத்தின் லட்சியம் தானே காரணம்!
இப்படி இலக்கியப் பற்றுகொண்ட திரைத்துறையினரையும் திரைப்படத்தின் மீது பற்றுக்கொண்ட இலக்கியவாதிகளையும் அவ்வப்போது இந்த சங்கமத்தின் மூலமாக ஒன்றிணைத்து ஒரே மேடையில் கொண்டுவரமுடிந்தது இந்த சங்கமத்தின் பெருவெற்றியாகவே கருதுகிறேன். அதுவுமின்றி இந்த சங்கமத்திற்கு வந்த திரைப்பட ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஒரு நட்புவட்டத்தை உருவாக்க முடிந்ததும் இந்த சங்கமம் பெற்ற வெற்றிதான்.

தொடர்ந்து இந்நிகழ்வை மூன்றரை வருடங்கள் நடத்திவந்தேன். அதற்கு சிறப்பு விருந்தினர்களாக பங்குபெற்ற கலைஞர்கள் மற்றும் இலக்கியவாதிகள் மட்டும் காரணமல்ல. நேரடியாக துணைநின்று உதவிய நண்பர்களும், பொருளுதவி செய்த நல்ல உள்ளங்களும்,ஒவ்வொரு நிகழ்விலும் வந்து கலந்துகொண்ட நண்பர்களும் திரைப்பட ஆர்வலர்களும்தான்!

No comments:

Post a Comment

Let others know your opinions about this post