Wednesday, 19 June 2019

பொன்னியின் செல்வன் பாகம் 1 - 7






ஏழாம் அத்தியாயம்
சிரிப்பும் கொதிப்பும்
அரசுரிமையைப் பற்றிப் பழுவேட்டரையரின் வார்த்தைகளைக் கேட்டதும் வந்தியத்தேவன் உடனே ஒரு முடிவுக்கு வந்தான்.
அரசுரிமையைப் பற்றி இவர்கள் என்ன பேசப்போகிறார்கள்? இவர்கள் யார் பேசுவதற்கு? இந்தக் கூட்டத்தில் நடக்கப் போவதை அறிந்து கொண்டே தீரவேண்டும்! இங்கேயே உட்கார வேண்டியதுதான்.
இதைக் காட்டிலும் வசதியான இடம் வேறு கிடையாது.
ஆழ்வார்க்கடியான் எப்படியாவது போகட்டும் அவனைப்பற்றி நமக்கு என்ன கவலை?
இன்றைக்கு இங்கு ஏதோ மர்மமான நிகழ்ச்சி நடைபெறப் போகிறது என்ற எண்ணம் வந்தியத்தேவன் மனத்தில் முன்னமே உண்டாகியிருந்தது.
ஆழ்வார்க்கடியானின் விபரீதமான பொருள் தரும் வார்த்தைகள், கோட்டை வாசற் காவலர்களின் துடுக்கான நடத்தை, சம்புவரையரின் அரைமனதான வரவேற்பு, வெறியாட்டம் ஆடிய சந்நதக்காரனின் ஆவேசமொழிகள் இவையெல்லாம் அவனுக்கு ஏதேதோ சந்தேகங்களை உண்டாக்கியிருந்தன.
அந்தச்சந்தேகங்களையெல்லாம் நீக்கிக் கொள்ளவும், உண்மையை அறிந்து கொள்ளவும் இதோ ஒருசந்தர்ப்பம் தெய்வாதீனமாகக் கிடைத்திருக்கிறது; அதை ஏன் நழுவவிட வேண்டும்?
ஆகா! தன்னுடைய உயிருக்குயிரான நண்பன் என்று கருதி வந்த கந்தமாறன் கூடத் தன்னிடம்  உண்மையைச் சொல்லவில்லை.
தன்னைத் தூங்க வைத்துவிட்டு, இந்த ரகசிய நள்ளிரவுக் கூட்டத்துக்கு வந்திருக்கிறான்.
அவனை நாளைக்கு ஒரு கை பார்க்க வேண்டியதுதான்.
இதற்குள் கீழே பழுவேட்டரையர் பேசத் தொடங்கி விட்டார்.
வந்தியத்தேவன் காது கொடுத்துக் கவனமாகக் கேட்கலானான்.
"உங்களுக்கெல்லாம் மிக முக்கியமான ஒரு செய்தியை அறிவிக்கவே நான் வந்திருக்கிறேன். அதற்காகவே இந்தக் கூட்டத்தைச் சம்புவரையர் கூட்டியிருக்கிறார்.
சுந்தரசோழ மஹாராஜாவின் உடல்நிலை மிகக் கவலைக்கிடமாயிருக்கிறது.
அரண்மனை வைத்தியர்களிடம் அந்தரங்கமாகக் கேட்டுப் பார்த்தேன்.
அவர்கள் 'இனிமேல் நம்பிக்கைக்கு இடமில்லை; அதிக காலம் உயிரோடு இருக்க மாட்டார்' என்று சொல்லி விட்டார்கள்.
ஆகவே, இனிமேல் நடக்க வேண்டிய காரியங்களைப்பற்றி நாம் இப்போது யோசித்தாக வேண்டும்!" என்று கூறிப் பழுவேட்டரையர் நிறுத்தினார்.
"ஜோசியர்கள் என்ன சொல்கிறார்கள்?" என்று கேட்டார் கூட்டத்தில் ஒருவர்.
"ஜோசியர்களைப் போய்க் கேட்பானேன்? சில நாளாகப் பின் மாலை நேரத்தில் வானத்தில் வால்நட்சத்திரம் தெரிகிறதே! அது போதாதா! என்றார் ஒருவர்.
பின்னர் பழுவேட்டரையர் கூறினார்: "ஜோசியர்களையும் கேட்டாகிவிட்டது அவர்கள் சில காலம் தள்ளிப் போடுகிறார்கள்; அவ்வளவுதான். எப்படியிருந்தாலும், அடுத்தாற்போல் பட்டத்துக்கு உரியவர் யார் என்பதை நாம் யோசித்தாக வேண்டும்..."
"அதைப் பற்றி இனி யோசித்து என்ன ஆவது? ஆதித்த கரிகாலருக்குத்தான் இளவரசுப் பட்டம் இரண்டு வருஷத்துக்கு முன்பே கட்டியாகிவிட்டதே!" என்று இன்னொரு கம்மலான குரல் கூறியது.
