Wednesday, 10 July 2019

பொன்னியின் செல்வன் பாகம் 1 - 10






பத்தாம் அத்தியாயம்
குடந்தை சோதிடர்
பொன்னி தன் மணாளனைத் தழுவிக் கொள்ள ஆசையுடன் நீட்டும் பொற்கரங்களில் ஒன்றுக்குத்தான் அரிசிலாறு என்று பெயர்! காவேரிக்குத் தென் புறத்தில் மிக நெருக்கத்தில் அரிசிலாறு என்னும் அழகிய நதி அமைந்திருக்கிறது.
அப்படி ஒரு நதி இருப்பது சற்றுத் தூரத்தில் இருந்து வருகிறவர்களுக்குச் சொல்லித் தான் தெரிய வேண்டும்.
இருபுறமும் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் இனிய பசுமரங்கள் அப்படி அந்நதியை மறைத்து விடுகின்றன.
பிறந்தது முதலாவது அந்தப்புரத்தை விட்டு வெளியேறி அறியாத அரசகுலக் கன்னியென்றே அரிசிலாற்றைச் சொல்லலாம்.
அந்தக் கன்னி நதியின் அழகுக்கு இந்த உலகில் உவமையே கிடையாது.
நல்லது; அந்தப்புரம் என்னும் எண்ணத்தை மறந்துவிட்டு நேயர்கள் நம்முடன் அரிசிலாற்றை நெருங்கி வருவார்களாக.
சோலையாக நெருங்கி வளர்ந்திருந்த மரங்களுக்கிடையே புகுந்து வருவார்களாக! அடடா இது என்ன அருமையான காட்சி?
அழகுக்கு அழகு செய்வது போலும் அமுதத்துக்கு இனிப்பு ஊட்டுவது போலும் அல்லவா இருக்கிறது?
சித்திர விசித்திரமாகச் செய்த அன்ன வடிவமான வண்ணப் படகில் வீற்றிருக்கும் இந்த வனிதாமணிகள் யார்?
அவர்களில் நடு நாயகமாக, நட்சத்திரங்களுக்கிடையில் பூரண சந்திரனைப் போல் ஏழுலகங்களையும் ஆளப் பிறந்த ராணியைப் போல், காந்தியுடன் விளங்கும் இந்த நாரீமணி யார்?
அவளுக்கு அருகில் கையில் வீணையுடன் வீற்றிருக்கும் சாந்தசுந்தரி யார்?
இனிய குரல்களில் இசை பாடி நதி வெள்ளத்துடன் கீத வெள்ளமும் கலந்து பெருகச் செய்து கொண்டு வரும் இந்தக் கந்தர்வப் பெண்கள் யார்?
அவர்களில் ஒருத்தி மீனலோசனி; இன்னொருத்தி நீலலோசனி;
ஒருத்தி தாமரை முகத்தாள்; இன்னொருத்தி கமல இதழ் நயனத்தாள்;
ஆஹா வீணையை மீட்டுகிறாளே, அவளுடைய காந்தளை ஒத்த விரல்கள் வீணைத் தந்திகளில் அங்குமிங்கும் சஞ்சரிக்கும் அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.
அவர்கள் இசைக்கும் கீதத்தின் இனிமையைத்தான் என்ன என்று சொல்லுவது?
அதைக் கேட்பதற்காக நதியின் வெள்ளம் கூட அல்லவா தன் ஓசையை நிறுத்தியிருக்கிறது?
படகில் வரும் அப்பெண்கள் என்ன பாடுகிறார்கள் கேட்கலாம்:-
மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,
மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்தாய் வாழி! காவேரி !
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி !
பூவர் சோலை மயிலாடப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய
நடந்தாய் வாழி காவேரி !
காமர் மாலை அருகசைய
நடந்த வெல்லாம், நின் கணவன்
நாம வேலின் திறங்கண்டே
அறிந்தேன் வாழி! காவேரி!
இந்த அமுதத் தமிழ்ப் பாடல்களை எங்கேயோ கேட்டிருக்கிறோமல்லவா?
ஆம், சிலப்பதிகாரத்தில் உள்ள வரிப் பாடல்கள் இவை.
எனினும், இந்தப் பெண்கள் பாடும்போது முன் எப்போதுமில்லாத வனப்பும் கவர்ச்சியும் பெற்று விளங்குகின்றன.
இவர்கள் பொன்னி நதியின் அருமைத் தோழிகள் போலும்! அதனாலேதான் இவ்வளவு பரவசமாக உணர்ச்சி ததும்பப் பாடுகிறார்கள்.
படகு மிதந்து கொண்டே வந்து, மரங்கள் சிறிது இடைவெளி தந்த ஓடத்துறையில் ஒதுங்கி நிற்கிறது.
இரண்டு பெண்கள் இறங்குகிறார்கள்; அவர்களில் ஒருத்தி ஏழுலகத்துக்கும் ராணி எனத் தகும் கம்பீரத் தோற்றமுடைய பெண்மணி.
இன்னொருத்தி வீணைத் தந்திகளில் விரல்களை ஓட்டி இன்னிசை எழுப்பிய நங்கை.
கம்பீரத் தோற்றமுடைய கங்கைதான் சுந்தர சோழ மன்னரின் செல்வப் புதல்வி குந்தவை.
சரித்திரத்தில் ராஜராஜன் என்று புகழ் பெற்ற அருள்மொழிவர்மனின் சகோதரி.
அரசிளங் குமரி என்றும் இளைய பிராட்டி என்றும் மக்களால் போற்றப்பட்ட மாதரசி.
