Monday 16 May 2016

அறவக்குறிச்சி – எச்சரிக்கையா? சமரசமா?





தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது என்பதில் எந்த ஐயமுமில்லை. யாரும் இதை எதிர்பார்க்காதது தான்! அதே நேரம் இப்படியொரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரும் விரும்பியதுதான். அதனால்தான் அனைவரும் இதை ஏற்றுக்கொள்கின்றனர்.
அதே சமயத்தில் இந்த நடவடிக்கை மக்கள் மனதில் சில சந்தேகங்களை எழுப்பாமலும் இல்லை. இது சரியான முடிவா, உண்மையில் வரவேற்கத்தக்கதா, இது போதுமானதா போன்ற பல சந்தேகங்கள் இருக்கின்றன.
அறவக்குறிச்சியில் மட்டும் அல்ல தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இதுபோல பணப்பட்டுவாடா நடைபெற்று வருகின்றன, நடைபெற்றிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஒரு வேளை இந்த தொகுதியில் மட்டும்தான் இரண்டு வேட்பாளர்களிடமிருந்தும் பணம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அல்லது தகுந்த ஆதாரங்கள் தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்திருக்கின்றன.
அனைத்து தொகுதிகளிலும்தான் பணப்பட்டுவாடா நடைபெறுவது பற்றி புகார்கள் வந்திருக்கின்றன. தி.மு.., .தி.மு.. தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் இதைப்பற்றி பல முறை புகார் கொடுத்திருக்கின்றன. இந்த இரண்டு கட்சிகளும் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக இதைப்பற்றி தலைமை தேர்தல் ஆணையரே பகிரங்கமாக சொல்லியிருக்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பியிருக்கிறார். கடவுளிடம்தான் முறையிட வேண்டுமா என்று தன் இயலாமையை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
எனக்கு வரும் சந்தேகம் ஒன்றுதான். உலகிலேயே மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் தொடர்ந்து நல்லமுறையில் தேர்தலை நடத்திவரும் தேர்தல் ஆணையம் ஏன் இப்படி தடுமாற வேண்டும். தகுந்த நடவடிக்கை எடுப்பதில் ஏன் தயக்கம் காட்டவேண்டும். எதற்கு அரசியல் கட்சிகளிடம் கெஞ்சவேண்டும்.
ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் இந்த பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுவரும் அரசியல் கட்சிகளை தண்டிப்பதுதான் இதற்கு சரியான முடிவாக இருக்கும்.
அதற்காக ஒரு தொகுதியில் மட்டும் தேர்தலை தள்ளிவைப்பது எந்த விதத்திலும் நியாயமாக இருக்காது. 16ம் தேதி இல்லையென்றால் 23ம் தேதி. பணம் கொடுத்தவர்களுக்குதானே வாக்குகள் கிடைக்கும். அதுவும் அதற்குள் மாநிலம் முழுவதற்குமான தேர்தல் முடிவுகள் வந்துவிட்டால், யார் ஆட்சி அமைக்கப் போகிறார்களோ, அந்த கட்சி வேட்பாளர்தான் இங்கு வெற்றி பெறுவார் என்ற நிலை ஏற்படும். இதுவே ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்றாதா?
பணம் கொடுத்தவர்களை தண்டிப்பதுதானே சரியான முறை! பணம் கொடுத்தவர்கள் மீது குற்றம் சாட்டி, வழக்கு பதிவு செய்துவிட்டு தேர்தல் ஆணையம் சென்றுவிடும். தேர்தல் முடிந்துவிட்டால் இவர்களுக்கு அதிகாரம் இருக்காது. பிறகு ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகள் இந்த வழக்கை சரியாக நடத்துவார்களா? நடக்காது என்பது நாம் கண்ட உண்மை தானே!
அப்படியென்றால் இதற்கு ஒரே தீர்வு தேர்தல் ஆணையம் தனக்கு அதிகாரம் இருக்கும் சமயத்திலேயே சரியான தீர்ப்பை வழங்குவதுதான். உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். பணம் கொடுத்த வேட்பாளர்களை மட்டும் நீக்கிவிட்டு சொன்ன நேரத்திலேயே தேர்தலை நடத்தவேண்டும். மக்கள் மற்ற வேட்பாளர்களில் இருந்து தங்களுக்கு பிடித்த வேட்பாளரை தேர்வு செய்யட்டும்.

இப்படி பத்து தொகுதியிலாவது இரண்டு பெரும் கட்சிகள் சார்ந்த வேட்பாளர்களை பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு தேர்தலை நடத்தினால் அதுதான் சரியான முடிவாக இருக்கும். மற்றவர்களுக்கும் அதுதான் ஒரு பாடமாக இருக்கும் இல்லையென்றால் இது ஒரு சமரச முயற்சியாகத்தான் மாறிவிடும். மேலும் எவ்வளவு பணம் கொடுத்தால் தேர்தல் தள்ளிவைக்கப்படும், பணம் கொடுத்தவர்களுக்கு என்ன தண்டனை போன்று பல கேள்விளை எழுப்பிவிடும்.  

No comments:

Post a Comment

Let others know your opinions about this post