"உண்மைதான், ஆனால் அப்படி இளவரசுப் பட்டம் கட்டுவதற்கு முன்னால் நம்மில் யாருடைய யோசனையாவது கேட்கப்பட்டதா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
இங்கே கூடியுள்ள நாம் ஒவ்வொருவரும் நூறு ஆண்டுக்கு மேலாக, நாலு தலைமுறையாக, சோழராஜ்யத்தின் மேன்மைக்காகப் பாடுபட்ட பழங்குடியைச் சேர்ந்தவர்கள்.
இன்றைக்கும் ஈழ நாட்டில் நம்முடைய குலத்தையும் குடும்பத்தையும் சேர்ந்த பிள்ளைகள் போர் செய்து வருகிறார்கள். ஆனால் அடுத்தபடியாகப் பட்டத்துக்கு வரவேண்டியவர் யார் என்பது பற்றித் தீர்மானிப்பதில் நம்முடைய அபிப்பிராயத்தை மகாராஜா கேட்கவில்லை.
தசரதர்கூட இராமருக்குப் பட்டம் கட்டுவது பற்றி மந்திராலோசனை சபை கூட்டி யோசனை செய்தார்.
மந்திரிகளையும், சாமந்தகர்களையும், சேனைத்தலைவர்களையும், சிற்றரசர்களையும் ஆலோசனை கேட்டார்.
ஆனால் சுந்தர சோழ மகாராஜா யாருடைய யோசனையையும் கேட்பது அவசியம் என்று கருதவில்லை.."
"நம்மை யோசனை கேட்கவில்லையென்பது சரிதான்.
பெரிய பிராட்டியாரான செம்பியன் மகாதேவியின் யோசனையும், இளைய பிராட்டியாரான குந்தவை தேவியின் யோசனையும் கேட்கப்பட்டன.
இல்லையென்று பழுவேட்டரையர் கூற முடியுமா?" என்று கேலியான தொனியில் ஒருவர் கூறவும், கூட்டத்தில் ஒரு சிலர் சிரித்தார்கள்.
"ஆகா! நீங்கள் சிரிக்கிறீர்கள்! எப்படித்தான் உங்களுக்குச் சிரிக்கத் தோன்றுகிறதோ, நான் அறியேன்.
நினைக்க நினைக்க எனக்கு வயிறு பற்றி எரிகிறது; இரத்தம் கொதிக்கிறது.
எதற்காக இந்த உயிரை வைத்துக் கொண்டு வெட்கங்கெட்டு வாழ வேண்டும் என்று தோன்றுகிறது.
இன்று சந்நதம் வந்து ஆடிய 'தேவராளன்' துர்க்கை பலி கேட்பதாகச் சொன்னான்.
'ஆயிரம் வருஷத்துப் பரம்பரை ராஜ வம்சத்தில் பிறந்த நரபலி வேண்டும்' என்று சொன்னான்.
என்னைப் பலி கொடுத்து விடுங்கள்.
என்னுடைய குலம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் தொன்மையானது.
நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கத்தியினால் என் கழுத்தில் ஒரு போடு போட்டுப் பலி கொடுத்து விடுங்கள்.
அன்னை துர்க்கை திருப்தி அடைவாள்; என் ஆத்மாவும் சாந்தி அடையும்..."
இவ்விதம் ஆவேசம் வந்து ஆடிய சந்நதக்காரனைப் போலவே வெறி கொண்ட குரலில் சொல்லிப் பழுவேட்டரையர் நிறுத்தினார்.
சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது.
மேற்குத் திசைக் காற்று 'விர்' என்று அடிக்கும் சப்தமும், அந்தக் காற்றில் கோட்டைச் சுவருக்கு வெளியேயுள்ள மரங்கள் ஆடி அலையும் 'மர்மர' சப்தமும் கேட்டன.
"ஏதோ தெரியாத்தனமாகப் பேசிவிட்ட பரிகாசப் பேச்சையும், அதனால் விளைந்த சிரிப்பையும் பழுவூர் மன்னர் பொறுத்தருள வேண்டும்.
தாங்கள் எங்களுடைய இணையில்லாத் தலைவர்.
தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற இங்குள்ளவர் அனைவரும் சித்தமாயிருக்கிறோம்.
தாங்கள் காட்டிய வழியில் நடக்கிறோம்.
தயவு செய்து மன்னித்துக் கொள்ள வேண்டும்!" என்று சம்புவரையர் உணர்ச்சியுடனே கூறினார்.
"நானும் கொஞ்சம் பொறுமை இழந்து விட்டேன்.
அதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்.
ஒரு விஷயத்தை எண்ணிப் பாருங்கள்.
சரியாக இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் விஜயாலய சோழர் முத்தரையர்களை முறியடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார்.
தெற்கே ஈழமும் வடக்கே இரட்டை மண்டலமும் வேங்கியும் கூட இதற்குள் நமக்குப் பணிந்திருக்க வேண்டும்.