சோழ ராஜ்யத்தின் மகோன்னதத்திற்கு அடிகோலிய தமிழ்ப் பெரும் செல்வி.
ராஜராஜனுடைய புதல்வன் ராஜேந்திரனை எடுத்து வளர்த்து வீராதி வீரனாயும் மன்னாதி மன்னனாயும் ஆக்கிய தீரப் பெண்மணி.
இன்னொருத்தி, குந்தவைப் பிராட்டியுடன் இருக்கும் பாக்கியத்தை நாடி வந்த கொடும்பாளூர்ச் சிற்றரசர் குலப் பெண்.
பிற்காலத்தில், சரித்திரத்திலேயே இணையில்லாத பாக்கியவதியாகப் போகிறவள்.
இன்று அடக்கமும் இனிமையும் சாந்தமும் உருவெடுத்து விளங்குகிறவள்.
இந்த இரு மங்கைமார்களும் படகிலிருந்து கரையில் இறங்கினார்கள்.
குந்தவை மற்ற தோழிப் பெண்களைப் பார்த்து, "நீங்கள் இங்கேயே இருங்கள். ஒரு நாழிகை நேரத்தில் திரும்பி வந்து விடுகிறோம்!" என்றாள்.
அந்தத் தோழிப் பெண்கள் அனைவரும் தெய்வத் தமிழ்நாட்டில் பற்பல சிற்றரசர்களின் அரண்மனையில் பிறந்த அரசகுமாரிகள்.
குந்தவை தேவிக்குத் தோழியாக இருப்பதைப் பெறற்கரும் பேறாகக் கருதிப் பழையாறை அரண்மனைக்கு வந்தவர்கள்.
இப்போது தங்களில் ஒருத்தியை மட்டும் அழைத்துக் கொண்டு குந்தவைப் பிராட்டி கரையில் இறங்கி 'போய்விட்டு விரைவில் வருகிறேன்' என்றதும் அவர்களுடைய கண்களில் ஏமாற்றமும் அசூயையும் தோன்றின.
கரையில் குதிரை பூட்டிய ரதம் ஒன்று சித்தமாயிருந்தது.
"வானதி! ரதத்தில் ஏறிக்கொள்!" என்றாள் குந்தவை தன் தோழியைப் பார்த்து.
வானதி ஏறியதும் தானும் ஏறி கொண்டாள் ரதம் வேகமாய்ச் சென்றது.
"அக்கா! நாம் எங்கே போகிறோம்? எனக்குச் சொல்லலாமா?" என்று வானதி கேட்டாள்.
"சொல்லாமல் என்ன? குடந்தை சோதிடர் வீட்டுக்குப் போகிறோம்!" என்றாள் குந்தவை.
"சோதிடர் வீட்டுக்கு எதற்காகப் போகிறோம், அக்கா? என்னத்தைப் பற்றிக் கேட்பதற்காக?"
"வேறு எதற்கு? உன்னைப் பற்றிக் கேட்பதற்காகத்தான்.
சில மாத காலமாக நீ இப்படிப் பிரமை பிடித்தவள் போலும், உடல் மெலிந்தும் வருகிறாயா? உனக்கு எப்போது பிரமை நீங்கி உடம்பு தேறும் என்று கேட்பதற்காகத்தான்!"
"அக்கா! தங்களுக்கு ரொம்பப் புண்ணியமுண்டு; எனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லை.
என்னைப் பற்றிக் கேட்பதற்காகப் போக வேண்டாம் திரும்பி விடுவோம்!"
"இல்லையடி, அம்மா, இல்லை! உன்னைப் பற்றிக் கேட்பதற்காக இல்லை; என்னைப் பற்றிக் கேட்பதற்காகத்தான் போகிறேன்."
"தங்களைப் பற்றி என்ன கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்? ஜோசியரிடம் கேட்டு என்ன தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்."
"எனக்குக் கலியாணம் ஆகுமா? அல்லது கடைசி வரையில் கன்னிப் பெண்ணாகவே இருந்து காலம் கழிப்பேனா என்று கேட்கப் போகிறேன்."
"அக்கா!இதற்கு ஜோசியரிடம் போய்க் கேட்பானேன்! தங்களுடைய மனதையே அல்லவா கேட்க வேண்டும்?
தாங்கள் தலையை அசைக்க வேண்டியதுதான்!
இமய மலை முதலாவது குமரி முனை வரையில் உள்ள ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் போட்டி போட்டுக் கொண்டு ஓடி வரமாட்டார்களா?
ஏன், கடல் கடந்த தேசங்களிலேயிருந்தெல்லாம்கூட வருவார்களே! தங்களைக் கை பிடிக்கும் பேறு எந்த வீர ராஜகுமாரனுக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ? அதைத் தாங்கள் அல்லவா தீர்மானிக்க வேண்டும்!"
"வானதி நீ சொல்வதெல்லாம் உண்மை என்று வைத்துக் கொண்டாலும் அதற்கு ஒரு தடை இருக்கிறது.
எந்தத் தேசத்து அரச குமாரனையாவது மணம் புரிந்து கொண்டால் நான் அவனுடைய நாட்டுக்குப் போக வேண்டி வருமல்லவா?
எனக்கு இந்தப் பொன்னி நதி பாயும் சோழ நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்குப் போகப் பிடிக்கவேயில்லையடி! வேறு நாட்டுக்குப்போவதில்லை என்று நான் சபதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்..."
"அது ஒரு தடையாகாது; தங்களை மணம் புரிந்து கொள்ளும் எந்த ராஜகுமாரனும் தங்கள் காலில் விழுந்து கிடக்கும் அடிமையாகவே இருப்பான்.
