Tuesday 12 January 2016

திரைப்பட இலக்கிய சங்கமம் இதுவரை - 1



ஆரம்பம்

இப்படியொரு நிகழ்வை நடத்தவேண்டும் என்பது இன்றோ நேற்றோ தோன்றியது அல்ல திரைத்துறையில் தீவிரமாக பணியாற்றும் சிலருக்கும்வாய்ப்புத் தேடும் பலருக்கும் இப்படி ஒரு நிகழ்வு நடந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கிறது. திரைத்துறையில் உள்ள பல நண்பர்களிடமும் சாதனையாளர்களிடமும் பேசும்போது இதை நான் உணர்ந்திருக்கிறேன். அதனாலயே என்றிலிருந்தோ எனக்கும் இப்படி ஒரு நிகழ்வை நடத்தவேண்டும் என்று தோன்றிக்கொண்டுதான் இருந்தது
சென்னையில் திரைப்படம், இலக்கியம் ஆகிய பெயர்களில் எங்கு எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும், முடிந்தவரை அதில் பங்குபெறவேண்டும் என்பது என்னுடைய அன்றாட செயல்களில் ஒன்றாக இருந்து வந்தது. அப்படி பல நிகழ்வுகளுக்கும் ஒரு பார்வையாளனாக சென்றிருக்கிறேன். ஆனால் திரைப்படம் சார்ந்த அல்லது இலக்கியம் சார்ந்த நிகழ்வுகள் நடக்கின்றவே தவிர திரைப்படத்தையும் இலக்கியத்தையும் இணைத்தபடி அல்லது இணைப்பதற்காக நடத்தப்படும் நிகழ்வுகள் மிக மிக அரிதாகவே இருப்பதை கண்டுகொண்டேன்.
இலக்கியத்தை மதித்து சில திரைத்துறையினரும், திரைப்படத்தை மதித்து சில இலக்கியவாதிகளும் மேடைகளில் பேசுவதையும் செயல்படுவதையும் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த இரு துறைகளையும் இணைக்கும் ஒரு முயற்சியாக ஒரு நிகழ்வு எனக்கு தெரிந்தவரை நடக்கவில்லை. உண்மையில் அப்படி ஒரு நிகழ்வு திரையுலகில், குறிப்பாக தழிழ் திரையுலகில் மிக அவசியமாக இருக்கிறது.


அந்த வகையில் செயல்படும், அந்த லட்சியத்தை நோக்கி பயணிக்கும் ஒரு சிறு முயற்சிதான் இந்த திரைப்பட இலக்கியச் சங்கமம். முதலில் நான் இப்படி ஒரு நிகழ்வை நடத்தவேண்டும் என்று பல நண்பர்களிடமும் (அதில் சிலர் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் போன்ற மன்றங்களில் பதவி வகிப்பவர்களும் அடங்குவர்), புகழ்பெற்ற சில கலைஞர்களையும் கேட்டுக்கொண்டேன். பலரும் உதவுவதாக சொன்னாலும் ஏனோ தங்கள் வேலைகளுக்கு மத்தியில் இப்படியொரு நிகழ்வை நடத்த யாரும் முற்படவில்லை. பூனைக்கு யார் மணிகட்டுவது என்ற நிலைதான் தொடர்ந்தது.
கடைசியில் அந்த பொறுப்பை நனே ஏற்பது என்று முடிவு செய்துவிட்டேன். ஒரு சாதாரண திரைப்பட உதவி இயக்குநராக பணியாற்றும் எனக்கு இது சற்று பெரிய பாரம்தான்! இருந்தாலும் முயற்சி செய்தேன். தன்னந்தனியாகவே இதை ஆரம்பித்தேன். வேறு சில நண்பர்களையும் ஒருங்கிணைத்து ஒரு குழுவாக நடத்தலாம் என்று பலரும் அறிவுரை சொன்னார்கள். ஆனால் நான் அதை விரும்பவில்லை. இந்த முயற்சி வெற்றிபெற்றால் இதன் மூலமாக எனக்கு பெயரும் புகழும் கிடைத்தால், அது இதுபோன்ற முயற்சிகளை எடுக்க பலரையும் தூண்டிவிடும் என்பதுதான் என்னுடைய எண்ணம். அப்படி இதுபோன்ற நிறைய நிகழ்வுகள் நடக்கவேண்டும், நிறையபேர் இதுபோன்ற நிகழ்வுகளில் பங்குபெறவேண்டும், அப்படி திரைத்துறையையும் இலக்கியத்துறையையும் இணைக்கும் பணிகள் தமிழ் திரையுலகில் தீவிரமடைய வேண்டும் என்று விரும்பினேன். அப்படி திரைத்துறையையும் இலக்கியத்துறையையும் இணைக்கும் ஒரு பாலமாகவும், திரைத்துறையில் ஒரு நட்புவட்டமாகவும் வளர்வதுதான் இந்த திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் லட்சியம்.
அப்படி ஆரம்பித்த இந்த சங்கமத்தின் முதல் நிகழ்வை 2011 ஜூலைமாதம் முதல்தேதி நடத்துவது என்று முடிவு செய்தேன். அன்று வடபழனி, கோடம்பாக்கம் பகுதிகளில் இலக்கியக் கூட்டங்கள் நடத்துகின்ற அளவு பிரபலமான சிறிய மண்டபமோ மன்றமோ இருந்ததா என்று எனக்கு தெரியவில்லை. அதனால் என்னுடைய சக்திக்கும் மீறியதாக இருந்தாலும், ஒரு திருமணமண்டபத்தை மூன்று மணிநேரத்திற்கு வாடகைக்கு எடுத்து, ஆரம்ப விழாவை நடத்த முடிவு செய்தேன்.



ஆனால் வழக்கமான விழாக்களைப்போல இருக்கக்கூடாது என்பதற்காகவே, சிறப்பு விருந்தினர்கள், ஸ்பான்சர்கள் என எந்த பெயரும் இல்லாத, இந்த சங்கமத்தின் லட்சியங்களை மட்டும் எடுத்துக்காட்டும் ஒரு சிறு பிரசுரத்தை (நோட்டீஸ்) அச்சிட்டு திரைத்துறையினரையும் இலக்கியத்துறையினரையும் அழைக்க ஆரம்பித்தேன்

No comments:

Post a Comment

Let others know your opinions about this post