அப்படிப் பணியாததற்குக் காரணங்களை நான் சொல்ல வேண்டியதில்லை; அவைகள் எல்லாம் உங்களுக்குத் தெரிந்தது தான்!..."
"ஆம்; எல்லோருக்கும் தெரியும்; ஈழமும் இரட்டைப்பாடியும் வேங்கியும் கலிங்கமும் பணியாததற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒரு காரணம் வடதிசை மாதண்ட நாயகராகிய இளவரசர் ஆதித்த கரிகாலர்; இன்னொரு காரணம் தென் திசைப் படைத் தலைவரான அவருடைய தம்பி அருள்மொழிவர்மர்.."
"மழவரையர் கூறும் காரணத்தை நான் ஒப்புக் கொள்கிறேன்.
ஆனால் இப்போது நடந்திருப்பது என்ன? மூத்த இளவரசர் வடதிசைச் சேனையின் சேனாபதி; அவர் என்ன செய்கிறார்? இரட்டை மண்டலத்தின் மீதும் வேங்கி நாடு மீதும் படையெடுத்துப் போகவில்லை.
காஞ்சிபுரத்தில் உட்கார்ந்து கொண்டு பொன் மாளிகை கட்டிக் கொண்டிருக்கிறார்.
வீரப் பெருங்குடியில் பிறந்த வீராதி வீரர்களாகிய உங்களைக் கேட்கிறேன்.
இதற்கு முன்னால் தமிழகத்தில் எந்த மன்னராவது தாம் வசிப்பதற்குப் பொன்னால் மாளிகை கட்டியதுண்டா? உலகமெங்கும் புகழ் பரப்பி இப்போது கைலாசவாசியாயிருக்கும் மதுரையும் ஈழமும் கொண்ட பராந்தக சக்கரவர்த்திகூடத் தாம் வசிப்பதற்குப்பொன் மாளிகை கட்டிக் கொள்ளவில்லை.
தில்லைச் சிற்றம்பலத்துக்குத்தான் பொன் கூரை வேய்ந்தார்.
ஆனால் இளவரசர் ஆதித்த கரிகாலர் தாம் வசிப்பதற்குக் காஞ்சிபுரத்தில் பொன் மாளிகை கட்டுகிறார்! பல்லவ சக்கரவர்த்திகள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து ராஜ்ய பாரம் புரிந்த அரண்மனைகள் இவருடைய அந்தஸ்துக்குப் போதவில்லையாம்.
பொன்னிழைத்த அரண்மனை கட்டுகிறார்.
"பொன் மாளிகை கட்டி முடிந்து விட்டதா?"
"ஆம், முடிந்து விட்டது என்று என்னுடைய அந்தரங்க ஒற்றர்கள் மூலம் அறிந்தேன்.
அத்துடன் சுந்தர சோழ மகாராஜாவுக்கு அவருடைய அருமை மூத்த புதல்வரிடமிருந்து கடிதங்களும் வந்தன.
புதிதாக நிர்மாணித்திருக்கும் பொன் மாளிகையில் வந்து சுந்தர சோழ மகாராஜா சில காலம் தங்கியிருக்க வேண்டும் என்று."
"மகாராஜா காஞ்சிக்குப் போகப் போகிறாரா?" என்று ஒருவர் கவலை ததும்பிய குரலில் கேட்டார்.
"அத்தகைய கவலை உங்களுக்கு வேண்டாம், அப்படி ஒன்றும் நேராமல் பார்த்துக் கொள்ள நான் இருக்கிறேன்; தஞ்சைக் கோட்டைக் காவலனாகிய என் சகோதரனும் இருக்கிறான்.
சின்னப் பழுவேட்டரையன் அனுமதி இல்லாமல் யாரும் தஞ்சைக் கோட்டைக்குள் புக முடியாது.
என்னையறியாமல் யாரும் மகாராஜாவைப் பேட்டி காணவும் முடியாது; ஓலை கொடுக்கவும் முடியாது.
இது வரையில் இரண்டு மூன்று தடவை வந்த ஓலைகளை நிறுத்தி விட்டேன்."
"வாழ்க பழுவேட்டரையர்!", "வாழ்க பழுவூர் மன்னரின் சாணக்ய தந்திரம்!", "வாழ்க அவர் வீரம்!" என்னும் கோஷங்கள் எழுந்தன.
"இன்னும் கேளுங்கள், பட்டத்து இளவரசர் செய்யும் காரியங்களைக் காட்டிலும் ஈழத்தில் போர் நடத்தச் சென்றிருக்கும் இளவரசர் அருள்மொழிவர்மரின் காரியங்கள் மிக மிக விசித்திரமாயிருக்கின்றன.
யுத்த தர்மத்தைப் பற்றி நாம் அறிந்திருப்பதென்ன? பரம்பரையாகப் பல நூறு ஆண்டுகளாக 'நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்திருப்பதென்ன? நம் நாட்டுப் படைகள் வேறு நாடுகளின் மீது படை எடுத்துச் சென்றால், நம் படைகளுக்கு வேண்டிய உணவுகளை அந்த வேற்று நாடுகளிலேயே சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.