இங்கேயே இருக்க வேண்டும் என்றாலும் இருந்து விட்டுப் போகிறான்."
"ஆகா! எலியைப் பிடித்து மடியில் வைத்துக் கட்டிக் கொள்வதுபோல் வேறு தேசத்து ராஜகுமாரனை நம் ஊரிலேயே கொண்டு வைத்துக் கொள்ளவா சொல்கிறாய்?
அதனால் என்னென்ன தொல்லைகள் எல்லாம் விளையும் தெரியுமா?"
"எப்படியும் பெண்ணாய்ப் பிறந்தவர்கள் ஒரு நாள் கலியாணம் செய்து கொண்டுதானே தீர வேண்டும்?"
"சரி அப்படிக் கலியாணம் செய்து கொள்வது என்று புறப்பட்டால் அநாதையான சோழ நாட்டு வீரன் ஒருவனையே நான் மணந்து கொள்வேன்.
அத்தகையவனுக்கு ராஜ்யம் இராது.
என்னை அழைத்துக் கொண்டு வேறு ஒரு தேசத்துக்குப் போக வேண்டும் என்று சொல்ல மாட்டான்.
இங்கேயே சோழ நாட்டிலேயே இருந்து விடுவான்..."
"அக்கா! அப்படியானால் இந்தச் சோழ நாட்டை விட்டுப் போகமாட்டீர்களே?"
"ஒரு நாளும் போக மாட்டேன் சொர்க்க லோகத்துக்கு என்னை அரசியாக்குவதாகச் சொன்னாலும் போகமாட்டேன்."
"இன்றைக்குத்தான் என் மணம் நிம்மதி அடைந்தது."
"அது என்னடி?"
"நீங்கள் வேறு நாட்டுக்குப் போனால், நானும் உங்களோடு வந்தே தீர வேண்டும்.
உங்களை விட்டுப் பிரிந்திருக்க என்னால் முடியாது.
அதே சமயத்தில் இந்தச் சோழ வளநாட்டைப் பிரிந்து போகவும் எனக்கு மனமில்லை."
"கலியாணம் ஆனால் நீ பிரிந்து போய்த்தானே தீர வேண்டும்?"
"நான் கலியாணமே செய்து கொள்ளப் போவதில்லை, அக்கா!"
"அடியே! எனக்கு செய்த உபதேசமெல்லாம் எங்கே போயிற்று?"
"தங்களை போலவா நான்?"
"அடி கள்ளி! எனக்கு எல்லாம் தெரியும்.
என் கண்ணில் மண்ணைத் தூவலாம் என்றா பார்க்கிறாய்? உனக்குச் சோழ நாட்டின் மீது அபிமானம் ஒன்றும் கிடையாது.
நீ ஆசை வைத்திருக்கும் சோழ நாடு, வாளும் வேலும் தாங்கி ஈழநாட்டுக்கு யுத்தம் செய்ய அல்லவா போயிருக்கிறது? உன் அந்தரங்கம் எனக்குத் தெரியாது என்றா நினைத்தாய்?"
"அப்படியானால் உன் மனதில் ஒரு குறை இருக்கிறது என்று சொல்லு.
இத்தனை நாள் 'இல்லவே இல்லை' என்று சாதித்தாயே? அதனால்தான் குடந்தை ஜோசியரிடம் போகிறேன்."
"என் மனதில் குறையிருந்தால், அதைப் பற்றிக் கேட்கச் சோதிடரிடம் போய் என்ன பயன்?" என்று கூறி வானதி பெருமூச்செறிந்தாள்.
குடந்தை சோதிடரின் வீடு அந்த நகரின் ஒரு மூலையில் காளி கோயிலுக்கு அருகில் ஒரு தனித்த இடத்தில் இருந்தது.
குடந்தை நகருக்குள் புகாமலேயே நகரைச் சுற்றிக் கொண்டு ரதம் அந்த வீடு சென்று அடைந்தது.
ரதசாரதி ரதத்தைத் தங்கு தடையின்றி அங்கே ஓட்டிக் கொண்டு போய்ச் சேர்த்ததைப் பார்த்தால், அவன் அதற்கு முன் பலமுறை அங்கே ரதம் ஓட்டிக் கொண்டு சென்றிருக்க வேணும் என்று தோன்றியது.
வீட்டு வாசலில் சோதிடரும் அவருடைய சீடர் ஒருவரும் ஆயத்தமாகக் காத்திருந்தார்கள்.
சோதிடர் மிக்க பக்தி மரியாதையுடன் வந்தவர்களை வரவேற்று உபசரித்தார்.
"பெருமாட்டி! கலைமகளும் திருமகளும் ஓருருவாய் வந்த தாயே! வரவேணும்! வரவேணும்! இந்த ஏழையின் குடிசை செய்த பாக்கியம், மறுமுறையும் தாங்கள் இக்குடிசையைத் தேடி வந்தீர்கள்!" என்றார்.
"சோதிடரே! இந்த வேளையில் தங்களைத் தேடிக் கொண்டு வேறு யாரும் இங்கு வரமாட்டார்கள் அல்லவா?" என்றாள் குந்தவை.
"வரமாட்டார்கள், தாயே! இப்போதெல்லாம் என்னைத் தேடி அதிகம் பேர் வருவதே இல்லை.
உலகத்தில் கஷ்டங்கள் அதிகமாகும் போது தான் சோதிடர்களைத் தேடி மக்கள் அதிகமாக வருவார்கள்.
