நினைவஞ்சலி
இப்படி ஒரு நூலை எழுதுகிறேன் என்று கூறி, அதன் முதல் வடிவத்தை காட்டி கருத்தைக் கேட்டபோது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியதுமட்டுமல்லாமல், இதற்கு ஒரு அணிந்துரையை எழுதித் தருகிறேன் என்று சொன்னவர் என்னுடைய குருநாதர்களில் ஒருவரான தயாரிப்பாளர்-இயக்குநர் இராம. நாராயணன் அவர்கள்.
‘திரைப்படத் தயாரிப்பு 2014’ என்ற தலைப்பில்தான் முதலில் இதை எழுத ஆரம்பித்தேன்.
‘திரைப்படம், தயாரிப்பாளர்களின் கலை’ என்று சொன்னால் சரியாகுமா என்ற தயக்கம் எனக்குள் இருந்தது. குருநாதர் இராம.நாராயணன் அவர்கள்தான் இந்நூலுக்கு ‘திரைப்படம், தயாரிப்பாளர்களின் கலை’ என்ற பெயர்தான் பொருத்தம் என்று என்னை ஊக்கப்படுத்தினார்.
காலம் செய்த சிறு பிழையால் என்னால் அவரிடமிருந்து அணிந்துரையைப் பெறமுடியாமல் போனது. அவருடைய அணிந்துரை இருக்க வேண்டிய அதே இடத்தில் இந்த நினைவஞ்சலியை வைக்கும்படியாகிவிட்டது. நான் முழுமையாக இந்த நூலை எழுதுவதற்கு முன் அவர் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். ஆனால் இந்த நூலுக்காக அவர் சொன்ன அறிவுரைகள், இதை முழுமையாக எழுதி முடிக்க எந்த அளவுக்கு உதவியாக இருந்தது என்பதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
‘திரைப்படம் என்பது தயாரிப்பாளர்களின் கலை’ என்ற கருத்தைச் சொல்ல, இந்நூலுக்கு அணிந்துரை எழுத, இராம. நாராயணன் அவர்களைவிட தகுதியான இன்னொருவர் இருக்கிறாரா என்பது சந்தேகமே! எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பெரும் வெற்றிகளை பெற்றவர் இராம. நாராயணன் அவர்கள்.
எட்டு மொழிகளிலாக பல படங்களில் எழுத்தாளராக பணியாற்றி, நூற்றி இருபதற்கும் மேலான படங்களை இயக்கி, ஐம்பதற்கும் மேலான படங்களை தயாரித்து, நூற்றுக்கணக்கான படங்களை வினியோகம் செய்து திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். அவர்தான் என்னை திரைத்துறையில் ஒரு வசனகர்த்தாவாக அறிமுகம் செய்தவர். பல படங்களில் அவருடன் கதை விவாதங்களில் பங்குகொண்டிருக்கிறேன். ஒரு இயக்குநர், குருநாதர் அல்லது எழுத்தாளர் என்பது போல மட்டும் அல்லாமல் ஒரு குடும்பநண்பர் போலவே அவர் என்னிடம் பழகிவந்தார். திரைத்துறையைப்பற்றி அவர் என்னிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்களை முழுவதுமாக எழுத இந்த புத்தகம் போதாது.
அவருடைய நினைவுகளுக்கு முன்னால் நான் இந்த நூலை அஞ்சலியாக சமர்ப்பிக்கிறேன்.
No comments:
Post a Comment
Let others know your opinions about this post