அந்த நாடுகளில் கைப்பற்றும் பொருளைக் கொண்டே வீரர்களுக்கு ஊதியமும் கொடுக்க வேண்டும்.
மிகுந்த பொருளைத் தலைநகரிலுள்ள அரசாங்க பொக்கிஷத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஆனால் இளவரசர் அருள்மொழிவர்மர் என்ன செய்கிறார் தெரியுமா? ஈழ நாட்டிலுள்ள நம் போர் வீரர்களுக்கெல்லாம் இங்கிருந்து கப்பல்களில் உணவு அனுப்பி வைக்க வேண்டுமாம்! ஒரு வரு. காலமாக நானும் பத்துத் தடவை பல கப்பல்களில் ஏற்றி உணவு அனுப்பி வந்திருக்கிறேன்.."
"விந்தை! விந்தை!", "இந்த அநியாயத்தைப் பொறுக்க முடியாது!", "இப்படிக் கேட்டதே இல்லை!" என்ற குரல்கள் எழுந்தன.
"இந்த அதிசயமான காரியத்துக்கு இளவரசர் அருள்மொழிவர்மர் கூறும் காரணத்தையும் கேட்டு வையுங்கள்.
படையெடுத்துச் சென்ற நாட்டில் நம் வீரர்களுக்கு வேண்டிய உணவுப் பொருளைச் சம்பாதிப்பது என்றால், அங்குள்ள குடிமக்களின் அதிருப்திக்கு உள்ளாக நேரிடுமாம்.
ஈழத்து அரச குலத்தாரோடு நமக்குச் சண்டையே தவிர ஈழத்து மக்களோடு எவ்விதச் சண்டையும் இல்லையாம்.
ஆகையால் அவர்களை எவ்விதத்திலும் கஷ்டப்படுத்தக் கூடாதாம்! அரச குலத்தாருடன் போராடி வென்ற பிறகு மக்களின் மனமார்ந்த விருப்பத்துடன் ஆட்சி நடத்த வேண்டுமாம்.
ஆகையால் பணமும் உணவும் இங்கிருந்து அனுப்ப வேண்டுமாம்!"
இச்சமயம் கூட்டத்தில் ஒருவர், "படையெடுத்துச் சென்ற நாடுகளில் உள்ள ஜனங்களிடம் ஒன்றுமே கேட்கக் கூடாது; அவர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டும் என்ற யுத்த தர்மத்தை இதுவரை நாங்கள் கேட்டதே கிடையாது!" என்றார்.
"அதனால் விளையும் விபரீதத்தையும் கேளுங்கள்.
இரண்டு இளவரசர்களும் சேர்ந்து செய்யும் காரியங்களினால் தஞ்சை அரண்மனைத் தன பொக்கிஷமும் தானிய பண்டாரமும் அடிக்கடி மிகக் குறைந்து போகின்றன.
உங்களுக்கெல்லாம் அதிக வரி போட்டு வசூலிக்கும் நிர்ப்பந்தம் எனக்கு ஏற்படுகிறது.
இதற்காகத்தான் என்னை இறை அதிகாரியாக நியமித்திருக்கிறார்கள்! சோழ நாட்டின் மேன்மையே முக்கியம் என்று நான் கருதியிராவிட்டால், எப்பொழுதோ இப்பதவியை விட்டுத் தொலைத்திருப்பேன்."
"ஆ! கூடவே கூடாது! தாங்கள் இப்பதவியிலிருப்பதுதான் எங்களுக்கெல்லாம் பெரிய பாதுகாப்பு.
இந்த முறைகேடான காரியங்களைப் பற்றித் தாங்கள் மகாராஜாவிடம் சொல்லிப் பார்க்க வில்லையா?"
"சொல்லாமல் என்ன! பல தடவை சொல்லியாகிவிட்டது.
ஒவ்வொரு தடவையும் பெரிய பிராட்டியிடம் கேளுங்கள்; இளையபிராட்டியிடம் கேளுங்கள்!' என்ற மறுமொழிதான் கிடைக்கிறது.
முன்னமே தான் சொன்னேனே, மகாராஜாவுக்குச் சுயமாகச் சிந்தனை செய்யும் சக்தியே இப்போது இல்லாமற் போய்விட்டது! முக்கியமான காரியங்களில் நம்முடைய  யோசனைகளைக் கேட்பதும் இல்லை.
அவருடைய பெரியன்னை செம்பியன் மாதேவியின் வாக்குத்தான் அவருக்கு வேதவாக்கு; அடுத்தபடியாக, அவருடைய செல்வக் குமாரி குந்தவைப்பிராட்டியிடம் யோசனை கேட்கச் சொல்கிறார்.
"அப்படியானால் இந்த நிலைமையில் என்ன செய்வது என்று நீங்கள்தான் எனக்கு யோசனை சொல்ல வேண்டும்.