இப்போது தங்களுடைய திருத் தந்தை சுந்தரச் சோழரின் ஆட்சியில், குடிகளுக்குக் கஷ்டம் என்பதே கிடையாது.
எல்லோரும் சுக சௌக்கியங்களுடன் சகல சம்பத்துக்களையும் பெற்றுச் சந்தோஷமாக வாழ்கிறார்கள்.
என்னைத் தேடி ஏன் வருகிறார்கள்?" என்றார் சோதிடர்.
"அப்படியானால் எனக்கு ஏதோ கஷ்டம் வந்திருப்பதனால் தான் உம்மைத் தேடி வந்திருக்கிறேன் என்று சொல்லுகிறீராக்கும்!"
"இல்லை, பெருமாட்டி! இல்லவே இல்லை! நவநிதியும் கொழிக்கும் பழையாறை மன்னரின் திருக் குமாரிக்குக் கஷ்டம் வந்தது என்று எந்தக் குருடன்தான் சொல்லுவான்!
உலகத்தில் மக்களுக்குக் கஷ்டமே இல்லாமற் போய்விட்டபடியால், இந்த ஏழைச் சோதிடனுக்கு மட்டும் கஷ்டம் வந்திருக்கிறது;
இவனை மட்டும் கவனிப்பார் இல்லை.
ஆகையால், இந்த ஏழையின் கஷ்டத்தைத் தீர்ப்பதற்காக அம்பிகையைப் போல் வந்திருக்கிறீர்கள்.
தாயே! குடிசைக்குள்ளே வந்தருள வேண்டும்.
இங்கேயே தங்களை நிறுத்தி வைத்திருப்பது நான் செய்யும் அபசாரம்!" என்று ஜோசியர் சமத்காரமாகப் பேசினார்.
ரதசாரதியைப் பார்த்துக் குந்தவை, "ரதத்தைக் கோயிலுக்குச் சமீபம் கொண்டு போய் ஆலமரத்தின் நிழலில் நிறுத்தி வை!" என்றாள்.
பிறகு சோதிடர் வழிகாட்டி முன் செல்ல, குந்தவையும் வானதியும் அவ்வீட்டுக்குள்ளே சென்றார்கள்.
சோதிடர் தம் சீடனைப் பார்த்து, "அப்பனே! வாசலில் ஜாக்கிரதையாக நின்று கொண்டிரு; தப்பித் தவறி யாராவது வந்தாலும் உள்ளே விடாதே!" என்று எச்சரித்தார்.
அரசகுமாரியை வரவேற்பதற்கு உகந்ததாகச் சோதிடரின் கூடம் அழகு செய்யப்பட்டிருந்தது.
சுவரில் ஒரு மாடத்தில் அம்பிகையின் படம் அலங்கரிக்கப்பட்டு விளங்கியது.
அமருவதற்கு இரண்டு பீடங்கள் சித்தமாயிருந்தன.
குத்துவிளக்கு எரிந்தது, அங்குமிங்கும் கோலங்கள் பொலிந்தன.
ராசிச் சக்கரங்கள் போட்ட பலகைகளும்  ஓலைச்சுவடிகளும் சுற்றிலும் இரைந்து கிடந்தன.
பெண்மணிகள் இருவரும் பீடங்களில் அமர்ந்த பிறகு, சோதிடரும் உட்கார்ந்தார்.
"அம்மணி! வந்த காரியம் இன்னதென்பதைத் தயவு செய்து சொல்லி அருள வேணும்!" என்றார்.
"ஜோசியரே! அதையும் தங்கள் ஜோதிடத்திலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளக் கூடாதா?" என்றாள் குந்தவை.
"ஆகட்டும் தாயே!" என்று கூறிச் ஜோதிடர் கண்ணை மூடிக் கொண்டு சிறிது நேரம் ஏதோ மந்திரம் ஜபித்துக் கொண்டிருந்தார்.
பிறகு கண்ணைத் திறந்து பார்த்து, "கோமாட்டி, இந்தக் கன்னிப் பெண்ணின் ஜாதகம் பற்றிக் கேட்பதற்காகவே இன்று முக்கியமாக வந்திருக்கிறீர்கள்.
அவ்விதம் தேவி பராசக்தியின் அருள் சொல்கிறது உண்மைதானா?" என்றார்.
"ஆஹா! பிரமாதம்! உங்களுடைய சக்தியை என்னவென்று சொல்வது? ஆம் ஜோசியரே! இந்தப் பெண்ணைப் பற்றிக் கேட்கத் தான் வந்தேன்.
ஒரு வருஷத்துக்கு முன்பு இவள் பழையாறை அரண்மனைக்கு வந்தாள்.
வந்து எட்டு மாத காலம் மிகக் குதூகலமாய் இருந்து வந்தாள்.
என் தோழியருக்குள்ளே இவள்தான் சிரிப்பும் விளையாட்டும் கலகலப்புமாக இருந்து வந்தாள்.
நாலுமாதமாக இவளுக்கு என்னவோ நேர்ந்திருக்கிறது.
அடிக்கடி சோர்ந்து போகிறாள்.
பிரமை பிடித்தாற்போல் இருக்கிறாள்; சிரிப்பையே மறந்து விட்டாள்.
உடம்புக்கு ஒன்றுமில்லை என்கிறாள்.
இவள் பெற்றோர்கள் நாளைக்கு வந்து கேட்டால், என்ன மறுமொழி சொல்வதென்றே தெரியவில்லை..."
"தாயே! கொடும்பாளூர் கோமகளின் செல்வப் புதல்வி தானே இவர்? இவருடைய பெயர் வானதி தானே?" என்றார் ஜோதிடர்.
