Friday 15 January 2016

திரைப்பட இலக்கியச் சங்கமம் – இன்றுமுதல்



இதுவரை திரைத்துறையிலும் இலக்கியத்துறையிலும் பணியாற்றிய அனுபவத்தாலும், திரைப்பட இலக்கியச் சங்கமம் நடத்திவந்த அனுபவத்தாலும் திரைப்படம் மற்றும் இலக்கியம் சார்ந்த என்னுடைய பார்வை முற்றிலுமாக மாறியிருக்கிறது. குறிப்பாக தமிழ் திரைத்துறையைப் பொறுத்தவரையில்!
எதையும் ஒரே கோணத்தில் பார்ப்பதை விட்டுவிட்டுஈ வேறு ஒரு கோணத்தில் பார்த்தால் பல கேள்விகள் புதியதாக எழும், பல கேள்விகளுக்கு புதுப்புது பதில்கள் கிடைக்கும். அவைதான் அந்த விஷயத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தவும், வெற்றிகளை குவிக்கவும் காரணமாக அமையும்.
சினிமாவிலும் அப்படித்தான் நடந்தது, நடக்கிறது, நடக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். திரைப்படம் என்பது இயக்குநர்களின் கலை என்றே அரியப்படுகிறது. திரைப்படங்கள் பெருவாரியாகவும் நட்சத்திரங்களின் பெயர்களில்தான் அறிமுகப்படுத்தவும் அறியப்படவும் செய்கிறது என்றாலும், பலநேரங்களில் இயக்குநர்களின் பெயர்களில் அறியப்படுகின்றன.
இந்த கோட்பாடுகளால் மறக்கடிக்கப்பட்ட ஒரு விஷயம்தான் எழுத்தாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் கிடைக்கவேண்டியிருந்த மரியாதை அல்லது கவுரவம். நட்சத்திரங்களைத் தவிர்த்துவிட்டு பார்த்தாலும் (புதுமுகங்கள் நடிக்கும் படங்களை கணக்கில் கொள்ளும்போது) திரைப்படத்தின் அஸ்திவாரமாக இருப்பது இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர்கள் என்ற மூவர்தான். இந்த மூவருக்கும் ஒரேபோல, சமமாக, இணையான மரியாதையையும் கவுரவத்தையும் பெற்றுத்தருவதுதான் தற்பொழுது திரைத்துறைக்கு மிகவும் அவசியமாக இருக்கிறது. அப்படி இந்த மூவருக்கும் ஒரே போல மரியாதை கிடைக்க ஆரம்பித்தால் இன்று திரைத்துறையில் காணும் பலபிரச்சினைகள் காணாமல் போய்விடும். அதனால் அப்படி இந்த மூவரையும் கவுரவிப்பதுதான் திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் தற்பொழுதைய லட்சியமாக இருக்கிறது. அதை நோக்கித்தான் இனி நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன.
ஒவ்வொரு நிகழ்விலும் முந்தைய சங்கமநாளிலிருந்து தற்பொழுதைய சங்கமத்தேதி வரையிலான நாட்களில் வெளியான படங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களை கவரவிப்பது என்ற முடிவை எடுத்துள்ளேன். கூடவே முடிந்தவரை நடிகர்களும் மற்ற தொழில்நுட்ப வல்லுநர்களும் பாராட்டப்படுவார்கள்.
இப்படி ஒவ்வொரு மாதமும் வெளியாகும் படங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட படங்கள் மற்றும் அவற்றில் பணியாற்றியவர்களை பேசும்போது அதில் தொடர்ந்து ஒரு புதுமைத்தன்மை இருக்கும் என்று நம்புகிறேன். அது தொடர்ந்து இந்த நிகழ்வை நடத்துவதற்கான உற்சாகத்தை எனக்குத் தரும், இதில் கலந்து கொள்வதற்கான உற்சாகத்தை நிறைய நண்பர்களுக்கும் தரும்.
ஒவ்வொரு நிகழ்வும் சரியாக இரண்டு மணிநேரம் மட்டுமே நடத்த வேண்டும் என திட்டமிட்டுள்ளேன். சினிமா காட்சிகளைப்போல கண்டிப்பாக குறித்த நேரத்தில் ஆரம்பித்து குறித்த நேரத்தில் முடிக்கப்படவேண்டும். அதில் ஒரு மணிநேரம் தேர்வுசெய்யப்பட்ட படங்களில் பணியாற்றிய எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் ஏணைய கலைஞர்கள் பற்றி பேசுவதற்கும், அடுத்த ஒரு மணிநேரம் அவர்களுடன் நண்பர்கள் கலந்துரையாடுவதற்குமாக பயன்படுத்தப்படவேண்டும். இதற்கு நண்பர்கள் அனைவருடைய உதவியையும் ஒத்துழைப்பையும் வேண்டிக்கொள்கிறேன்.    


No comments:

Post a Comment

Let others know your opinions about this post