அல்லி ராஜ்யத்தைவிடக் கேவலமாகிவிட்ட இந்தப் பெண்ணரசுக்குப் பரிகாரம் என்ன என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்" என்றார் பழுவூர் மன்னர்.
-------------

பொன்னியின் செல்வன் பாகம் 1 - 6








ஆறாம் அத்தியாயம்
நடுநிசிக் கூட்டம்
குரவைக் கூத்துக்கும் வெறியாட்டுக்கும் பின்னர், வந்திருந்த விருந்தினருக்குப் பெருந்தர விருந்து நடைபெற்றது.
வல்லவரையனுக்கு விருந்து ருசிக்கவில்லை.
அவன் உடம்பு களைத்திருந்தது;
உள்ளம் கலங்கியிருந்தது.
ஆயினும் அவன் பக்கத்திலிருந்த அவனுடைய நண்பன் கந்தமாறன் அங்கிருந்த மற்ற விருந்தாளிகள் யார் யார் என்பதைப் பெருமிதத்துடன் எடுத்துக் கூறினான்.
பழுவேட்டரையரையும், சம்புவரையரையும் தவிர அங்கே மழபாடித் தென்னவன் மழவரையர் வந்திருந்தார்; குன்றத்தூர்ப் பெருநிலக்கிழார் வந்திருந்தார்; மும்முடிப் பல்லவரையர் வந்திருந்தார்.  
தான்தொங்கிக் கலிங்கராயர், வணங்காமுடி முனையரையர், தேவசேநாதிபதிப் பூவரையர், அஞ்சாத சிங்கமுத்தரையர், இரட்டைக் குடை ராஜாளியார், கொல்லிமலைப் பெருநில வேளார் முதலியோரை இன்னின்னார் என்று கந்தமாறன் தன் நண்பனுடைய காதோடு சொல்லிப் பிறர் அறியாதபடி சுட்டிக்காட்டித் தெரியப்படுத்தினான்.
இந்த பிரமுகர்கள் சாமான்யப்பட்டவர்கள் அல்ல; எளிதாக ஒருங்கு சேர்த்துக் காணக்கூடியவர்களுமல்ல.
இன்று அத்தனை பேரும் பழையாறைச் சுந்தரசோழ சக்கரவர்த்தியின் ஆட்சிக்கடங்கித் தத்தம் எல்லைக்குள் அதிகாரம் செலுத்தி வந்தார்கள்.
சிலர் சோழப் பேரரசில் பெருந்தரத்து அரசாங்க அதிகாரிகளாகவும் பதவி வகித்து வந்தார்கள்.
இவ்வளவு முக்கியமான சோழ சாம்ராஜ்யப் பிரமுகர்கள் எல்லாரையும் ஓரிடத்தில் பார்த்தது பற்றி வல்லவரையன் நியாயமாக உவகை கொண்டிருக்க வேண்டும்.
ஆயினும் அவனுடைய உள்ளத்தில் உவகை ஏற்படவில்லை.
"இவ்வளவு பேரும் எதற்காக இங்கே கூடியிருக்கிறார்கள்?" என்ற எண்ணம் அவனுக்கு அடிக்கடி தோன்றியது.
மனத்தில் இத்தகைய குழப்பத்துடனேயே வல்லவரையன் தனக்கென்று கந்தமாறன் சித்தப்படுத்திக் கொடுத்திருந்த தனி இடத்தில் படுக்கச் சென்றான்.
விருந்தினர் பலர் வந்திருந்தபடியால் வல்லவரையனுக்கு அம்மாபெரும் மாளிகையின் மேல்மாடத்தில் ஒருமூலையிலிருந்த திறந்த மண்டபமே படுப்பதற்குக் கிடைத்தது.
"நீ மிகவும் களைத்திருக்கிறாய்; ஆகையினால் நிம்மதியாகப் படுத்துத் தூங்கு.
மற்ற விருந்தாளிகளைக் கவனித்துவிட்டு நான் உன் பக்கமே வந்து படுத்துக்கொள்கிறேன்" என்று கந்தமாறன் சொல்லி விட்டுப் போனான்.
படுத்தவுடனே வந்தியத்தேவனுடைய கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது.
மிக விரைவில் நித்திரா தேவி அவனை ஆட்கொண்டாள்.
ஆனாலும் என்ன பயன்? மனம் என்பது ஒன்று இருக்கிறதே, அதை நித்திரா தேவியினால் கூடக் கட்டுக்குள் வைக்க முடிவதில்லை.
பொருளில்லாத, அறிவுக்குப் பொருத்தமில்லாத, பற்பல நிகழ்ச்சிகளும் அனுபவங்களும் அந்தக் கனவு லோகத்தில் ஏற்படுகின்றன.
எங்கேயோ வெகு தூரத்திலிருந்து ஒரு நரி ஊளையிடும் சப்தம் கேட்டது.
ஒரு நரி,பத்து நரியாகி, நூறு நரியாகி, ஏகமாக ஊளையிட்டன! ஊளையிட்டுக் கொண்டே
வந்தியத்தேவனை நெருங்கி, நெருங்கி நெருங்கி வந்தன.