"ஆமாம்; உமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதே!"
"இந்த அரசிளங்குமரியின் ஜாதகம் கூட என்னிடம் இருக்கிறது.
சேர்த்து வைத்திருக்கிறேன்! சற்றுப் பொறுக்க வேணும்!" என்று சொல்லிவிட்டு, ஜோதிடர் பக்கத்திலிருந்த ஒரு பழைய பெட்டியைத் திறந்து சிறிது நேரம் புரட்டினார்.
பிறகு, அதிலிருந்து ஒரு ஜாதகக் குறிப்பை எடுத்துக் கவனமாய்ப் பார்த்தார்.
------------

Wednesday, 19 June 2019

பொன்னியின் செல்வன் பாகம் 1 - 9






ஒன்பதாம்அத்தியாயம்
வழிநடைப் பேச்சு
பாலாற்றுக்கு வடக்கேயுள்ள வறண்ட பிரதேசங்களிலேயே வந்தியத்தேவன் அதுகாறும் தன் வாழ்நாளைக் கழித்தவன் ஆகையால் ஆற்று வெள்ளத்தில் நீந்துவதற்கு அவனுக்குத் தெரியாமலிருந்தது.
ஒரு சமயம் வடபெண்ணைக் கரையில் எல்லைக் காவல் புரிந்துவந்தபோது, குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினான்.
ஒரு பெரிய நீர்ச் சுழலில் அகப்பட்டுக் கொண்டான்.
அதே சமயத்தில் கீழேயும் இழுத்துக் கொண்டிருந்தது.
சீக்கிரத்தில் வந்தியதேவனுடைய பலத்தையெல்லாம் அந்தச் சுழல் உறிஞ்சிவிட்டது.
"இனிப் பிழைக்க முடியாது, சுழலில் மூழ்கிச்சாக வேண்டியதுதான்!" என்று வந்தியத்தேவன் நிராசை அடைந்த சமயத்தில் தெய்வாதீனமாக நதிச் சுழலிலிருந்து வெளிப்பட்டான்.
வெள்ளம் அவனை அடித்துக் கொண்டு போய்க் கரையில் ஒதுக்கிக் காப்பாற்றியது!
அன்றிரவு வந்தியத்தேவன் மீண்டும் சென்று படுத்தபோது அவனுக்கு நதியின் சுழலில் அகப்பட்டுத் திண்டாடியது போன்ற அதே உணர்ச்சி ஏற்பட்டது.
சோழ மகா சாம்ராஜ்யத்துக்கு வெளிப்பகைவர்களால் ஏற்பட்டிருந்த தொல்லைகள் நீங்கிச் சில வருஷங்கள்தான் ஆகியிருந்தன.
இளவரசர் ஆதித்த கரிகாலர் மகாவீரர், போர்க் கலையில் நிபுணர்;
ராஜதந்திரத்தில் சாணக்கியர்.
தம்முடைய அறிவாற்றல்களையும் சோழ நாட்டுப் படைகளின் போர்த் திறனையும் பூரணமாகப் பயன்படுத்தி இரட்டை மண்டலத்துக் கிருஷ்ண மன்னனின் ஆதிக்கத்தைத் தொண்டை மண்டலத்திலிருந்து அடியோடு தொலைத்தார்.
வெளிப்பகை ஒருவாறு ஒழிந்தது.
இந்த நிலைமையில் உட்கலகமும் சதியும் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன.
ஆதித்த கரிகாலரா? மதுராந்தகரா? யோசிக்க யோசிக்க, இரு தரப்பிலும் நியாயம் இருப்பதாகவே தோன்றியது.
போட்டி என்று உண்மையில் ஏற்பட்டால், இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள்?
தன்னுடைய கடமை என்ன?
ஆஹா! என்னென்னவோ மனக் கோட்டை கட்டிக் கொண்டு காஞ்சியிலிருந்து இந்த யாத்திரை கிளம்பினோமே?
பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலருக்கு உகந்தபடி நடந்து கொண்டு சோழப் பேரரசில் பெரிய பதவிகளை அடையலாம் என்று ஆசைப்பட்டோமே!
காலாகாலத்தில் வாணர் குலத்தின் பூர்வீக ராஜ்யத்தைக்கூடத் திரும்பப் பெறலாம் என்று நினைத்தோமே?
 இதற்கெல்லாம் சாதனமாக எந்தப் புளியங்கொம்பைப் பிடித்தோமோ அதுவே முறிந்துவிடும் போலிருக்கிறதே...?
இத்தகைய சிந்தனைகளினால் வந்தியத்தேவன் இரண்டாம் முறை வந்து படுத்த பிறகு வெகுநேரம் தூக்கம் பிடிக்காமல் திண்டாடினான்.
கடைசியாக, இரவு நாலாம் ஜாமத்தில் கிழக்கு வெளுக்கும் நேரத்தில் அவனுக்கு ஒருவாறு தூக்கம் வந்தது.
மறுநாள் காலையில் உதய சூரியனுடைய செங்கிரணங்கள் சுளீர் என்று அவன்பேரில் பட்டபோது கூட வந்தியத்தேவன் எழுந்திருக்கவில்லை.
கந்தமாறன் வந்து தட்டி எழுப்பியபோது தான் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்தான்.
"இராத்திரி நன்றாய்த் தூக்கம் வந்ததா?" என்று கந்தமாறன் விருந்தினரை உபசரிக்கும் முறைப்படி கேட்டான்.
