Wednesday 13 January 2016

திரைப்பட இலக்கிய சங்கமம் இதுவரை - 4




மறுயோசனையும் சிறு இடைவேளையும்

மூன்றரை வருடங்கள் தொடர்ந்து இந்நிகழ்வை நடத்தி வந்தேன். என்னுடைய பொருளாதாரம் மற்றும் பணி நிமித்தமாக நினைத்தபடி மாதாமாதம் நடத்த முடியவில்லை என்றாலும் மூன்றரை வருடங்களில் பதினான்கு முறை இந்நிகழ்வை நடத்தினேன். பலவிதமான அனுபவங்களை பெற்றுவிட்டேன். கல்யாண மண்டபங்களிலும் சிறு கூடங்களிலும் நடத்தினேன். இவற்றில் நூறுபேருக்கும் மேலான நண்பர்கள் கலந்துகொண்ட பெருவெற்றிபெற்ற சில கூட்டங்கள் நடந்துள்ளன. இருபதற்கும் குறைவாக மட்டும் நண்பர்கள் கலந்துகொண்ட சிறு கூட்டங்களும் நடந்துள்ளன.
சிறப்பு விருந்தினர்களை அழைத்து ஒரே மேடையில் அமரவைத்த கூட்டங்கள் நடந்துள்ளன. விருந்தினர்களே இல்லாதநண்பர்கள் சந்திப்பாகவும் நடந்துள்ளன. ஆனால் மூன்றரை வருடங்கள் நடந்தபின்னும் ஏதோ ஒரு குறை இந்த சங்கமத்தில் இருப்பதாகவே என் மனதிற்குள் தோன்றிக்கொண்டிருந்தது. அதனால் இந்த நிகழ்வுக்கு சிற இடைவேளை அளித்தேன். யோசித்தேன். மீண்டும் மீண்டும் யோசித்தேன். என்னுடைய நண்பர்கள் வட்டத்தையும் தாண்டி இதை வளரச்செய்ய என்ன வழி என்று யோசித்தேன்.


இதுவரை திரைப்பட இலக்கியச் சங்கமம் நடத்திய அனுபவத்திலிருந்து சில பாடங்களை கற்றுக்கொண்டேன். சில உண்மைகளை உணர்ந்துகொண்டேன். யதார்த்தங்களை புரிந்துகொண்டேன். தற்பொழுது புதியபொலிவுடன் மீண்டும் இந்த நிகழ்வை நடத்த ஆரம்பித்துள்ளேன். இனி இதுபோல ஒரு இடைவேளை வராதபடி தொடர்ந்து நடத்தவேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் அதற்கான வழியை தேடிக் கண்டுபிடித்துள்ளேன்.
இதுவரை நடந்த நிகழ்வுகளில் தொடர்ந்து ஒரேமாதிரியான மனச்சோர்வை ஏற்படுத்தும் விஷயங்கள் இடம் பெறுவதை உணர்ந்துகொண்டேன். அதை இப்பொழுது தவிர்த்துவிட முடிவுசெய்துள்ளேன். அதற்காக ஒவ்வொரு நிகழ்விலும் தற்கால சினிமா சம்பந்தமான ஒரு விஷயம்தான் முக்கிய கருவாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். அப்படி செய்தால் மட்டும்தான் பங்குபெற வரும் நண்பர்களுக்கு மட்டுமல்லாமல், நடத்தும் எனக்கும் அது தொடர்ந்து உற்சாகத்தை தரும் என்று கருதுகிறேன்.


அப்படி இந்த சங்கமத்தை புதியதாக ஆரம்பிக்கும் இவ்வேளையில், இதுவரை நடந்த சங்கமங்களுக்கு உதவியாக, உறுதுணையாக, ஊக்குவிப்பாக இருந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

எல்லா விதத்திலும் எனக்கு வழிகாட்டிகளாக இருந்து, உதவி, இன்று நம்முடன் இல்லாமல் போன அமரர்களான திரு பாலுமகேந்திரா, திரு ஆர்.சி.சக்தி, திரு ராம.நாராயணன் ஆகியோருக்கு இதயங்கனிந்த அஞ்சலிகளை அர்ப்பணம் செய்துகொள்கிறேன்.

No comments:

Post a Comment

Let others know your opinions about this post