காரிருளில் அந்த நரிகளின் கண்கள் சிறிய சிறிய நெருப்புத் தணல்களைப் போல் ¦ஜாலித்துக் கொண்டு அவனை அணுகி வந்தன.
மறுபக்கம் திரும்பி ஓடித் தப்பிக்கலாம் என்று வந்தியத்தேவன் பார்த்தான்.
அவன் பார்த்த மறுதிசையில் பத்து, நூறு, ஆயிரம் நாய்கள் ஒரே மந்தையாகக் குரைத்துக் கொண்டு பாய்ந்து ஓடி வந்தன.
அந்த வேட்டை நாய்களின் கண்கள் அனல் பொறிகளைப் போல் சொலித்தன.
நரிகளுக்கும் வேட்டை நாய்களுக்கும் நடுவில் அகப்பட்டுக் கொண்டால் தன்னுடைய  கதி என்னவாகும் என்று எண்ணி வந்தியத்தேவன் நடுநடுங்கினான்.
நல்ல வேளை, எதிரே ஒரு கோயில் தெரிந்தது.
ஓட்டமாக ஓடித் திறந்திருந்த கோயிலுக்குள் புகுந்து வாசற்கதவையும் தாளிட்டான். திரும்பிப் பார்த்தால், அது காளி கோயில் என்பது தெரிந்தது.
அகோரமாக வாயைத் திறந்து கொண்டிருந்த காளிமாதாவின் சிலைக்குப் பின்னாலிருந்து பூசாரி ஒருவன் வெளிக்கிளம்பி வந்தான்.
அவன் கையில் ஒரு பயங்கரமான வெட்டரிவாள் இருந்தது.
"வந்தாயா? வா!" என்று சொல்லிக் கொண்டு பூசாரி அருகில் நெருங்கி, நெருங்கி, நெருங்கி வந்தான்.
"நீ பிறந்த அரச குலத்தின் வரலாறு என்ன? எத்தனை ஆண்டுகளாக உன் குலத்தினர் அரசு புரிகின்றனர்? உண்மையைச் சொல்" என்று பூசாரி கேட்டான்.
"வாணர்குலத்து வல்லவரையர் முந்நூறு ஆண்டுகள் அரசு புரிந்தவர்; என் தந்தையின் காலத்தில் வைதும்பராயர்களால் அரசை இழந்தோம்" என்றான் வந்தியத்தேவன்.
"அப்படியானால், நீ தகுந்த பலி அல்ல! ஓடிப் போ!" என்றான் பூசாரி.
திடீரென்று காளிமாதாவின் இடத்தில் கண்ணபெருமாள் காட்சி அளித்தான்.
கண்ணன் சந்நிதியில் இரண்டு பெண்கள் கையில் பூமாலையுடன் ஆண்டாள் பாசுரம் பாடிக் கொண்டு வந்துநடனம் ஆடினார்கள்.
இதை வல்லவரையன் பார்த்துப் பரவசமடைந்திருக்கையில், அவனுக்குப் பின்புறத்தில், "கண்டோம், கண்டோம், கண்டோம், கண்ணுக்கினியன கண்டோம்" என்ற பாடலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.
பாடியவன் ஆழ்வார்க்கடியான் நம்பிதான். இல்லை!
ஆழ்வார்க்கடியானுடைய தலை பாடியது! அந்தத் தலை மட்டும் பலி பீடத்தில்
வைக்கப்பட்டிருந்தது!
இந்தக் காட்சியைப் பார்க்கச் சகிக்காமல் வல்லவரையன் திரும்பினான்; தூணில் முட்டிக் கொண்டான்.
கனவு கலைந்தது; கண்கள் திறந்தன.
ஆனால் கனவையும் நனவையும் ஒன்றாய்ப் பிணைத்த ஒரு காட்சியை அவன் காண நேர்ந்தது.
அவன் படுத்திருந்த இடத்துக்கு நேர் எதிர்ப்புறத்தில் கடம்பூர் மாளிகைச் சுற்று மதிலின் மேலே ஒரு தலை தெரிந்தது.
அது, அந்த ஆழ்வார்க்கடியான் நம்பியின் தலை தான்.
இந்தத் தடவை அது கனவல்ல, வெறும் பிரமையும் அல்லவென்பது நிச்சயம்.
ஏனெனில், எத்தனை நேரம் பார்த்தாலும் அந்தத் தலை அங்கேயே இருந்தது.
அது வெறும் தலை மட்டுமல்ல, தலைக்குப் பின்னாலே உடம்பு இருக்கிறது என்பதையும் எளிதில் ஊகிக்கக்கூடியதாயிருந்தது.
ஏனெனில், ஆழ்வார்க்கடியானுடைய கைகள் அந்த மதில் ஓரத்தின் விளிம்பைப் பிடித்துக் கொண்டிருந்தன.
அதோடு, அவன் வெகு கவனமாக மதிலுக்குக் கீழே உட்புறத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.