பிறகு அவனாகவே, "மற்ற விருந்தினரெல்லாம் தூங்கச் சென்ற பிறகு நான் இங்கு வந்து பார்த்தேன். நீ நன்றாய்க் கும்பகர்ண சேவை செய்து கொண்டிருந்தாய்!" என்று சொன்னான்.
வந்தியத்தேவன் மனத்தில் பொங்கி எழுந்த நினைவுகளையெல்லாம் அடக்கிக் கொண்டு, "குரவைக் கூத்துப் பார்த்து விட்டு இங்கு வந்து படுத்ததுதான் தெரியும், இப்போது தான் எழுந்திருக்கிறேன்.
அடாடா! இவ்வளவு நேரம் ஆகி விட்டதே! உதித்து ஒரு ஜாமம்  இருக்கும் போலிருக்கிறதே! உடனே நான் கிளம்ப வேண்டும்.
கந்தமாறா! குதிரையை ஆயத்தம் பண்ணும்படி உன் வேலைக்காரர்களுக்குக் கட்டளையிடு!" என்றான்.
"அழகாயிருக்கிறது! அதற்குள்ளே நீ புறப்படுவதாவது? என்ன அவசரம்? பத்து நாளாவது இங்கே தங்கிவிட்டுத்தான் போக வேண்டும்" என்றான் கந்தமாறன்.
"இல்லை, அப்பனே! தஞ்சாவூரில் என் மாமனுக்கு உடம்பு செவ்வையாக இல்லை.
பிழைப்பதே துர்லபம் என்று செய்தி வந்தது.
ஆகையால் சீக்கிரத்தில் அவரைப் போய்ப் பார்க்க வேண்டும், உடனே புறப்பட வேண்டும்" என்று ஒரே போடாகப் போட்டான் வல்லவரையன்.
"அப்படியானால், திரும்பி வரும் போதாவது இங்கே சில நாள் கட்டாயம் தாமதிக்க வேண்டும்."
"அதற்கென்ன, அப்போது பார்த்துக் கொள்ளலாம், இப்போது நான் புறப்படுவதற்கு விடைகொடு!"
"அவ்வளவு அவசரப்படாதே! காலை உணவு அருந்திவிட்டுப் புறப்படலாம்.
நானும் உன்னுடன் கொள்ளிட நதி வரையில் வருகிறேன்."
"அது எப்படி முடியும்? யார், யாரோ, பெரிய பெரிய விருந்தாளிகள் உன் வீட்டுக்கு வந்திருக்கிறார்களே, அவர்களை விட்டுவிட்டு.."
"உன்னைவிடப் பெரிய விருந்தாளி எனக்கு யாரும் இல்லை!.." என்று கூறிய கந்தன் மாறவேள் சட்டென்று நிறுத்திக் கொண்டான்.
"வந்தவர்கள் பெரிய விருந்தாளிகள் தான் ஆனால் அவர்களைக் கவனித்துக்கொள்ள என் தந்தை இருக்கிறார்; அரண்மனை அதிகாரிகளும் இருக்கிறார்கள்.
உன்னோடு நேற்று ராத்திரிகூட நான் அதிக நேரம் பேசவில்லை.
வழி நடையிலாவது சிறிது நேரம் உன்னோடு சல்லாபம் செய்தால்தான் என் மனம் நிம்மதி அடையும்.
அவசியம் கொள்ளிடக்கரை வரையில் வந்தே தீருவேன்!" என்றான்.
"எனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை. உன் இஷ்டம், உன் சௌகரியம்" என்றான் வந்தியத்தேவன்.
ஒரு நாழிகை நேரத்துக்குப் பிறகு இரு நண்பர்களும் இரு குதிரைகளில் ஏறிச் சம்புவரையர் மாளிகையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்கள்.
குதிரைகள் மெதுவாகவே சென்றன.
பிரயாணம் மிகவும் இன்பகரமாயிருந்தது.
சிறிது நேரத்துக்கெல்லாம் வந்தியத்தேவன் கூறினான்; "கந்தமாறா! உன் வீட்டில் ஒரே ஒரு இரவுதான் தங்கினாலும் அது எனக்கு எவ்வளவோ பயனுள்ளதாயிருந்தது.
ஆனால் ஒரே ஒரு ஏமாற்றம்.
உன் சகோதரியைப் பற்றி வடபெண்ணை நதிக்கரையில் என்னவெல்லாமோ
வர்ணனை செய்து கொண்டிருந்தாய்! அவளை நன்றாய்ப் பார்க்கக் கூட முடியவில்லை.
உன் அன்னைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அவள் எட்டிப் பார்த்தபோது அவள் முகத்தில் எட்டில் ஒரு பங்குதான் தெரிந்தது! நாணமும் மடமும் பெண்களுக்கு இருக்க வேண்டியதைவிட உன் தங்கையிடம் சற்று அதிகமாகவேயிருக்கிறது."
கந்தமாறனுடைய வாயும் உதடுகளும் ஏதோ சொல்வதற்குத் துடித்தன.
ஆனால் வார்த்தை ஒன்றும் உருவாகி வரவில்லை.
"ஆயினும் பாதகமில்லை நீதான் நான் திரும்பி வரும்போது சில நாள் உன் வீட்டில் தங்கவேண்டும் என்று சொல்கிறாயே? அப்போது பார்த்துப் பேசிக் கொண்டால் போகிறது.
அதற்குள் உன் தங்கையின் கூச்சமும் கொஞ்சம் நீங்கிவிடலாம் அல்லவா? கந்தமாறா! உன் சகோதரியின் பெயர் என்னவென்று சொன்னாய்?"