அவன் அவ்வளவு கவனமாக அங்கே என்னத்தைப் பார்க்கிறான்!...
இதில் ஏதோ வஞ்சகச் சூழ்ச்சி இருக்கவே வேண்டும்.
ஆழ்வார்க்கடியான் நல்ல நோக்கத்துடன் அங்கு வந்திருக்க முடியாது.
ஏதோ துஷ்ட நோக்கத்துடன் தீய செயல் புரிவதற்கே வந்திருக்கிறான்.
அவன் அவ்விதம் தீச்செயல் புரியாமல் தடுப்பது கந்தமாறனின் உயிர் நண்பனாகிய தன் கடமையல்லவா? தனக்கு அன்புடன் ஒரு வேளை அன்னம் அளித்தவர்களின் வீட்டுக்கு நேரக்கூடிய தீங்கைத் தடுக்காமல் தான் சும்மா படுத்துக் கொண்டிருப்பதா?
வல்லவரையன் துள்ளி எழுந்தான்.
பக்கத்தில் கழற்றி வைத்திருந்த உறையுடன் சேர்ந்த கத்தியை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டான்.
ஆழ்வார்க்கடியானுடைய தலை காணப்பட்ட திக்கை நோக்கி நடந்தான்.
மாளிகை மேல்மாடத்தில் ஒரு மூலையிலிருந்த மண்டபத்தில் அல்லவா வல்லவரையன் படுத்திருந்தான்?
சற்று தூரம் அவ்விதம் நடந்த பிறகு, திடீரென்று எங்கிருந்தோ பேச்சுக் குரல் வந்ததைக் கேட்டு, வல்லவரையன் தயங்கி நின்றான்.
அங்கிருந்த ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு, தூணின் மறைவில் நின்றபடி எட்டிப் பார்த்தான்.
கீழே குறுகலான முற்றம் ஒன்றில், மூன்று பக்கமும் நெடுஞ் சுவர்கள் சூழ்ந்திருந்த இடத்தில் பத்துப் பன்னிரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள்.
பாதி மதியின் வெளிச்சத்தை நெடுஞ் சுவர்கள் மறைத்தன.
ஆனால் ஒரு சுவரில் பதித்திருந்த இரும்பு அகல் விளக்கில் எரிந்த தீபம் கொஞ்சம் வெளிச்சம் தந்தது.
அங்கிருந்தவர்கள் அத்தனை பேரும் அன்று இரவு விருந்தின் போது அவன் பார்த்த பிரமுகர்கள்தான்; சிற்றரசர்களும் சோழ சாம்ராஜ்ய அதிகாரிகளுந்தான்.
அவர்கள் ஏதோ மிக முக்கியமான விஷயத்தைப் பற்றிக் கலந்தாலோசிக்கவே நள்ளிரவு நேரத்தில் அங்கே கூடியிருக்க வேண்டும்.
அவர்கள் என்ன செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதைத் தான் ஆழ்வார்க்கடியான் மதில் சுவர் மீதிலிருந்து அவ்வளவுக் கூர்மையாக கவனித்து கொண்டு வருகிறான்.
ஆழ்வார்க்கடியான் மிகப் பொல்லாத கெட்டிக்காரன் என்பதில் ஐயமில்லை.
அவன் இருக்குமிடத்திலிருந்து கீழே கூடிப் பேசுகிறவர்களை ஒருவாறு பார்க்க முடியும்;
அவர்களுடைய பேச்சை நன்றாய்க் கேட்க முடியும்.
ஆனால் கீழேயுள்ளவர்கள் ஆழ்வார்க்கடியானைப் பார்க்க முடியாது.
அந்த இடத்தில் மாளிகைச் சுவர்களும் மதில் சுவர்களும் அவ்வாறு அமைந்திருந்தன.
அத்தகைய இடத்தை ஆழ்வார்க்கடியான் எப்படியோ கண்டுபிடித்துக் கொண்டு வந்திருக்கிறான்! கெட்டிக்காரன் தான்; சந்தேகமில்லை.
ஆனால் அவனுடைய கெட்டிக்காரத்தனமெல்லாம் இந்த வாணர்குலத்து வந்தியத்தேவனிடம் பலிக்காது!
அந்த வேஷதாரி வைஷ்ணவனைக் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வந்து... ஆனால் அப்படி அவனைப் பிடிப்பதாயிருந்தால், கீழே கூடியுள்ளவர்களுடைய கவனத்தைக் கவராமல் அவன் உள்ள மதில் சுவரை அணுக முடியாது.
அப்படி அவர்கள் பார்க்கும்படி தான் நடந்து போவதில் ஏதேனும் அபாயம் இருக்கலாம்.
"இன்றைக்கு நாள் பார்த்து இவன் இங்கே வந்திருக்க வேண்டியதில்லை!" என்று சம்புவரையர் கூறியது அவன் நினைவுக்கு வந்தது.