"மணிமேகலை!"
"அடடா! என்ன இனிமையான பெயர்! பெயரைப் போலவே அழகும் குணமும் இருந்து விட்டால்.."
கந்தமாறன் குறுக்கிட்டு, "நண்பா! உன்னை ஒன்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
என் தங்கையை நீ மறந்து விடு; அவளைப் பற்றி நான் சொன்னதையெல்லாம் மறந்துவிடு; அவள் பேச்சையே எடுக்காதே!" என்றான்.
"இது என்ன, கந்தமாறா! ஒரே தலை கீழ் மாறுதலாயிருக்கிறதே! நேற்று இரவு கூட உன் வீட்டுக்கு நான் மருமகனாக வரப் போவதைப் பற்றி ஜாடையாகச் சொன்னாயே!"
"அவ்விதம் நான் சொன்னது உண்மை தான்.
ஆனால் பிறகு வேறு நிலைமை ஏற்பட்டுவிட்டது.
என் பெற்றோர்கள் வேறு இடத்தில் என் சகோதரியைக் கலியாணம் செய்து கொடுக்க முடிவு செய்து விட்டார்கள்; மணிமேகலையும் அதற்குச் சம்மதித்து விட்டாள்!"
வந்தியத்தேவன் மனத்திற்குள் "மணிமேகலை வாழ்க!" என்று சொல்லிக் கொண்டான்.
மணிமேகலையை யாருக்குக் கொடுக்க நிச்சயித்திருப்பார்கள் என்று ஊகிப்பதிலும் அவனுக்குக் கஷ்டம் ஏற்படவில்லை.
மூடு பல்லக்கிலிருந்து வெளிப்பட்ட இளவரசர் மதுராந்தகருக்குத்தான் நிச்சயித்திருப்பார்கள்.
மதுராந்தகருடைய கட்சிக்குப் பலம் தேட இப்படியெல்லாம் உறவுகளையும் ஏற்படுத்துகிறார்களாக்கும்.
பழுவேட்டரையர் பொல்லாத கெட்டிக்காரர்தான்!
"ஆஹா! நேற்று ராத்திரி வந்திருந்த பணக்கார விருந்தாளிகளில் ஒருவரை மாப்பிள்ளையாக்கத் திட்டம் செய்தீர்களாக்கும்! கந்தமாறா! இதில் எனக்கு வியப்பும் இல்லை; ஏமாற்றமும் இல்லை ஒரு மாதிரி நான் எதிர்பார்த்ததுதான்..."
"எதிர்பார்த்தாயா அது எப்படி?"
"என்னைப்போல் ஏழை அநாதைக்கு யார் பெண்ணைக் கொடுப்பார்கள்?
 ஊரும் வீடும் இல்லாதவனை எந்தப் பெண் மணந்து கொள்ள இணங்குவாள்?
"நண்பா! போதும் நிறுத்து; என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் அவ்வளவு கேவலப்படுத்தாதே! நீ சொல்வது ஒன்றும் காரணமில்லை.
வேறு மிக முக்கியமான காரணம் இருக்கிறது.
அதை அறிந்தால் நீயே ஒப்புக் கொள்வாய்.
ஆனால் அதை நான் இப்போது வெளிப்படுத்துவதற்கில்லை.
சமயம் வரும்போது நீயே தெரிந்து கொள்வாய்!"
"கந்தமாறா! இது என்ன ஒரே மர்மமாகவே இன்றைக்கு நீ பேசிக் கொண்டு வருகிறாயே?"
"அதற்காக என்னை மன்னித்துவிடு.
உன்னிடம்கூட நான் மனம் விட்டுப் பேச முடியாதபடி அப்படி ஒரு பெரிய காரியந்தான்.
எது எப்படியானாலும் நம்முடைய சிநேகத்துக்கு எவ்வித பங்கமும் வராது என்பதை நம்பு.
விஷயம் வெளியாக வேண்டிய சமயம் வரும்போது, ஓட்டமாக ஓடி வந்து உன்னிடந்தான் முதலில் சொல்வேன்.
அதுவரையில் என்னிடம் நம்பிக்கை வைத்திரு.
உன்னை நான் ஒருநாளும் கைவிட மாட்டேன் என்னை நம்பு!.."
"இந்த வாக்குறுதிக்காக ரொம்ப வந்தனம்.
ஆனால் என்னைக் கைவிடும்படியான நிலைமை என்ன என்பதுதான் தெரியவில்லை! அப்படி நான் இன்னொருவரை நம்பிப் பிழைக்கிறவனும் அல்ல, கந்தமாறா! என்னுடைய உடைவாளையும் கைவேலையுமே நான் நம்பியிருப்பவன்!"
"அந்த உடைவாளையும் வேலையும் உபயோகிக்க வேண்டிய சந்தர்ப்பம் சீக்கிரத்தில் வரலாம்.
அப்போது நாம் இருவரும் ஒரே கட்சியில் நின்று தோளோடு தோள் சேர்ந்து போரிடுவோம்; அதனால் உன்னுடைய நோக்கமும் கைகூடும்..."
"இது என்ன? ஏதாவது யுத்தம் சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கிறாயா? அல்லது ஈழ நாட்டில் நடக்கும் யுத்தத்துக்குப் போகும் உத்தேசம் உனக்கு உண்டா?"
"ஈழத்துக்கா? ஈழத்தில் நடக்கும் அழகான யுத்தத்தைப் பற்றிக் கேட்டால் நீ ஆச்சரியப்பட்டுப் போவாய்! ஈழத்தில் உள்ள நம் வீரர்களுக்காகச் சோழ நாட்டிலிருந்து அரிசியும் மற்ற உணவுப் பொருள்களும் போக வேண்டுமாம்! வெட்கக்கேடு! நான் சொல்லுவது வேறு விஷயம்.
கொஞ்சம் பொறுமையாயிரு, சமயம் வரும்போது சொல்லுகிறேன்; தயவு செய்து இப்போது என் வாயைப் பிடுங்காதே!"
"சரி, சரி! உனக்கு விருப்பம் இல்லை என்றால் ஒன்றும் சொல்ல வேண்டாம்.
வாயைக்கூடத் திறக்க வேண்டாம் அதோ கொள்ளிடமும் தெரிகிறது!" என்றான் வந்தியத்தேவன்.
சில நிமிஷ நேரத்தில் நண்பர்கள் நதிக்கரையை அடைந்தார்கள்.
ஆடிப் புதுப் பிரவாகம் அந்த மாநதியில் கரை புரண்டு சென்றது.
மறுகரை வெகு தூரத்தில் இருப்பதாகத் தோன்றியது.
மறுகரையிலேயுள்ள மரங்கள் சிறிய செடிகளைப் போலிருந்தன.
தோணித்துறையில் ஓடம் ஒன்று நின்றது.
ஓடந்தள்ளுவோர் இருவர் கையில் நீண்ட கோல்களுடன் ஆயத்தமாயிருந்தார்கள். படகில் ஒரு மனிதர் ஏற்கனவே ஏறியிருந்தார்.
அவரைப் பார்த்தால் பெரிய சிவபக்த சிகாமணி என்று தோன்றியது.
கரையில் வந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து, "சாமி படகில் வரப் போகிறீர்களா? என்று படகோட்டிகளில் ஒருவன் கேட்டான்.
"ஆம்; இவர் வரப்போகிறார் கொஞ்சம் படகை நிறுத்து!" என்றான் கந்தமாறன்! இரு நண்பர்களும், குதிரை மீதிருந்து கீழே குதித்தார்கள்.
"யோசனை இல்லாமல் வந்து விட்டேனே? இந்தக் குதிரையை என்ன செய்வது? படகில் ஏற்ற முடியுமா?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.
"தேவையில்லை, நம்மைத் தொடர்ந்து இதோ இரண்டு ஆட்கள் வந்திருக்கிறார்கள்.
ஒருவன் உன் குதிரையை இங்கிருந்து கடம்பூருக்கு இட்டு வருவான்.
இன்னொருவன் உன்னுடன் படகில் ஏறி வந்து அக்கரையில் உனக்கு வேறு குதிரை சம்பாதித்துக் கொடுப்பான்!" என்றான் கந்தமாறன்.
"ஆஹா! எவ்வளவு முன்யோசனை? நீ அல்லவா உண்மை நண்பன்!" என்றான் வந்தியத்தேவன்.
"பாலாற்றையும் பெண்ணையாற்றையும் போலத்தான் கொள்ளிடத்தைப் பற்றி நீ நினைத்திருப்பாய்.
இதில் குதிரையைக் கொண்டு போக முடியாது என்று நீ எண்ணியிருக்கமாட்டாய்!"
"ஆமாம்; அவ்விதம் உங்கள் சோழ நாட்டு நதியைப் பற்றி அலட்சியமாய் நினைத்ததற்காக மன்னித்துவிடு! அப்பப்பா இது என்ன ஆறு? இது என்ன வெள்ளம்? சமுத்திரம் போலவல்லவா பொங்கி வருகிறது?"
இரு நண்பர்களும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு விடை பெற்றுக் கொண்டார்கள்.
வந்தியத்தேவன் நதிக்கரையோரமாகச் சென்று படகில் ஏறினான்.
கந்தமாறனுடன் வந்த ஆட்களில் ஒருவனும் ஏறிக் கொண்டான்.
படகு புறப்படுவதற்குச் சித்தமாயிருந்தது.
ஓடக்காரர்கள் கோல் போட ஆரம்பித்தார்கள்.
திடீரென்று கொஞ்ச தூரத்திலிருந்து, "நிறுத்து! நிறுத்து! படகை நிறுத்து!" என்று ஒரு குரல் கேட்டது.
ஓடக்காரர்கள் கோல் போடாமல் கொஞ்சம் தயங்கி நின்றார்கள்.
கூவிக் கொண்டு ஓடி வந்தவன் அதிவிரைவில் கரைக்கருகில் வந்து சேர்ந்தான்.
முதற்பார்வையிலேயே அவன் யார் என்பது வந்தியத்தேவனுக்குத் தெரிந்து போயிற்று; அவன் ஆழ்வார்க்கடியான் நம்பி தான்.
வருகிறவர் வைஷ்ணவர் என்பதை அறிந்ததும் படகிலிருந்த சைவர், "விடு! படகை விடு! அந்தப் பாஷாண்டியுடன் நான் படகில் வரமாட்டேன்; அவன் அடுத்த படகில் வரட்டும்!" என்றார்.
ஆனால் வந்தியத்தேவன் ஓடக்காரர்களைப் பார்த்து, "கொஞ்சம் பொறுங்கள் அவரும் வரட்டும்! படகில் நிறைய இடம் இருக்கிறதே! ஏற்றிக் கொண்டு போகலாம்!" என்றான்.
ஆழ்வார்க்கடியானிடமிருந்து நேற்றிரவு நிகழ்ச்சிகளைப் பற்றிப் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வந்தியத்தேவன் விரும்பினான்.
-------------