இவர்கள் எல்லோரும் ஏதோ முக்கிய காரியமாகக் கலந்தாலோசிப்பதற்காக இங்கே வந்திருக்கிறார்கள்.
அவர்களுடைய யோசனையைப் பற்றிப் பிறர் அறிந்து கொள்வதில் அவர்களுக்கு விருப்பமில்லையென்பது தெளிவு.
அப்படியிருக்கும்போது தன்னைத் திடீரென்று அவர்கள் பார்த்தால், தன் பேரில் சந்தேகப்பட்டு விடலாம் அல்லவா? ஆழ்வார்க்கடியானைப் பற்றி அவர்களுக்குத் தான் சொல்வதற்குள் அவன் மதில் சுவரிலிருந்து வெளிப்புறம் குதித்து ஓடிவிடுவான்.
ஆகையால் தன் பேரில் சந்தேகம் ஏற்படுவது தான் மிச்சமாகும்.
"படுத்திருந்தவன் இங்கு எதற்காக வந்தாய்?" என்றால் என்ன விடை சொல்லுவது? கந்தமாறனின் நிலைமையை சங்கடத்துக்கு உள்ளாக்குவதாகவே முடியும்.
இப்படி அந்த இளைஞன் முடிவு செய்த சமயத்தில், கீழே நடந்த பேச்சில் தன்னுடைய  பெயர் அடிபடுவதைக் கேட்டான்.
உடனே சற்றுக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான்.
"உம்முடைய குமாரனுடைய சிநேகிதன் என்று ஒரு பிள்ளை வந்திருந்தானே? அவன் எங்கே படுத்திருக்கிறான்? நம்முடைய பேச்சு எதுவும் அவனுடைய காதில் விழுந்து விடக் கூடாது.
அவன் வடதிசை மாதண்ட நாயகரின் கீழ் பணி செய்யும் ஆள் என்பது நினைவிருக்க வேண்டும்.
நம்முடைய திட்டம் உறுதிப்பட்டு நிறைவேறும் காலம் வருவதற்குள் வேறு யாருக்கும் இதைப் பற்றித் தெரியக் கூடாது.
அந்தப் பிள்ளைக்கு ஏதாவது கொஞ்சம் தகவல் தெரிந்து விட்டது என்ற சந்தேகமிருந்தால் கூட அவனை இந்தக் கோட்டையிலிருந்து வெளியே அனுப்பக் கூடாது.
ஒரேயடியாக அவனை வேலை தீர்த்து விடுவது உசிதமாயிருக்கும்..."
இதைக் கேட்ட வந்தியத்தேவனுக்கு எப்படி இருந்திருக்குமென்று நேயர்களே ஊகித்துக் கொள்ளலாம். ஆனாலும் அந்த இடத்தை விட்டு அவன் நகரவில்லை.
அவர்களுடைய பேச்சை முழுதும் கேட்டேவிடுவது என்று உறுதிசெய்து கொண்டான்.
வடதிசை மாதண்ட நாயகர் யார்? சுந்தரசோழ சக்கரவர்த்தியின் மூத்த குமாரர்.
அடுத்தபடி சோழ சிம்மாசனம் ஏறவேண்டிய பட்டத்து இளவரசர்.
அவரிடம் தான் வேலை பார்ப்பதில் இவர்களுக்கு என்ன ஆட்சேபம்? அவருக்குத் தெரியக்கூடாத விஷயம் இவர்கள் என்ன பேசப் போகிறார்கள் ?
அச்சமயம் கந்தமாறன் தன் சிநேகிதனுக்குப் பரிந்து பேசியது வல்லவரையனின் காதில் விழுந்தது.
"மேல்மாடத்து மூலை மண்டபத்தில் வந்தியத்தேவன் படுத்து நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான்.
இந்தக் கூட்டத்தின் பேச்சு அவன் காதில் விழப் போவதில்லை.
தனக்குச் சம்பந்தமில்லாத காரியத்தில் அவன் தலையிடுகிறவனும் அல்ல.
அப்படியே அவன் ஏதாவது தெரிந்து கொண்டாலும், அதனால் உங்கள் யோசனைக்குப் பாதகம் ஒன்றும் நேராது; அதற்கு நான் பொறுப்பு!" என்றான் கந்தமாறன்.
"உனக்கு அவனிடம் அவ்வளவு நம்பிக்கை இருப்பது குறித்து எனக்கும் மகிழ்ச்சிதான்.
ஆனால் எங்களில் யாருக்கும் அவனை முன்பின் தெரியாது; ஆகையினால்தான் எச்சரிக்கை செய்தேன்.
நாம் இப்போது பேசப் போகிறதோ, ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் உரிமை பற்றிய விஷயம்.
அஜாக்கிரதை காரணமாக ஒரு வார்த்தை வெளியில் போனாலும் அதனால் பயங்கரமான விபரீதங்கள் ஏற்படலாம்.
இது உங்கள் எல்லாருக்குமே நினைவிருக்க வேண்டும்!" என்றார் பழுவேட்டரையர்.
-------------